சனி, 13 ஜூன், 2020

சுத்தம்- சிறுகதை


சாவிக்கொத்தைப் பிசைந்து தலையில் வெளிர் நீல ரப்பர் உறையிட்ட சாவியை தேடியெடுத்து அலுவலகத்தைத் திறந்தான். மேசைக்கும் சுழல் நாற்காலிக்கும் இடையில் எதையும் நகர்த்தாமல் நுழைந்து மூச்சுவாங்க தன் கனத்த உடலை அமர்த்தினான். முன்னால் இருந்த பீங்கான் பேனா தாங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தான். தான் பங்குத்தந்தையாகப் பொறுப்பெடுத்த நாளில் கிளாரா பரிசளித்தது. அது இப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி ஒரு வடிவில் இருந்தது. நடுவில் எழுது பொருட்கள் வைப்பதற்காக ஒரு குழாய் போன்ற அமைப்பும், சுற்றிலும் அஞ்சரைப் பெட்டி போன்ற சிறுசிறு அறைகளும் இருந்தன. அவற்றில் தனது சைக்கிள் மற்றும் அலமாரிகளின் சாவிகளைப் போட்டுவைத்திருந்தான். அதன் அடியில் தங்க நிறத்தில் அருட்பணி செர்ஜியோ என்று எழுதப்பட்டிருந்த தனது பெயரைத் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தாலியின் தெற்கு முனையில் இருக்கும் ஒரு பழமையான சிறுநகரத்தில் பிறந்து, வளர்ந்து இப்போது பதினொரு வருடங்களாக பர்லேத்தா என்னும் இந்த ஊரில் தான் பங்குத் தந்தையாக இருக்கிறான். அவனோடு இன்னும் இரண்டு சாமியார்கள் இருக்கிறார்கள். இன்னொரு இத்தாலியன் மர்த்தீனோ மற்றும் ரிப்பப்ளிக் ஆப் காங்கோ என்னும் மத்திய-மேற்கு பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாட்டிலிருந்து வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு வேலை செய்யும் விர்த்து. இருவருமே அவனது உதவிப்பணியாளர்கள்.

அறைக்கதவின் வெளியே யாரோ நிற்பது போன்று நிழல் அசைந்து கொண்டிருந்தது. கதவு மேற்பாதி முழுவதும் செமி-ட்ராஸ்பேரன்ட் வகைக் கண்ணாடியினாலானது. உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தான். விர்த்து நின்றுகொண்டிருந்தான். "கிராட்சியா வந்தாளா?"  என்றான்.
"எந்த கிராட்சியா?" என்றான் செர்ஜியோ.

"அதான் ஒரு வாரமாக வந்துகொண்டிருக்கிறாளே! கிராட்சியா மானோஸ்பெர்த்தி. உன்னைத்தான் பார்க்க வருகிறாள். ஆனாலும் அவளை அதிகமாக அலைய விடுகிறாய்" என்று குற்றம் சுமத்தும் தொனியில் சொன்னான்.

"அவளுக்கு என்ன வேண்டுமாம்? கேட்டியா?"

"எல்லா கதையும் சொல்கிறாள். ஆனால் உன்னை எதற்கு பார்க்க வேண்டும் என்பதை உன்னிடம் தான் சொல்வாளாம். அல்லது மர்த்தீனோ என்றாலும் பரவாயில்லையாம்."

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவள் வரும் நேரம் என்னால் அவளை சந்திக்க முடியவில்லை."

"நேற்று ஒரு நிமிடம் வரச்சொல்! போதும்! என்று கெஞ்சினாள்."

"நான் என்ன செய்ய? கிளாரா அவள் அம்மாவுடன் வந்திருந்தாள். பாரில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என்னால் இறங்கி வரமுடியவில்லை."

"அவளைப் பார்த்தால் ஏதோ சாவு பயத்தில் இருப்பவள் போலிருக்கிறது. ஏதோவொரு பாவத்தை உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும் என்று  அடம்பிடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை மிஸ் பண்ணிவிடாதே செர்ஜியோ" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு தன் அலுவலகத்தை திறந்து சோபாவில் அமர்ந்தான்.

கிராட்சியா எதற்காக செர்ஜியோவைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். நேற்று மிகவும் பதற்றமாக இருந்தாள். பார்ப்பதற்கு ஐம்பது வயது மதிக்கலாம். ஆனால் நிச்சயம் அறுபதுக்கு குறையாமல் இருப்பாள். எடுப்பான தோற்றம். அவளிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. பளபளப்பு கூட்டப்பட்ட உயர்ரக கறுப்பு ஷீ, அடர் நீல பெனட்டன் கைப்பை. அவளைப் பார்த்தவுடன் சட்டையில் எங்கேனும் கறையிருக்கிறதா? காலணிக்கு பாலிஷ் போட்டோமா? என்று நமக்கு நாமே ஒரு முறை சரிபாரக்கத் தோன்றும்.

நேற்று அவளுடன் நடந்த உரையாடலை மனதுக்குள் திரும்ப நிகழ்த்திக்கொண்டிருந்தான். அவளுக்கு எப்போதும் செர்ஜியோ மேல் நன்மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றும் அப்படித்தான் குறை கூறிக்கொண்டிருந்தாள். "நான் வரும் போதெல்லாம் அந்த கிளாராவுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறான். என்னை  இந்த வயதில் இப்படி காத்திருக்க வைக்கலாமா? நீயே சொல்."

"அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீ சரியாக வருகிறாய்! என்ன செய்வது?"

"எனக்கு ஒன்றும் இல்லை. நான் வெளிப்படையானவள். சொல்லிவிடுகிறேன். எண்ணைக்காக ஒலிவக் கொட்டைகளை அரைப்பது போல பலரும் எதையாவது பேசிக்கொள்கிறார்கள். அவன் கவனமாக இருக்க வேண்டும்" என்றாள்.

"கிளாரா அவனுக்கு பிள்ளை வயது. அவளும் அவனை ஒரு தந்தை போலத்தான் நடத்துகிறாள். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. விடு!"

"இல்லை விர்த்து. நான் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உன்மேல் எல்லோருக்கும் நன்மதிப்பு இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன்" என்றாள். அப்படி சொல்வது அவள் முதல் ஆள் கிடையாது.

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. எத்தனை முறைதான் அவளும் வருவாள். ஒரு நிமிடம் மட்டும் தான் தேவைப்படும் என்கிறாள். என்ன வேலையென்றால் என்ன? வந்து பார்த்துவிட்டு போனால் என்ன? என்று யோசித்துக்கொண்டிருக்கையில் கதவை முரட்டுத்தனமாகத் திறந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் மத்தியா. சிறிய பூக்கடை வைத்திருக்கிறான். கோவிலில் அவ்வப்போது விற்பனையாகாத பூக்களை கொண்டுவந்து வைப்பான். பிறகு பிரட் வாங்குவதற்கென்று ஒரு யூரோ கேட்பான். அழுக்கான உடை. அண்ட முடியாத வாசம். யாரும் அவனிடம் பூ வாங்குவதில்லை. இந்த ஊரில் எல்லாக் கதைகளும் தெரிந்தவன். கிராட்சியோ வந்து நீண்ட நேரமாக செர்ஜியோவின் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னான்.

"அவன் அங்கேதானே இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவனோடு போனான். கிராட்சியா நின்றுகொண்டிருந்தாள்.

"இன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய்! செர்ஜியோ அலுவலகத்தில் தான் இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே கதவைத் தட்டினான். திறக்க வில்லை. அவளது முகத்தில் வழக்கம் போல பதட்டமும், கூடுதலாக கொஞ்சம் கோபமும் தென்பட்டது. பொறுமை இழந்தவனாய் கதவைத் திறந்தான்.
சில நிமிடங்களுக்கு முன் இருந்தவனை இப்போது காணவில்லை. குழுக்கோஸ் அடைக்கும் போது தவறுதாலாக சிறிது இரத்தம் குழாயில் ஏறுவது போல அவளது முகத்தில் சிவப்பு கோடுகள் விழ ஆரம்பித்துவிட்டன.

நிலைமையை சமாளிக்க வேண்டி "மார்த்தீனோ என்றால் பரவாயில்லையா?" என்றான் விர்த்து. அவளும் "சரி! பரவாயில்லை வரச்சொல்" என்றாள். மூன்றாவது மாடியில் விறுவிறுவென்று ஏறினால் அவனது அறையில் அவன் இல்லை. எதிர்பார்த்தது தான். இந்த நேரம் கிச்சனில் நிற்பான். அங்கு போனால் தியான நிலையில் மாவு பிசைந்து கொண்டிருந்தான். தன்னால் அரை நொடி கூட இப்போது வரமுடியாது. "எதாவது சொல்லி அனுப்பிவிடு" என்று மறுத்துவிட்டான். விர்த்து பாவம்போல முகத்தை வைத்து கிராட்சியாவின் நிலையை எடுத்துச் சொல்லிப்பார்த்தான். முடியாது என்று நிமிர்ந்துவிட்டான். "தான் இப்போது இறங்கினால் பீட்சாவிற்கு பதில் பிஸ்கட் தான் சாப்பிட முடியும்" என்று அதே தியான நிலையில் ஒரு ஜோக் சொன்னான்.

அவளிடம் சென்று அவன் பாத்ரூமில் குளிப்பதற்கு தயாராக நிற்பதாகச் சொன்னான். "ஒரு நிமிடம் தானே இறங்கச் சொன்னேன். ஏன் இப்படி செய்கிறார்கள் இரண்டு பேரும்? " என்று புலம்பியவாரே போனவளை உதவ இயலாதவனாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் விர்த்து.
ஒருவார அலைச்சலுக்குப் பிறது இன்று காலை வந்து கதவைத் தட்டினாள்.

திறந்து "வா கிராட்சியா" என்றான் விர்த்து. "இங்கு யாரும் இல்லையா?" என்றாள்.

"நான் உன் முன் தானே நிற்கிறேன்! யாருமில்லையா என்றால் என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே செர்ஜியோவிடம் அவள் வந்திருப்பதாக இன்டர்காமில் சொன்னான்.

"வரச்சொல்" என்றான்.

ஒருவழியாக இன்று செர்ஜியோவைச் சந்தித்துவிட்டாள். அவள் சொன்னது உண்மைதான் அரை நிமிடத்திற்கும் குறைவாகத்தான் அவனிடம் பேசினாள்.

அவள் சென்றதும் விர்த்துவிடம் மூச்சுவாங்க வந்தான்.
"அவள் இத்தனை நாள் என்னையோ, மர்த்தீனோவையோ ஏன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் தெரியுமா?" என்றான்.

அடுத்தவர் காரியம்! ஆர்வமில்லாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு "என்ன?" என்று கேட்டான்.

"ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஒரு சிறிய தொகை கொண்டு வந்திருந்தாள். இந்த காலத்தில் எல்லோரையும் நம்ப முடியாது என்பதால் நேரடியாக என்னை சந்தித்துத் தரவேண்டும் என்று காத்திருந்தாக சொன்னாள். விர்த்துவிடம் கொடுப்பதும் என்னிடம் கொடுப்பதும் ஒன்றுதான் என்றேன். அவள் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்" என்றான் செர்ஜியோ.

விர்த்துவின் குளியல் பழக்கம் வித்தியாசமானது. பனி கொட்டும் கடுங்குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரில் மட்டும்தான் குளிப்பான். பாதத்தை முதலில் நனைப்பான். பின் மேல் நோக்கி உச்சி தலை வரையிலும்
ஷவரின் கைப்பிடியைக் கொண்டு செல்வான். அவனது கருத்த தேகம் இன்னும் உள்ளிருந்து ஒளியூட்டப்பட்டு மின்னுவது போல் இருக்கும். அப்போது ஒரு காகிதத்தை மெழுகுவர்த்தியில் காட்டி மெல்ல மெல்ல எரிப்பது போல் உணர்வான். செர்ஜியோ அப்படி சொல்லிவிட்டு போனதும் ஒரு குளியல் போட்டுக்கொள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு.