செவ்வாய், 22 ஏப்ரல், 2014

குட்டித் தம்பியும், புது நன்மையும் (First Holy Communion And My Cute Brother)

வீடே கலகலப்பாயிருந்தது. அத்தை, மாமா, பெரியப்பா வீட்டு அண்ணன், சித்தி, பாப்பா என்று யாவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். எனது புதுநன்மை விழாவிற்குத்தான் இத்தனை தடபுடல் ஏற்பாடுகள். இந்தமுறை நானும் எனது செல்ல தம்பியும் சேர்ந்தே புதுநன்மை பெற இருக்கிறோம் என்ற நினைவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இத்தோடு பதினேழு முறை இயேசு படத்திற்கு முன் ஓடிச் சென்று மூச்சிறைக்க 'நன்றி இயேசப்பா' என்று சொல்லிவிட்டேன். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பத்தாம் திருவிழாவிற்கே எனக்கு புதுநன்னை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் ஆகியிருந்தது. அப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது. என்னால் புதுநன்மை பெற முடியவில்லை. மருத்துவ மனைக்கு வந்தா யாரும் புதுநன்மை தருவார்கள்?

அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தம்பி மூன்றாம் வகுப்பு. அவனுக்கு என் மேல் ரொம்ப பாசம். எப்போதும் அக்கா! அக்கா! என்று என் பின்னாலேயே ஓடி வருவான். நான், அபி, சுஜி, குமாரி என்று என் வகுப்பு பிள்ளைகளுடன் விளையாடினாலும் அவன் என் கூடவே வருவான். நான் தான் திட்டுவேன். 'டேய் போடா! உன் வகுப்ப பசங்க கூட வெளையாட வேண்டியதுதானே!' என்று பல முறை அவனை விரட்டுவேன். ஆனாலும் அவனுக்கு அக்காதான் உலகம். நான் அம்மா மடியில் படுத்துக்கிடப்பேன். அவன் என் கால்களில் தலை வைத்துக்கொள்வான். அம்மா எனக்கு தலை வாரிக்கொண்டிருப்பாள். அவன் என் முகத்தையே ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பாசமானத் தம்பி யாருக்குமே கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். இப்போது அவனோடு சேர்ந்து இந்தத் திருவிழாவில் புதுநன்மை வாங்குவதற்காகத்தான் அந்த விபத்து நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அந்த விபத்தும் நன்மைக்கே!

ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் என்னோடு சேர்த்து பதிநான்கு பேருக்கு புதுநன்னை வழங்க பத்தாம் திருவிழாவிற்கு ஆயர் வருகிறார் என்று ரோஸ்லின் சிஸ்டர் சொன்னது இப்போதும் காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தான் ஆயரை ஒரு முறை பார்த்திருப்பதாகவும், அவர் குண்டாக, தலையில் ஒரு அழகான தொப்பியும், கையில் ஒரு கோலும் வைத்திருப்பார் என்றும் அபி என் காதில் கிசுகிசுத்தாள். மனம் முழுவதும் ஆயர், அவரது தொப்பி, செங்கோல், புதுநன்னை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தம்பியும் மிகவும் சந்தோசமாக இருந்தான். ஏழாம் திருநாளுக்கே மாமா எனக்கு வெள்ளை நிற கவுனும், தங்க நிறத்தில் ஒரு அழகான காலணியும் வாங்கி வந்தார்கள். மாமா வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருந்தார்கள். தாத்தா, பாட்டி, சித்தி,  என்று வீடே கலகலப்பாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. சித்திக்கு அப்போது கல்யாணமே ஆகியிருக்கவில்லை.

எல்லாரும் வந்து என் தலையில் சிலுவை போட்டும், கன்னத்தில் முத்தியும், நிறைய தின்பண்டங்கள் வாங்கி வந்தும் ஒரு குட்டி இளவரசியைப் பார்ப்பது போலவே என்னைப் பார்த்தார்கள். வீடு நிரம்ப விருந்தினர்கள் இருந்தாலும் தம்பி என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை போல இவன் அக்கா பிள்ளை என்று அம்மா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒன்பதாம் திருவிழாவிற்கு கேரளாவிலிருந்;து மேளக்காரர்கள் வந்து தங்களது இசைக்கருவிகளை தட்டியும், ஊதியும் சரிபார்த்துக்கொண்டிருந்தது ஒலிப்பெருக்கியில் கேட்டது. தெரு முழுவதும் வண்ண விளக்குகள், மேள வாசிப்புகள் என்று இருந்தாலும் மனதில் நாளை காலை வருகை தரும் ஆயர், தொப்பி, செங்கோல், மற்றும் புதுநன்மை இவைகள் தான் நிரம்பியிருந்தன. அப்போதுதான் அது நடந்தது. தூரத்தில் பெரியப்பா கையில் ஏதே பெரிய பையுடன் வருவதைப் பார்த்ததும் நான் ஓடி சென்று தெருவில் இறங்கியதும், ஏதோ ஒன்று என்னை இடித்துத் தள்ளியதும் மட்டுமே இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அதன் பிறகு நான் மருத்துவமனையில் தான் கண் திறந்தேன்.

பின்னர் நடந்ததை அம்மா சொல்லிதான் தெரிந்து கொண்டேன். வேகமாக வந்த இருசக்கர  வாகனம் ஒன்று என்னை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமலேயே சென்று விட்டது. என் தம்பிதான் வழக்கம் போல என் பின்னாலேயே ஓடி வந்திருக்கிறான். தலையில் அடிபட்டதால் நான் உடனே மயங்கி விழ அவன் தான் கத்தி கதறி எல்லாரிடமும் சொல்ல, திருவிழா இரைச்சலுக்கு மத்தியிலும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து விட்டார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பங்குத்தந்தை அவரது காரிலேயே என்னை எடுத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தலையில் அடி என்பதான் நிறைய இரத்தம் வெளியெறி கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. உடனடியாக ஏபி நெகட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவர் அவசரப்படுத்தினாலும் அங்கு என் தம்பியைத் தவிர யாரிடமும் குறிப்பிட்ட அந்த இரத்த வகை இல்லை.

அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால், மாமா தான் என் தம்பியிடம் விசயத்;தை சொல்லியிருக்கிறார். என் தம்பி நிலைமை தெரிந்தும் உடனே இரத்தம் கொடுக்க மறுத்து அழத்தொடங்கிவிட்டான். எல்லாரும் எடுத்துச் சொல்லியும் தம்பி இரத்தம் தர ஒப்புக்கொள்ளவே முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டது. இரத்தம் செலுத்தப்பட்டதும் நான் ஓரளவுக்கு திடமாகி கண்களைத் திறந்து விட்டேன். தம்பிதான் அசதியில் தூங்கிவிட்டிருந்தான். எனக்கு அடி பலமாக இருந்தாலும் உள்காயமோ, முறிவுகளோ இல்லை என்றும் இரண்டு நாள்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் மருத்துவர் சொல்லிய பிறகுதான் எல்லாருக்கும் உயிர் வந்திருக்கிறது. அம்மா தம்பியை மடியில் கிடத்தி இரத்தம் கொடுத்த அவனது கைகளைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அவன் கண்களைத் திறந்ததும் அவன் கேட்ட கேள்விதான் இந்தக் கதையையே உங்களிடம் சொல்ல வைத்தது. 'நான் இன்னும் சாகலையா?' ஒரு முறை இரண்டு முறையல்ல பல முறை வியப்போடு அவன் எல்லாரிடமும் கேட்ட கேள்வி இதுதான்: 'நான் இன்னும் சாகலையா?'. இரத்தம் கொடுத்தால் தான் இறந்து விடுவோம் என்றுதான் அவன் முதலில் மறுத்திருக்கிறான். பின்னர், தான் இறந்தர்லும் பரவாயில்லை தான் அதிகம் நேசிக்கும் அக்காவிற்காக, அதாவது எனக்காக, அவன் சாகவும் முடிவு செய்தே இரத்தம் கொடுத்திருக்கிறான்.

நற்கருணை என்பதன் உண்மையான அர்த்தத்தை எனக்கு கற்றுக்கொடுத்த என் செல்லத் தம்பிக்கும் எனக்கும் நாளை புதுநன்மை. நீங்களும் அவசியம் வாருங்கள்.