திங்கள், 24 மார்ச், 2014

மரி'யாள்
யாழ் கொண்டுதானே
இசை மீட்டுவர்!
என்ன ஆயிற்று கடவுளுக்கு?
மரி'யாள்' கொண்டு மீட்டுகிறார்
இயேசு என்னும் இசையை...

கைதேர்ந்த கலைஞன்
விரலுக்கு வீணை அடிமை
கடவுளுக்கு அன்னை மரியாள்!

உயிர் வளி ஊதி
விரல் செய்யும் வித்தையில்
நாத சுர ஜனனம்
கடவுளின் ஆவிக்கு
அஞ்சல்காரனோ கபிரியேல்!

மரிமலர் தரித்த கர்ப்பத்தில்
பனிமலர் பிறந்த அதிசயம்
பாலன் இயேசு!

கனி ஒன்றைத் தாங்கி
கனிவோடு சென்றதோ
பூமரம்!
பகலவனைச் சுமந்து
பணிசெய்யச் சென்றதோ
பனித்துளி!
அன்னை மரியாள்
எலிசபெத்தை சந்திக்கிறார்
ஆண்டவரின் அலைவீச்சில்
சிணுங்கும் அலைபேசியாய்
எலிசபெத் வயிற்றில் யோவான்

பழுத்த இலை
பச்சை இலையை வாழ்த்த
பாடுகிறது பச்சை இலை
படைத்தவனைப் புகழ்ந்து!

இறைவா நீர் போற்றி!
இரவு நேர தடாகம் நான்
நிலவு உம் ஒளி தாங்கி நிற்கிறேன்
இனிவரும் கவிஞரெல்லாம்
இந்தக் குளத்திற்குமன்றோ
பா பாடுவர்

தரைநோக்கும் மொட்டுக்கள்
உம் ஒளிபட்டு மலராகி மகிழ
செருக்கோடு வான் நோக்கும் புற்கள்
உம் வெப்பத்தால் பதராகி போனதுவே!
வாக்கு மாறாத தந்தையே

நீர் வாழிய! வாழியவே!