ஞாயிறு, 20 மார்ச், 2016

உள்ளத்தனைய...

முற்சார்பு எண்ணங்கள் நம் சிறகுகளில் சுற்றியிருக்கும் சிலந்தி வலையைப் போன்றவை. அவை நம்மை குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடக்கிவிடும். நம் நாட்டில் வயல்களை விட வரப்புகளே அதிகம் என்று எங்கோ கேட்ட ஞாபகம். ஆம்! இந்தியா பல வண்ணங்களைக் கொண்ட வானவில் நாடு என்று நாம் வானளாவ புகழும் அதே நேரத்திலே, ஒவ்வொரு வேறுபாடுகளும் நம்மை அழகு படுத்துவதற்குப் பதிலாக, சில வேளைகளில் பிளவுபடுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. 

எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிலேயே நின்றுவிடுகின்றன. சில ஏடுகளில் கூட இந்த இணக்கங்கள் இருப்பதில்லை என்பது அனைத்திலும் வெட்கக் கேடு. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக, பிற மதத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக சாதி, மத, மாநில சிறுபான்மைக் குழுக்களுக்கு  எதிராக மிகவும் சாதாரணமாக இங்கு வெறுப்புக் கருத்துக்களைப் பரப்புவதில் நம் தலைவர்களில் சிலர் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மவர்கள் வேறு இடங்களில் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்து, அத்தகைய மனநிலைக்கு எதிராகப் போராடும் அதே நேரத்தில் நம்மிடையே வாழும் பிறரை நாம் அவ்வாறே நடத்துவதில் இருக்கும் முரண்தான் நம்மை நகைக்க வைக்கிறது. எடுத்துக்காட்டாக மஹாராஷ்டிராவில் சிவசேனாவின் சாம்நா பத்திரிக்கையில் தென்னிந்தியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பதிவிற்குப் பதிலடியாக தமிழகத்தில் பால்தாக்ரேயின் உருவப்பொம்மைகளை எரிக்க அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சேலத்தில் செண்டை மேளம் அடிக்க வந்த கேரளக் கலைஞர்களை வாய்க்கு வந்தபடி திட்டி, நிராயுதபாணிகளாக இருந்த அந்த மிகமிகச் சிறு குழுவினரைக் காட்டுமிராண்டித் தனமாகத் திட்டி திருப்பி அனுப்பவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய அத்துமீறல் நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே அப்பட்டமாக மீறியச் செயல் என்று எத்த பத்திரிக்கையும் இங்கு செய்தி வெளியிடவில்லை. சிவசேனாவின் பால்தாக்கரேக்கும், நாம் தமிழர் சீமானுக்கும். எச்சி ராசவுக்கும் இன-மத வெறியைப் பரப்புவதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அது தவறு என்றால் இதுவும் தவறுதானே?

மலையாளிகள் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறது சிலரது மலர்ந்த முகத்தை நொடியில் சுருக்கிவிட. ஐந்து பேர் கூடும் இடத்தில் ஏதோ காரணத்தில் மலையாளிகளின் பேச்சு வந்து விட்டால் கொட்டும் வெறுப்பில் நமக்கு வியர்த்துக் கொட்டிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் தாங்கள் கேள்விபட்ட, அல்லது தாங்கள் பார்த்த, அல்லது தங்களுக்கு நேர்ந்த ஏதாவது ஒரு நிகழ்வு நிச்சயமாக இருக்கிறது. அல்லது இந்த மாதிரி முக்கியமான விவாதத்தில் தேவைப்படுமே என்று சில நிகழ்வுகளைத் மெனக்கெட்டுத் தெரிந்து மறக்காமல் வைத்துக் கொள்கிறார்கள். 

உலகில் எங்கு சென்றாலும் மலையாளிகளாக இருக்கிறார்களாம். நிலவில் ஆம்ஸ்ட்ராம் கால் வைத்த போது அங்கு ஏற்கனவே ஒரு நாயர் சாயா கடை வைத்திருந்ததாக சில கதைகள் வேறு இருக்கின்றன. ஒரு மலையாளி ஒரு புதிய இடத்தில் குடியேறினால், சில ஆண்டுகளிலேயே அந்த ஊரில் பாதி பேர் மலையாளிகளாகி விடுகின்றனராம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சேர்ந்த மலையாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்களேயானால் உடனே அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி மறைமாவட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்களாம். மலையாளிகள் நிறைய 'டாமினேட்' (அதிகாரம் செலுத்துதல்) செய்கிறார்களாம். மலையாளிகள் இருக்கும் இடத்திலே குழப்பம் தான் மிஞ்சுமாம். மலையாளிகள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வதில்லையாம். அவர்கள் தங்களை மலையாளிகள் என்றே சொல்கின்றனராம். மலையாளிகள் சாப்பிடுகின்றனராம். மலையாளிகள் உறங்குகின்றனராம். முடியலப்பா! இதில் எது, எதன் அடிப்படையில் தவறு என்று நான் சில இடங்களில் கேட்டுப் பார்த்தேன். அடிபடாதக் குறைதான். அதுமட்டுமல்ல என்னையும் ஒரு மலையாளிதான் என்று குற்றம் சாட்டிவிட்டனர். நாம் பார்க்காத குழப்பமா? நாம் பார்க்காத அதிகார வெறியா? நாம் பார்க்காத இனப்பாசமா? ஏன் இந்த பாசாங்கு போலிப் பரப்புரைகள்? 

உண்மையாகச் சொல்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒரு நண்பர் அலைப்பேசியில் அழைத்தார். இன்று உரோமையில் மலையாளிகள் நடத்திய சிலுவைப்பாதையில் கலந்து கொண்டேன். மிக அருமையாக இருந்தது என்றேன். உடனே அவர் பதற்றம் அடைந்ததை உணர முடிந்தது. அவனுவ கள்ளப் பயலுவ. 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு இப்படி ஏதாவது பண்ணுவதாகச் சொன்னார். எதை 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நானும் 'கள்ளப்பய' என்று பெயரெடுக்க விரும்பவில்லை என்பதால் கேட்மலே விட்டுவிட்டேன்.

எனக்கு ஒருவரைத் தெரியும். அவரிடம் ஒரு புரிந்து கொள்ளமுடியாத வரம் இருந்தது. அவர் சாலையில் செல்லும் போது எதிரே யார் வந்தாலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்லிவிடுவார். இதோ வருகிறாரே இவர் பிரேசில் காரர் தான் என்று சொல்லிவிட்டு நம் முகத்தைப் பார்ப்பார். நாம் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்தால், இவர் பிரேசில் காரர் தான் என்று மீண்டும் சொல்வார். அவருக்குத் திருப்தி ஏற்படும் வரை சொல்வார். எல்லா நாட்டினரையும், எல்லா மொழியினரையும் பார்த்த மாத்திரத்திலேயே இனம் பிரித்துச் சொல்லும் திறமை என்றால் சும்மாவா? இதில் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லாமும் அடங்கும். சன்னலுக்கு வெளியே தூரத்தில் செல்லும் விமானம் எந்த நிறுவனத்தினுடையது என்பதையும், அது எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதையும் அத்தனை உறுதியாகச் சொல்வார். என்னைப் பொறுத்தமட்டில் அது ஒரு விமானம் என்பது மட்டும் தான் ஓரளவு உண்மை. மனிதர்கள் விஷயத்திலும் அவர்கள் மனிதர்கள் என்பது மட்டும் தான் "ஓரளவு" உண்மை என்று நம்புகிறேன்.

சொல்ல மறந்து விட்டேன். இன்று உரோமையில் 'போக்கா தெல்லா வெரித்தா' என்னும் இடத்தில் தொடங்கி, வெனிஸ் சதுக்கத்தின் வழியாக கொலோசேயம் வரையிலும் ஒரு சிலுவைப்பாதை நிகழ்ச்சியை மலையாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நானூறு பேருக்கு குறையாமல் கலந்து கொண்டனர். நமது ஊரில் செய்வது போன்றே தென்னங்குறுத்து ஓலையைக் கையிலே ஏந்தி மிகுந்த பக்தியோடு அவர்கள் அந்த வழிபாட்டினைச் செய்த விதம் உண்மையிலேயே மலைக்கச் செய்துவிட்டது. உரோமையின் மையத்தில் அத்தனை சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள், இரைச்சல்களுக்கு மத்தியிலும், அருமையான ஒலிபெருக்கி வசதியோடு, அற்புதமான குரலில் பக்திப் பாடல்கள் ஒலிக்க, மக்களின் ஒழுங்கானப் பங்கேற்போடு அசத்தி விட்டார்கள்.

 சீசர் போன்ற உரோமைப் பேரரசர்கள் தங்கள் கோட்டைக் கொத்தளங்களோடு ஆட்சி செய்த இடத்தில், பண்டைய கட்டிடங்களின் இடிபாடுகளை இருபுறமும் கொண்டு, கொலோசேயம் நோக்கிச் செல்லும் ஃபோரி இம்பரியாலி என்னும் சாலையில், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே... இஸ்ராயேலின் பேரரசே! உன்னதங்களிலே ஓசான்னா' என்ற பாடல்களோடு, சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசு போன்று வேடமணிந்த ஒருவர் முன்செல்ல, அவரை நாம் பின்செல்ல, அந்த நிமிடங்கள் தந்த உணர்வுக்கு இணையேதும் இல்லை.

எத்தனை ஆயிரம் பேர் இந்நிகழ்வினை வியப்போடு பார்த்தனர்! புகைப்படங்கள் எடுத்தனர். சிலுவைப் பாதை சிந்தனைகள் வாசிக்கும் போது அத்தனை பேரும் சாலை என்றும் பாராமல், எல்லோரும் பார்க்கிறார்களே என்றும் பாராமல், முழுந்தாளிட்டு செபித்த விதம் நிச்சயமாக சிலரது நம்பிக்கையையாவது பாதித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு இடத்தில் பதின் பருவ பிள்ளைகள் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தனைகள் வாசிக்கப்பட்ட போதும் அவர்கள் அவ்வாறே சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே பேசுவதை நிறுத்திக் கொண்டனர். யாராலும் இதனைக் கவனியாது செல்ல முடியவில்லை என்பதே இதன் மிகப் பெரிய வெற்றி. இறுதியில் ஒரு இத்தாலிய அருட்பணியாளர் இந்நிகழ்வினைப் பாராட்டிப் பேசும் போதும் இக்கருத்தையே கூறினார். உரோமையில் 'இந்தியர்கள்' இயேசுவுக்கு சான்று பகர்ந்த நிகழ்வு என்று திரும்பத் திரும்பக் கூறினார். நானும் அப்படித்தான் உணர்ந்தேன். 

வெள்ளி, 18 மார்ச், 2016

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு...

தீர்த்துக்கொள்வதென முடிவான பிறகு
பேசித் தீர்த்தாலென்ன?
பேசாமல் தீர்த்தாலென்ன?

நாவினால் சுட்ட வடுக்களை விட
ஆழமாயிருக்கின்றன
சுடாமல் விட்ட வடுக்கள்

எப்போதும் இருந்ததேயில்லை
வார்த்தைகளே இல்லாத
ஒரு தூய மௌனம்
பேசாத வார்த்தைகளே
மௌனம்

அவை பேசிய வார்த்தைகளை விட
இரைச்சலாய் இருக்கின்றன
மெல்ல முடியாதவாறு
கனமாய் இருக்கின்றன

இல்லாமல் போகட்டும்
அமைதியைக் குலைக்கும்
உக்கிரமான மௌனங்கள்!

ஞாயிறு, 13 மார்ச், 2016

என் நண்பன் அப்பாவான நாளில்

வறுவேல் அந்தோணி அவன் பெயர். குமரி மாவட்டத்துக் கிறிஸ்தவர்களிடம் வழங்கப்படும் பெயர். என் தாத்தாவின் பெயர் கூட அதுதான். புனித ஜார்ஜியாரைக் குறிக்கும் தமிழ் வடிவம் என்று நினைக்கிறேன். அவன் என் நண்பன்.

நேற்று மாலை  வழிபாட்டில் 'மாக்னிஃபிகாத்' (அன்னை மரியாவின் 'என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது' என்னும் பாடல்) பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று வறுவேலின் ஞாபகம் வந்து போனது. அதன் பின்னர் இதை எழுதும் வரையிலும் அவனோடு எனக்கான நட்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவன்தான் முதல் அப்பா. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாம் வகுப்பில் அவன் எங்களோடு சேர்ந்தான். பள்ளிக்கு வடக்கே ஓடிய நீரேரடைக்கு அந்தப் பக்கமாக இருந்தது அவனது வீடு. ரேஷன் கடை, பள்ளிக்கூடம், பங்கு கோவில், 'லண்டன்'(காரர்) வீடு என்று அடித்துப் போட்டாலும் மறக்காத இடங்களுக்கு அருகில் வயல்களுக்கும், வாழைத் தோப்புகளுக்கும் மத்தியில் பசுமை இல்லமாக இருந்தது அவனது வீடு. வீட்டு முற்றத்தில் கிடக்கும் பனை நார் கட்டிலில் இருந்து நொச்சி மரங்களின் ஒற்றைக் கால்களை வருடி சலசலவென்று ஓடும் ஓடையின் ஓசையைக் கேட்டுக் கொண்டே மேலே பார்த்தால் வானம் எப்போதும் மேக மூட்டத்தோடு காணப்படுவது ஏன் என்பது ரமணனுக்கே வெளிச்சம். உலகம் ஒரு நாள் நீரின்றி வறண்டு போகுமென்றால், ஆவியாகும் கடைசி சொட்டு நீர் அவன் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருக்கும் உயரமான வாழை தன் சுருண்ட குறுத்து இலைக்குள் ஒளித்து வைத்திருக்கும் குளிர்ந்த நீராகத்தான் இருக்கும். இயற்கை அன்னை தன் மொத்த அழகையும் அங்குதான் கொட்டி வைத்திருந்தாள். அங்கு அவன் தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டை படமெடுத்து வாட்ஸ்அப்-பில் அனுப்பியிருந்தான்.

அவன் தந்தையை நான் பார்த்ததேயில்லை. வாதை அடித்து அவர் கடவுளிடம் சென்று விட்டதாக சிறு வயதில் சொல்லியிருக்கிறான். கணவனை இழந்தும், பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து, சமுதாயத்தில் ஆளாக்கும் தியாகத் தாய்மார்களில் அவனது அம்மாவும் ஒருவர். எங்கள் நண்பர்களின் அம்மாக்களுக்கு நாங்கள்  எல்லோரும் பிள்ளைகள் தான்.  அவனோடுதான் எத்தனை நினைவுகள்! ஐந்தாம் வகுப்பில் மதர் லவுரன்சியா ஒருநாள் ஏதோவொரு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே எங்களுக்கெல்லாம் பயம். வறுவேலுக்கு அப்படியெல்லாம் எந்த தயக்கமும் இல்லை. அவர் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவனே பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனது ஆர்வத்தைத் தாங்க முடியாமல் அவரே சத்தமாக சிரித்துக் கொண்டு 'வறுவேல்! முந்திரி கொட்டை. எல்லோரையும் பதில் சொல்ல விடு' என்றார். வகுப்பே கலகலப்பானது. அவனோடு இருந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. குழுவைத் தனது விருப்பத்தில் நயமாகவும், நலமாகவும் ஒருங்கிணைக்கும் திறமை அவனுக்கு உண்டு. 

ஓன்பதாம் வகுப்பு என்று நினைக்கிறேன். ஒரிசாவின் புவனேஸ்வரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. முத்துகுமார் ஆசிரியர் அவன் பெயரையும், என் பெயரையும் தலைமையாசிரியரிடம் கொடுத்திருந்தார். கடைசி நேரத்தில் பள்ளிக்கு ஒருவர்தான் என்ற போது வறுவேல் மட்டும் புவனேஸ்வரம் சென்று வந்தான். அவனோடு இருக்கும் நினைவுகளிலேயே அதி சாதாரணமானது இதுதான். தீவிரமான நிகழ்வுகள் அவனுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். இன்னும் எனக்கு அவை மறக்காமலிருப்பது யாரையேனும் காயப்படுத்தக் கூடும் என்பதால் தவிர்க்கிறேன். மொத்தத்தில் அப்போதிலிருந்தே அவன் வெளிப்படையானவன். எதிலும் அவசரக்காரன். எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் நிற்பவன். எப்போதும் மாறாமல் அதே வறுவேலாக இருப்பவன். அன்பானவன். இன்னும் அவன் நிறைய, நிறைய, உயர உயர வளர வேண்டுமென்று என் வலைப்பூவில் அவனுக்கு பூங்கொத்துக்களைத் தருகிறேன்.

கடந்த ஆண்டுதான் அவனுக்கும், ஜாஸ்மினுக்கும் திருமணமானது. ஜாஸ்மினும் எங்களோடு படித்தவள்தான். பள்ளியில் படிக்கும் போது அவளோடு எப்போதும் சண்டைதான். சண்டை போடுவதற்கு கூட நான் அவளோடு அதிகமாய் பேசியதில்லை. அவர்கள் திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்வு வரை அவர்களுக்கேத் தெரியாது அவர்கள் ஒரு நாள் திருமணம் செய்வார்கள் என்று. அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள். ஜாஸ்மினுக்கு என் பாட்டியின் பிறந்த ஊரான இராஜாவூர். என் தந்தையின் குடும்பக் காரர்கள் நிறைய பேர் இராஜாவூரில் தான் இருக்கிறார்கள். அப்படி ஏதோவொரு முறையில் அவளுக்கு நான் சித்தப்பா முறை. இப்போது வறுவேலும் ஜாஸ்மினும் பெற்றோரான தினத்தில், நானும் முதன் முறையாகத் தாத்தாவனோன்.

திங்கள், 7 மார்ச், 2016

இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ?

இன்று பெண்கள் தினம். தாயாக, சகோதரியாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, சக மனிதராக ஒவ்வொரு ஆணையும் செதுக்கிச் செல்லும் எல்லாப் பெண்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்! இயங்கும் இவ்வுலகிற்கான பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படவும், பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படவும் எட்டுத்திக்கும் ஒலிக்கும் எல்லா பெண் சமத்துவக் குரல்களுக்கும் அன்பு வணக்கம்.

மகளிரை மதியாகவும், மலராகவும் வருணித்த கவிஞர்கள் அதற்கு மேல் அவள் யார் என்பதைச் சொல்லவேயில்லை. நாமும் அவள் நிலவைப் போல் தண்மையானவள் என்றும், பூவைப் போல் மென்மையானவள் என்றுமே நம்பியிருந்தோம். பெண்களைப் பற்றிய இத்தகையப் பார்வை ஒரு அழகியலாகத் தோன்றினாலும், அதுவே பெண்களின் ஏனைய எல்லாப் பரிமாணங்களையும் வேண்டுமென்றே கண்டுகொள்ள மறுக்கும் மறைமுக அரசியலாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பற்றிய இத்தகைய 'நளினப்' பார்வைகளுக்கு ஆண்டாண்டுகளாக நாம் நன்றாகப் பழகிப்போய்விட்டோம். இந்தப் பார்வைகள் எளிதில் மாறிவிடாதபடி மதம், மரபு, சாதியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சமூகக் கற்பிதங்கள் மிகவும் இறுக்கமாயுள்ளன. நமது சினிமாக்களும், சீரியல்களும், விளம்பரங்களும் 'பெண்மை-மென்மை' என்றப் புளித்துப் போனப் பார்வையைப் புதிது புதிதாகக் காட்டிப் பணம் சம்பாதிப்பதோடு, அதையே மீண்டும் மீண்டுமாய் உறுதி செய்கிறது. திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் வளரும் குழந்தைகளும் அப்படியே இதனை ஏற்றுக் கொண்டு பெண்களைப் பற்றியத் தங்கள் மனப் பிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். இப்பார்வைக்கு பலிகடா ஆவதில் படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடுகளே இல்லை. 

ஆனால் நம் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும், அல்லது நாம் பார்த்து பார்த்து வளர்ந்த பெண்கள் இந்த நளினத்தையும் தாண்டி போர்க்குணம் கொண்டவர்களாகவும், மென்மையையும் தாண்டி குன்று போன்று எதையும் தாங்கும் துணிவு கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள். வீரம் ஆண்களுக்கானது என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆண் அறியாமையில் இருக்கிறான். எனக்குத் தெரிந்து வெளியில் மிகவும் விறைப்பாகத் திரியும் பல ஆண்கள், ஆழ்மனதில் மிகுந்த அச்சமுடையவர்களாக இருக்கிறார்கள். தனது பயம் வெளியில் தெரிந்து விடாமலிருக்கவே, அவர்கள் யாரும் நெருங்க முடியாதபடி தங்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். உண்மையாகவே பயமில்லாதவர்கள் தங்களைத் திறந்த வெளியில், அனைவரின் பார்வைக்கும், பழக்கத்திற்கும் எளிதானவர்களாக வைத்துக்கொள்கிறார்கள். நான் பார்த்த பல பெண்கள் இத்தகையவர்கள். பார்வைக்கு மிக எளிதானவர்கள். ஆனால் மனதளவில் பல ஆண்களைவிட பன்மடங்கு வலிமையானவர்கள். 

மனிதன் இனக்குழுக்களாகக் கூடி வாழத் தொடங்கியக் காலத்தில் பெண்ணே அந்த இனத்தின் தலைவியாக இருந்தாள். வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது ஆணாகவும், வேட்டைக்குச் சென்று உணவு கொண்டு வருவது பெண்ணாகவும் இருந்தது அந்தத் தாய்வழிச் சமூகம். மாதவிடாயும், குழந்தைப் பேறும் பெண்ணின் அபூர்வ சக்தியாகவும், ஆணுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அம்மன், குமரி, போன்ற பலத் தமிழ் பெண் தெய்வங்களைப் போலவே ஒவ்வொரு ஆதிக் கலாச்சாரங்களிலும் பெண் தெய்வ வழிபாடுகளே இருந்துள்ளன. நாளடைவில் சமூக அமைப்புகள் மாறி, தனிக்குடும்பங்களாகவும், நிலவுடமைச் சமூகமாகவும் மாறியபோதே ஆணின் கட்டுக்குள் அதிகாரம் வருகிறது. பெண்ணின் ஆதி மரபணுவில் வீரம் புதைந்திருப்பதால்தான் பெண் சமூகத்தின் இத்தனை அடக்கு முறைகளுக்குள்ளும் வெற்றி பெறுகிறாள். 

இந்த சமூகம் அத்தனைப் பெண்களையுமே ஏமாற்றியிருக்கிறது. வஞ்சித்திருக்கிறது. நம்ப வைத்து அவளது வாழ்க்கையை வீணடித்திருக்கிறது. அவளது ஆற்றலும், திறமையும் சமயலறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிகளை சிறிதளவு மீற நினைத்தாலும் அவளை அத்தனை அவமானப்படுத்தியிருக்கிறது. ஒழுக்கம், புனிதம், கற்பு போன்ற விதிகளை அவளுக்கு மட்டும் சுமத்தி அவளைக் கூசிப் போகச் செய்திருக்கிறது. இத்தனைக்கு மத்தியிலும் அவள் நிமிர்ந்து நிற்கிறாள். வியக்க வைக்கிறாள். கோழைக் கணவன் ஓடிவிட்ட போதிலும் பெற்ற பிள்ளைகளை ஆளாக்குவதற்காக எத்தனை வீராப்போடு வாழ்கிறாள். காலச் சக்கரம் நத்தை போல் ஊர்ந்தாலும், அவள் கடைசி வரையில் பயணத்தை நிறுத்தவேயில்லை. கசப்புகளை மென்று தின்று விடுகிறாள். ஆனால் ஓடியக் கணவனின் முடிவு படுபயங்கரமானதாக, கேலிக்குரியதாகத் தோற்றுப்போய்விடுகிறது.

இன்று பெண்ணின் முகம் சமூகத்தில் வெளிச்சமாகத் தெரிகிறது. நல்ல மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தவள் விண்வெளி வரையிலும் சர்வ சாதாரணமாகச் சென்று வருகிறாள். அரசியல், விளையாட்டு, கல்வி என்று அத்தனைத் தளங்களிலும் பெண்கள் பங்களிப்பின் அவசியத்தை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. இருப்பினும் பெண்களுக்கெதிரானக் அத்துமீறல்களும், அடக்கு முறைகளும் அன்றாடச் செய்திகளாகவே இருந்து வருகின்றன. 'உண்மையானச் சிகப்பழுகு', 'மென்மையானச் சருமத்திற்கு' போன்ற விளம்பரங்கள் இந்த யுகத்திலும் இருந்துகொண்டுதானிருக்கின்றன. இத்தனைப் பெண் எழுச்சிக்குப் பின்னரும், சாதாரணப் பொதுப்புத்தியிலும், கட்டமைக்கப்பட்டக் கற்பிதங்களிலும் எள்ளின் முனையளவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஒரு ஆணுக்கு இருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும், சுதந்திரமும் பெண்ணுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன. இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ!
இந்த மாதம் பெண்களின் மாதம். பெண்களை மதிப்போம். அன்பு செய்வோம். அவள் அளவு இல்லையென்றாலும், நம்மால் இயன்றவரை!