திங்கள், 7 மார்ச், 2016

இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ?

இன்று பெண்கள் தினம். தாயாக, சகோதரியாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, சக மனிதராக ஒவ்வொரு ஆணையும் செதுக்கிச் செல்லும் எல்லாப் பெண்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்! இயங்கும் இவ்வுலகிற்கான பெண்களின் பங்களிப்பு கண்டுகொள்ளப்படவும், பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படவும் எட்டுத்திக்கும் ஒலிக்கும் எல்லா பெண் சமத்துவக் குரல்களுக்கும் அன்பு வணக்கம்.

மகளிரை மதியாகவும், மலராகவும் வருணித்த கவிஞர்கள் அதற்கு மேல் அவள் யார் என்பதைச் சொல்லவேயில்லை. நாமும் அவள் நிலவைப் போல் தண்மையானவள் என்றும், பூவைப் போல் மென்மையானவள் என்றுமே நம்பியிருந்தோம். பெண்களைப் பற்றிய இத்தகையப் பார்வை ஒரு அழகியலாகத் தோன்றினாலும், அதுவே பெண்களின் ஏனைய எல்லாப் பரிமாணங்களையும் வேண்டுமென்றே கண்டுகொள்ள மறுக்கும் மறைமுக அரசியலாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பற்றிய இத்தகைய 'நளினப்' பார்வைகளுக்கு ஆண்டாண்டுகளாக நாம் நன்றாகப் பழகிப்போய்விட்டோம். இந்தப் பார்வைகள் எளிதில் மாறிவிடாதபடி மதம், மரபு, சாதியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சமூகக் கற்பிதங்கள் மிகவும் இறுக்கமாயுள்ளன. நமது சினிமாக்களும், சீரியல்களும், விளம்பரங்களும் 'பெண்மை-மென்மை' என்றப் புளித்துப் போனப் பார்வையைப் புதிது புதிதாகக் காட்டிப் பணம் சம்பாதிப்பதோடு, அதையே மீண்டும் மீண்டுமாய் உறுதி செய்கிறது. திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் வளரும் குழந்தைகளும் அப்படியே இதனை ஏற்றுக் கொண்டு பெண்களைப் பற்றியத் தங்கள் மனப் பிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். இப்பார்வைக்கு பலிகடா ஆவதில் படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடுகளே இல்லை. 

ஆனால் நம் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும், அல்லது நாம் பார்த்து பார்த்து வளர்ந்த பெண்கள் இந்த நளினத்தையும் தாண்டி போர்க்குணம் கொண்டவர்களாகவும், மென்மையையும் தாண்டி குன்று போன்று எதையும் தாங்கும் துணிவு கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள். வீரம் ஆண்களுக்கானது என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆண் அறியாமையில் இருக்கிறான். எனக்குத் தெரிந்து வெளியில் மிகவும் விறைப்பாகத் திரியும் பல ஆண்கள், ஆழ்மனதில் மிகுந்த அச்சமுடையவர்களாக இருக்கிறார்கள். தனது பயம் வெளியில் தெரிந்து விடாமலிருக்கவே, அவர்கள் யாரும் நெருங்க முடியாதபடி தங்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். உண்மையாகவே பயமில்லாதவர்கள் தங்களைத் திறந்த வெளியில், அனைவரின் பார்வைக்கும், பழக்கத்திற்கும் எளிதானவர்களாக வைத்துக்கொள்கிறார்கள். நான் பார்த்த பல பெண்கள் இத்தகையவர்கள். பார்வைக்கு மிக எளிதானவர்கள். ஆனால் மனதளவில் பல ஆண்களைவிட பன்மடங்கு வலிமையானவர்கள். 

மனிதன் இனக்குழுக்களாகக் கூடி வாழத் தொடங்கியக் காலத்தில் பெண்ணே அந்த இனத்தின் தலைவியாக இருந்தாள். வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது ஆணாகவும், வேட்டைக்குச் சென்று உணவு கொண்டு வருவது பெண்ணாகவும் இருந்தது அந்தத் தாய்வழிச் சமூகம். மாதவிடாயும், குழந்தைப் பேறும் பெண்ணின் அபூர்வ சக்தியாகவும், ஆணுக்கு அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அம்மன், குமரி, போன்ற பலத் தமிழ் பெண் தெய்வங்களைப் போலவே ஒவ்வொரு ஆதிக் கலாச்சாரங்களிலும் பெண் தெய்வ வழிபாடுகளே இருந்துள்ளன. நாளடைவில் சமூக அமைப்புகள் மாறி, தனிக்குடும்பங்களாகவும், நிலவுடமைச் சமூகமாகவும் மாறியபோதே ஆணின் கட்டுக்குள் அதிகாரம் வருகிறது. பெண்ணின் ஆதி மரபணுவில் வீரம் புதைந்திருப்பதால்தான் பெண் சமூகத்தின் இத்தனை அடக்கு முறைகளுக்குள்ளும் வெற்றி பெறுகிறாள். 

இந்த சமூகம் அத்தனைப் பெண்களையுமே ஏமாற்றியிருக்கிறது. வஞ்சித்திருக்கிறது. நம்ப வைத்து அவளது வாழ்க்கையை வீணடித்திருக்கிறது. அவளது ஆற்றலும், திறமையும் சமயலறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிகளை சிறிதளவு மீற நினைத்தாலும் அவளை அத்தனை அவமானப்படுத்தியிருக்கிறது. ஒழுக்கம், புனிதம், கற்பு போன்ற விதிகளை அவளுக்கு மட்டும் சுமத்தி அவளைக் கூசிப் போகச் செய்திருக்கிறது. இத்தனைக்கு மத்தியிலும் அவள் நிமிர்ந்து நிற்கிறாள். வியக்க வைக்கிறாள். கோழைக் கணவன் ஓடிவிட்ட போதிலும் பெற்ற பிள்ளைகளை ஆளாக்குவதற்காக எத்தனை வீராப்போடு வாழ்கிறாள். காலச் சக்கரம் நத்தை போல் ஊர்ந்தாலும், அவள் கடைசி வரையில் பயணத்தை நிறுத்தவேயில்லை. கசப்புகளை மென்று தின்று விடுகிறாள். ஆனால் ஓடியக் கணவனின் முடிவு படுபயங்கரமானதாக, கேலிக்குரியதாகத் தோற்றுப்போய்விடுகிறது.

இன்று பெண்ணின் முகம் சமூகத்தில் வெளிச்சமாகத் தெரிகிறது. நல்ல மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தவள் விண்வெளி வரையிலும் சர்வ சாதாரணமாகச் சென்று வருகிறாள். அரசியல், விளையாட்டு, கல்வி என்று அத்தனைத் தளங்களிலும் பெண்கள் பங்களிப்பின் அவசியத்தை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. இருப்பினும் பெண்களுக்கெதிரானக் அத்துமீறல்களும், அடக்கு முறைகளும் அன்றாடச் செய்திகளாகவே இருந்து வருகின்றன. 'உண்மையானச் சிகப்பழுகு', 'மென்மையானச் சருமத்திற்கு' போன்ற விளம்பரங்கள் இந்த யுகத்திலும் இருந்துகொண்டுதானிருக்கின்றன. இத்தனைப் பெண் எழுச்சிக்குப் பின்னரும், சாதாரணப் பொதுப்புத்தியிலும், கட்டமைக்கப்பட்டக் கற்பிதங்களிலும் எள்ளின் முனையளவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஒரு ஆணுக்கு இருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும், சுதந்திரமும் பெண்ணுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன. இன்னும் எத்தனை மார்ச் எட்டுக்கள் தேவைப்படுமோ!
இந்த மாதம் பெண்களின் மாதம். பெண்களை மதிப்போம். அன்பு செய்வோம். அவள் அளவு இல்லையென்றாலும், நம்மால் இயன்றவரை! 

2 கருத்துகள்: