வெள்ளி, 16 டிசம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு (A MODERN EVIL CALLED FDI)

காடு கழனிகளிலிருந்து
மாடுகளை அனுப்பிவிடுங்கள்
வெள்ளைக்கார மாடுகள்
மேய வருகின்றன
உங்கள் வயிறுகள்
காய வருகின்றன

சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீடு
ஆனை கட்டி போரடித்து
போரடித்து விட்டது
இனி அம்பானி பார்த்துக்கொள்வான்

"யூதரென்றும், கிரேக்கரென்றும் இல்லை"
சாத்தான்களுக்கு இதைச் சொன்னது யாரோ?
தின்று கொழுத்த அமெரிக்கனென்றோ
மண்ணைத் தின்னும் சோமாலியனென்றோ
செரிக்க நடக்கும் வெள்ளையனென்றோ
சேரியில் சாகும் சாமானியனென்றோ
பிரிவுக் கொடுமை இனியும் இல்லையாம்!!!
உலகக் கிராமத்தில் நீயும் நானும் ஒண்ணு
 நம்பும் உன் வாயில் மண்ணு!

அரசின் அடிமையாக சில காலம்
அரசியின் அடிமையாக இன்னும் சில காலம்
இன்று அமெரிக்க அடிமையாகிப் போன
ஒரு தலைவன் வெட்கமின்றி சொல்கிறான்:
'வால்மார்ட்' வருக! வருக!
'மெகா' உங்கள் சகா!
'டெஸ்கோ', 'கேரிப்போர்'
நமக்குள் என்ன சொற்போர்?
கொள்வார் இருக்க
கடைவிரிக்க தடைவிதியேன்!

பசிலிக் கீரையும்
சிட்டுக்குருவி லேகியமும்
இனி காந்தி மார்க்கெட்டில் கிடைப்பதில்லை
காந்திக்கே இங்கு மார்க்கெட் இல்லை
என்ன சரக்கோ
வா! வால்மார்ட்டுக்கு!

 வெள்ளையன் துணியை
வீதியில் எரிப்போம்
அந்நியப் பொருளை
ஆழியில் வீசுவோம்
சொந்தச் சந்தையை
தூக்கி நிறுத்த
சுதந்திரப் போரில் ஒன்றுபடு
சுதேசியாக வென்றுவிடு

'சுதேசி! சுதேசி! என்று
சொன்னவன் செத்தான்
மற்றவன் அதனை மறந்துவிட்டான்!
அரை மீட்டர் கொடி காக்க
அடிப்ட்டு செத்தான் ஒருத்தன்
செக்கிழுத்து மாண்டான் மடையன்
கதர்! கதர்! என்று
கதற கதற கத்தினான் கிழவன்
தண்டி வரை நடந்தானாம்
உப்பு காய்ச்சி விளையாட!

எல்லாம் தப்பாகி விட்டது
தலைவர்களே! தியாகிகளே!
உங்கள் இரத்தத்தை
நாங்கள் அடமானம் வைத்துவிட்டோம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டோம்
கவலை உனக்கில்லை என்பதை மட்டும்
இந்த நாட்டில் ஒத்துக்கொள்ள முடியவில்லை
குறுதி ஊற்றி விளைத்த பொருளை
விற்பனை செய்வது
கற்பனை தானோ?
கண்ணீருடன் சொல்கிறேன்
அந்நிய முதலீட்டை
அனுமதித்துவிட்டால்
கதியொன்றுமில்லை - நாம்
கரை சேர்வதில்லை

அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும்
என் மனைவியை கொஞ்ச நாள்
நீ வைத்துக்கொள் என்று
அமெரிக்கனிடம் விடுவதற்கும்
பெரிதாக எந்த
வித்தியாசமும் இல்லை

இலஞ்ச ஊழல் பெருச்சாளிகளின்
பண முதலைகளின்
அராஜக, மக்கள் விரோத
கொடுங்கோல் காங்கிரஸ்
ஒழிந்து போக!
சேர்ந்து சபிப்போம்.

திங்கள், 14 நவம்பர், 2011

தீமை எரிக்க...வாழ்க்கை விளக்க

எதையோ ஒன்றை
சுட்டுவதாய்
உன் விழிச்சுடர்!
சுடுபடு பொருள் அறியேன்...
தெளிந்த உன் கண்களே
என்னைக் குழப்புகின்றன

எந்த சூட்சுமத்திலும்
பிடிபடவில்லை
உன் அடையாளம்
ஆணோ, பெண்ணோ
அறுதியிட இயலாது
நீயே நிற்கிறாய்
ஏதோ ஒன்றின் அடையாளமாய்!

உலக உலையில்
வெந்து தணிந்த முதுமை
உரித்துபோட்ட பாம்பின் சட்டையாக
வாழ்வு என்னும் புதிர் வட்டத்திலிருந்து
உன்னைக் களற்றி விட்டது யாரோ?
உன் குருதியை உறிஞ்சிய
மழைக்காலத்து அட்டைப் பூச்சிகள்
மகனோ? மகளோ?

இன்னும் என்ன
புனிதம் கிடக்கிறதென
தொப்பியில் காட்டுகிறாய்
பச்சைக்கொடி
கண்தானம் செய்வாயோ?
தசைதானம் செய்வாயோ?

மின்னும் விளக்கென
வீர விழிகள்
உனக்குப் பின்னும் தேவை
தீமை எரிக்க
வாழ்க்கை விளக்க
பார்வை கொடு பூமிக்கு
தாயே! தந்தையே!

புதன், 9 நவம்பர், 2011

என் அடையாளங்களை
நான் வெறுக்கிறேன்
அவை என்னைச் சுட்டுவதில்லை
என்றோ எவனோ
கட்டியக் கதைகளை
யாரைக் கேட்டு சூட்டுகிறீர்கள்
என் மீது!
இந்தியனாம்! தமிழனாம்!
சத்தியமாய் நான் விரும்பவில்லை
கேவலம்! குமட்டுகிறது

இந்த நாட்டில் ஓட்டு போடுவதற்கம்
தற்கொலை செய்வதற்கும்
எந்த வேறுபாடும் இல்லை!
என் தலைமையின் செயல்பாடுகள்
என் மீது எச்சிலை உமிழ்கின்றன
நான் போடும் ஓட்டுக்கள்
இதற்கான என் அனுமதிப் பத்திரங்கள்

நீ பிச்சை கேள்
போடுகிறேன்
பிழைத்துக்கொள்
அறிவற்ற உனக்கு
மிக மிகக் கேவலமான உனக்கு
ஏழைகளின் எச்சிலுக்கம் விலைபெறாத உனக்கு
எதற்கு ஓட்டு

பார்ப்பன நாய் குரைத்து விளையாட
கேட்கிறது என் எலும்புகளை
பல்லை இளித்துக்கொண்டு
பல்லக்குத் தூக்கும்
அறியாமைக் கூட்டத்துக்கு
ஒரு பெயர் தமிழனாம்
அதில் நானும் ஒருவனாம்

பெரும்பான்மை முட்டாள்களால்
போதி மரத்தில் விறகு வெட்டும்
ஒருத்தி தலைவியாகிறாள்
அவள் எனக்கும் தலைவியாம்?
தலைவலி...

ஐந்து ஆண்டுகளுக்கேனும்
இப்பகுதிக்குப் புதியப் பெயரிடுவோம்
நரகம் என்று...


                                                                                                  கோபம் தொடரும்.
                                                                                                                      நன்றி.

வெள்ளி, 4 நவம்பர், 2011

OUR TAMILNADU

தமிழகத்தை சில காலம் ஒரு சிறுக்கியும்,
இன்னும் பிற காலங்களில் ஒரு பொறுக்கியும்
ஆட்சி செய்கின்றனர். என் கருத்து சரிதானா?
உங்கள் கருத்து என்ன?

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தேசத் தலைவர்கள்

'வாழ்க நீ! எம்மான், இந்த
 வையத்து நாட்டி லெல்;லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
 விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
 பாரதத் தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
 மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
அவையோர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்!
நான் விரும்பும் தேசத்தலைவர் யாரென்றுக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவேன் அது அண்ணல் காந்தியடிகள் தான் என்று. அவரை வெறுமனேத் தேசத்தலைவர் என்று கூறுவுது, வானளாவிய அவரது சிறப்பைச் சுறுக்கிக் கூறுவதாகவே கருதுகிறேன். அவர் தலைவர். அவர் உலகத் தலைவர் என்றால் கூட அது மிகையாகாது.

 தன்மானத் தலைவர் தந்தை பெரியார் இல்லையா? கல்விக் கண் திறந்தக் கர்ம வீரர் காமராஜர் இல்லையா? கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் இல்லையா? கொடிகாத்து உயிர் நீத்த திருப்பூர் குமரன் இல்லையா? என்று நீங்கள் வினவுவது என் காதில் நன்றாகக் கேட்கிறது. நம் நாட்டு விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்த ஏராளம் தலைவர்கள் நம்மிடையே உண்டு என்பதில் எனக்கு அணுவளவும் ஐயமில்லை. இருப்பினும் இநத்த் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானத் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது அண்ணல் காந்தியடிகள்தான்.

 காந்தியடிகள் குஜராத்திலுள்ள போர்பந்தரில் 1869 ஆண்டு, அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் அம்மையார் என்னும் வைசியக் குலப் பெற்றோருக்கு கடைசி பிள்ளையாகப் பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே அறத்திலும், ஒழுக்கத்திலும் மிகுந்தப் பற்றினைக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பின் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.

  அதன் பின் தன் வழக்கறி!ர் தொழிலைச் செய்வதற்காகத் தென் ஆப்ரிக்க நாட்டிற்றுப் பயணமானார். அங்குதான் அவர் மனிதர்களையும், சமுதாயத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், அடிமைத்தனங்களையும், அடக்குமுறைகளையும் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டார்.

 ஒருமுறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பயணச்சீட்டு பரிசோதகர், 'இது வெள்ளைக் காரர்கள் பயணம் செய்யும் முதல் வகுப்புப்  பெட்டி. இங்கு கறுப்பு நாய்கள் பயணம் செய்ய முடியாது என்று கடுமையாகப் பேசி, அவரதுக் கழுத்தைப் பிடித்து வெளியேத் தள்ளினார். இந்த வலியில் முளைத்த விருட்சமே அவரை விடுதலை உணர்வுள்ள, மாபெரும் இயக்கச் சக்தியாக உருவாக்கியது.

தென் ஆப்ரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவது குறித்து மிகவும் வேதனை அடைந்து 1893 ஆம் ஆண்டு 'நேட்டல் இந்தியர் காங்கிரஸ்' என்நும் அமைப்பினை உருவாக்கினார்.

 மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உலகின் மாபெரும் தலைவர்களே, காந்தியடிகளை முன்மாதிரியாகச் கொள்ள அவரது அகிம்சை என்னும் அறப்போராட்டமே முக்கியக் காரணமாகும். அகிம்சை அறவழியில் நடந்து 41 நாடுகள் விடுதலை அடைந்ததாகவும், 198 நாடுகளில் அகிம்சை உத்திகள் இருப்பதாகவும் வரலாற்று அறிஞர் ஜெனி ஷார்ப் (Gene Sharp) கூறுகிறார். 

 பகவத் கீதையும், விவிலியத்தில் உள்ள மலைப்பொழிவும், லியோ டால்ஸ்டாய் என்பவரின் ' இறையாட்சி உங்களிடமே உள்ளது' என்ற நூலும் காந்தியடிகளின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 'இரத்தமும், சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நம்புவது கடினமாக இருக்கும்' என்று ஐன்ஸ்டீன் கூறுகிறார். 

 காந்தியடிகள் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தக் காரணத்தால் 1948, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் இன்னும் இறக்கவில்லை. அவரது இலட்சியக் கொள்கைகளால் நம்மிடையே வாழ்கிறார் என்பதற்கு அன்னா ஹசாரே, மேதாபட்கர் போன்ற நம் காலத்திய அறப்போராட்டவாதிகளே சாட்சி. காந்தியடிகளைப் போன்ற ஒரு தன்னலமற்ற மாபெரும் தலைவர் நம் மத்தியிலும் உருவாக வாழ்த்தி அமர்கிறேன்.

நன்ற! வணக்கம்!




வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity in Tamil)

வேற்றுமையில் ஒற்றுமை
   'வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
   பிள்ளைகள் பெற்றதப் பூனை: அவை
பேருக்கொரு நிறமாகும்
   சாம்பல் நிறமொருக்குட்டி- கருஞ்
சாந்ர்து நிறமொருக் குட்டி
   பாம்பு நிறமொருக்குட்டி- வெள்ளை
பாலி னிறமொரு குட்டி
   எந்த நிறமிருந்தாலலும் - அவை
யாவும் ஒரு தரமன்றோ?
  இந்த நிறம் சிறிதென்றும் - இஃ
தேற்றமென்றுஞ் சொல்ல லாமோ?

 அவையோர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்! நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு வேற்றுமையில் ஒற்றுமை. 

  நம் நாடு இந்தியா. இந்த ஒரு பெயரைத் தவிர நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான மொழியும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும், பண்பாடும், விழாக்களும், விருந்துகளும் வேறுபட்டு நம் நாட்டை அழகுபடுத்துகின்றன. இதுவே நம் நாட்டின் தனிச்சிறப்பு. உலக நாடுகளின் மத்தியல் நம் இந்தியத் திருநாட்டை தனித்துக் காட்டும் அடையாளமே இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான்.

 பிரான்ஸ் என்றால் அது கிறிஸ்தவ நாடு. துருக்கி என்றால் அது இஸ்லாமிய நாடு. ஆனால் இந்தியா என்றால் அதை இந்து நாடு என்றோ, இஸ்லாமிய நாடு என்றே, கிறிஸ்தவ நாடு என்றோ கூறுதல் இயலுமோ? இங்குதான் அனைத்து மதத்தினரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்று கூடு வாழ்கின்றனரே!

 இங்கிலாந்து- அது ஆங்கில நாடு
பிரெஞ்சு மொழியில் பேசுபவர்கள் பிரெஞ்சுக் காரர்கள்.
ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டுமே 1500க்கும் அதிகமான மொழிகள் வழக்கத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு மொழிக்கென்றும் இருக்கும் இலக்கியங்கள் எத்தனை! ஒவ்வொரு இலக்கியமும் சுமந்து நிற்கும் வரலாறுகள் எத்தனை! ஒவ்வொரு வரலாறும் சுட்டிக்காட்டும் கலாச்சரமும், பண்பாடும் எத்தனை எத்தனை!

நாம்  இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதற்கும் எத்தனையோக் காரணங்கள் இருந்தாலும் நம் நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுiயில் ஒற்றுமை என்னும் பண்புதான் தலையானதாகக் கருதுகிறேன். நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளே ஒருவர் மற்றவர் மீது ஆர்வமும் அக்கறையும்; செலுத்துவதற்குக் காரணமாய் அமைகின்றன.

 நாம் பேருந்தில் செல்லும் போது பிறமொழி பேசும் நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கிறோம். தலையில் தொப்பியும், முகத்தில் அடர்ந்த தாடியும் கொண்ட சீக்கிய நண்பர்களை ஆர்வமாய் பாரக்கிறோம்.

ஏதோ பதினொரு நபர்கள் ஆடிய விளையாட்டாக, சில நாட்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? அதன் வெற்றியால் ஒட்டு மொத்த இந்தியாவே பூரித்துப் போனது.

இப்படி பல் வண்ணம் கொண்ட ஓவியமாக, பலப் பூக்களைக் கொண்ட அழகியத் தோட்டமாக விளங்குவது நம் இந்தியா. இங்கு ஒருவருக்கு வெற்றி என்றால் அனைவருக்கும் வெற்றியே! ஒருவருக்குத் தலைகுனிவு என்றால் அனைவருக்கும் தலைக்குனிவே!

ஏனென்றால் இனத்தால், மொழியால், மதத்தால், இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்துவதால் மக்களிடையும், மாநிலங்களுக்கிடையிலேயும் பிளவுகளை ஏற்படுத்தி, பகைமை நெருப்பூட்டி அதில் குளிர்காயத் துடிக்கும் போலி மதவாதிகளிடமும், சுயநல அரசியல் வாதிகளிடமும் நாம் கவனமாக இருத்தல் அவசியம்

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே'
என்னும் பாரதியில் வரிகளை மனத்தில் நிறுத்தி ஒன்று படுவோம் உயர்வடைவோம்.

                                               நன்றி! வணக்கம்!


புதன், 10 ஆகஸ்ட், 2011

'நாம் தமிழர்' (What a Foolishness)

பாண்டி, பட்டி,
தோணி, சேரி, மதராசி
பாரெங்கும் பாருங்கள்
தமிழனுக்கு எத்தனைப் பெயர்கள்
திராவிடம் என்னும்
இல்லாதப் போர்வையில்
இங்கு மட்டும்
எல்லோரும் தமிழன்!
கன்னடன், தெலுங்கன்,
மலைவிழுங்கும் மலையாளி,
வந்தேறி, மார்வாடி, குஜராத்தி
யார் சொன்னது மடையன்களே!
'நாம் தமிழர்'

தனித்தமிழ் நாடு (Ashamed tobe a bloody Indian)

நெஞ்சைப் பதைக்கிறது
பிரெஞ்சு தெருக்களில்
சீக்கியனுக்குத் தடை தொப்பி போட!
மூக்கு வியர்த்து
வெறிகொண்டு எழுந்து
சிங்கமுகம் கொண்டு கர்ஜித்து
கண்டித்தான் சிங் என்னும் ஒருவன்

வாயில் பிள்ளைகளைப் போட்டு
கடவாய்ப் பற்களுக்கிடையில்
நசுங்கிய இள இரத்தம் குடித்து
வெறியடங்கா அரக்கனுக்கு
என்ன பொருத்தம்!
சிவப்பு கம்பள வரவேற்பு

தன் தசை எரிவதை
தானேப் பார்க்கும்
பேறுபெற்ற எம் தமிழினம்
'அய்யோ! அம்மா!'
என்று அலறியக் குரலுக்குப்
பாராமுகமாய் இருந்த
உங்கள் இனம் அழியும்!

அமேதியில்
அமைதி ஊர்வலம்
வெள்ளை உடையில் குள்ளநரிகள்!
ஏழை நண்பர்களே!
இனியும் நம்ப வேண்டாம்
உங்கள் தட்டில்
கைவைத்து உண்ணும் போது
சற்றே உற்றுப்பாருங்கள்
தமிழனைக் குதறிய
இரத்தக் கறை இருக்கும்

காவியை கைவிட்ட நீங்கள்
வெள்ளையை எரிக்க வேண்டும்
எங்களை நாங்களே பாதுகாப்போம்
பிரித்துக் கொடு ஒரு தனித்தமிழ் நாடு

சேர்ந்து தேடுவோம் (come on Seeking)

மேற்கு குமரியில்
மூழ்கும் பரிதியில்
காட்சி கண்டேன்
நான் இளைஞன்!
தமஸ்கு சாலையில்
ஒளியடித்து விழுந்த
இளமுனி பவுலாக
இருண்டு போனதென் கண்கள்!

வழக்கு மன்றக் கூண்டில்
கொடிகள் பின்னிய
மரமாய் நான் எதிரே கடவுளைக் கண்டேன்
அவள் கருப்பாயிருந்தாள்
'தாயே! தாயே!'

வினா :
சேவலைப் பற்றி என்னத் தெரியும்?

விடை :
சிவந்த கொண்டை
நீண்ட வால், மினுக்கும் மேனி
ஊர் திருவிழாவில் கறியோ சுவை!
நான் இளைஞன்

வினா :
பரிதி எழும் முன் எழும்
தொண்டை கீற கூவி எழுப்பும்
சிறகை அடித்து உயிரைக் கூட்டும்
கிடைப்பது பற்றிய பதற்றமின்றி
தொடர்ந்து தேடும்
தீமைக்கு அஞ்சி ஓடும்
நேரத்தில் வீடு தேடி அடையும்
இது பற்றி அறிவாயோ?

விடை :
நான்காம் வரியைக் காட்டி
'நான் இளைஞன்' என்றேன்
உன் கால்களை நீயே கட்டி விட்டாய்
பரிணாமத்தில் உச்சியில்
பரிதாபமாய் நீ!
ரசித்ததும், ருசித்ததும்
போதும்! நிறுத்து...
வெளிறிக்கிடக்குமம்
உன்னைத் தூசி தட்டு
தோல் கொஞ்சம் உறைக்கட்டும்
தோல்வியைத் தாங்க
தோளுக்கு வலு சேர்
திருந்த செயல் செய்து
சேவலாய் மாறு
வெற்றி உன் வாசல் படியில்...'

இப்பொழுது நான்
விழித்து விட்டேன்
உச்சி சேரும் வரை
உறக்கம் இனி இல்லை!
வா! நண்பா!
நீயும் வா!
சேர்ந்து தேடுவோம்
தனித்தனியே கண்டுபிடிப்போம்!

சனி, 19 பிப்ரவரி, 2011

மாண்புமிகு குழந்தைகள் (Dear Respected Children)

முன்னுரை

ஒளி படைத்தக் கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
என்று பாரதியாரால் அன்போடும், வீரத்தோடும் அழைக்கப்பட்டக் குழந்தைகள், இன்று அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச்சீட்டிற்கு தங்கள் மனித மாண்பினையும், மரியாதையையும் விலைகொடுக்க வேண்டியிருப்பதைப் பார்க்கும் போது என் நெஞ்சம் சொல்லொண்ணாத் துயரம் அடைந்திருக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்ற முறையில் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அகவிழி திறக்கப்படாத நம் சமுதாயத்தில், இன்றைய இலவசப் பயணச்சீட்டு அவர்களை இன்னும் மாண்பிழக்கச் செய்கிறது. எல்லா இலவசங்களையும் எதிர்ப்பது போல, இவ் வசதியையும் எதிர்ப்பதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவ்வாறு குழந்தைகள் நலம் விரும்பி ஏற்படுத்தப்பட்டிருக்கும் இப்பணச்சீட்டு முறையில், இன்றையக் குழந்தைகள் எங்ஙனம் நடத்தப்படுகிறார்கள் என்பதையும், அவர்களது உடல், கல்வி, மனநலம் எந்த அளவிற்கு பாதிப்படைகிறது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

பேருந்து நிறுத்தங்களில்

மெக்காலே, மெட்ரிகுலேஷேன் போன்ற வெள்ளைக்காரச் கல்விச் சரக்குகள் நம் குழந்தைகளின் முதுகுகளில் ஒருநாளும் குறையாத புத்தகச் சுமையினை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை நாம் அறிவோம். அம்மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கும் போதே அவர்களின் காலை உணவு முழுவதுமாக செரித்து விடுகிறது. அதன் பின்னர் ஏராளம் தனியார் பேருந்துகளும், அதிவேக, மிக அதிவேக, குளிர்சாதன, இடைநில்லா என்று அத்தனை வகை பேருந்துகளையும் களைப்புடனே பார்த்தக்கொண்டிருக்கும் குழந்தைகள், தாங்கள் செல்ல வசதி படைத்த சில மிக மெது வேக பேருந்துகளின் பின்னாலும் ஓட வேண்டியிருக்கிறது. புத்தக மூட்டை அவர்களை பின்னோக்கி இழுத்தாலும், பள்ளி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை பேருந்தின் படிக்கட்டு வரை முன்னே செலுத்துகின்றது. குறைந்தது இரண்டு, மூன்று பேருந்துகளாவது அவர்களுக்கு ஒரு ஓட்டப்பயிற்சியினைக் கொடுத்தபின். வேண்டா வெறுப்பாக ஒரு பேருந்து முனகிக் கொண்டே அவர்களை தன்னுள் ஏற்றுக்கொள்கிறது.

நடத்துனரின் நடத்தைகள்

'டேய் நாயே! படிக்கட்டிலர்ந்து உள்ள வா!' என்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்புரையாற்றுபவர் நடத்துனர். 'டிக்கெட்டா, பாசா?' என்றும் 'எத்தனை நாளு சொல்றது.. அந்த மூட்டைய எங்கயாச்சும் இறக்கி வையின்னு' கேட்கும் நடத்துனரிடம் எங்கு இறக்கி வைப்பது என்று தெரியாதக் குழந்தை விழிக்கிறது. 'முழியப் பாரு கள்ளப்பய மாதிரி, இதுகல்லாம் படிக்கப் போகுதோ, வேறஎதுக்கும் போகுதா, நமக்குன்னு வந்து வாய்க்கிறாங்க பாரு' என்ற வசைச் சொற்களோடு பேருந்தில் தன்னால் இயன்ற அளவிற்கு முன்னேற முயல்கிறது குழந்தை.

பிற பயணிகளின் பங்களிப்பு

'ஏய் உங்களுக்கெல்லாம் வேற பஸ்ல வந்தா என்ன? ச்சி.. அங்க தள்ளி போ!'
என்று இப்படி ஒரு உருவத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போன்ற பாவனையை முகத்தில் காட்டி அக்குழந்தைகளின் முகத்தில் வெறுப்பு அமிலத்தை தெளிப்பது பிற பயணிகளின் வேலை. இவர்கள் பிரயாணிகளா? அல்லது பிராணிகளா? என்று கூட பல வேளைகளில் எண்ணியிருக்கிறேன். இவர்கள் குழந்தைகளாக இருந்ததே இல்லை போல. அல்லது இவர்களுக்கு குழந்தைகளே இல்லை போல.

பள்ளியில் குழந்தைகள்

ஊர்ந்து சென்ற பேருந்து வழக்கம் போல நிறுத்தத்திலிருந்து அரைகல் தள்ளியே நிற்கிறது. இறங்கி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடியும் குழந்தையால் முதல் பாடவேளையில் கடைசி நிமிடத்தில்தான் நுழைய முடிகிறது. பேருந்திலிருந்து உமிழப்பட்டக் குழந்தைகள், இங்கும் இருக்கையின் மேல் நிற்க, முழங்கால் நிற்க, ஐந்நூறு முறை 'இனி நான் காலந்தவறாமல் வருவேன்' என்று எழுத என ஏதோவொரு தண்டனையைப் பெறுகிறது.

அறநெறி பார்வையில்

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நீ என்ன செய்தாய் என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. நான்; அச்சிறுவர்களை 'இப்படி வாங்க தம்பி' என்று பன்மையில் அழைப்பதை ஒரு சிறு பங்களிப்பாகக் கருதுகிறேன். இத்தனை தெளிவிற்கு பின்னரும் இப்படித்தான் என் பங்களிப்பு இருக்கிறது என்றால் அது எந்த மாற்றத்தையும் உருவாக்காது என்பதையும் உணர்கிறேன். 'மனிதர் நோக மனிதர் பார்க்கும் பழக்கம் ஒழியுமோ' என்ற பாரதியாரின் வார்த்தைகள் என் நெஞ்சைச் சுடுகின்றது. அறநெறியின் பன்முகத்தன்மையில் பார்க்கும் போது குழந்தைகளின் மாண்பு என்பது சட்டமாக, ஒவ்வொருவரின் உள்ள உறுதிப்பாடாக, தனிமனித வளர்ச்சியாக, பிறர் மீதுள்ள அன்பாக, அனைத்திற்கும் உச்;சமாக ஒரு சமூக மாற்றமாக உருவெடுக்க வேண்டும் என்பதே என் உள்ளார்ந்த விருப்பம். குழந்தைகளின் மீதான இந்த வன்முறையைப் பார்த்த பின்னரும் நாம் அந்த இடத்திலேயும், பின்னர் இந்நிலை முற்றிலும் மாறும் வண்ணம் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளாவிடின் நீதியின் பரிமாணங்களாகிய பொதுநீதி, கடமையைச் செய்ய வைக்கும் நீதி, சமூக நீதி போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தும் அவற்றிற்கு அநீதி இழைக்கின்றோம் என்றே பொருள். இனி வரும் நாளில் குழந்தைகள் மாண்பினை மதிப்பேன் என்றும் காப்பேன் என்றும் உறுதி கொள்வோமா?








சனி, 29 ஜனவரி, 2011

ஒரு நவீன குழந்தையின் ( A Joyful Psalm of a Modern Child )

வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் ஊன்றுகோலை இழந்து
வாழப்பிடிக்காமல் வாழ்ந்து தொலையும்
பரிதாப மனிதர்களிடம்
'நல்லகாரியங்கள் நம்மைசுற்றிலும் நடந்தேறுகின்றன'
என்பதை தெளிவுபடுத்தும்
ஒரு நவீன குழந்தையின்
நன்றித் திருப்பாடல்

அன்புள்ள அப்பா
உங்களுக்கு நன்றிசொல்ல
ஆசை ஆசையா ஓடிவந்தேன்

ஒரு சம்மனசு போல
நல்ல பிள்ளையா
என்ன பிறக்கவெச்சீங்களே!

எனக்கு பாசம் கொடுத்து
பராமரிக்க, பாதுகாக்க
பாசமான அப்பா, அம்மா,

அக்கா, அண்ணன்,
சொந்தக்காரங்க
எல்லாரையும் கொடுத்தீங்களே!

உங்களப்பத்தி தெரிஞ்சிக்க
எனக்கு மறைக்கல்வி, பூசபாக்க
வாய்ப்பு கொடுத்தீங்களே!

இன்னிக்கு நான் இப்படியிருக்க
முக்கியக் காரணமான
தியாக உணர்வுள்ள ஆசிரியர்கள்

நல்ல நல்ல நண்பர்களை
பெரிய மனசுள்ள சமுதாயத்தை
ஒரு பைசா செலவில்லாம தந்தீங்களே!

எனக்கு துன்பமே தெரியாம
எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்க
குறு குறுன்னு ஒரு தங்கச்சிப்பாப்பா

செல்ல பூனைக்குட்டி,
மை பெஸ்ட் ஃப்ரெண்டு Jimmy
குட்டியா ஒரு வீட்டுத்தோட்டம்...

ஏ..அப்பா!
எவ்வளவு கொடுத்திங்க..
ரொம்ப நன்றிப்பா!

ரொம்பவும் நன்றி
ஆனா ஒரு சின்ன வேண்டுகோள்
நீங்க எனக்கு எதுவுமே தரவேண்டாம்!

நீங்க எப்பவும்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
நீங்க ஏங்கூட இருக்கிங்க..

ஏங்கூட பேசுவீங்க
ஏங்கூட சண்டபோடமாட்டீங்க..
இந்த நம்பிக்கை

இதுபோதும் அப்பா
உங்களுக்கு எப்பவும்
நன்றி சொல்லுவேன்

நன்றி அப்பா! நன்றி!
என் இதயம் துடிப்பதும்,
நான் மூச்சு விடுவதும்

நான் கண் சிமிட்டுவதும் கூட
அன்னிச்சை செயல் இல்லப்பா..
என் நன்றியின் தாள சுதிகள்!


நன்றிகளுடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்



இனிவருபவை...


இலையுதிர் காலம்
சில இலைகளை விரும்பியே உதிர்த்து விட்டேன்
விருப்பமான சில இலைகளும்
விரும்பியே உதிர்ந்துவிட்டன

கொட்டிய மழையிலும்,
 வாட்டிய வெயிலிலும் கூட
என்னோடு இன்னமும் சில இலைகள்...

என்னைப் பற்றி எழுதத்துவங்கும்
என்னுயிர் இலைகளே..!
நீங்கள் என்னில் துளிர்த்த நாள்
எனக்குத் தெரியும்
மண்ணில் துளிர்த்த நாளையும்,

தொலைவிலே போனாலும்
தொலைந்து விடாமலிருக்க
தொலைபேசி எண்ணையும்,

வந்தால் பார்த்து செல்ல-அல்லது
வந்து பார்த்து செல்ல
உங்கள் வேர்களின் முகவரியும்,

இதயம் கனிந்து
இதனுடன்
இணைத்திடுக..!

குறிப்பு: இலைகள் என்றதும்
இறக்கமாய் பார்க்கவேண்டாம்
என் வேர்களுக்கு நீர்பாய்ச்சுவதே
இந்த இலைகள் தான்..         

  அன்புடன் ம. ஆன்றனி பிரான்சிஸ்





மேய்ப்பு பணியில்
இருப்பவர்கள்
மனதளவில்
வறண்ட நிலமாய்
இறையனுபவத்தில்
வெற்றுப்பாத்திரமாய்
இருக்கும் அவலநிலையை
இறைவனிடம் முறையிடும்
ஓர் குழந்தை தொழிலாளரின்
புலம்பல், ஏக்கம், கண்ணீர்
இறையனுபவத்திற்கான
ஆசையை
வேட்கையை
தேடலை
என்னிலே தூண்டிய
என் ஆசிரியப் பெருமக்களுக்கு
இப்பாடல் சமர்ப்பணம்.

 
படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

பொறந்ந மறுநாளே
ஆத்தாள கொன்னுபுட்டேன்
அப்பனோட ஆத்தாதான்
எனையெடுத்து வளத்துபுட்டா

கோபக் கொடுங்காரி
கொலமட்டும் செய்யலியே
எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும்
காளியாட்டம் ஆடுறாளே

பச்சப் புள்ளையின்னு
பாவமெல்லாம் பாக்;காம
பழியெல்லா ஏம்மேல
ஏத்திவெச்சு அடிக்கிறாளே!

அப்பனுக்கு எம்மேல
எள்ளளவும் பாசமில்ல
ரெண்டே மாசத்தில
ரெண்டாந்தரக் கல்யாணம்

மின்சார வேலிக்குள்ள
கண்தெரியா மானப்போல
வகைவகையா வாழ்க்கையில
நானும்வந்து மாட்டிக்கிட்டேன்

சித்(தீ)யை பத்திநானும்
சொல்லணுமா ஆண்டவரே
நெருப்புக் கட்டையால
தெனந்தோறும் சூடுவைப்பா

பத்திரமா பள்ளிக்கூடம்
பெத்தமகள அனுப்பிவெச்சு
பாவிமக என்னமட்டும்
அனுப்பிவிட்டா தொழிற்கூடம்

பட்டாசு வெடிச்சதுல
கையிரண்டும் புண்ணாச்சு
மருந்துவெச்சு தேச்சதுல
வெரலு ஒண்ணு விழுந்துபோச்சு

எப்படியும் வாழ்க்கையில
முன்னேறப் போவதில்லை
இப்படியே என்னவந்து
எடுத்துக்கயா ஆண்டவரே

மனுசனாகப் பொறந்தாக்க
நம்பிக்கை வேணுமடா
அய்யனாரு கோயிலுல
பூசாரி சொன்னாரு

மனசில்லா ஒலகத்துல
மனுசனாக நானெதுக்கு
மாடாச்சும் ஆடாச்சும்
மாத்தினாலும் போவுமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
'அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!
 
                    ஏக்கத்துடன் ம.ஆன்றனி பிரான்சிஸ்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

தமிழ்-ஆங்கில மன்ற தொடக்கவிழா அறிக்கை (Tamil-English Acdemies inaguration)

அகவையில் மூத்த அழகு தமிழே – வைகைக்கரையில் பாய்ந்த வேங்கைத் தமிழே
செம்மொழியாய் பார்போற்றும் இயங்கு தமிழே
போற்றி! போற்றி! போற்றி!
அவையினர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்!


மதுரையில் முடிந்து போன முச்சங்கங்களின் தொடர்ச்சியாய், மலைக்கோட்டை மாநகர், திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியின் 2010-2011 ம் கல்வியாண்டின் தமிழ்-ஆங்கில மன்றங்கள் 'சேதெஸ் சேப்பியன்ஸா' அரங்கில் மலர்ந்த நேரம் 19-06-2010, சனிக்கிழமை, காலை 11.30 மணி.

 இரண்டாமாண்டு மாணவர்கள் இசபெல்லா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து, உணர்ந்து பாடிய 'உன்னருகில் நானிருக்கும்...' என்ற இறைவணக்கப் பாடல் நம்மை இறையன்பின் அனுபவத்தில் நெக்குருக வைத்தது.


அன்றலர்ந்த பூவாய் புன்னகைத்து வந்தோரை வரவேற்றார் வைகைக் குழுவின் ஜான்கென்னடி.


 சிறப்பு விருந்தினர், மன்றங்களின் இயக்குனர் தந்தையர்கள் மற்றும் மன்றச்செயலர்கள் குத்துவிளக்கேற்ற, உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்து, விருந்தோம்பல், வீரம், காதல் வளர்த்த தமிழகப் பண்பாட்டின் தொட்டில்கான, காவிரி, அமராவதி, தாமிரபரணி, வைகை, பவானி என்னும் தமிழ் ஆறுகளின் பெயர்களைத் தாங்கிய ஐந்து தமிழ்மன்றக் குழுக்களும் தங்கள் பணியை அன்றேத் தொடங்கினர்.


 நெப்போலியன் தலைமையில் அணிவகுத்த பவானி குழுவினரின் 'தமிழா, தமிழா, நீயும் தலை உயர்த்தடா' என்ற பாடல் நம் செவிகளுக்கு இடப்பட்ட கட்டளை.


 நெஞ்சக்கிடக்கையில் உறைந்து கிடக்கும் இறைமையோடு உறவாட உகந்த மொழி என்று புளங்காகிதப்பட்டது போதும். இனிமேல் செயற்கைகோள்கள் தமிழில் செய்தி அனுப்பட்டும்.. கொடிய நோய்கள் என்றாலும் அவை நல்ல தமிழில் இருக்கட்டும். கணினியில் மென்பொருள்கள் கட்டாயமாகத் தமிழ் கற்றுக்கொள்ளட்டும். மாநாடுகள் போதும்.. இனி செயல்பாடுகள் முன்வரட்டும் என்றத் தன் கருத்தைப் பதிவு செய்தார் சிறப்பு விருந்தினர், 'தூய வளனார் கல்லூரி முதல்வர் பணி.இராசரெத்தினம் சே.ச. அவர்கள். மனித உறவுகளைக் கருத்தில் கொண்டு, அயல் மொழிகளை, குறிப்பாக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதும் சாலச்சிறந்ததே என்று அவர் ஆங்கிலத்தில் பேசியது புதுமை.


 கல்வி, கலை, மொழி, அரசியல் போன்ற சமூக இயக்கத்திற்கு தடையாக இருக்கும் புல்லுருவிகளுக்கு வீச்சரிவாள் வீசியது, தாமிரபரணி குழுவினர், தெக்கத்தி தமிழில் அரங்கேற்றிய வீதி நாடகம்.
 நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை என்பது தம் நெஞ்சை நெருஞ்சி முள்ளாகக் குத்துவதாகவும், பள்ளிக்கல்வியைத் தாய்மொழியிலும், அந்நிய மொழிகளை வேண்டுமானால் அடுத்த ஆறு மாதங்களிலும் கற்றுக்கொள்ளலாம் எனத் தம் யோசனையை முன்வைத்தார் தமிழ்மன்ற இயக்குநர் தந்தை பணி.இ.ரெய்மண்ட் ஜோசப் அவர்கள்.


'வானமறிந்தது அனைத்துமறிந்து வளர்மொழி எம்மொழி என்ற முதலாண்டு மாணவர்களின் குழுப்பாடல், கொன்றை, குவளை, அன்னிச்ச மலர்களைத் தமிழ் நரம்புகளில் பூக்கச்செய்தது.
 தெரிவு செய்தலே வாழ்வு. பின்னர் தொடர்ந்த ஈடுபாடும், அயராத உழைப்பும் நம்மை அறுபது மடங்காகவும், ஏன் அதைவிட அதிகமாகவும் கனிதரச் செய்யும் என தந்தைக்குரிய வாஞ்சையோடு உற்சாகப்படுத்தினார்
ஆங்கில மன்றங்களின் இயக்குனர் பணி.நார்பட் தாமஸ் அவர்கள்.


 மலர்ந்த முகம், குவிந்த கரம், தாழ்ந்த சிரம் என காவிரி குழுவின் எபனேசர், அனைவருக்கும் நன்றி கூறிய பாங்கு நம் நெஞ்சை விட்டு இன்னும் நீங்காமல் நிற்கிறது.


'நாங்கள் தமிழ் மாணவகள்..' என்ற, இதயத்துடிப்பின் தாளகதியில் மன்றப்பண்ணிசைக்க இனிதே நிறைவுற்றது தொடக்கவிழா.
அட.. என எண்ண வைத்த அமராவதி குழுவினரின் நிகழ்ச்சித் தொகுப்பு புதுமையிலும் புதுமை.
'நிலமுட்டை வெடித்து மனிதம் வாய் திறந்த போது அகரமாய் உயிர்த்த ஆதிமகள் தமிழின் ஆழமும், விரிவும் நம் காலத்திலே இன்னும் அகலப்படட்டும்'
நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

வியாழன், 27 ஜனவரி, 2011

திருப்பலி முன்னுரை

பொதுமுன்னுரை

முகிலைத் தழுவும் தென்றல் மழையைத் தருகிறது. மண்ணைத் தழுவும் மழை விளைச்சலைத் தருகிறது. அவனியை  அன்பால் தழுவும் மனமே அர்ப்பணிக்க முன்வருகின்றது. இதயத்தில் நிரம்பி வழியும் அன்பால், கிறிஸ்துவின் அர்ப்பணத்தில் தம்மையே முழுமையாக இணைத்துக்கொள்ள முன்வந்திருக்கும் எம் சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழாவில் கலந்து கொண்டு, எம் இறையன்னை குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க வந்திருக்கும் அருள் பணியாளர்கள், அருட்சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்பொழுக வரவேற்கின்றேன்.

பாண்டி-கடலூர் உயர்மறைமாவட்டம் அழகப்பசமுத்திரத்தில் திரு.சாமுவேல், திருமதி அந்தோணியம்மாள் அவர்களின் நான்காவது மகனாக 10-05-1982 அன்று பிறந்தவர் எம் அருட்சகோதரர் சந்தோஷ் குமார். பார்க்கும் போதெல்லாம், இவரது முகத்தில்  அரும்பும் புன்னகை நமக்குப் பூக்களை நினைவுபடுத்தும். அவை அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஏராளம் கனிகளை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டவை. 

திண்டுக்கல் மறைமாவட்டம்,  அம்மாபட்டியில் திரு.சவரிமுத்து, திருமதி அன்னம்மாள் ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் ஐந்தாவது மகனாக 24-12-1982 அன்று பிறந்த செல்லப்பிள்ளை எம் அருட்சகோ.குழந்தை ராஜ். உள்ளத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் தான் பெயரிட்டிருப்பார்களோ என்று இவரோடு பழகியவர்களுக்குத் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. எளிமை, இயல்பு, ஆழ்ந்த இறை நம்பிக்கைக்கு இவரை எடுத்துக்காட்ட இயலும்.

அடுத்ததாக அருட்சகோ.அந்தோணி குரூஸ். முத்துக்களைப் பெற்றெடுப்பதில் அழகப்பசமுத்திற்கே முதல் இடம் என்பது போல் இவர் இவ்வூரிலிருந்து எம் சபையில் பூக்கும் இரண்டாவது மலர் திரு.ராயப்பன், திருமதி அந்தோணியம்மாள் இவர்களின் நான்கு பிள்ளைகளில் இரண்டாவது மகனாக 20-04-1984 அன்று பிறந்தார். பாகுபாடற்று பழகுவதும், பெரிய சிந்தனைகளை, எளிய மொழியில் பேசிவிடுவதும் இவரது தனிச்சிறப்பு. 

இம் முக்கனிகள் மூன்றும் எம் சபையில் காலடி பதித்த ஆண்டு 2002. ஓராண்டு புதுமுக அனுபவத்தை இதே இல்லத்தில் பெற்றபின் 2003 முதல் 2004 வரை மூன்றாண்டு மெய்யியல் படிப்பை மதுரையிலும், 2007-2008 இல் ஓராண்டு நவசன்னியாசத்தை மீண்டும் இதே இல்லத்திலும் முடித்து, தங்கள் முதல் வாரத்தைப்பாட்டினைக் கொடுத்த நாள் 07-05-2007. தொடர்ந்து 2007-2010 வரை நான்கு ஆண்டு இறையியல் படிப்பை திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் முடித்த இவர்கள் இன்று எம் இறையன்னை சபையின் நிரந்தர அங்கத்தினர்களாக தங்கள் இறுதி அர்ப்பணத்தைக் கொடுக்கவிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்தி, இவர்களுக்காக செபிக்க வந்திருக்கும் நாம், பாடல் குழுவினரோடு இணைந்து வருகைப்பாடலைப் பாடுவோம்.

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே! எம் இறை அன்னை சபை என்னும் தோட்டத்திலே நிரந்தரமாய் வேரூன்றி, இன்றுமுதல் புதிதாகப் பூத்துக் குலுங்கவிருக்கும் எம் அருட்சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், மற்றும் அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழா திருப்பலியில் பங்கேற்று, அவர்களின் துறவற அர்ப்பணம் சிறக்க வாழ்;த்த வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கின்றோம். 'தன்னைக் காத்து உலகை துறப்பதல்ல- துறவரம் தன்னைத் துறந்து உலகைக் காப்பதே என்ற சிலுவைத் துறவியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவடி தொடர்வதே இன்றையக் காலத்திற்கு ஏற்றத் துறவறமாகும். திருச்சபை என்னும் மாபெறும் இறைமக்கள் இயக்கத்திற்கு இதயமாய் விளங்குவது துறவறம் ஆகும். இதுவே காலத்தின் சுவடுகளில் நாம் காணும் உண்மை. அடிமை வழக்கம், அரசர் வழிபாடு, நாடு பிடிக்கும் வெறி, பகட்டு வாழ்க்கைமுறை, காலனி ஆதிக்கம் போன்றவை உலக வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் முளைத்த நச்சுக் காளான்கள். இறையாட்சிக்கு எதிரான இத்தகைய இருட்டுக்கொள்கைகள் திருச்சபையின் இயக்கத்தில் தேக்கத்தை ஏற்படுத்;திய போதெல்லாம் சூழலின் தேவைக்கேற்ப புதிய புதிய வடிவம் கொண்ட துறவறம், ஒட்டுமொத்த திருச்சபைக்கும் உண்மையின் பாதையைச் சுட்டிக்காட்டிய சுடரொளியாக விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில், நற்கருணையில் இறைபிரசன்னம், அன்னை மரியாள் இறைவனின் தாய் போன்ற மறை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியற்ற சிலரால் திருச்சபை பிளவுபட்டக் காலத்தில், குழந்தைகளுக்கு மறைக்கல்வி என்னும் கருவியைக் கையிலெடுத்து, திருச்சபைத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தெளிவினை ஏற்படுத்தியவர்தான் எம் இறையன்னை சபை நிறுவனர் புனித ஜான் லியோனார்தியார்.அவரது தனிவரத்திலிருந்து(உhயசளைஅ) அணுவளவும் பிறளாது சூழலின் தேவைக்கேற்ப மாற்றுப் பணிகளைச் செயல்படுத்தி இறையாட்சிக்குச் சான்று பகரும் எம் சபையின் இயக்க ஓட்டத்தில் இன்று இவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ளவிருக்கிறார்கள். முதல் அர்ப்பணத்தில் இவர்கள் உச்சரித்த கற்பு, ஏழ்மை, கிழ்படிதல் என்ற வார்த்தைப்பாடுகள் இன்று முதல் இவர்களின் வாழ்க்கைப்பாடாக மாறவிருக்கின்றன. இயேசுவின் பாதச் சுவடுகளை மற்ற யாவரைக் காட்டிலும் மிக நெருக்கமாய் பின்தொடர சிறப்பான முறையில்  அழைக்கப்பட்டிருக்கும் இச்சகோதரர்களுக்கு ஆற்றலளிக்கும் ஊற்றாக இருப்பது இவர்களது ஆழ்ந்த இறையனுபவமும், இவர்களுக்காக இறைமக்களாகிய நாம் ஒப்புக்கொடுக்கும் செபங்களும்தான்.தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்திருப்பலியில் பங்கேற்று நாமும் இறையாசீர் பெறுவோம்.

சிறு முன்னுரை (For Final Vows)

                                நற்செய்திக்குப் பின்...
சிறு முன்னுரை 1
அனைவரும் அமரவும். இப்பொழுது இறுதி அர்ப்பண திருச்சடங்குகள் ஆரம்பமாகின்றன. வார்த்தைப்பாட்டினைக் கொடுக்கவிருக்கும் அருட்சகோதரர்களை  இல்ல அதிபர் தந்தை பெயர் சொல்லி அழைக்க, அவர்கள் சபையின் அதிபர் தந்தையின் முன்வந்து நின்று 'இதோ வருகிறேன்' என்று பதிலளிப்பர்.
 பின்னர் கடவுளிடமும், திருச்சபையிடமும் அவர்கள் கேட்கவிரும்புவது என்ன என்று அதிபர் தந்தை வினவ, புனித லியோனார்தியாரால் நிறுவப்பட்ட இறை அன்னைத் துறவறக் குடும்பத்தின் வழியாக இறைமனித சேவையில் தங்கள் இறுதி மூச்சு வரை நிலைத்திருக்கும் விருப்பத்தைத் தெரிவிப்பர். அப்போது நாம் அனைவரும் இணைந்து 'நன்றி பாடி' என்ற பாடலைப் பாடுவோம்.
 (அனைவரும் இணைந்து நன்றி கீதம் பாடுவோம்)

                                மறையுரைக்குப் பின்
சிறுமுன்னுரை 2
 இப்பொழுது கடவுளுக்குத் தங்களையே முழுமையாக அர்ப்பணிக்கவும், இறை அன்னை சபையின் ஒழுங்கு முறைகளின் படி, கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் துறவற விழுமியங்களை வாழ்வதற்கான அருட்சகோதரர்களின் மன விருப்பத்தை சபையின் அதிபர் தந்தை கேட்டு அறிந்து கொள்வார்.

சிறுமுன்னுரை 3
 இப்பொழுது புனிதர்களின் மன்றாட்டு மாலையானது பாடப்படுகிறது. வார்த்தைப்பாட்டினைக் கொடுக்கவிருக்கும் சகோதரர்கள், தங்கள் முழு அர்ப்பணத்தின் அடையாளமாக, இறைவனையே முழுவதுமாகச் சார்ந்திருப்பதை உணர்ந்து, பலிபீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து மன்றாடுவார்கள். நாமும் முழந்தாள் படியிட்டு அவர்களுக்காக செபிப்போம்.

சிறுமுன்னுரை 4
 அனைவரும் அமரவும். இப்பொழுது ஏற்கனவே எம் சபையில் இறுதி அர்ப்பணத்தைக் கொடுத்திருக்கும் இரு தந்தையர்களை அதிபர் தந்தை சாட்சிகளாக அழைக்க, இயேசுவின் அடிச்சுவட்டில் நடைபயில உறுதிகொண்டிருக்கும் நம் சகோதரர்கள், தங்கள் கைப்பட எழுதிய வார்த்தைப் பாட்டு வாய்ப்பாட்டை வாசிப்பர்.

சிறுமுன்னுரை 5
 இப்பொழுது இறுதி வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கும் அருட்சகோதரர்களை அதிபர் தந்தை பலிபீடத்திற்கு அழைத்துச்சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் வார்த்தைப்பாட்டுப் புத்தகத்தில் கையொப்பமிடுவர். இது மீட்பிற்காக பலியாகி உயிர்த்த கிறிஸ்துவோடு தங்கள் அர்ப்பணம் ஒன்றிப்பதைக் குறிக்கிறது.

சிறுமுன்னுரை 6
 இப்பொழுது தங்கள் அர்ப்பணத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கும் விதமாக அருட்சகோதரர்கள் ........................... என்றப் பாடலைப் பாடவர்.

சிறுமுன்னுரை 7
 இப்பொழுது புதிதாக இறுதி வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கும் அருட்சகோதரர்கள் சபை அதிபரின் முன் முழந்தாளிட, அதிபர் தந்தை கரங்களை விரித்து சிறப்பு ஆசீரை அருட்சகோதரர்களுக்கு அளிப்பார். நாமும் முழந்தாள் படியிட்டு பக்தியோடு அவர்களுக்காக செபிப்போம்.

சிறுமுன்னுரை 8
 இப்பொழுது புதிதாக வார்த்தைப்பாட்டினைக் கொடுத்திருக்கம் அருட்சகோதரர்களுக்கு அதிபர் தந்தை சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை தம் மனக்கண் முன் கொண்டிருக்க அறிவுறுத்தி சிலுவையை வழங்குவார்.

சிறுமுன்னுரை 9
 திருச்சபையின் வழிநின்று தங்கள் துறவறத்தை வாழ்வாக்க வேண்டும் என்பதை நினைவூட்ட இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானது அருட்சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறுமுன்னுரை 10
 இப்பொழுது தங்கள் இறுதி அர்ப்பணத்தை அளித்து, சபையின் புதிய அங்கத்தினராகியிருக்கும் அருட்சகோதரர்களுக்கு அதிபர் தந்தை அமைதியின் வாழ்த்தை அறிவித்து, சபையின் பிற தந்தையர்களிடம் வாழ்து பெற அழைத்துச் செல்வார்.

புனிதர்களின் மன்றாட்டு மாலை

புனிதர்களின் மன்றாட்டு மாலைஆண்டவரே இரக்கமாயிரும் -2
கிறிஸ்துவே இரக்கமாயிரும் -2
ஆண்டவரே இரக்கமாயிரும் -2
புனித மரியாயே இறைவனின் தாயே
புனித மிக்கேலே
இறைவனின் புனித தூதர்களே
புனித திருமுழுக்கு யோவானே
புனித சூசையப்பரே
புனித இராயப்பரே புனித சின்னப்பரே
புனித அருளப்பரே
புனித மதலேன் மரியம்மாளே
இறைவனின் அனைத்து சீடர்களே
புனித ஸ்தேபானே
புனித லாரன்சே
புனித ஆஞ்ஞேசம்மாளே
இறைவனின் அனைத்து மறைசாட்சிகளே
புனித பசிலியாரே
புனித அகுஸ்தினாரே
புனித ஆசீர்வாதப்பரே
புனித பெர்னாந்துவே
புனித பிரான்சிஸ் அசிசியாரே
புனித சுவாமிநாதரே
புனித அக்குவினாஸ் தோமையாரே
புதின சிலுவை அருளப்பரே
புனித ஜோவான்னி லியோனார்தியே
புனித பிலிப்பு நேரியாரே
புனித லயோலா இஞ்ஞாசியாரே
புனித பதுவை அந்தோணியாரே
புனித கலசான்ஸ் சூசையப்பரே
புனித பிரான்சிஸ் சவேரியாரே
புனித ஜான் போஸ்கோவே
புனித அவிலா தெரசம்மாளே
புனித குழந்தை யேசு தெரசம்மாளே
புனித கித்தேரியம்மாளே
இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதையரே
கருணைகூர்ந்து     எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து..
பாவம் அனைத்திலுமிருந்து....
முடிவில்லா சாவிலிருந்து....
உமது மனுவுடலேற்பினாலே...
உமது இறப்பினாலே உயிர்பினாலே...
தூய ஆவியின் வருகையினாலே...
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் 
      -எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
உமது ஊழியர்களின் பணியாலும், கொடைகளாலும், உமது திருச்சபையின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உம் அடியார் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஆயர்கள் மற்றும் அனைத்து அதிபர்களையும் உமது தூய ஆவியின் கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
துறவியரின் வாழ்வும் பணியும் மனித குல முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அனைத்து துறவற சபையினரும் கிறிஸ்துவின் அன்பிலும், தங்கள் நிறுவுனரின் வழியிலும் வாழவும், வளரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறையன்னை சபையினர் தங்கள் நிறுவனரான தூய ஜான் லியோனார்தியின் நிரந்தர சீர்திருத்தத்தின் தனிகொடையை வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தங்கள் பிள்ளையை இறைபணிக்காக அளித்திட்ட இவர்களின் பெற்றோர்களை உமது நிறைவான ஆசீரினால் ஈடுசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இன்று தங்கள் வாழ்வை உமக்கு அர்ப்பணம் செய்யும் இந்த சகோதரர்களை கிறிஸ்துவைப்போல் வாழ செய்யவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உம் அடியார்ராகிய இவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருக்க அருளும் ஆற்றலும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இந்த எங்கள் சகோதரர்களை ஆசீர்வதித்து அர்ச்சித்து, அர்ப்பணிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உயிருள்ள இறைவனின் திருமகனான இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்த்தருளும் -2
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்த்தருளும்   -2


இளைய மீசைகள் அதிரட்டும் (youth vibration)

                   இளைய மீசைகள் அதிரட்டும்             
                   மீண்டும் ஒன்றாய் சேர்ந்தோம்
                   என்றப் பெருமை பொங்கிட
                   இளைய மீசைகள் அதிரட்டும்
                   இளைஞனே எழுந்து நில் ஒளி வீசு

ஆற்றல் மிக்க இளைய நண்பர்களுக்கு செயலரின் அன்பு வணக்கம்!
              
           வாள் கிழித்த நீர் எவ்வளவு நேரம் தான் பிரிந்திருக்கும்?
           கடந்த கூட்டம் நடந்த நேரம் 28-11-10, காலை 8.15 மணி

படை கண்டு தொடை நடுங்கும் கோழையல்ல
முன்நின்று வழிநடத்தும் நல்ல தலைவராக அருட்சகோ. அமுதராஜ் அமர்வினை நெறிப்படுத்தினார்.
பாலஸ்தீனத் தெருக்களிலும்ஸ
சத்திரங்களிலும், சாவடிகளிலும் ஏன் இல்லங்களிலும் கூட இடம் கிடைக்காது போன பாலன் இயேசுவுக்கு
இன்று உலகின் அத்தனை இதயங்களிலும் இடம் உண்டு
நம் பங்கிலும் அந்த மாபெறும் இமளைஞருக்கு குடில் அமைப்பது குறித்து விவாதித்தோம்.

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்
என்னும் ஜான் கென்னடியின் பொன் வாக்கிற்கிணங்க பங்கிற்கு நம்முடைய பங்களிப்பு என்ன என்று ஆராய்ந்தோம். இருவரேனும் பங்குப் பேரவைக் கூட்டத்திற்கு செலர்வது என்று முடிவு செய்தோம்.

      விழாக்கள் தான் இன்றும்
      மனித உறவுகளும், மகிழ்ச்சியும்
     விழாமல் பாரத்துக்கொள்கின்றன.
கிறிஸ்துமஸ் விழாவினை எவ்வாறு கொண்டாடலாம் என்று விவாதிக்கும் பொழுது புதுமையை விரும்பும் இளைஞர்களின் புரட்சிக் கருத்துக்களில் மாற்றத்திற்கான வெளிச்சம் தெரிந்தது.

தானாகத் தோன்றியது உலகம் என்றால்
பூக்களுக்கு பூமியில் என் வேலை?
சோறும், மனிதனும் மட்டும்தான் உலகம் என்றால்
ஏற்றுக்கொள்கிறேன் நான்
கடவுள் இல்லையென்று!


அழகும், ஞானமும் கொண்ட அன்புக் கடவுளுக்கு நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வியாழன், 6 ஜனவரி, 2011

பள்ளிக்காலம்: தீர்த்தக்கரையினிலே



பிரகாஷ், பிரிட்டோ, பிரான்சிஸ், நவமணி, மற்றும் எங்கள் அண்ணா விஜின்

என் அன்பிற்கினிய நண்பர்கள் மற்றும் எங்கள் டியூஷன் அக்கா டெலினா



பிரிட்டோ, விஜின், பிரகாஷ், விமல்ராஜ்,  விமல்ராஜ், வறுவேல் மற்றும் தம்பி வின்சோ




நண்டு என்று செல்லமாக அழைக்கப்படும் எங்கள் அன்பு நண்பன் பிரிட்டோ ராஜ்