திங்கள், 14 நவம்பர், 2011

தீமை எரிக்க...வாழ்க்கை விளக்க

எதையோ ஒன்றை
சுட்டுவதாய்
உன் விழிச்சுடர்!
சுடுபடு பொருள் அறியேன்...
தெளிந்த உன் கண்களே
என்னைக் குழப்புகின்றன

எந்த சூட்சுமத்திலும்
பிடிபடவில்லை
உன் அடையாளம்
ஆணோ, பெண்ணோ
அறுதியிட இயலாது
நீயே நிற்கிறாய்
ஏதோ ஒன்றின் அடையாளமாய்!

உலக உலையில்
வெந்து தணிந்த முதுமை
உரித்துபோட்ட பாம்பின் சட்டையாக
வாழ்வு என்னும் புதிர் வட்டத்திலிருந்து
உன்னைக் களற்றி விட்டது யாரோ?
உன் குருதியை உறிஞ்சிய
மழைக்காலத்து அட்டைப் பூச்சிகள்
மகனோ? மகளோ?

இன்னும் என்ன
புனிதம் கிடக்கிறதென
தொப்பியில் காட்டுகிறாய்
பச்சைக்கொடி
கண்தானம் செய்வாயோ?
தசைதானம் செய்வாயோ?

மின்னும் விளக்கென
வீர விழிகள்
உனக்குப் பின்னும் தேவை
தீமை எரிக்க
வாழ்க்கை விளக்க
பார்வை கொடு பூமிக்கு
தாயே! தந்தையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக