ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சங்கிகள், தம்பிகள் மற்றும் பெந்தகோஸ்து பிரதர்கள்

தெருவில் விளையாடிய மூன்று சிறுவர்கள் ஒரு மரப்பொந்தில் மூன்று முட்டைகளைப் பார்க்கின்றனர். காவி, பச்சை, வெள்ளை என்று ஒவ்வொன்றும் ஒரு நிறம். அடித்துப்பிடித்து ஒவ்வொருவனும் ஒரு முட்டையை எடுத்துக்கொள்கின்றனர். உடனே உடைத்து வாயில் விட்ட பிறகுதான் தெரிந்தது மூன்றும் கூமுட்டைகள் என்று. நிறம் மட்டும் தான் வேறாகவும், குணம் எல்லாம் ஒன்றாகவும் இருக்கும் மூன்று தரப்பினரைப் பற்றியது தான் இக்கட்டுரை. 

சிறுவயதிலிருந்தே ஒரு நபரைத் தெரியும். ஒரு இந்து நண்பராகத்தான் அறிமுகம்.  ஆனால் மிகுந்த கால இடைவெளியில் தான் அவரை சந்திப்பதுண்டு. குருமடத்திலிருந்து விடுமுறைக்கு வரும்போது எங்கு பார்த்தாலும் நின்று பேசாமல் செல்ல மாட்டார். எப்போதும் ஒருவித ஆச்சர்யத்தோடும், தயக்கத்தோடும் நிறைய கேள்விகள் கேட்பார். அவரது பணிவான உடல்மொழியாலும், நம்மை வானதூதர் அளவுக்கு வைத்துப் பேசுவதையும் தாங்க முடியாமல் அவரைக் கண்டாலே ஓடிவிடுவதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது அவரிடம் ஒரு தன்னம்பிக்கை ஒளி தென்பட்டதைக் கவனித்தேன். பழைய சமஸ்கிருதம் - தமிழ் கலந்த (தேவ பாசை) பைபிள் மொழியில் நிறைய வசனங்களைக் கூறி விளக்கம் கேட்டார். எந்தப் பதிலிலும் ஒரு திருப்தியற்று, சரி அதை விடுங்கள், என்று அடுத்தக் கேள்விக்குத் தாவினார். தப்பித்துப் பிழைத்தேன் என்று தான் ஞாபகம். கடந்த வருடம் இன்னும் மாறிவிட்டிருந்தார். வழியில் நிறுத்தி, தம்பி கொஞ்சம் நில்லுங்கள்! கர்த்தர் உங்களை அழைக்கிறார். நீங்கள் உடனே கிறிஸ்தவராக மாறவேண்டும் என்றார். ஒருமாதிரி முழித்தேன். கர்த்தருக்குள் நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். சிலை வழிபாட்டை விட வேண்டும். சாத்தானின் பாதையிலிருந்து விலகி ஆவிக்குள் வர வேண்டும் என்றார். முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறொரு ஆளாக நிற்கும்  அந்த மனிதரின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்து வியந்துவிட்டேன். 

இதே மாற்றத்தை சீமானின் தம்பிகளாக மாறியிருக்கும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன். எல்லோருக்கும் ஒரு அரசியல் தரப்பு பிடித்தமானதாக இருக்கலாம். எனக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது போல. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தமிழ் இனத்தின் கட்சி என்றும், மற்றவை எல்லாம் வந்தேறிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராத்தியர்கள் கட்சி என்று சொல்வதையும் எப்படி ஏற்றுக் கொள்வது? தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் 30 எம்.பி.க்களில் 39 பேர் தமிழர் அல்லாதவர் என்று ஒரு படித்த அண்ணன் சொன்னார். தங்கமான மனிதர். தேடிப்போனால் அவரே சமைத்து சாப்பாடு போடாமல் விடமாட்டார். ஏதாவது ஒரு ப்ரூப் காட்டுங்க என்று சீரியசான முகத்தோடு கேட்டேன். வாட்ஸ்-அப்பைத் திறந்து ஒரு அகல விரித்த கையோடு மைக் முன் நிற்கும் சீமானின் முகம் கொண்ட ஒரு மீம் எடுத்துக் காட்டினார். இப்போது அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. அவரது அரசியல் நிலைப்பாடு நன்றாகத் தெரியும் என்பதால் அவரோடு விவாதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தும் சில வேளைகளில் காமெடியாகிப் போய்விடுகிறது. 

இன்னொரு சொந்தக் கார மனிதரும் சில நாட்களாக முகநூலில் சீமானிசத்தில் திளைத்திருப்பதைக் கவனித்தேன். ஒரு நாள் அவர் பகிர்ந்த ஒரு உணர்ச்சிகர மீம்-க்கு கீழே சீமானைச் சிரிதாகக் கலாய்த்துவிட்டேன். வாட்சப்பில் பத்து மெசேஜ் அனுப்பினாலும் வேலைப்பளுவால் பதிலே வராது. ஆனால் அந்தக் கமெண்டுக்கு ஒரு பத்து முழத்திற்கு உணர்ச்சியைக் கொட்டியிருந்தார். அதோடு விட்டிருக்கலாம். நமக்கு சனி. அடுத்த நாளும் சீமானின் இன்னொரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் சீமான் தன் தம்பிகளுக்கு உணர்ச்சிப் பாலூட்டிக்கொண்டிருந்தார். ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மோடி அவர்களால் (மிகுந்த மரியாதையோடு) ஏன் ஒரே இரவில் சாதி இல்லை என்று அறிவிக்க முடியாது என்பது தான் சாரம். நான் கமென்டில் அது எப்படிங்க சாத்தியம்? வாயைத் திறந்தா பொய்! என்று எழுதினேன். (பிரபாகரன் அனுப்பிய 29 கிலோ ஆமைக்கறி, சீமானின் விருப்ப சாப்பாட்டைத் தெரிந்துகொள்ள பிரபாகரனால் நியமிக்கப்பட்ட ஒரு தனிச்செயலாளர் விடுதலைப் புலி- ஒளிஞ்சி இருந்து பாப்பாரு போல, காளிமுத்து காளிமுத்து-னு கூவும் ஆஸ்திரேலிய கிளி, அரிசி கப்பலைச் சுட்டு சுடப் பழகியது - சத்தியமாக இது எதுவும் எழுதவேயில்லை). கடைசியாக வாய்நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான். சாரி சார். என்னால தானே எல்லாம்!

சீமானின் அரசியல் வரலாறே பத்து சொச்சம் ஆண்டுகள் தான். இதுவரையில் தமிழகத்தில் அவர் அடைந்திருக்கும் அரசியல் வெற்றி ஒரு வார்டு மெம்பர் மட்டுமே. ஆனால் அவர்தான் நாளையத் தமிழகத்தின் விடிவெள்ளி என்ற நம்பிக்கைக்கு ஒரு நபர் வர முடிகிறது என்றால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது? உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். கூசாமல் பொய் சொல்ல வேண்டும்.  

பின்குறிப்பு: சங்கிகளைப் பற்றி நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது? நீங்களே கனெக்ட் பண்ணிக்கோங்க! 

(அடுத்தக் கட்டுரை - சீமானிசம் என்னும் பொய்க்குவியல்)


புதன், 14 அக்டோபர், 2020

கொஞ்சம் அரசியல் பேசலாமென்று...

ஒவ்வொரு நாளும் எத்தனை பிரச்சனைகள் வந்து நம் தலைமேல் விடிகின்றன. யோசித்துப் பாருங்கள்! ம்! பெருமூச்சு விடுவீர்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நம் இந்திய அரசியல் நிலவரம் ஒரே கலவரமாகவே (களேபரம்?) இருக்கிறது. காங்கிரஸின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை ஒரு டைம்-லேப்ஸ் வீடியோ செய்தால் எத்தனை எத்தனை கன்டென்டுகள் கிட்டும்! ஊழல்-ஊழல் என்று அன்னா கசாரே போட்ட கூச்சலில் ஆட்சிக் கட்டிலுக்கு காவி நிறமடிக்கப்பட்டது. கமிஷன் முடிந்ததும் கசாரே கரை ஒதுங்கிவிட்டார். கூடச் சேர்ந்து கூவிய கெசுரிவால் தலைநகரின் தலைவரானார். 2002 இல் நடந்த குஜராத் கலவத்தின் மோடி மாடலை 2020 இல் டில்லியில் பரிசோதித்துப் பார்த்த நல்லவர். உத்திரபிரதேச பூர்வக்குடிச் சிறுமி கழுத்தெலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, பெற்றோருக்கு உடலைக்கூடக் காட்டாமல் உ.பி. அரசு ஏவலர்களால் எரிக்கப்பட்ட நிலையில், ஆறுதல் சொல்லப்போன காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு "இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று அறிவுரை கூறுகிறார். 

காய்ச்சலா? தலைவலியா? எயிட்ஸா? கொரோனாவா? இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி மாட்டு மூத்திரம் என்று உலக அரங்கில் இந்தியான்னா ரெண்டு கொம்பாக்கும் என்று மாடு தட்டி அறிவித்தது இந்த அரசு. அது மட்டுமா? சாட்டிலைட்டில் பிரச்சனை என்று சர்வதேசமும் சஞ்சலமடைந்தாலும் நாம் பாபா ராம் தேவின் கோமணாசனா பொசிசனில் அமர்ந்து சளைக்காமல் சொன்னோம் 'சாணியே மருந்து?. கதிர்வீச்சு என்றால் காளைச்சாணி. கடலுக்கு அந்தப் பக்கம் கோமாதாவின் கறியை ஏற்றுமதி செய்து காசுபார்த்துவிட்டு, உள்ளுர் காரனின் அடுப்பங்கரையில் மாட்டுக்கறி இருந்தது என்று சொல்லி அவனை இழுத்து தெருவில் போட்டு அடித்துக்கொன்றார்கள். அதன் பிறகு இறைச்சிக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் அது அந்தக் கறி "மே..மே.." என்று கத்தியது. அடப்பாவிகளா! 

கறுப்புப் பணத்தைப் பிடிக்கப்போறேன்னு கௌம்பி பெரிய பெரிய பணமான ஆயிரம், ஐநூறு தாள்களை எல்லாம் பிடிங்கிட்டு, கலர் கலரா 2000 நோட்டு அடிச்சி கொடுத்து ஒரு ட்விஸ்ட் வச்சாங்க பாருங்க! வரலாற்றின் சுவர்களில் கறிக்கொட்டையால் எழுதப்பட வேண்டிய அவமானம். காந்தி மகான் கண்ட கண்ணிய பூமியிதுன்னுதான் நமக்கு சொல்லிக்கொடுத்தாங்க! அப்படியே உல்டாவா அவரைக் கொன்ன கோட்சேவுக்கு கோவில் கட்டிட்டாங்க! மாட்டுக்கறி, மூத்திரம், சாணம் பாகிஸ்தான், தேசத் துரோகம், சீனா இப்படி உணர்ச்சியத் தூண்டித் தூண்டியே ஜாலியா பாயிங்களோட பக்ரைன் உட்பட 60 நாடுகளில் போயி  அது-இது-எது மாதிரியான படத்துணுக்குகளில் பெர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துட்டார் நம்ம ஜீ. கொரானாவால 8500 கோடிக்கு வாங்குன விமான டயரில் வச்ச லெமன் இன்னும் நசுங்காமலே இருக்கு. சோகத்துல அந்து ஆளு தாடி வச்சிக்கிட்டு அலையுறாரு. அறச்சினத்துல பொங்கி நம்ம மீடியா காரங்க ராகுல் காந்திய பிடிச்சி கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி: டிராக்டருக்கு எதுக்கு குசன் வச்சீங்க?

தொடரும்...

திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன். 


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 2


படம் 1: திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடான் அரசு தலைவர் பாதத்தை முத்தமிட்டு போரினைக் கைவிட்டு அமைதி ஏற்படுத்த வலியுறுத்திய போது
 படம் 2: பெரிய வியாழனன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ புலம் பெயர் அகதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட போது

கத்தோலிக்கர்கள் ஏன் தங்கள் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்று வெறுமனே கேட்டிருந்தால், முதல் கட்டுரையில் கூறப்பட்ட இறைவார்த்தை, திருச்சபை மரபு போன்றவற்றைப் பற்றிய நீண்ட விளக்கம் தேவைப்பட்டிருக்காது. நேரடியாக பதில் அளித்திருக்கலாம். ஆனால் கேள்வி, மத்தேயு நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் 'உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்' என்று கூறும்போது, கத்தோலிக்கர்கள் ஏன் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றனர்? என்பதாகும்.

ஆகவே விவிலியத்தை நாம் சரியாக வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகிறது. திருத்தூதர் பணிகள் 8, 30-31 இல் 'பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா? என்று கேட்டார். அதற்கு அவர், யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்? என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.' ஆகவே பொருள்பட வாசித்து விளக்க வேண்டுமென்றால் அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவைப்படுகிறது. இல்லையென்றால் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, தங்களை நியாயப்படுத்துவதற்காக விவிலிய வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. வரலாற்றில் இன மேட்டிமை, அடிமை முறை போன்ற அநீதிகள் சில விவிலிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பொருந்தும். ஆகவேதான் திருப்பலி போன்ற பொது வழிபாடுகளில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இறையியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற திருநிலையினர் மட்டுமே விவிலியத்திற்கு விளக்கம் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விவிலியம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில், இறைத்தூண்டுதலால் ஏவப்பட்ட பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்ட பல நூல்களின் தொகுப்பே ஆகும். இந்நூல்கள் அவற்றின் மொழியால், அரசியல் சூழலால், இலக்கிய வடிவத்தால் நாம் வாழும் சூழலிருந்து தொலைவிலிருக்கிறது. இவையனைத்தையும் பற்றிய கூர் உணர்வோடு வாசிக்கும் போதுதான் விவிலியத்தை புரிந்துகொள்ளவும், அவை இன்றைய நமது வாழ்க்கைச் சூழலுக்கு அவை என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

பொறுமையைச் சோதிப்பது போல் இருந்தாலும் விவிலித்தை எல்லோரும் ஆழமாக வேரூன்றி வாசிக்கவும், அதன் முழுச்சுவையையும் பெற்றுப் பயனடையவும் ஆர்வம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நம் கேள்விக்கு வருவோம். இயேசு அவ்வாறு மத்தேயு நற்செய்தியில் கூறும் போது அக்காலத்தில் மக்களை சட்டத்தின் பெயரால் அடக்கி ஆண்ட, ஏழைகளைச் சுரண்டி வாழ்ந்த சதுசேயர்கள், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்றோரின் வெளிவேடத்தைத் துகிலுரிக்கிறார். அவர்கள் போதிப்பது ஒன்றாகவும், கடைபிடிப்பது வேறொன்றாகவும் இருக்கின்றது என்று சாடுகின்றார். அவர்கள் இறைவனுக்குப் பணிபுரியவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடம் தாழ்ச்சியுடனும், தாராள உள்ளத்துடனும்  நடந்துகொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளதை மறந்து பொது இடங்களில் மரியாதையும், முன்னுரிமையும் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இந்தச் சூழலில் தான் இயேசு கடவுளுக்குரிய பண்புகளாகிய தந்தை, போதகர், ஆசிரியர் போன்ற பெயர்களால், அவற்றிற்கு முரணாக, தங்கள் அதிகாரத்தை ஏழை, எளியோர் மேல் செலுத்துவோரை அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

(நண்பர் இந்தக் கேள்வியை எழுப்பியது நல்லது தான் என்று தோன்றுகிறது. நாம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.)

ஆகவே இந்த பின்னணியைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி, குறிப்பிட்ட ஒரு இறைவார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி பொருள் கொண்டோமென்றால் அது மிகவும் சிறிதான குழப்பத்தையோ, அல்லது பெரிய ஆபத்தையோ ஏற்படுத்திவிடும். எப்படியென்றால்...

1. மேற்குறிப்பிட்ட இறைவார்த்தையின் படி, நாம் பள்ளியில் கற்பித்தல் பணி செய்பவர்களை ஆசிரியர் என்று அழைக்க முடியாது.

2. அது ஏன்? நம்மைப் பெற்றத் தந்தையைக் கூட அப்பா என்று அழைக்க முடியாது.

3. ஆயினும் அழைக்கிறோம். அப்படித்தானே! ஏன் அழைக்கிறோம் என்றால் அவர்கள் இயேசு கூறியது போல விண்ணகத் தந்தையின் பண்புகளைச் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத் தந்தை ஒருவரே! அவரே தந்தைகளுக்கெல்லாம் தந்தை. ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்.

4. இதே தர்க்கத்தின் அடிப்படையில் தான் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட்பணியாளர்களை தந்தை என்று அழைக்கின்றோம். வெளிப்படையாக அப்படி அழைக்கப்படுவதற்கு தங்கள் திருநிலைப்பாட்டால் அவர்கள் தகுதி பெற்றாலும், அவர்கள் உண்மையிலேயே உள்ளார்ந்த தகுதி பெறுவது அவர்கள் வாழ்க்கை முறையால் தான்.

5. இந்த தகுதி எல்லா தந்தைகளுக்கும் பொருந்தும். பிள்ளை பெறுவதால் ஒருவர் தந்தை என்ற தகுதி பெற்றாலும், பொறுப்பற்ற வாழ்வால், குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறையின்மையால், குடிப் பழக்கத்தால், தவறான நடத்தையால் அவர்கள் அத்தகுதிக்கு களங்கம் விளைவிக்கின்றனர். 'நீயெல்லாம் ஒரு அப்பனா?' என்று கேட்கும் பிள்ளைகளின் ஓலத்தை தினசரி கேட்கின்றோம்.

6. இதுபோலத்தான் 'நீயெல்லாம் ஒரு சாமியார் போலவா நடந்துக்கிற!' என்று கேட்கும் இறைமக்களின் குரலையும் கேட்க முடிகின்றது.

7. ஆகவே தந்தைகள், ஆசிரியர்கள், போதகர்கள் என்ற தகுதிப் பெயர்களெல்லாம் அவர்கள் எந்த அளவிற்கு தந்தையாம் கடவுளைப் பிரதிபலிக்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் அளவிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் நிறைய புனித குருக்களின் தியாகத்தால், அர்ப்பணிப்பால், அநீதியைச் சாடும் இறைவாக்கினர் பண்பால், மன்னிப்பு வழங்கி குணப்படுத்தும் பண்பால், வீழ்ச்சியுற்றாலும் தாங்கிக் கொள்ளும் உடனிருப்பால், மந்தையில் தொலைந்த ஆடுகளைத் தேடும் பாசத்தால், மறைபரப்பும் வேட்கையால், அருளடையாளங்களை செயல்படுத்தும் ஆர்வத்தால், ஒட்டுமொத்த திருச்சபையும் தந்தையாம் கடவுளின் கருணை மிகுந்த முகத்தினைக் கண்டு மகிழ்கின்றது. இன்று குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழா! முக்கியமானக் கேள்வி! இன்று உங்கள் அருட்பணியாளர்களுக்காக செபித்தீர்களா? 
'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கின்றோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.' (2 கொரிந்தியர் 4, 7)

 
பின்குறிப்பு:

1. கேள்வியை எழுப்பிய நண்பன் பாஸ்டர் பிரவினுக்கு முதற்கண் நன்றி.

2. என்னை என் பெயர் மட்டும் சொல்லி அழைத்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைவேன். உண்மையில் பெரும்பாலான மக்கள் தந்தை என்று உணர்ந்து அன்புடன் தான் அழைக்கின்றனர். வெகு சிலர்தான் அதை ஒரு பழக்க தோஷத்தால் பெயரளவுக்கு அழைக்கின்றனர். இன்னும் சிலர் கடமைக்கு! நிறைய அருட்பணியாளர்கள், திருத்தந்தை உட்பட இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

3. அருட்பணியாளராக விரும்புபவர்கள் நம்மால் எப்படி இயலும் என்று நினைத்தே நாளைக் கடத்தாமல் உடனே செயலில் இறங்குங்கள். கடவுளால் எல்லாம் இயலும்.


Related Articles 
 

வெள்ளி, 31 ஜூலை, 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 1

எத்தனை மனிதர்களை வாழ்வில் சந்திக்கின்றோம். அருட்பணியாளர் வாழ்வு தந்த அருங்கொடைகளுள் முதன்மையானதாக இதைத்தான் கருதுகின்றேன். தினசரி இரண்டு, மூன்று நபராவது தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பலத்தை, பலவீனத்தை, மகிழ்ச்சியை, துக்கத்தை நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்கிறார்கள். தங்கள் தியாகத்தால், தானத்தால், தன்னம்பிக்கையால், வலிகளையும் புன்னகையுடன் எதிர்கொள்வதால் நம்மைச் சுற்றிலும் நிறைய மாமனிதர்கள் மிகவும் சாதாரணமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாயிருக்கிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து என்னை நலம் விசாரித்தான். ஒரே ஊர். பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு கட்டத்தில் வெளியூரில் விடுதியில் சேர்த்து படித்தான். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் விடுமுறைக்கு வருவான். ஒவ்வொரு விடுமுறையிலும் முற்றிலும் மாறிய ஒரு ஆளுமையாக அவன் மாறி வருவதைக் கவனித்திருக்கிறேன். உடல் வளர்ச்சி, பேச்சு ஸ்டைல் என்று மிகவும் சாதாரணமாக இருந்தவனிடம் ஒரு பெரிய ஆள் தோரணை வந்துவிட்டது. வேகப்பந்து வீச்சில் எங்கள் ஊரின் நெக்ராவாக அவன் மாறியது தான் என்னை வாவ் என்று சொல்ல வைத்தது. வெளியூர் செல்வது நம் வாழ்வை நிச்சயம் மாற்றும். 

நலம் விசாரித்த தோரணையிலேயே நண்பன் பெந்தகோஸ்து சபையில் ஊறி தேறிவிட்டான் என்று புரிந்துவிட்டது. பெரும்பாலும் வாட்ஸ்அப் குரல் மெசேஜ் மூலம் தான் பேசிக்கொள்வோம். விவிலியத்தின் வாக்கியங்களை அதன் பழைய மொழிபெயர்ப்பில் சரளமாகப் பேசுகிறான். ஆசீர்வாதம், அபிஷேகம், அலங்காரம், வைராக்கியம் போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறான். தான் சிறுவயதில் ஒரு கத்தோலிக்க அருட்பணியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், பின்னர் இறைவனின் திட்டத்தில் தான் திருமண வாழ்விற்கு அழைக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சபையின் பாஸ்டராக இருந்து சுவிசேஷத்தை அறிவிப்பதாகவும் கூறினான். உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த வாரம் வருடாந்திர ஐந்து நாள் தியானத்தில் இருந்தேன். டவர் சுத்தமாக இல்லாத ஒரு மலைப்பகுதி. திடீரென்று அவனிடமிருந்து ஒரு மெசேஜ். மத்தேயு நற்செய்தி 23,9 இல் இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே! அவர் விண்ணுலகில் இருக்கிறார் என்று இயேசு கூறுகிறார். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தில் அருட்பணியாளர்களை பாதர் (தந்தை) என்று அழைப்பது ஏன் என்று கேட்டான்.

தியானத்தில் இருப்பதாலும், அங்கு டவர் இல்லாததாலும் பிறகு பதிலளிக்கலாம் என்று இருந்துவிட்டேன். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் போன் சிக்னலைத் தேடிக் கண்டுபிடித்ததும் அவனிடமிருந்து அடுத்த மெசேஜ். பதில் தெரிந்தாலும் சொல்லணும். தெரியலைனாலும் தெரியலைனு சொல்லணும் என்று. நன்றாக கோபம் வந்தது. கோபத்திற்கு காரணம் கேள்வி அல்ல. ஆனால் நான் பார்த்த எல்லா பெந்தகோஸ்து நண்பர்களும் நலம் விசாரித்த மறுநாளே இப்படி ஒரு பார்முலா கேள்வி வஸ்திரத்தை எடுத்து வீசுகிறார்கள். என்ன அவசரம். எங்கே போய்விடப் போகிறோம். மெல்ல மெல்ல பேசலாமே. கடன்காரன் மாதிரி இப்படி கழுத்தைப் பிடித்தால் எப்படி?

உண்மையைச் சொல்லுங்கள்! சொந்தமாக இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, பதில் கிடைக்கமல் போனதால் தான் நீங்கள் பிற சபைகளுக்குச் சென்றீர்களா? அங்கு உங்களுக்கு கேள்விகளே இல்லையா? சரி! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தங்களிடம் எல்லா விடைகளும் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் எதற்காக அடுத்தவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்? இப்படி என்னுள் பல கேள்விகள் எழும்புவதால் பெரும்பாலும் மத உயர்வுவாதிகளிடம் விவாதிப்பதில் பலனில்லை என்று சிரித்தே கடந்துவிடுவேன். இறைநம்பிக்கையைப் பற்றி பேசுவது, இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் வளப்படுத்தும். ஆனால் பார்முலா கேள்விகளில் ஒரு மேட்டிமைத்தனம் தொனிக்கிறது. அது நகைக்க வைக்கிறது. 

ஆயினும் இந்த முறை கேள்வி கேட்டது நண்பன். அவனும் ஒரு சபையின் ஆசிரியனாக இருந்து இறைவார்த்தையைப் போதிக்கின்றவன் என்ற முறையில் என் மனதில் தோன்றும் கருத்துக்களை வரிசைப்படுத்த முயற்சிக்கிறேன். நிச்சயம் துல்லியமான விடைகளாக இருக்காது. எனது புரிதல்கள் அவ்வளவுதான்.

1.கத்தோலிக்கர்களாகிய நாங்கள் கடவுள் தம்மை இறைவார்த்தையிலும் (பைபிள்), திருச்சபை மரபிலும் வெளிப்படுத்துகிறார் என்று நம்புகின்றோம். ஆனால் பிற சபையினரைப் பொறுத்த மட்டில் கடவுள் இறைவார்த்தையில் மட்டும் தான் வெளிப்படுத்துகிறார். 

2.ஆகவே நாங்கள் திருச்சபையின் பாரம்பரியத்தை (மரபினை) இறைவெளிப்பாடாக ஏற்றுக்கொள்கிறோம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள்? கடவுள் எங்களிடம் விவிலித்திற்கு வெளியே, இன்றைய அன்றாட வாழ்வில் மனிதர்களின் மீட்பிற்கு தேவையானவற்றை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு தனிமனிதருக்கும் வெளிப்படுத்துவதோடு, திருச்சபை முழுவதற்குமாக வெளிப்படுத்துகிறார். அதனை ஆராய்ந்து, அறிந்து அனைத்து இறைமக்களும் பின்பற்றுவதற்கான கோட்பாடுகளாக்கித் தரும் பணியினை பொதுச்சங்கங்கள் செய்கின்றன. கடைசியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தில் (1962-1965) 16 ஏடுகள் வெளியிடப்பட்டன. அதில் இறைவெளிப்பாடு என்னும் நூலினை வாசித்தால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன். தமிழிலேயே பைபிள் தமிழ் என்னும் வலைத்தளத்தில் கிடைக்கின்றது.
 
3. திருத்தூதுதர்கள் தூய ஆவியின் ஏவுதலால் தாம் பெற்றுக்கொண்ட இறைவெளிப்பாட்டை வாய்மொழி வழியாகவும் நூல்கள் வழியாகவும் மக்களுக்கு அளித்தனர். எழுதப்பட்ட நூல்கள் இறைவெளிப்பாட்டின் முழுமையைக் கொண்டிருக்கவில்லை. திருச்சபையின் மரபு வழியாகவும் இறைவெளிப்பாடு அருளப்பட்டது. திருநூல்களும் திருமரபும் ஒரே ஊற்றிலிருந்து உருப்பெற்ற காரணத்தால் இவை இரண்டும் தம்மில் நெருங்கிய தொடர்புடையன் இரண்டுமே சமமான வணக்கத்துக்குரியன. இவை இரண்டும் அனைத்து மக்களுக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடைகள்; இவற்றிற்கு விளக்கம் தரும் உரிமை திருச்சபை ஆசிரியத்துக்கே உண்டு என்று இறைவெளிப்பாடு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் விவிலியப் பேராசிரியர் அருட்பணி. எரோணிமுசு அவர்கள் மிக அழகாக, தெளிவாக குறிப்பிடுகின்றார்.

4. எடுத்துக்காட்டாக அன்னை மரியாளின் விண்ணேற்பு விவிலியத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை ஆகஸ்டு 15 அன்று அன்னையின் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. அய்யோ! விவிலியத்தில் இல்லையே என்று மாரில் அடித்துக்கொண்டு தயவு செய்து வராதீர்கள். புரிந்துகொள்ளுங்கள். விவிலியத்தில் இல்லையென்றால் திருச்சபை மரபில் இருக்கின்றது என்று. அது எங்கே இருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்.  உங்களது நம்பிக்கையின் ஊற்று இறைவார்த்தை மட்டுமே! ஆனால் எங்களுக்கு திருச்சபை மரபும் சமமான வணக்கத்துக்குரியது.
 
5. மேற்சொன்ன 4 கருத்துக்களும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றது. போதும் என்று நினைக்கிறேன். மேலும் விவிலியத்திற்கு பொருள் கொள்ளும் முறையிலும் பிறசபையினர் கத்தோலிக்க திருச்சயினரிடமிருந்து வேறுபடுகின்றனர். பெரும்பாலும் ஒரு வார்த்தையை அல்லது வசனத்தை மட்டும் வைத்து அப்படியே நேரடி விளக்கம் கொள்கின்றனர். ஆனால் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலத்தில், பல்வேறு அரசியல், சமூக பின்னணியில் எழுதப்பட்ட ஒரு நூற்தொகுப்பை இன்றைய நமது சூழலை மட்டும் வைத்து நேரடி பொருள் கொள்ளுதல் சரியான, முழுமையான அர்த்தத்தைத் தராது. ஆகவே விவிலய நூல்களின் வரலாறு, பின்னணி பற்றிய அறிவு அவசியமாகின்றது.

6. இப்போது நண்பர் கேட்ட கேள்விக்கு வருவோம். ஏன் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் பாதர் என்று அழைக்கப்படுகிறார்கள்?
(நேரமாயிடுச்சி! காலையில்  மீதி எழுதுகிறேன். கொஞ்சம் பொறுங்க நண்பா!)

ஞாயிறு, 26 ஜூலை, 2020

È per il tuo bene - எல்லாம் உனது நன்மைக்குத்தான்

"எ பெர் இல் தூவோ பெனே"  (È per il tuo bene) என்பது சமீபத்தில் நான் பார்த்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர். 2017 இல் வெளியான Es Por Tu Bien என்னும் ஸ்பானியத் திரைப்படத்தின் இத்தாலிய ரீமேக். அமேசான் பிரைமில் கிடைக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடும் போதெல்லாம் வழக்கமாக "எல்லாம் உனது நன்மைக்குத்தான்" என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான் இப்படத்தின் தலைப்பின் அர்த்தம்.

அர்த்தர்-இசபெல்லா தம்பதியினருக்கு வாலன்டீனா ஒரே மகள். அவள் அலெக்சியா என்னும் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் கறுப்பினத்தவள். சுற்றுசூழல் போராளி. தான் வேலை பார்த்த நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதை வெளிப்படுத்தியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு வழக்கறிஞரான வாலன்டினாவிடம் உதவிகேட்டு வருகிறாள். வழக்கு முன்னே செல்ல காதல் பின்தொடர்கிறது. அர்த்தர் தன் மகள் வாலன்டினாவில் நன்மைக்காக இந்தக் காதலை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார்.

அந்தோணியோ-பவுலா தம்பதியினருக்கு ஒரே மகள் மார்த்தா. பள்ளி இறுதியாண்டு மாணவி. உடம்பெல்லாம் பச்சைக் குத்தி, காதில் கடுக்கன், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், காலரில்லாத சிவப்பு, மஞ்சள் வண்ண டீ-சர்ட் அணிந்து, கொஞ்சம் கஞ்சாவை உள்ளிழுத்து அனுமதியில்லாத பொது இடங்களில் பாப் இசைக்கும் ஒரு சமவயது பையன் பியோண்டாவைக் காதலிக்கிறாள். அந்தோணியோ தன் மகள் மார்த்தாவின் நலனுக்காக அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வரச்செய்ய முயற்சி செய்கிறார்.

செர்ஜியோ-ஆலிச்சே தம்பதியினரின் ஒரே மகள் சாரா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தேநீர் விடுதியில் வேலை செய்கிறாள். செர்ஜியோ தன் செல்ல மகளின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசளிப்பதற்காக ஒரு அழகிய மிதிவண்டியை வாங்கி அவ்விடுதிக்கு வருகிறார். அங்கு தன்னிலும் வயதில் கொஞ்சம் இளைய பால்யகால நண்பன் போஜியைச் சந்திக்கிறார். சிறுவயதில் நிறைய பெண்களுடன் சுற்றிக்கொண்டிருந்த போஜியின் கெட்டிக்காரத் தனத்தை நினைவுகூர்ந்து இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வரும் சாராவிடம் தான் கொண்டுவந்திருந்த மலர்க்கொத்தை நீட்டி "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பே" என்று கொடுக்கிறார். செர்ஜோ கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்த மனநல ஆலோசனைப் பெற்று வருபவர். தன்னையும் மீறி அந்த இடத்திலேயே போஜியைக் கொத்தாகத் தூக்கி தேனீர் விடுதிக்கு வெளியே வீசி துவைத்து எடுக்கிறார்.

அர்த்தர், அந்தோணியோ, செர்ஜியோ மூவரும் நெருங்கிய நண்பர்கள். தங்கள் பிள்ளைகளின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் காதலர்களை ஓடவிட மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். 

அலெக்சியா தங்கள் வீட்டில் திருடியதாக கதைகட்டி அவளை நாடுகடத்தப் பார்க்கிறார்கள். பியோண்டா தனது பையில் போதை மருந்துகள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறான். போஜி நடத்தை கெட்டவன் என்பதை நிரூபிக்க ஒரு விபச்சாரப் பெண்ணின் உதவியை நாடுகிறார்கள்.

ஆனால் தங்களது அனைத்து முயற்சிகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்படுவது தங்கள் பிள்ளைகள் தான் என்பதை உணர்ந்து, கடைசியில் அவர்களே தங்கள் பிள்ளைகளின் காதலைச் சேர்த்து வைப்பதாக படம் முடிகிறது.

மிக எளியக் கதையுடன் கூடிய மிகச்சாதாரண காமெடி திரைப்படம் தான் எனினும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ஆளுமையையும் துல்லியமான நடிப்பால் தனித்து வெளிப்படுத்துவதால் படம் போராடிக்காமல் செல்கிறது. இதுவே ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் முதல் கட்டுரை. இந்தப்படம் கையாளும் கதைக்களம் என்னை புன்னகைக்க வைத்தது மட்டும் தான் காரணம். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்னும் வகையிலான பெற்றோர்கள் உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் எழுதப்பட்ட சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம்நாடு வல்லரசாகும் என்னும் கட்டுரையில் ஆல்பா என்னும் இத்தாலியப்பெண் சித்தாத் என்னும் கறுப்பினத்துப் பையனைத் திருமணம் செய்யவிருப்பதைப் பதிவு செய்திருந்தேன். அது மிகவும் சாதராணமாக தெருவுக்குத் தெரு நடப்பது போன்ற தோற்றத்தை அக்கட்டுரை ஏற்படுத்தியது.

ஆனால் இத்திரைப்படம் அதற்கு மாறான இன்னொரு பக்கத்து எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது. வாலண்டினா-அலெக்சியாவின் ஒருபாலினக் காதலை எதிர்கொள்ளும் ஒரு முன்னேறிய சமூகத்துப் பெற்றோர் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்ய இயலாமல் திணறுவதை, இயல்பான வசனங்களுடன் பதிவு செய்திருந்தது.

பிறருக்கு நடக்கும் போது புரட்சியாக, முற்போக்காகத் தோன்றும் சில விசயங்கள் தனக்கு வரும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. எது சரி, எது தவறு என்று சார்புகளைப் பற்றி இயக்குநர் அக்கறைப்படவில்லை. அதைப் பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறார். உங்கள் கருத்துக்களைப் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் உங்கள் கருத்துக்களின் நகல்கள் அல்ல. வித்தியாசத்தை ஏற்றுக்கொள்ள மனதை அகலத் திறந்து பயிற்சியெடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள். அவர்களுக்கு எது நல்லது, எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும்.

இன்யை இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் அக்கறை கொள்கிறார்கள். நல்லது தான். ஆனால் தனியார் பள்ளிகளும், சமூகமும் அளிக்கும் அழுத்த மிகுதியால் குழந்தை வளர்ப்பே உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை போல பதற்றமடைகிறார்கள். இயல், இசை, நாடகம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு என்று பிஞ்சுக் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை ஒரு கொடுங்கனவாக்குகிறார்கள். தொட்டியில் வளரும் போன்சாய் மரங்கள் அழகானவைதான் என்றாலும், வெட்ட வெளியில் வளரும் ஆலமரங்களில் தான் பறவைகள் கூடுகட்டும். கொஞ்சம் ஃப்ரியா விடுங்க பாஸ்!

புதன், 22 ஜூலை, 2020

சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம் நாடு வல்லரசாகும்!


வரும் அக்டோபர் 3 ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருமண அழைப்பிதழ் தான் இது. மணமகள் ஆல்பா சான் பெர்தினாந்தோ என்னும் தெற்கு இத்தாலியில் இருக்கும் ஒரு கிராமத்துக்காரி. மணமகன் சிதாத். இதே ஊரில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்த ஆப்ரிக்காவின் கானா நாட்டு இஸ்லாமிய கறுப்பின இளைஞன். அவன் கடல் வழியாக கரை சேர்ந்தவன் என்பதால் திருமண அட்டையை இவ்வளவு அர்த்தப்பூர்வமாக அச்சிட்டிருக்கிறார்கள்.
ஆல்பா அங்கு இத்தாலிய மொழி பயிற்றுநராக பணியாற்றினாள். சித்தாத் தனது மதத்தின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற கவலவரத்திலிருந்து தப்பித்து விசைப்படகு மூலம் தாரந்து கடற்கரையில் ஒதுங்கியக் கதையைச் சொன்னான். இருவரும் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இரண்டு ஆண்டுகளாகப் பழகி தெரிந்துகொண்டனர். எங்கள் ஆலயத்தில் கடந்த ஒரு ஆண்டாக திருமண பயிற்சி வகுப்பில் இருவருமே கலந்து கொண்டனர். ஆல்பாவும் அவளது குடும்பமும் எங்கள் கோவிலின் அனைத்துப் பணிகளிலும் உடனிருப்பவர்கள். அவளது தாய் பங்கின் ஏழை, எளியோருக்கு உதவும் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பாளர். சித்தாத் திருமணத்தின் பொருட்டு மதம் மாறவில்லை. தொடர்ந்து இஸ்லாமியனாகவே இருப்பான். மேலும் அவன் இந்த ஊரில் காலடி வைத்த போது அவனுக்கு உதவியவர்கள் பக்கத்து பங்கின் அருட்பணியாளரும், நண்பர்களுமே என்பதால் திருமணத்தை அந்த ஆலயத்திலேயே நடத்துகின்றனர். அவன் அப்போதுதான் சொந்த வீடு போல உணர்வான் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி அவன் அந்நியனாக உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் விருப்பங்களை முன்னிலைப்படுத்தாது நிறைய காரியங்களைப் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
சட்டப்படி தகுதியான இரு நபர்களின், சட்டப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இவ்வளவு தான் திருமணம். ஆல்பாவும், சித்தாத்தும் தங்கள் சம்மதத்தை சட்டப்பூர்வமாக வெளிப்படுத்த அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சாதி, மதம், இனம், நிறம், பொருளாதாரம், சமுதாயம் எதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. திருமணம் இரு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஆம்! நீங்கள் வாசித்தது சரிதான். இரு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. இந்த உரிமையைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது.
மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட பட்டியலினத்தவரான சங்கரை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அவரது மனைவி கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்தக் குரூரக்கொலைக்கானத் தெளிவான சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இன்னும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரின் தூக்கு ஆயள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறைவாசலில் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயிரைக் காக்க உயிரையேப் பணயம் வைத்து அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுபவர்கள் அகதிகள். ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் உடன்பாட்டில் கையொப்பமிட்டிருக்கும் 147 நாடுகளுமே தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் அகதிகளைப் பராமரிக்கவும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, கருத்து, சமய உரிமைகளைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளன. அவர்கள் தாயகம் திரும்புவது அவர்களது உயிருக்கு ஆபத்து எனக் கருதும் வரையிலும் அவர்களைத் திருப்பி அனுப்ப இயலாது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திலும் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆல்பாவை சித்தாத் ஊரே கொண்டாட திருமணம் செய்ய முடிந்தால் அதற்கு பெயர் வளர்ந்த நாடு. நடுரோட்டிலே போட்டு வெட்டிக் கொன்னா, கொன்னவன நீதிமன்றம் விடுதலை செஞ்சா, கொலை செஞ்சவன் கைளில் பொன்னாடையும், பூங்கொத்தும் தந்து வரவேற்கப்பட்டால் அப்துல் கலாம் கனவு கண்ட 2020 கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

சலிப்பூட்டும் நாத்திக அடிப்படைவாதம்


கருப்பர் கூட்டம் என்னும் பெயரிலான ஒரு யூடியூப் சானலில் கந்தசஷ்டி கவசப் பாடலின் ஒரு சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு மிகவும் கொச்சையாக விமர்சித்திருந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கா அந்த சானலைத் தடை செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர். 

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். எங்கள் ஊரில் அழகன் என்ற பெயரில் இந்து, கிறிஸ்தவ பாகுபாடின்றி நிறைய பேர் இருக்கின்றனர். அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற இனிமையானப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதம் கடந்தும் ஒருவருக்கு இதயத்தில் அன்பு சுரக்கும். சிறுவயதில் எங்கள் வீட்டில் குழந்தை முருகனின் படம் போட்டு காலண்டர் இருந்தது. அதில் யாமிருக்க பயமேன் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுதான் பள்ளிக்குக் கிளம்புவது வழக்கம். குழந்தை இயேசுவின் முகத்தையே எனக்கு அது நினைவுபடுத்தியது. மருங்கூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் அருகில் தான் எங்கள் பள்ளி. ஒடுக்கத்து வெள்ளியன்று அங்கு சுவையான கஞ்சி கிடைக்கும். நண்பர்களோடு சென்று சாப்பிட்டுவிட்டு, அங்கிருக்கும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடுவது சிறுவயதின் அழகான நினைவுகள். அந்த ஆலமரம் போன்று கடவுள் ஒருவரே. நாம் நம்பும் ஆத்திகம், அல்லது நம்பாத நாத்திகம் யாவும் நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகள்; இறுகப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் என் விழுதுதான் ஐ.எஸ்.ஒ 9001 என்று கருதினால் ஆலமரம் கோபித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். 

எங்கள் ஊரில் இந்துக்கள், சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க மதத்தினர் எனக்குத் தெரிந்து இதுவரையிலும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். புலிமலை சகாய மாதா கோவிலில் திருப்பலி நடக்கும் போது, அதன் அடிவாரத்தில் இருக்கும் சுடலை மாட சுவாமி, மற்றும் முத்தாரம்மன் கோவில் ஒலிப்பெருக்கியை அணைத்துவிடுவார்கள். அங்கு கொடை நடக்கும் போது இங்கு பொது வழிபாடுகள் நடத்துவதில்லை. எல்லாம் எழுதப்படாத ஒப்பந்தங்கள்தான். மரியாதையும், புரிதலும் தான் இந்த இணக்கத்திற்கு காரணம். 

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் முன்பு இருந்த ஒரு இயல்பான உறவும், உரையாடலும் சற்றே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். பரஸ்பர வெறுப்பு இல்லையென்றாலும், நாம் இன்னும் நண்பர்கள் தானா என்ற ஐயம் சமவயதினரின் கண்களில் தெரிகிறது. முகநூலிலும் தெரிந்த நண்பர்களே மத - மனித வெறுப்போடு எழுதுவது ஒரு நாசிச சமூகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமா என்று அச்சத்தை உருவாக்காமல் இல்லை. 

அரசியல் விழிப்புணர்வு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. அதிகாரப் பரவலை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஏகாதிபத்தியத்தைக் குலைக்கும். ஆனால் சக மனிதனை நேசிக்காமல், உறவு பாராட்டாமல் ஆக்குமென்றால் அது நம்மை அரசியல் குருடர்களாக்கும் என்றே நினைக்கிறேன். குருட்டுத்தனமாக கொள்கைகளின் பின்னால் செல்வது ஒற்றுமையைக் குலைத்து நம்மைப் பிளவுபடுத்தும். வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் புதிய வடிவம் தான் இன்றைய மத அரசியல் என்று புரிந்துகொள்கிறேன்.

தமிழ்நாடு கிறிஸ்தவ பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் இயக்கம் போன்ற மதத்தின் பெயரிலான அரசியல் ஒருங்கிணைதலுக்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கும் போது இந்துக்களை ஒன்றுபடுத்தும் அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு இயக்கம் இருப்பதில் யாருக்கும் நடுக்கம் தேவையில்லைதான். ஆயினும் ஒரு சமூகம் தன் மத, இன, மொழி சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தின் முதிர்ச்சியும், வளர்ச்சியும் தீர்ப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியா முழுவதுமே மதச்சிறுபான்மையினர் மீது, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது நேரடியாக அல்லது அரசியல் சாசன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. 

எனக்குத் தெரிந்த இந்து மதம் அகிம்சையைப் போதிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு அதன் அடிநாதமாக விளங்குகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் ஏற்றி வைத்த பசிப்பிணி போக்கும் அருட்பெருஞ்சோதி இன்றளவும் அணையவில்லை என்பதே அதன் சாட்சி. அரசியல் தளத்தில் செயல்பட்டவர்களில் காந்தியை விட அதிகமாக இந்து மதத்தை நேசித்து வாழ்ந்த ஒருவரைக் காணமுடியுமா? ஆனால் இன்று அவரைச் சுட்டுக்கொன்ற ஒருவர் கொண்டாடப்படுகிறார். காந்தி மீண்டும் பொம்மைத் துப்பாக்கியால் சுடப்படுகிறார். கூடி நிற்பவர்கள் வேடிக்கையாகக் கொக்கரிக்கிறார்கள். இது தான் அரசியல் விழிப்புணர்வா? வன்முறை கொண்டாடப்படும் சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் எப்படி இருக்க முடியும்? இந்தக் காரணத்திற்காக மட்டுமே எந்த மதம் என்றாலும் பிளவுபடுத்தும் அடிப்படைவாதிகளை கருத்தளவில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பன்முகத்தன்மையே இந்தியாவின் ஆன்மா. பல்வகை மொழியும், இனமும், மதமும் இணைந்து, பிணைந்து, உறவு பேணி வாழ்வதே அதன் தனித்தன்மை. அதை எப்படி மத நம்பிக்கையால் ஒற்றைத் தன்மையாக்க முயல்வது வன்முறையோ, அது போலவே மத நம்பிக்கையின்மையாலும் ஒற்றைத் தன்மையாக்க முடியாது என்பதையே கருப்பர் கூட்டம் முதலான நாத்திக அடிப்படைவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

புறவுலகோடு எந்தத் தொடர்பும் அற்ற அந்தமான் பழங்குடியின மக்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பெண் தேர்தல் அதிகாரி சந்திக்கும் அனுபவங்களை விவரிக்கும் ஓரு நாவல் கன்னித்தீவு. மகிழ்ச்சி, வியப்பு, காதல், காமம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளின் போதும் அதன் சூழலுக்கேற்ப கந்த சஷ்டி கவசப் பாடல் ஒன்றினை உச்சரிப்பார் யமுனா என்னும் அந்தக் கதாபாத்திரம். யமுனாவின் கணவர் பெயர் முருகன். கன்னித்தீவு நாவலாசிரியர் எழுத்தாளர் சி.சரவண கார்த்திக்கேயன். முருகன், சரவணன், கார்த்திக்கேயன் எல்லாம் அந்த அழகனாகிய ஆறுமுகனையேக் குறிக்கும். 

ஆப்பிளுக்கு முன் நாவலில் காந்தியடிகள் தன் அகவாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை மிக அழகியலோடும், நேர்மையோடும்  அணுகிய அதே எழுத்தாளர் சமீபத்தில் அவரது முகநூல் நிலைத்தகவலில், "கொரோனா எத்தனை எளிதாய், எத்தனை விரைவாய் வாழ்க்கையின் நிலையாமையை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! என் ஆச்சரியமெல்லாம் இன்னும் எப்படி இந்தப் பைத்தியகாரர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே!" என்று எழுதினார். கருத்துக்களால் நான் பெரும்பாலும் காயப்படுவதில்லை. ஏனெனில் "மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" என்று திருவிவிலியம் கூறுகிறது. இந்த மடமை மிகவும் அழகானது. மனிதத்தை நேசிக்க வைக்கின்றது.

கருப்பர் கூட்டம் போன்ற நாத்திக அடிப்படைவாதிகளிடமிருந்தும் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டியிருப்பது சலிப்பாயிருக்கிறது.  

சனி, 13 ஜூன், 2020

சுத்தம்- சிறுகதை


சாவிக்கொத்தைப் பிசைந்து தலையில் வெளிர் நீல ரப்பர் உறையிட்ட சாவியை தேடியெடுத்து அலுவலகத்தைத் திறந்தான். மேசைக்கும் சுழல் நாற்காலிக்கும் இடையில் எதையும் நகர்த்தாமல் நுழைந்து மூச்சுவாங்க தன் கனத்த உடலை அமர்த்தினான். முன்னால் இருந்த பீங்கான் பேனா தாங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தான். தான் பங்குத்தந்தையாகப் பொறுப்பெடுத்த நாளில் கிளாரா பரிசளித்தது. அது இப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி ஒரு வடிவில் இருந்தது. நடுவில் எழுது பொருட்கள் வைப்பதற்காக ஒரு குழாய் போன்ற அமைப்பும், சுற்றிலும் அஞ்சரைப் பெட்டி போன்ற சிறுசிறு அறைகளும் இருந்தன. அவற்றில் தனது சைக்கிள் மற்றும் அலமாரிகளின் சாவிகளைப் போட்டுவைத்திருந்தான். அதன் அடியில் தங்க நிறத்தில் அருட்பணி செர்ஜியோ என்று எழுதப்பட்டிருந்த தனது பெயரைத் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இத்தாலியின் தெற்கு முனையில் இருக்கும் ஒரு பழமையான சிறுநகரத்தில் பிறந்து, வளர்ந்து இப்போது பதினொரு வருடங்களாக பர்லேத்தா என்னும் இந்த ஊரில் தான் பங்குத் தந்தையாக இருக்கிறான். அவனோடு இன்னும் இரண்டு சாமியார்கள் இருக்கிறார்கள். இன்னொரு இத்தாலியன் மர்த்தீனோ மற்றும் ரிப்பப்ளிக் ஆப் காங்கோ என்னும் மத்திய-மேற்கு பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாட்டிலிருந்து வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு வேலை செய்யும் விர்த்து. இருவருமே அவனது உதவிப்பணியாளர்கள்.

அறைக்கதவின் வெளியே யாரோ நிற்பது போன்று நிழல் அசைந்து கொண்டிருந்தது. கதவு மேற்பாதி முழுவதும் செமி-ட்ராஸ்பேரன்ட் வகைக் கண்ணாடியினாலானது. உள்ளே வாங்க என்று குரல் கொடுத்தான். விர்த்து நின்றுகொண்டிருந்தான். "கிராட்சியா வந்தாளா?"  என்றான்.
"எந்த கிராட்சியா?" என்றான் செர்ஜியோ.

"அதான் ஒரு வாரமாக வந்துகொண்டிருக்கிறாளே! கிராட்சியா மானோஸ்பெர்த்தி. உன்னைத்தான் பார்க்க வருகிறாள். ஆனாலும் அவளை அதிகமாக அலைய விடுகிறாய்" என்று குற்றம் சுமத்தும் தொனியில் சொன்னான்.

"அவளுக்கு என்ன வேண்டுமாம்? கேட்டியா?"

"எல்லா கதையும் சொல்கிறாள். ஆனால் உன்னை எதற்கு பார்க்க வேண்டும் என்பதை உன்னிடம் தான் சொல்வாளாம். அல்லது மர்த்தீனோ என்றாலும் பரவாயில்லையாம்."

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவள் வரும் நேரம் என்னால் அவளை சந்திக்க முடியவில்லை."

"நேற்று ஒரு நிமிடம் வரச்சொல்! போதும்! என்று கெஞ்சினாள்."

"நான் என்ன செய்ய? கிளாரா அவள் அம்மாவுடன் வந்திருந்தாள். பாரில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என்னால் இறங்கி வரமுடியவில்லை."

"அவளைப் பார்த்தால் ஏதோ சாவு பயத்தில் இருப்பவள் போலிருக்கிறது. ஏதோவொரு பாவத்தை உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும் என்று  அடம்பிடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அடுத்த முறை மிஸ் பண்ணிவிடாதே செர்ஜியோ" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு தன் அலுவலகத்தை திறந்து சோபாவில் அமர்ந்தான்.

கிராட்சியா எதற்காக செர்ஜியோவைப் பார்க்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தான். நேற்று மிகவும் பதற்றமாக இருந்தாள். பார்ப்பதற்கு ஐம்பது வயது மதிக்கலாம். ஆனால் நிச்சயம் அறுபதுக்கு குறையாமல் இருப்பாள். எடுப்பான தோற்றம். அவளிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. பளபளப்பு கூட்டப்பட்ட உயர்ரக கறுப்பு ஷீ, அடர் நீல பெனட்டன் கைப்பை. அவளைப் பார்த்தவுடன் சட்டையில் எங்கேனும் கறையிருக்கிறதா? காலணிக்கு பாலிஷ் போட்டோமா? என்று நமக்கு நாமே ஒரு முறை சரிபாரக்கத் தோன்றும்.

நேற்று அவளுடன் நடந்த உரையாடலை மனதுக்குள் திரும்ப நிகழ்த்திக்கொண்டிருந்தான். அவளுக்கு எப்போதும் செர்ஜியோ மேல் நன்மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றும் அப்படித்தான் குறை கூறிக்கொண்டிருந்தாள். "நான் வரும் போதெல்லாம் அந்த கிளாராவுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறான். என்னை  இந்த வயதில் இப்படி காத்திருக்க வைக்கலாமா? நீயே சொல்."

"அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீ சரியாக வருகிறாய்! என்ன செய்வது?"

"எனக்கு ஒன்றும் இல்லை. நான் வெளிப்படையானவள். சொல்லிவிடுகிறேன். எண்ணைக்காக ஒலிவக் கொட்டைகளை அரைப்பது போல பலரும் எதையாவது பேசிக்கொள்கிறார்கள். அவன் கவனமாக இருக்க வேண்டும்" என்றாள்.

"கிளாரா அவனுக்கு பிள்ளை வயது. அவளும் அவனை ஒரு தந்தை போலத்தான் நடத்துகிறாள். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. விடு!"

"இல்லை விர்த்து. நான் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உன்மேல் எல்லோருக்கும் நன்மதிப்பு இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன்" என்றாள். அப்படி சொல்வது அவள் முதல் ஆள் கிடையாது.

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. எத்தனை முறைதான் அவளும் வருவாள். ஒரு நிமிடம் மட்டும் தான் தேவைப்படும் என்கிறாள். என்ன வேலையென்றால் என்ன? வந்து பார்த்துவிட்டு போனால் என்ன? என்று யோசித்துக்கொண்டிருக்கையில் கதவை முரட்டுத்தனமாகத் திறந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் மத்தியா. சிறிய பூக்கடை வைத்திருக்கிறான். கோவிலில் அவ்வப்போது விற்பனையாகாத பூக்களை கொண்டுவந்து வைப்பான். பிறகு பிரட் வாங்குவதற்கென்று ஒரு யூரோ கேட்பான். அழுக்கான உடை. அண்ட முடியாத வாசம். யாரும் அவனிடம் பூ வாங்குவதில்லை. இந்த ஊரில் எல்லாக் கதைகளும் தெரிந்தவன். கிராட்சியோ வந்து நீண்ட நேரமாக செர்ஜியோவின் அலுவலகத்தின் முன் நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னான்.

"அவன் அங்கேதானே இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவனோடு போனான். கிராட்சியா நின்றுகொண்டிருந்தாள்.

"இன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய்! செர்ஜியோ அலுவலகத்தில் தான் இருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டே கதவைத் தட்டினான். திறக்க வில்லை. அவளது முகத்தில் வழக்கம் போல பதட்டமும், கூடுதலாக கொஞ்சம் கோபமும் தென்பட்டது. பொறுமை இழந்தவனாய் கதவைத் திறந்தான்.
சில நிமிடங்களுக்கு முன் இருந்தவனை இப்போது காணவில்லை. குழுக்கோஸ் அடைக்கும் போது தவறுதாலாக சிறிது இரத்தம் குழாயில் ஏறுவது போல அவளது முகத்தில் சிவப்பு கோடுகள் விழ ஆரம்பித்துவிட்டன.

நிலைமையை சமாளிக்க வேண்டி "மார்த்தீனோ என்றால் பரவாயில்லையா?" என்றான் விர்த்து. அவளும் "சரி! பரவாயில்லை வரச்சொல்" என்றாள். மூன்றாவது மாடியில் விறுவிறுவென்று ஏறினால் அவனது அறையில் அவன் இல்லை. எதிர்பார்த்தது தான். இந்த நேரம் கிச்சனில் நிற்பான். அங்கு போனால் தியான நிலையில் மாவு பிசைந்து கொண்டிருந்தான். தன்னால் அரை நொடி கூட இப்போது வரமுடியாது. "எதாவது சொல்லி அனுப்பிவிடு" என்று மறுத்துவிட்டான். விர்த்து பாவம்போல முகத்தை வைத்து கிராட்சியாவின் நிலையை எடுத்துச் சொல்லிப்பார்த்தான். முடியாது என்று நிமிர்ந்துவிட்டான். "தான் இப்போது இறங்கினால் பீட்சாவிற்கு பதில் பிஸ்கட் தான் சாப்பிட முடியும்" என்று அதே தியான நிலையில் ஒரு ஜோக் சொன்னான்.

அவளிடம் சென்று அவன் பாத்ரூமில் குளிப்பதற்கு தயாராக நிற்பதாகச் சொன்னான். "ஒரு நிமிடம் தானே இறங்கச் சொன்னேன். ஏன் இப்படி செய்கிறார்கள் இரண்டு பேரும்? " என்று புலம்பியவாரே போனவளை உதவ இயலாதவனாகப் பார்த்து நின்றுகொண்டிருந்தான் விர்த்து.
ஒருவார அலைச்சலுக்குப் பிறது இன்று காலை வந்து கதவைத் தட்டினாள்.

திறந்து "வா கிராட்சியா" என்றான் விர்த்து. "இங்கு யாரும் இல்லையா?" என்றாள்.

"நான் உன் முன் தானே நிற்கிறேன்! யாருமில்லையா என்றால் என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே செர்ஜியோவிடம் அவள் வந்திருப்பதாக இன்டர்காமில் சொன்னான்.

"வரச்சொல்" என்றான்.

ஒருவழியாக இன்று செர்ஜியோவைச் சந்தித்துவிட்டாள். அவள் சொன்னது உண்மைதான் அரை நிமிடத்திற்கும் குறைவாகத்தான் அவனிடம் பேசினாள்.

அவள் சென்றதும் விர்த்துவிடம் மூச்சுவாங்க வந்தான்.
"அவள் இத்தனை நாள் என்னையோ, மர்த்தீனோவையோ ஏன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் தெரியுமா?" என்றான்.

அடுத்தவர் காரியம்! ஆர்வமில்லாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு "என்ன?" என்று கேட்டான்.

"ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஒரு சிறிய தொகை கொண்டு வந்திருந்தாள். இந்த காலத்தில் எல்லோரையும் நம்ப முடியாது என்பதால் நேரடியாக என்னை சந்தித்துத் தரவேண்டும் என்று காத்திருந்தாக சொன்னாள். விர்த்துவிடம் கொடுப்பதும் என்னிடம் கொடுப்பதும் ஒன்றுதான் என்றேன். அவள் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்" என்றான் செர்ஜியோ.

விர்த்துவின் குளியல் பழக்கம் வித்தியாசமானது. பனி கொட்டும் கடுங்குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரில் மட்டும்தான் குளிப்பான். பாதத்தை முதலில் நனைப்பான். பின் மேல் நோக்கி உச்சி தலை வரையிலும்
ஷவரின் கைப்பிடியைக் கொண்டு செல்வான். அவனது கருத்த தேகம் இன்னும் உள்ளிருந்து ஒளியூட்டப்பட்டு மின்னுவது போல் இருக்கும். அப்போது ஒரு காகிதத்தை மெழுகுவர்த்தியில் காட்டி மெல்ல மெல்ல எரிப்பது போல் உணர்வான். செர்ஜியோ அப்படி சொல்லிவிட்டு போனதும் ஒரு குளியல் போட்டுக்கொள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

வியாழன், 14 மே, 2020

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை


பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள் 'இவ்விறுதி நாட்களில் தம் ஒரே மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்' (எபி 1:1-2). கடவுளின் வார்த்தையாகிய இயேசு மனித உடலெடுத்து நம்மிடையே குடிகொண்டார் (யோவான் 1, 14). தந்தையாம் கடவுளை இயேசுவைப்போல் வெளிப்படுத்த யாராலும் இயலாது. ஏனெனில் இயேசுக் கிறிஸ்துவைக் காண்பது தந்தையைக் காண்பதாகும் (யோவா 14:9). அன்பின், மன்னிப்பின், இரக்கத்தின் கடவுளை நாம் இயேசுவின் வார்த்தைகளிலும், வாழ்விலும் தான் கண்டுகொண்டோம். இறைவார்த்தையே நம் ஆன்மீக வாழ்வின் அடித்தளமும், உயிர்மூச்சும் ஆகும். அந்த வகையில் இறைவனின் மற்றும் நம் அனைவரின் விண்ணக அன்னையாகிய மரியாளை நோக்கி நாம் செய்யும் புகழ்ச்சி செபமாலையும், இறைவார்த்தையை வாழ்வாக்கவே உதவுகின்றது. எப்படி என்று பார்க்கலாமா?

செபமாலையின் செபங்கள்
செபமாலையில் மொத்தம் மூன்று செபங்கள் முதன்மையாகச் சொல்லப்படுகின்றன. 
1. விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே : எனக்கு செபிக்கத் தெரியாது என்று  சொல்லும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.  தெரியாத பல காரியங்களைத் தேடித்தேடி கற்றுக் கொள்ளும் நாம், செபிப்பதற்கும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இயேசுவே கற்றுத்தந்த இச்செபத்திற்கு இணையாக எதுவும் இருக்க இயலாது. தந்தையே என்ற சொல்லிலேயே என் உள்ளம் பேரன்பின் பூரிப்பால் நிறைந்துவிடுவதால் என்னால் மேற்கொண்டு செபத்தினைச் சொல்ல இயலாமல் போகின்றது. பல மணிநேரங்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே மனம் குடிகொள்கின்றது என்று சொல்கின்றார் புனித அவிலா தெரசா.
2. அருள் நிறைந்த மரியே வாழ்க! : மனிதன் எப்போது உயிர் வாழத்தொடங்குகிறான்? நாம் நினைப்பது போல் அவன் பிறக்கும் தருணத்தில் அல்ல. மாறாக தன் அன்னையின் கர்ப்பத்தில் கருவாக உருவாகும் போதே மனித வாழ்வு தொடங்குகிறது. ஆனால் கடவுளின் பார்வையில் அதற்கும் முன்பே அவர் நம்மைத் தெரிந்து வைத்துள்ளார். தேர்ந்து கொள்கின்றார். (எரேமியா 1, 5) அப்படியென்றால் இயேசு அன்னை மரியின் திருவயிற்றில் கருவாக உருவான தருணம் தானே மீட்புத்திட்டத்தின் தொடக்கம். அப்புனிதமான மணித்துளியில் கடவுளின் தூதர் கபிரியேல் பதின்பருவம் முடிவுறாதக் கன்னியாகிய மரியாளிடம் கடவுள் ஒப்படைக்கவிருக்கும் திருவுளத்தை நினைந்து வியந்து போகின்றார். அருள் நிறைந்த மரியே வாழ்க என்று புகழ்கிறார். ஆண்டவர் உம்முடனே! எல்லாப் பெண்களிலும் பேரு பெற்றவள் நீர்! என்று வாழ்த்துகிறார். இறை-மனித சங்கமம் நிகழும் புனித நேரத்தில் கடவுளின் தூதரால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளை நாம் மூச்சுக்கொரு முறை செபித்தாலும் மிகையாகாது தானே!
3. பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக!
தூய தமத்திருத்துவ புகழ்ச்சி செபம் என்று அறியப்படும் இச்செபமானது இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள அவசியமான அனைத்து மறைஉண்மைகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. ஒரே கடவுள் மூன்று ஆட்களாகத் திகழும் தமத்திருத்துவத்தைப் புகழ்ந்து, ஆராதித்து, வணங்கும் இச்சிறிய செபம் மிகுந்த வல்லமையுள்ளதாகத் திருச்சபை வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே அறியப்படுகின்றது. 

செபமாலையின் மறை உண்மைகள்
பாரம்பரியமாக செபமாலையில் மகிழ்ச்சி, துக்கம், மகிமை, ஒளி என்னும் நான்கு மறை உண்மைகள் தியானிக்கப்படுகின்றன. இந்த மறை உண்மைகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் மீட்பின் செய்திகளையே உள்ளடக்கியுள்ளன. வெறுமனே மேற்சொன்ன மூன்று செபங்களைக் கடமைக்குத் திரும்பத்திரும்பச் சொல்வது செபமாலை செபிப்பதன் நோக்கமல்ல. மாறாக செபிக்கும் போது நாம் இறைவனில் இரண்டறக் கலக்க வேண்டும். ஒவ்வொரு மறை உண்மையும், ஒவ்வொரு செபமும் இறைவார்த்தையைத் தாங்கி வருவதால் மிகுந்த கவனத்துடனும், ஆராதனை உணர்வுடனும் செபிக்க வேண்டும். மேலும் இரக்கத்தின் இயேசு, ஆறுதல் தரும் ஆண்டவர், குணப்படுத்தும் கடவுள் என்று  இயேசுவின் பணிவாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளைத் தொகுத்து மறைஉண்மைகளாக அவ்வப்போது செபிக்கலாம். ஒவ்வொரு மறை உண்மைக்குப் பின்னரும் அந்நிகழ்வு சுட்டும் இறைவார்த்தையை வாசித்தும் தியானிக்கலாம். 

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை
அன்னை மரியாள் இறைவார்த்தையைக் கருவில் தாங்கிய புதிய உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்ந்தாள். அந்த இறைவார்த்தையே அவளை அருள் மிகப் பெற்றவள் ஆக்கிற்று. என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது என்று அவரைப் புகழ்ச்சிப்பண்ணிசைக்க வைத்தது. இறைவன் ஏழை, எளியோரின் சார்பாக நிற்கின்றார். அவர்களைக் கைத்தூக்கி விடுகின்றார் என்று அவர் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்கின்றார். தானும் அப்பணியினைச் செய்யும் போது இறைவனின் பணியையேச் செய்கின்றோம் என்னும் எண்ணத்துடன் விரைந்து சென்று முதிர்வயதில் கருவுற்றிருக்கும் எலிசபெத்து என்னும் தன் உறவினருக்கு உதவுகின்றார். மகிழ்ச்சியின் இரசம் தீர்ந்து விட்ட திருமண வாழ்விற்கு, மீண்டும் மகிழ்ச்சியளிக்கத் தம் ஒரே மகனிடம் பரிந்து பேசுகின்றார். உடனிருந்து உணவு பகிர்ந்துண்ட சீடர்களே பயந்து ஓடிவிட, சிலுவையில் குருதியில் நனைந்து செம்மலராகத் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் பாதங்களைத் தாங்கிக்கொள்கிறாள். யூதர்களுக்குப் பயந்து மூடிய அறையில் முடங்கிக்கிடந்த தொடக்கத் திருச்சபையின் மையமாக அமர்ந்து செபத்தால் அவர்களை உறுதிபடுத்துகிறார். மீண்டும் ஒருமுறை தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார். பாருங்கள்! இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டவரின் வாழ்வு எத்தகைய ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது என்று! மூவொரு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பின் பாத்திரமாகிய அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டு, விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டு மீட்கப்பட்டோரின் முன்னோடியாக, பாவிகளுக்காக இடையறாது பரிந்து பேசுகின்றார். செபமாலையில் இறைவார்த்தையைத் தியானிக்கும் போது நாமும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றோம். கடவுளின் பணியைச் செய்யும் ஆர்வமும், வேட்கையும் நம்மை உயிரோட்டமுள்ள மனிதர்களாக மாற்றுகின்றது. ஆகவே அன்றாடம் செபித்து வாழ்வாக்குவோம் அரிய பொக்கிஷமாகியத் திருச்செபமாலையை!  


வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கொரோனா சவால்கள் (The Challenges of Corona Virus)













                                                                                              




















முன்னுரை
நமது தலைமுறை சந்தித்த மிகப்பெரிய கொள்ளை நோய் கோவிட்-19. கொரோனா என்னும் வைரஸ் மூலம் பரவும் இந்நோய் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவிட்டதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம். உலகப்போர்களின் காலத்தில் மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்ததை வரலாற்றுப் புத்தகங்களில் தான் படித்திருக்கிறோம். ஆனால் இப்போதுதான் அதன் உண்மை அர்த்தம் நமக்குப் புரிகிறது. ஆம்! இதுவும் ஒரு அணுவினும் சிறிய உயிர்த்துணுக்கான கொரோனா என்னும் வைரஸ் மனிதகுலத்திற்கு எதிராகத் தொடுக்கும் ஓர் உலகப் போர்தான். மனிதனின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வின் அனைத்துத் தளங்களையும் தொட்டுப்பார்த்து திணறவைக்கும் கொரோனா விடுக்கும் சவால்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

கொரோனா முன்கதைச் சுருக்கம்
1930 ஆம் ஆண்டில் ஆர்தர் ஷால்க் மற்றும் எம்.சி.ஆவ்ன் என்னும் ஆராய்ச்சியாளர்கள் வளர்ப்புக் கோழிகளில் ஏற்படும் ஒருவகை தொற்றுநோயைக் கண்டறிந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் ப்ரெட் மற்றும் சார்லஸ் கட்சன் என்பர்களால் அந்நோய்க்கான வைரஸ் கண்டறியப்பட்டது. அத்தோடு எலிகள் மற்றும் இன்னும் சில விலங்குகளைத் தாக்கும் வைரஸ் அடையாளம் காணப்பட்டது. முதன் முதலாக மனிதர்களைத் தாக்கும் இத்தகைய வைரஸானது 1960 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் கண்டறியப்பட்டது. நிறைய மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியினால் கொரானா என்னும் வைரஸ் உருவாக்கும் தொற்று நோய்கள் பற்றிய அறிவில் நாம் பல படிநிலைகளைக் கடந்திருக்கிறோம். கிரீடம் என்னும் பொருள் தரும் இலத்தீன் சொல்லான கொரோனா மற்றும் கிரேக்க சொல்லான கொரொவ்ன் என்ற சொற்களிலிருந்து 1968 ஆண்டு முதல் இப்புதிய வகை வைரஸ் தொகுப்பானது அழைக்கப்படுகிறது.

கோவிட்-19
சீனாவின் ஊபேய் மகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நோய்த் தொற்று பரவத்தொடங்கியது. சுவையின்மை, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை சில பொதுவான அறிகுறிகளாகும். நோய்த்தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் ஒருவரிடம் இந்த அறிகுறிகள் வெளிப்படலாம். அறிகுறிகள் இன்னும் வெளிப்படாத நபர்கள் மூலமாகவும் இந்நோய் பரவ முடியும் என்பதும் இந்நோய் அதிகமாகப் பரவக் காரணமாகும். சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி தற்சமயம் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தன் கோர முகத்தைக் காட்டிவருகிறது கொரோனா வைரஸ். மார்ச் 11, 2020 அன்று உலக சுகாதார நிறுவனம் இதனை உலக பெரும் கொள்ளை நோயாக அறிவித்தது. பூமிப்பந்து முழுவதும் 26 இலட்சத்திற்கும் அதிகமான ஆட்களை பாதித்துள்ள இந்நோயானது இதுவரையிலும் (23-4-2020 மதியம் 2.30 மணி) 1,86,604 பேரை பலிகொண்டுள்ளது. 716,406 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

மருத்துவ சவால்கள்
இந்நோய்க்கு இதுவரையிலும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், முழுமையாக நோயினைத் தடுக்கும் மருந்துகள் இன்னும் பரிசோதனைக் கட்டத்திலேயே இருக்கின்ற என்பதே இதன் முதல் சவால். தனிமைப் படுத்துதல், நல்ல சூழல், சுவாசக் கருவி, மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் துணை மருந்துகள் மட்டுமே தற்போதைய சிகிச்சையாக உள்ளது. நேரடியாக வைரசைத் தாக்கி அழிக்கும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உபகரணங்களின் தேவை
நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள் பேசும் போதும், இருமும் போதும் நுண்ணிய எச்சில் துகள்கள் காற்றில் பரவுகின்றன. இதனை சுவாசத்தின் மூலமோ, கைகளால் தொடுவதன் மூலமோ அருகிலிருப்பவருக்கும் இந்நோய் மிக எளிதாக பரவுகிறது. மனிதர்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டிருப்பது நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதல் வழிமுறையாகும். ஆயினும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக, அத்தியாவசியப் பணி நிமித்தமாக வெளியில் வராமல் இருக்கமுடியாது. அந்நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு புழங்க வேண்டும். முகத்தில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் நேரடியாக நோயாளிகளை அணுகி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என்95 என்னும் வகை முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். மருத்துவமனைகளில் கடும் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளோடு தனி அறை, செயற்சை சுவாசக்கருவிகள் அத்தியாவசியத் தேவை. அன்றாடம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் சூழலில் இத்தகைய உபகரணங்களை காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்யவது அரசின் சுகாதாரத் துறையினர்  முன்னிருக்கும் பெரும் சவால் ஆகும்.

கட்டமைப்பு குறைபாடுகள்
உலகில் 210-க்கும் அதிகமான நாடுகளில் தன் நச்சுக்கரங்களால் முடிசூடியிருக்கும் கொரோனா ஏழை, பணக்காரன், இனம், மொழி பாகுபாடின்றி அனைவரையுமே கதிகலங்க வைத்துள்ளது. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் தரமான உட்கட்டமைப்பு வசதிகளால் நோயாளிகள் சிறந்த முறையில் கவனிக்கப்பட வாய்ப்பிருக்கின்றது. மருத்துவப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வாய்பிருக்கின்றது. இருப்பினும் இத்தாலி போன்ற உலகின் தலைச்சிறந்த மருத்துவக்கட்டமைப்புள்ள நாட்டிலேயே நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் கொரோனா போரில் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத்துள்ளனர். அப்படியென்றால் இந்தியா, பிரேசில் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் சந்திக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. இந்தியாவிலும் சுகாதாரக் கட்டமைப்புகள் கேரளா, தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. போதிய அளவில் மருத்துவமனைகள் இல்லாமல் இரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. சுத்திகரிப்பு சாதனங்கள், சுத்தமான சூழல், குடிநீர், மின்னணு கருவிகள் போன்றவை மருத்துவமனைகளிலேயே சரியான முறையில் பராமரிக்கப்படாத போது இத்தகைய தற்காலிக ஏற்படுகளின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளன. மத்திய அரசு நாட்டின் பலவீனமானப் பகுதிகளுக்கு உடனடியாகத் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

சமூக ஊடக சவால்கள்
காற்றில் நோய் பரவுவதை விட வேகமாக சமூக ஊடகங்கள் நச்சுக்கருத்துக்களைப் பரப்புகின்றன என்பது வேதனையாக உள்ளது. முகநூல் பதிவுகள், வாட்சப் நிலைத் தகவல்கள், குழுப்பகிர்வுகள், யுடியூப் வீடியோக்கள் போன்றவற்றில் பகிரப்படும் போலித் தகவல்கள் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட மதத்தினரையோ, சமூகத்தினரையோ சுட்டிக்காட்டி அவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதன் மூலம் சமூகங்களுக்கிடையே வெறுப்பினை விதைக்கும் நச்சுக்குழுக்களை முறியடிப்பது கொரானாவை விட மிகப்பெரிய சவாலாக உள்ளது. உண்மைத் தன்மையை ஆராயும் சிறிய அக்கறையுமின்றி பரப்பப்படும் தவறானத் தகவல்களால் பல்வேறு மனித உயிர்கள் பறிபோவதையும் பார்த்து சினம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எல்லோரும் மருத்துவராகி எலுமிச்சை, சுக்கு, மிளகு, துளசி, திப்பிலி என்று வாய்க்கு வந்த மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். அப்பொருட்கள் தன்னிலே மருத்துவக் குணங்கள் கொண்டிருப்பினும் அவை கொரோனா தாக்கியிருப்பவரைக் குணப்படுத்தியதாக எந்த நிருபணமும் இல்லை. ஆகவே நோய் அறிகுறியுள்ள ஒருவர் அம்மருந்துகளை வீட்டிலேயே முயற்சித்து மருத்துவமனை செல்லக் காலம் தாழ்த்துவதால் அவர் தனக்கும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பெரிய ஆபத்தாக மாறுகின்றார். வீட்டிலேயே முடங்கியிருத்தல் மனிதர்களிடம் பல உளவியல் சிக்கல்களையும் அதிகரித்துள்ளது. அளவுக்கதிகமான இணையப் பயன்பாடு, செல்போனுக்கு அடிமையாதல், சிறார், பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தல் போன்றவையும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய சவால்களாகும்.

வறியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெருமைப்படும் வகையில் முன்னேறியிருக்கிறது என்பது உண்மையென்றாலும் இன்னும் நம் நாட்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, கடன் தொல்லை, உணவுத் தட்டுப்பாடு போன்றவற்றை ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டு மீண்டு வருவது மிகப்பெரிய சவால் ஆகும். பெருநகரங்களில் கூலிகளாக இருக்கும் உழைக்கும் வரக்கத்தினர் தகுந்த இருப்பிடமோ, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வழியோ இன்றி, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றாவது பிழைத்துக்கொள்ள நினைத்தாலும், போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் நாடு முழுவதும் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு நடந்தே கடந்ததை ஆளும் அரசுகள் கண்டுகொள்ளாதது ஒரு வரலாற்று அவமானமாகும். மேலும் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டிய நோயாளிகள், அன்றாடம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நீரழிவு, இரத்த அழுத்தம், இதய நோயளிகள், பிறரைச் சார்ந்தே வாழும் கட்டாயத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள், தனித்து வாழும் முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை அரசும், தன்னார்வ அமைப்புகளும் கவனிக்க வேண்டும்.

முடிவுரை
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி தடுப்பூசிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசு சுகாதாரப் பணியார்களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் காலரா, மலேரியா, தொழுநோய், போலியோ போன்ற கொடும் தொற்று நோய்களிலிருந்து நமக்கு விடுதலை அளித்துள்ளது. எயிட்ஸ், யானைக்கால் நோய், காசநோய் போன்ற தடுப்பு பணிகளிலும் மிகுந்த அக்கறை காட்டப்படுகிறது. தகுந்த அறிவியல், பொருளாதார வளர்ச்சியோ, கல்வி விழிப்புணர்வோ இல்லாதிருந்த காலத்திலேயே எண்ணற்றோரின் தியாகத்தால் கடைக்கோடி மனிதருக்கும் சுகாதார வசதிகள் தரப்பட்டுள்ளன. இன்று கொக்கரிக்கும் கொரோனாவின் கொட்டம் அடங்கும் நாள் தொலைவில் இல்லை. அதுவரையிலும் அரசின் அறிவுறுத்தலை மதித்து செயல்படுத்துவோம். தனிமனித சுத்தத்தை, சுகாதாரத்தைப் பேணுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து, இல்லாதோருக்கு இயன்றதைப் பகிரந்து, தனித்திருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்.

செவ்வாய், 31 மார்ச், 2020

Gospel meditation on praying Rosary (With the Reflection of Pope Francis on the extraordinary moment of prayer Urbi et Orbi)


Introduction
Dear sisters and brothers! Greetings in the name of our Lord! May the Lord give you all peace and good health. As we all know that the whole humanity is facing a thread caused by COVID-19, the mother Church wants to embrace everyone with the arms of prayer. Who else can strengthen a child other than its mother? Yes, today we would like to invite you all to pray with our heavenly Mother, the Mother of God who prayed with the disciples on the day of Pentecost! Our holy father Pope Francis, offered the whole world under the protection of Mother Mary, who feels one with everyone who suffers and intercedes for us to the heavenly father. In this Rosary, we would meditate on the word of God, proclaimed by the Pope on the extraordinary moment of prayer in the time of epidemy, “Urbi et orbi” on March 27, 2020 at the St. Peter’s basilica.

The Schema of the Rosary
  • In the name of the Father and of the Son and of the Holy Spirit. Amen
Hymn: 
No one can live as an island, Journeying through life alone.
Since we’re most loved by a mother, Jesus gave us His own.
    Be with us Mary, along the way,
    Guide every step we take.
    Lead us to Jesus your loving son.
    Come with us, Mary come.
When Jesus met with rejection, Mary stood by the cross; 
How can a mother desert her son? She’ll also stand by us. (Be with us)

Gospel Reading: Mark 4, 35-41
On that day, when evening had come, he said to them, “Let us go across to the other side.” And leaving the crowd behind, they took him with them in the boat, just as he was. Other boats were with him. A great windstorm arose, and the waves beat into the boat, so that the boat was already being swamped. But he was in the stern, asleep on the cushion; and they woke him up and said to him, “Teacher, do you not care that we are perishing?” He woke up and rebuked the wind, and said to the sea, “Peace! Be still!” Then the wind ceased, and there was a dead calm. He said to them, “Why are you afraid? Have you still no faith?”. And they were filled with great awe and said to one another, “Who then is this, that even the wind and the sea obey him?”

1st Mystery: On that day, when evening had come, he said to them, “Let us go across to the other side.”
For weeks now it has been evening. Thick darkness has gathered over our squares, our streets and our cities; it has taken over our lives, filling everything with a deafening silence and a distressing void, that stops everything as it passes by; we feel it in the air, we notice in people’s gestures, their glances give them away. We find ourselves afraid and lost. Like the disciples in the Gospel we were caught off guard by an unexpected, turbulent storm. We have realized that we are on the same boat, all of us fragile and disoriented, but at the same time important and needed, all of us called to row together, each of us in need of comforting the other. On this boat… are all of us. Just like those disciples, who spoke anxiously with one voice, saying “We are perishing” (v. 38), so we too have realized that we cannot go on thinking of ourselves, but only together can we do this.

2nd Mystery: “Teacher, do you not care that we are perishing?”
Do you not care: they think that Jesus is not interested in them, does not care about them. One of the things that hurts us and our families most when we hear it said is: “Do you not care about me?” It is a phrase that wounds and unleashes storms in our hearts. It would have shaken Jesus too. Because he, more than anyone, cares about us. Indeed, once they have called on him, he saves his disciples from their discouragement. The storm exposes our vulnerability and uncovers those false and superfluous certainties around which we have constructed our daily schedules, our projects, our habits and priorities. It shows us how we have allowed to become dull and feeble the very things that nourish, sustain and strengthen our lives and our communities.

3rd Mystery: “Why are you afraid? Have you still no faith?”
Lord, you are calling to us, calling us to faith. Which is not so much believing that you exist, but coming to you and trusting in you. This Lent your call reverberates urgently: “Be converted!”, “Return to me with all your heart” (Joel 2:12). You are calling on us to seize this time of trial as a time of choosing. It is not the time of your judgement, but of our judgement: a time to choose what matters and what passes away, a time to separate what is necessary from what is not. It is a time to get our lives back on track with regard to you, Lord, and to others.

4th Mystery: Then the wind ceased, and there was a dead calm.
Faith begins when we realise we are in need of salvation. We are not self-sufficient; by ourselves we founder: we need the Lord, like ancient navigators needed the stars. Let us invite Jesus into the boats of our lives. Let us hand over our fears to him so that he can conquer them. Like the disciples, we will experience that with him on board there will be no shipwreck. Because this is God’s strength: turning to the good everything that happens to us, even the bad things.

5th Mystery: “Who then is this, that even the wind and the sea obey him?”
He brings serenity into our storms, because with God life never dies. Embracing his cross means finding the courage to embrace all the hardships of the present time, abandoning for a moment our eagerness for power and possessions in order to make room for the creativity that only the Spirit is capable of inspiring. It means finding the courage to create spaces where everyone can recognize that they are called, and to allow new forms of hospitality, fraternity and solidarity. By his cross we have been saved in order to embrace hope and let it strengthen and sustain all measures and all possible avenues for helping us protect ourselves and others. Embracing the Lord in order to embrace hope: that is the strength of faith, which frees us from fear and gives us hope.

(We, Leonardian fathers of OMD at San Ferdinando in Italy, prayed rosary in this way and found it very much consoling! Let’s not forget to sustain our beloved holy father with our valuable prayers! Thank you all and praise the Lord!)


 Courtesy: The texts of the reflections, used in this prayer, has been taken from the official website of Vatican.