ஞாயிறு, 19 ஜூலை, 2020

சலிப்பூட்டும் நாத்திக அடிப்படைவாதம்


கருப்பர் கூட்டம் என்னும் பெயரிலான ஒரு யூடியூப் சானலில் கந்தசஷ்டி கவசப் பாடலின் ஒரு சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு மிகவும் கொச்சையாக விமர்சித்திருந்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கா அந்த சானலைத் தடை செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தினர். 

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். எங்கள் ஊரில் அழகன் என்ற பெயரில் இந்து, கிறிஸ்தவ பாகுபாடின்றி நிறைய பேர் இருக்கின்றனர். அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற இனிமையானப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதம் கடந்தும் ஒருவருக்கு இதயத்தில் அன்பு சுரக்கும். சிறுவயதில் எங்கள் வீட்டில் குழந்தை முருகனின் படம் போட்டு காலண்டர் இருந்தது. அதில் யாமிருக்க பயமேன் என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுதான் பள்ளிக்குக் கிளம்புவது வழக்கம். குழந்தை இயேசுவின் முகத்தையே எனக்கு அது நினைவுபடுத்தியது. மருங்கூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் அருகில் தான் எங்கள் பள்ளி. ஒடுக்கத்து வெள்ளியன்று அங்கு சுவையான கஞ்சி கிடைக்கும். நண்பர்களோடு சென்று சாப்பிட்டுவிட்டு, அங்கிருக்கும் ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடுவது சிறுவயதின் அழகான நினைவுகள். அந்த ஆலமரம் போன்று கடவுள் ஒருவரே. நாம் நம்பும் ஆத்திகம், அல்லது நம்பாத நாத்திகம் யாவும் நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகள்; இறுகப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் என் விழுதுதான் ஐ.எஸ்.ஒ 9001 என்று கருதினால் ஆலமரம் கோபித்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். 

எங்கள் ஊரில் இந்துக்கள், சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க மதத்தினர் எனக்குத் தெரிந்து இதுவரையிலும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். புலிமலை சகாய மாதா கோவிலில் திருப்பலி நடக்கும் போது, அதன் அடிவாரத்தில் இருக்கும் சுடலை மாட சுவாமி, மற்றும் முத்தாரம்மன் கோவில் ஒலிப்பெருக்கியை அணைத்துவிடுவார்கள். அங்கு கொடை நடக்கும் போது இங்கு பொது வழிபாடுகள் நடத்துவதில்லை. எல்லாம் எழுதப்படாத ஒப்பந்தங்கள்தான். மரியாதையும், புரிதலும் தான் இந்த இணக்கத்திற்கு காரணம். 

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது முதல் முன்பு இருந்த ஒரு இயல்பான உறவும், உரையாடலும் சற்றே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். பரஸ்பர வெறுப்பு இல்லையென்றாலும், நாம் இன்னும் நண்பர்கள் தானா என்ற ஐயம் சமவயதினரின் கண்களில் தெரிகிறது. முகநூலிலும் தெரிந்த நண்பர்களே மத - மனித வெறுப்போடு எழுதுவது ஒரு நாசிச சமூகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமா என்று அச்சத்தை உருவாக்காமல் இல்லை. 

அரசியல் விழிப்புணர்வு மிகவும் நன்மை பயக்கும் ஒன்று. அதிகாரப் பரவலை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஏகாதிபத்தியத்தைக் குலைக்கும். ஆனால் சக மனிதனை நேசிக்காமல், உறவு பாராட்டாமல் ஆக்குமென்றால் அது நம்மை அரசியல் குருடர்களாக்கும் என்றே நினைக்கிறேன். குருட்டுத்தனமாக கொள்கைகளின் பின்னால் செல்வது ஒற்றுமையைக் குலைத்து நம்மைப் பிளவுபடுத்தும். வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் புதிய வடிவம் தான் இன்றைய மத அரசியல் என்று புரிந்துகொள்கிறேன்.

தமிழ்நாடு கிறிஸ்தவ பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் இயக்கம் போன்ற மதத்தின் பெயரிலான அரசியல் ஒருங்கிணைதலுக்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கும் போது இந்துக்களை ஒன்றுபடுத்தும் அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு இயக்கம் இருப்பதில் யாருக்கும் நடுக்கம் தேவையில்லைதான். ஆயினும் ஒரு சமூகம் தன் மத, இன, மொழி சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தின் முதிர்ச்சியும், வளர்ச்சியும் தீர்ப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியா முழுவதுமே மதச்சிறுபான்மையினர் மீது, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது நேரடியாக அல்லது அரசியல் சாசன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. 

எனக்குத் தெரிந்த இந்து மதம் அகிம்சையைப் போதிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு அதன் அடிநாதமாக விளங்குகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் ஏற்றி வைத்த பசிப்பிணி போக்கும் அருட்பெருஞ்சோதி இன்றளவும் அணையவில்லை என்பதே அதன் சாட்சி. அரசியல் தளத்தில் செயல்பட்டவர்களில் காந்தியை விட அதிகமாக இந்து மதத்தை நேசித்து வாழ்ந்த ஒருவரைக் காணமுடியுமா? ஆனால் இன்று அவரைச் சுட்டுக்கொன்ற ஒருவர் கொண்டாடப்படுகிறார். காந்தி மீண்டும் பொம்மைத் துப்பாக்கியால் சுடப்படுகிறார். கூடி நிற்பவர்கள் வேடிக்கையாகக் கொக்கரிக்கிறார்கள். இது தான் அரசியல் விழிப்புணர்வா? வன்முறை கொண்டாடப்படும் சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் எப்படி இருக்க முடியும்? இந்தக் காரணத்திற்காக மட்டுமே எந்த மதம் என்றாலும் பிளவுபடுத்தும் அடிப்படைவாதிகளை கருத்தளவில் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பன்முகத்தன்மையே இந்தியாவின் ஆன்மா. பல்வகை மொழியும், இனமும், மதமும் இணைந்து, பிணைந்து, உறவு பேணி வாழ்வதே அதன் தனித்தன்மை. அதை எப்படி மத நம்பிக்கையால் ஒற்றைத் தன்மையாக்க முயல்வது வன்முறையோ, அது போலவே மத நம்பிக்கையின்மையாலும் ஒற்றைத் தன்மையாக்க முடியாது என்பதையே கருப்பர் கூட்டம் முதலான நாத்திக அடிப்படைவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

புறவுலகோடு எந்தத் தொடர்பும் அற்ற அந்தமான் பழங்குடியின மக்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பெண் தேர்தல் அதிகாரி சந்திக்கும் அனுபவங்களை விவரிக்கும் ஓரு நாவல் கன்னித்தீவு. மகிழ்ச்சி, வியப்பு, காதல், காமம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளின் போதும் அதன் சூழலுக்கேற்ப கந்த சஷ்டி கவசப் பாடல் ஒன்றினை உச்சரிப்பார் யமுனா என்னும் அந்தக் கதாபாத்திரம். யமுனாவின் கணவர் பெயர் முருகன். கன்னித்தீவு நாவலாசிரியர் எழுத்தாளர் சி.சரவண கார்த்திக்கேயன். முருகன், சரவணன், கார்த்திக்கேயன் எல்லாம் அந்த அழகனாகிய ஆறுமுகனையேக் குறிக்கும். 

ஆப்பிளுக்கு முன் நாவலில் காந்தியடிகள் தன் அகவாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை மிக அழகியலோடும், நேர்மையோடும்  அணுகிய அதே எழுத்தாளர் சமீபத்தில் அவரது முகநூல் நிலைத்தகவலில், "கொரோனா எத்தனை எளிதாய், எத்தனை விரைவாய் வாழ்க்கையின் நிலையாமையை மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! என் ஆச்சரியமெல்லாம் இன்னும் எப்படி இந்தப் பைத்தியகாரர்கள் கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே!" என்று எழுதினார். கருத்துக்களால் நான் பெரும்பாலும் காயப்படுவதில்லை. ஏனெனில் "மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" என்று திருவிவிலியம் கூறுகிறது. இந்த மடமை மிகவும் அழகானது. மனிதத்தை நேசிக்க வைக்கின்றது.

கருப்பர் கூட்டம் போன்ற நாத்திக அடிப்படைவாதிகளிடமிருந்தும் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டியிருப்பது சலிப்பாயிருக்கிறது.  

9 கருத்துகள்:


  1. நல்லதொரு பதிவு.. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ப்ளாக் பார்த்தேன். பணி தொடரட்டும். நன்றி

      நீக்கு
  2. மிகவும் நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மனமுவந்த பாராட்டுக்கள் நண்பனுக்கு..

    பதிலளிநீக்கு
  4. மனமுவந்த பாராட்டுக்கள் நண்பனுக்கு..

    பதிலளிநீக்கு