ஞாயிறு, 26 ஜூலை, 2020

È per il tuo bene - எல்லாம் உனது நன்மைக்குத்தான்

"எ பெர் இல் தூவோ பெனே"  (È per il tuo bene) என்பது சமீபத்தில் நான் பார்த்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர். 2017 இல் வெளியான Es Por Tu Bien என்னும் ஸ்பானியத் திரைப்படத்தின் இத்தாலிய ரீமேக். அமேசான் பிரைமில் கிடைக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடும் போதெல்லாம் வழக்கமாக "எல்லாம் உனது நன்மைக்குத்தான்" என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான் இப்படத்தின் தலைப்பின் அர்த்தம்.

அர்த்தர்-இசபெல்லா தம்பதியினருக்கு வாலன்டீனா ஒரே மகள். அவள் அலெக்சியா என்னும் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுக்கிறாள். அவள் கறுப்பினத்தவள். சுற்றுசூழல் போராளி. தான் வேலை பார்த்த நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிப்பதை வெளிப்படுத்தியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு வழக்கறிஞரான வாலன்டினாவிடம் உதவிகேட்டு வருகிறாள். வழக்கு முன்னே செல்ல காதல் பின்தொடர்கிறது. அர்த்தர் தன் மகள் வாலன்டினாவில் நன்மைக்காக இந்தக் காதலை முறியடிக்க சூழ்ச்சி செய்கிறார்.

அந்தோணியோ-பவுலா தம்பதியினருக்கு ஒரே மகள் மார்த்தா. பள்ளி இறுதியாண்டு மாணவி. உடம்பெல்லாம் பச்சைக் குத்தி, காதில் கடுக்கன், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், காலரில்லாத சிவப்பு, மஞ்சள் வண்ண டீ-சர்ட் அணிந்து, கொஞ்சம் கஞ்சாவை உள்ளிழுத்து அனுமதியில்லாத பொது இடங்களில் பாப் இசைக்கும் ஒரு சமவயது பையன் பியோண்டாவைக் காதலிக்கிறாள். அந்தோணியோ தன் மகள் மார்த்தாவின் நலனுக்காக அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வரச்செய்ய முயற்சி செய்கிறார்.

செர்ஜியோ-ஆலிச்சே தம்பதியினரின் ஒரே மகள் சாரா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தேநீர் விடுதியில் வேலை செய்கிறாள். செர்ஜியோ தன் செல்ல மகளின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசளிப்பதற்காக ஒரு அழகிய மிதிவண்டியை வாங்கி அவ்விடுதிக்கு வருகிறார். அங்கு தன்னிலும் வயதில் கொஞ்சம் இளைய பால்யகால நண்பன் போஜியைச் சந்திக்கிறார். சிறுவயதில் நிறைய பெண்களுடன் சுற்றிக்கொண்டிருந்த போஜியின் கெட்டிக்காரத் தனத்தை நினைவுகூர்ந்து இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வரும் சாராவிடம் தான் கொண்டுவந்திருந்த மலர்க்கொத்தை நீட்டி "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பே" என்று கொடுக்கிறார். செர்ஜோ கடுங்கோபத்தைக் கட்டுப்படுத்த மனநல ஆலோசனைப் பெற்று வருபவர். தன்னையும் மீறி அந்த இடத்திலேயே போஜியைக் கொத்தாகத் தூக்கி தேனீர் விடுதிக்கு வெளியே வீசி துவைத்து எடுக்கிறார்.

அர்த்தர், அந்தோணியோ, செர்ஜியோ மூவரும் நெருங்கிய நண்பர்கள். தங்கள் பிள்ளைகளின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் காதலர்களை ஓடவிட மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். 

அலெக்சியா தங்கள் வீட்டில் திருடியதாக கதைகட்டி அவளை நாடுகடத்தப் பார்க்கிறார்கள். பியோண்டா தனது பையில் போதை மருந்துகள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறான். போஜி நடத்தை கெட்டவன் என்பதை நிரூபிக்க ஒரு விபச்சாரப் பெண்ணின் உதவியை நாடுகிறார்கள்.

ஆனால் தங்களது அனைத்து முயற்சிகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்படுவது தங்கள் பிள்ளைகள் தான் என்பதை உணர்ந்து, கடைசியில் அவர்களே தங்கள் பிள்ளைகளின் காதலைச் சேர்த்து வைப்பதாக படம் முடிகிறது.

மிக எளியக் கதையுடன் கூடிய மிகச்சாதாரண காமெடி திரைப்படம் தான் எனினும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ஆளுமையையும் துல்லியமான நடிப்பால் தனித்து வெளிப்படுத்துவதால் படம் போராடிக்காமல் செல்கிறது. இதுவே ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் முதல் கட்டுரை. இந்தப்படம் கையாளும் கதைக்களம் என்னை புன்னகைக்க வைத்தது மட்டும் தான் காரணம். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்னும் வகையிலான பெற்றோர்கள் உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் எழுதப்பட்ட சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம்நாடு வல்லரசாகும் என்னும் கட்டுரையில் ஆல்பா என்னும் இத்தாலியப்பெண் சித்தாத் என்னும் கறுப்பினத்துப் பையனைத் திருமணம் செய்யவிருப்பதைப் பதிவு செய்திருந்தேன். அது மிகவும் சாதராணமாக தெருவுக்குத் தெரு நடப்பது போன்ற தோற்றத்தை அக்கட்டுரை ஏற்படுத்தியது.

ஆனால் இத்திரைப்படம் அதற்கு மாறான இன்னொரு பக்கத்து எதார்த்தத்தை எடுத்துக்காட்டியது. வாலண்டினா-அலெக்சியாவின் ஒருபாலினக் காதலை எதிர்கொள்ளும் ஒரு முன்னேறிய சமூகத்துப் பெற்றோர் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முடிவு செய்ய இயலாமல் திணறுவதை, இயல்பான வசனங்களுடன் பதிவு செய்திருந்தது.

பிறருக்கு நடக்கும் போது புரட்சியாக, முற்போக்காகத் தோன்றும் சில விசயங்கள் தனக்கு வரும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. எது சரி, எது தவறு என்று சார்புகளைப் பற்றி இயக்குநர் அக்கறைப்படவில்லை. அதைப் பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறார். உங்கள் கருத்துக்களைப் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் உங்கள் கருத்துக்களின் நகல்கள் அல்ல. வித்தியாசத்தை ஏற்றுக்கொள்ள மனதை அகலத் திறந்து பயிற்சியெடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள். அவர்களுக்கு எது நல்லது, எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும்.

இன்யை இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் அக்கறை கொள்கிறார்கள். நல்லது தான். ஆனால் தனியார் பள்ளிகளும், சமூகமும் அளிக்கும் அழுத்த மிகுதியால் குழந்தை வளர்ப்பே உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை போல பதற்றமடைகிறார்கள். இயல், இசை, நாடகம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு என்று பிஞ்சுக் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை ஒரு கொடுங்கனவாக்குகிறார்கள். தொட்டியில் வளரும் போன்சாய் மரங்கள் அழகானவைதான் என்றாலும், வெட்ட வெளியில் வளரும் ஆலமரங்களில் தான் பறவைகள் கூடுகட்டும். கொஞ்சம் ஃப்ரியா விடுங்க பாஸ்!

2 கருத்துகள்:

  1. தங்களின் கருத்து மிகவும் உண்மையானது. பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து செயல்படும் பெற்றோரை விட தங்கள் எண்ணத்தை பிள்ளைகள் மேல் திணிக்கும் பெற்றோர் அதிகம். பிள்ளைகள் தவறே செய்தாலும் உடனிருந்து பெற்றோர் வழி நடத்த வேண்டும். மாறாக அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராக திட்டம் தீட்ட கூடாது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு