வியாழன், 27 ஜனவரி, 2011

திருப்பலி முன்னுரை

பொதுமுன்னுரை

முகிலைத் தழுவும் தென்றல் மழையைத் தருகிறது. மண்ணைத் தழுவும் மழை விளைச்சலைத் தருகிறது. அவனியை  அன்பால் தழுவும் மனமே அர்ப்பணிக்க முன்வருகின்றது. இதயத்தில் நிரம்பி வழியும் அன்பால், கிறிஸ்துவின் அர்ப்பணத்தில் தம்மையே முழுமையாக இணைத்துக்கொள்ள முன்வந்திருக்கும் எம் சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழாவில் கலந்து கொண்டு, எம் இறையன்னை குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க வந்திருக்கும் அருள் பணியாளர்கள், அருட்சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்பொழுக வரவேற்கின்றேன்.

பாண்டி-கடலூர் உயர்மறைமாவட்டம் அழகப்பசமுத்திரத்தில் திரு.சாமுவேல், திருமதி அந்தோணியம்மாள் அவர்களின் நான்காவது மகனாக 10-05-1982 அன்று பிறந்தவர் எம் அருட்சகோதரர் சந்தோஷ் குமார். பார்க்கும் போதெல்லாம், இவரது முகத்தில்  அரும்பும் புன்னகை நமக்குப் பூக்களை நினைவுபடுத்தும். அவை அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஏராளம் கனிகளை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டவை. 

திண்டுக்கல் மறைமாவட்டம்,  அம்மாபட்டியில் திரு.சவரிமுத்து, திருமதி அன்னம்மாள் ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் ஐந்தாவது மகனாக 24-12-1982 அன்று பிறந்த செல்லப்பிள்ளை எம் அருட்சகோ.குழந்தை ராஜ். உள்ளத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் தான் பெயரிட்டிருப்பார்களோ என்று இவரோடு பழகியவர்களுக்குத் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. எளிமை, இயல்பு, ஆழ்ந்த இறை நம்பிக்கைக்கு இவரை எடுத்துக்காட்ட இயலும்.

அடுத்ததாக அருட்சகோ.அந்தோணி குரூஸ். முத்துக்களைப் பெற்றெடுப்பதில் அழகப்பசமுத்திற்கே முதல் இடம் என்பது போல் இவர் இவ்வூரிலிருந்து எம் சபையில் பூக்கும் இரண்டாவது மலர் திரு.ராயப்பன், திருமதி அந்தோணியம்மாள் இவர்களின் நான்கு பிள்ளைகளில் இரண்டாவது மகனாக 20-04-1984 அன்று பிறந்தார். பாகுபாடற்று பழகுவதும், பெரிய சிந்தனைகளை, எளிய மொழியில் பேசிவிடுவதும் இவரது தனிச்சிறப்பு. 

இம் முக்கனிகள் மூன்றும் எம் சபையில் காலடி பதித்த ஆண்டு 2002. ஓராண்டு புதுமுக அனுபவத்தை இதே இல்லத்தில் பெற்றபின் 2003 முதல் 2004 வரை மூன்றாண்டு மெய்யியல் படிப்பை மதுரையிலும், 2007-2008 இல் ஓராண்டு நவசன்னியாசத்தை மீண்டும் இதே இல்லத்திலும் முடித்து, தங்கள் முதல் வாரத்தைப்பாட்டினைக் கொடுத்த நாள் 07-05-2007. தொடர்ந்து 2007-2010 வரை நான்கு ஆண்டு இறையியல் படிப்பை திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் முடித்த இவர்கள் இன்று எம் இறையன்னை சபையின் நிரந்தர அங்கத்தினர்களாக தங்கள் இறுதி அர்ப்பணத்தைக் கொடுக்கவிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்தி, இவர்களுக்காக செபிக்க வந்திருக்கும் நாம், பாடல் குழுவினரோடு இணைந்து வருகைப்பாடலைப் பாடுவோம்.

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே! எம் இறை அன்னை சபை என்னும் தோட்டத்திலே நிரந்தரமாய் வேரூன்றி, இன்றுமுதல் புதிதாகப் பூத்துக் குலுங்கவிருக்கும் எம் அருட்சகோதரர்கள் சந்தோஷ் குமார், குழந்தை ராஜ், மற்றும் அந்தோணி குரூஸ் ஆகியோரின் இறுதி அர்ப்பண விழா திருப்பலியில் பங்கேற்று, அவர்களின் துறவற அர்ப்பணம் சிறக்க வாழ்;த்த வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கின்றோம். 'தன்னைக் காத்து உலகை துறப்பதல்ல- துறவரம் தன்னைத் துறந்து உலகைக் காப்பதே என்ற சிலுவைத் துறவியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவடி தொடர்வதே இன்றையக் காலத்திற்கு ஏற்றத் துறவறமாகும். திருச்சபை என்னும் மாபெறும் இறைமக்கள் இயக்கத்திற்கு இதயமாய் விளங்குவது துறவறம் ஆகும். இதுவே காலத்தின் சுவடுகளில் நாம் காணும் உண்மை. அடிமை வழக்கம், அரசர் வழிபாடு, நாடு பிடிக்கும் வெறி, பகட்டு வாழ்க்கைமுறை, காலனி ஆதிக்கம் போன்றவை உலக வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் முளைத்த நச்சுக் காளான்கள். இறையாட்சிக்கு எதிரான இத்தகைய இருட்டுக்கொள்கைகள் திருச்சபையின் இயக்கத்தில் தேக்கத்தை ஏற்படுத்;திய போதெல்லாம் சூழலின் தேவைக்கேற்ப புதிய புதிய வடிவம் கொண்ட துறவறம், ஒட்டுமொத்த திருச்சபைக்கும் உண்மையின் பாதையைச் சுட்டிக்காட்டிய சுடரொளியாக விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில், நற்கருணையில் இறைபிரசன்னம், அன்னை மரியாள் இறைவனின் தாய் போன்ற மறை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியற்ற சிலரால் திருச்சபை பிளவுபட்டக் காலத்தில், குழந்தைகளுக்கு மறைக்கல்வி என்னும் கருவியைக் கையிலெடுத்து, திருச்சபைத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தெளிவினை ஏற்படுத்தியவர்தான் எம் இறையன்னை சபை நிறுவனர் புனித ஜான் லியோனார்தியார்.அவரது தனிவரத்திலிருந்து(உhயசளைஅ) அணுவளவும் பிறளாது சூழலின் தேவைக்கேற்ப மாற்றுப் பணிகளைச் செயல்படுத்தி இறையாட்சிக்குச் சான்று பகரும் எம் சபையின் இயக்க ஓட்டத்தில் இன்று இவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ளவிருக்கிறார்கள். முதல் அர்ப்பணத்தில் இவர்கள் உச்சரித்த கற்பு, ஏழ்மை, கிழ்படிதல் என்ற வார்த்தைப்பாடுகள் இன்று முதல் இவர்களின் வாழ்க்கைப்பாடாக மாறவிருக்கின்றன. இயேசுவின் பாதச் சுவடுகளை மற்ற யாவரைக் காட்டிலும் மிக நெருக்கமாய் பின்தொடர சிறப்பான முறையில்  அழைக்கப்பட்டிருக்கும் இச்சகோதரர்களுக்கு ஆற்றலளிக்கும் ஊற்றாக இருப்பது இவர்களது ஆழ்ந்த இறையனுபவமும், இவர்களுக்காக இறைமக்களாகிய நாம் ஒப்புக்கொடுக்கும் செபங்களும்தான்.தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்திருப்பலியில் பங்கேற்று நாமும் இறையாசீர் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக