வெள்ளி, 28 ஜனவரி, 2011

தமிழ்-ஆங்கில மன்ற தொடக்கவிழா அறிக்கை (Tamil-English Acdemies inaguration)

அகவையில் மூத்த அழகு தமிழே – வைகைக்கரையில் பாய்ந்த வேங்கைத் தமிழே
செம்மொழியாய் பார்போற்றும் இயங்கு தமிழே
போற்றி! போற்றி! போற்றி!
அவையினர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்!


மதுரையில் முடிந்து போன முச்சங்கங்களின் தொடர்ச்சியாய், மலைக்கோட்டை மாநகர், திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியின் 2010-2011 ம் கல்வியாண்டின் தமிழ்-ஆங்கில மன்றங்கள் 'சேதெஸ் சேப்பியன்ஸா' அரங்கில் மலர்ந்த நேரம் 19-06-2010, சனிக்கிழமை, காலை 11.30 மணி.

 இரண்டாமாண்டு மாணவர்கள் இசபெல்லா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து, உணர்ந்து பாடிய 'உன்னருகில் நானிருக்கும்...' என்ற இறைவணக்கப் பாடல் நம்மை இறையன்பின் அனுபவத்தில் நெக்குருக வைத்தது.


அன்றலர்ந்த பூவாய் புன்னகைத்து வந்தோரை வரவேற்றார் வைகைக் குழுவின் ஜான்கென்னடி.


 சிறப்பு விருந்தினர், மன்றங்களின் இயக்குனர் தந்தையர்கள் மற்றும் மன்றச்செயலர்கள் குத்துவிளக்கேற்ற, உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்து, விருந்தோம்பல், வீரம், காதல் வளர்த்த தமிழகப் பண்பாட்டின் தொட்டில்கான, காவிரி, அமராவதி, தாமிரபரணி, வைகை, பவானி என்னும் தமிழ் ஆறுகளின் பெயர்களைத் தாங்கிய ஐந்து தமிழ்மன்றக் குழுக்களும் தங்கள் பணியை அன்றேத் தொடங்கினர்.


 நெப்போலியன் தலைமையில் அணிவகுத்த பவானி குழுவினரின் 'தமிழா, தமிழா, நீயும் தலை உயர்த்தடா' என்ற பாடல் நம் செவிகளுக்கு இடப்பட்ட கட்டளை.


 நெஞ்சக்கிடக்கையில் உறைந்து கிடக்கும் இறைமையோடு உறவாட உகந்த மொழி என்று புளங்காகிதப்பட்டது போதும். இனிமேல் செயற்கைகோள்கள் தமிழில் செய்தி அனுப்பட்டும்.. கொடிய நோய்கள் என்றாலும் அவை நல்ல தமிழில் இருக்கட்டும். கணினியில் மென்பொருள்கள் கட்டாயமாகத் தமிழ் கற்றுக்கொள்ளட்டும். மாநாடுகள் போதும்.. இனி செயல்பாடுகள் முன்வரட்டும் என்றத் தன் கருத்தைப் பதிவு செய்தார் சிறப்பு விருந்தினர், 'தூய வளனார் கல்லூரி முதல்வர் பணி.இராசரெத்தினம் சே.ச. அவர்கள். மனித உறவுகளைக் கருத்தில் கொண்டு, அயல் மொழிகளை, குறிப்பாக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதும் சாலச்சிறந்ததே என்று அவர் ஆங்கிலத்தில் பேசியது புதுமை.


 கல்வி, கலை, மொழி, அரசியல் போன்ற சமூக இயக்கத்திற்கு தடையாக இருக்கும் புல்லுருவிகளுக்கு வீச்சரிவாள் வீசியது, தாமிரபரணி குழுவினர், தெக்கத்தி தமிழில் அரங்கேற்றிய வீதி நாடகம்.
 நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை என்பது தம் நெஞ்சை நெருஞ்சி முள்ளாகக் குத்துவதாகவும், பள்ளிக்கல்வியைத் தாய்மொழியிலும், அந்நிய மொழிகளை வேண்டுமானால் அடுத்த ஆறு மாதங்களிலும் கற்றுக்கொள்ளலாம் எனத் தம் யோசனையை முன்வைத்தார் தமிழ்மன்ற இயக்குநர் தந்தை பணி.இ.ரெய்மண்ட் ஜோசப் அவர்கள்.


'வானமறிந்தது அனைத்துமறிந்து வளர்மொழி எம்மொழி என்ற முதலாண்டு மாணவர்களின் குழுப்பாடல், கொன்றை, குவளை, அன்னிச்ச மலர்களைத் தமிழ் நரம்புகளில் பூக்கச்செய்தது.
 தெரிவு செய்தலே வாழ்வு. பின்னர் தொடர்ந்த ஈடுபாடும், அயராத உழைப்பும் நம்மை அறுபது மடங்காகவும், ஏன் அதைவிட அதிகமாகவும் கனிதரச் செய்யும் என தந்தைக்குரிய வாஞ்சையோடு உற்சாகப்படுத்தினார்
ஆங்கில மன்றங்களின் இயக்குனர் பணி.நார்பட் தாமஸ் அவர்கள்.


 மலர்ந்த முகம், குவிந்த கரம், தாழ்ந்த சிரம் என காவிரி குழுவின் எபனேசர், அனைவருக்கும் நன்றி கூறிய பாங்கு நம் நெஞ்சை விட்டு இன்னும் நீங்காமல் நிற்கிறது.


'நாங்கள் தமிழ் மாணவகள்..' என்ற, இதயத்துடிப்பின் தாளகதியில் மன்றப்பண்ணிசைக்க இனிதே நிறைவுற்றது தொடக்கவிழா.
அட.. என எண்ண வைத்த அமராவதி குழுவினரின் நிகழ்ச்சித் தொகுப்பு புதுமையிலும் புதுமை.
'நிலமுட்டை வெடித்து மனிதம் வாய் திறந்த போது அகரமாய் உயிர்த்த ஆதிமகள் தமிழின் ஆழமும், விரிவும் நம் காலத்திலே இன்னும் அகலப்படட்டும்'
நன்றி!
என்றும் தோழமையுடன்,
செயலர்
ம.ஆன்றனி பிரான்சிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக