சனி, 29 ஜனவரி, 2011


மேய்ப்பு பணியில்
இருப்பவர்கள்
மனதளவில்
வறண்ட நிலமாய்
இறையனுபவத்தில்
வெற்றுப்பாத்திரமாய்
இருக்கும் அவலநிலையை
இறைவனிடம் முறையிடும்
ஓர் குழந்தை தொழிலாளரின்
புலம்பல், ஏக்கம், கண்ணீர்
இறையனுபவத்திற்கான
ஆசையை
வேட்கையை
தேடலை
என்னிலே தூண்டிய
என் ஆசிரியப் பெருமக்களுக்கு
இப்பாடல் சமர்ப்பணம்.

 
படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

பொறந்ந மறுநாளே
ஆத்தாள கொன்னுபுட்டேன்
அப்பனோட ஆத்தாதான்
எனையெடுத்து வளத்துபுட்டா

கோபக் கொடுங்காரி
கொலமட்டும் செய்யலியே
எடுத்ததுக்கும் பிடிச்சதுக்கும்
காளியாட்டம் ஆடுறாளே

பச்சப் புள்ளையின்னு
பாவமெல்லாம் பாக்;காம
பழியெல்லா ஏம்மேல
ஏத்திவெச்சு அடிக்கிறாளே!

அப்பனுக்கு எம்மேல
எள்ளளவும் பாசமில்ல
ரெண்டே மாசத்தில
ரெண்டாந்தரக் கல்யாணம்

மின்சார வேலிக்குள்ள
கண்தெரியா மானப்போல
வகைவகையா வாழ்க்கையில
நானும்வந்து மாட்டிக்கிட்டேன்

சித்(தீ)யை பத்திநானும்
சொல்லணுமா ஆண்டவரே
நெருப்புக் கட்டையால
தெனந்தோறும் சூடுவைப்பா

பத்திரமா பள்ளிக்கூடம்
பெத்தமகள அனுப்பிவெச்சு
பாவிமக என்னமட்டும்
அனுப்பிவிட்டா தொழிற்கூடம்

பட்டாசு வெடிச்சதுல
கையிரண்டும் புண்ணாச்சு
மருந்துவெச்சு தேச்சதுல
வெரலு ஒண்ணு விழுந்துபோச்சு

எப்படியும் வாழ்க்கையில
முன்னேறப் போவதில்லை
இப்படியே என்னவந்து
எடுத்துக்கயா ஆண்டவரே

மனுசனாகப் பொறந்தாக்க
நம்பிக்கை வேணுமடா
அய்யனாரு கோயிலுல
பூசாரி சொன்னாரு

மனசில்லா ஒலகத்துல
மனுசனாக நானெதுக்கு
மாடாச்சும் ஆடாச்சும்
மாத்தினாலும் போவுமய்யா

சின்னபுள்ள வெளயாட்டில்
'அழிச்சிலேர்ந்து ஆடினோமே
வாழ்க்கையிலும் அப்படியே
வகை செய்யக்கூடாதா?

சோகமெல்லாம் சொல்லியழ
சுற்றத்திலே யாருமில்லை
தேகமெல்லாம் இளச்சுபுட்டேன்
வேகமாக வாருமய்யா

படைச்ச பெருமானே
எறங்கியிங்கே வாருமய்யா
பரிசுத்த பரம்பொருளே
பாவியெனைப் பாருமய்யா!
 
                    ஏக்கத்துடன் ம.ஆன்றனி பிரான்சிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக