செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கலைக்கப்பட்ட கூடு (Scattered Nest)


நீண்ட நாள்களுக்குப் பிறகு எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது. பேசுவதும், எழுதுவதும் தகவல் பரிமாற்றமே! ஆனால் எழுதும் போது மனதால் பேசுவது போன்ற சுகம் இருக்கின்றது. இது பேச்சால் நிரம்பிய உலகு. கொஞ்சம் அமைதியாக இருப்போமா என்று வாயை இழுத்துக் கட்டிய போது மனமீன் கடந்தக் காலத்திற்குள் நீந்திச் சென்றது. 

மேலே இருக்கும் ஆலயமானது எல்லோருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். ஆனால் இதனோடு தொப்புள் கொடி உறவு கொண்டிருப்போருக்கு இது ஒரு தாயின் படம். இந்த ஆலயம் இப்போது இல்லை. இருந்த எந்தத் தடயமும் இல்லாமல் புதிய ஆலயம் கட்டி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. வெளிநாடுகளில் பெரும்பாலும் அவர்கள் எந்தக் கட்டிடத்தையும் முழுதாக இடித்து புதிதாகக் கட்டுவதில்லை. புதிதாகக் கட்டுவதற்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவு செய்து பராமரிக்கிறார்கள். அதற்கானக் காரணங்கள் எங்கள் ஊரின் பழைய ஆலயத்தின் படத்தைப் பார்க்கும்போதுதான் தெளிவாக விளங்கின.

இந்த ஆலயம் தான் எங்கள் குழந்தைப் பருவத்தின் அனைத்து நினைவுகளையும் தாங்கிநிற்கும் பழைய இரும்புப்பெட்டகம். இங்குதான் நாங்கள் விளையாடியது. இங்குதான் நாங்கள் மறைக்கல்வி பயின்றது. இங்குதான் எங்கள் உறவுகள் பலரின் திருமணம் நடைபெற்றது. இதன் முற்றத்தில் தான் நாங்கள் ஊராக அமர்ந்து விருந்துண்டது. கொடியேற்றியது. விழா நடத்தியது. இன்று ஊரைவிட்டு பிழைப்புக்காக பெரிய பளபளப்பான ஊர்களுக்கு இதன் பிள்ளைகள் சென்று அந்நியப்பட்டு நிற்கும் போது தங்கள் ஊருக்கான ஏக்கம் தொண்டைக்குழியை அடைக்கின்றது. நினைவுச் சிறகுகளில் சென்றாலும் அங்கே கூடுகள் கலைக்கப்பட்டு நெடுநாள்களாகிவிட்டன. எல்லாமும் இல்லாமல் போவதன் வலியை நாம் உணருவதே இல்லையா?

அப்பாமுடுவம் பெரியப்பா (அவரது பெயரா தெரியவில்லை! அப்படித்தான் கூப்பிடுவார்கள்) பெரிய குளத்து இறக்கத்தில் சைக்கிளில் இருந்து விழுந்து கொண்டை நரம்பு முறிந்து மருத்துவர்கள் கைவிட்ட பின் இக்கோவிலின் இடப்பக்கம் இருக்கும் குருசடியில் தான் கட்டிலில் படுக்கவைத்திருந்தார்கள். ஒரு நாள் காலை ஓவென்று அழுத அவரது மனைவியின் குரலில் தான் உறங்கிக் கிடந்த ஊரே முழித்தது. இன்று பெரியப்பாவும் இல்லை. கோவிலும் இல்லை. 

மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், மருத்துவமனை செல்ல வசதியில்லாவதவர்கள் ஆற்றுக்குக் கிழக்கே செல்வதற்கு முன் (கல்லறைத் தோட்டத்தின் இடுபெயர்) அவர்களுக்கு வழங்கப்பட்ட கடைசி இடம் இக்கோவில் முற்றம்தான். எல்லோரும் குணம் அடையாவிட்டாலும் இங்கு எல்லோருக்கும் இடமிருந்தது. நோயாளிகள் என்றில்லை. எங்கள் சிறுவயதில் பாதி ஊர் படுத்து உறங்கிய இடம் இந்தக் கோவில் முற்றம். இரவு ஏழு மணிக்கெல்லாம் பாயையும், ஜமுக்காளத்தையும் (பன்னெடுங்காலத்திற்கு முன்பு போர்வைக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது.) எடுத்துக்கொண்டு குடும்பசகிதமாக செல்வார்கள். குருசடிக்கு அருகில் ஒரு அம்மி கிடக்கும். அம்மைக்கட்டு, தோல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேப்பிலை அறைத்துத் தடவிக்கொள்வதுதான்! மாலை ஆனால் இக்கோவில் குருசடியில் பெண்கள் பேய் ஆடுவார்கள்! படுவேகமாக ஓடி வந்து குட்டிக்கரணம் அடித்து, சுவரில் மோதி, அந்தோணியாரையும், மிக்கேல் சம்மனசையும் 'போல, வால' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்! இன்றும் அந்தப் பெண்கள் இருக்கிறார்கள்! ஆனால் ஏனோ பேயே பிடிப்பதில்லை! பேய்களும், கோவிலும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஊராக ஐ.நா சபை அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி! இப்போது புதிய கோவில்! ஆனால் இப்போது பேய்கள் சாதாரணமாகக் கண்களுக்குத் தெரிவதில்லை!

கோவிலை ஒருநாள் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடித்தார்கள். சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டப்பின் கோபுரம் மட்டும் மிச்சமிருந்தது. ஒரு வெறுமையானக் காட்சி அது. இரும்பு வடத்தால் கோபுரத்தின் கொண்டையில் கட்டி ஜேசிபியால் இழுத்தார்கள். விடாப்பிடியாக அடம்பிடித்தக் கோபுரம் இறுதியாக வீழ்ந்தது. செங்கல் செங்கலாக சிதறியக் காட்சியோடு கோவில் தொடர்பான எல்லா நினைவுகளும் திரும்பிச் செல்லமுடியாதபடி அலைகின்றன! நாம் பிறந்த ஊர் நம் காலத்திலேயே பிறந்து நம் காலத்திற்கு முன்பே மறைந்து இன்னொரு ஊராகிப் போவது நம் ஞாபகங்களை அடைகாக்கும் கூட்டினைக் கலைப்பது போன்றது தானே!

2 கருத்துகள்: