ஞாயிறு, 7 மே, 2017

பாஸ்கா காலம் நான்காம் வாரம் திங்கள் (8-5-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 10:11-18

11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
12 கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல. ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.
13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.
15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.

செபம் :  உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு என்று கூறிய இறைவா! எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தியருளும். உமது விருப்பத்திற்கு எங்கள் வாழ்வை நாங்கள் கையளித்து நன்மையின் பாதையில் நாங்கள் நாட்டம் கொள்வதற்கான அருளைத்தாரும்! பலவீனமான ஆட்டுகுட்டிகளை அன்போடு  உமது தோள்களில் சுமந்து செல்பவரே! நாங்களும் எங்களது பலவீனங்களால் சோர்ந்து போய்விடாமல் உமது அன்பில் நம்பிக்கை கொண்டவர்களாக உமது குரலைக் கேட்டு உமதருகில் திரும்பி வரச் செய்தருளும். எங்கள் சகோதர சகோதரிகளின் பலவீனங்களை நாங்கள் மன்னித்து, அவர்களை உம்மைப் போல அன்பு செய்திட மன ஆற்றலைத் தாரும். எங்கள் நல்ல ஆயனே, இயேசு ஆண்டவரே! எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக