செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஆண்டவரின் அர்ப்பண நாள்

இன்று ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாள்! அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்டோர் அனைவருக்கும் ஒரு மகத்தான நாள். இயேசுவின் பாதச்சுவடுகளில் தங்கள் பாதங்களைப் பதித்து, பிளவுபடா உள்ளத்தோடு, மற்ற எல்லோரையும் விட மிக நெருக்கமாக இயேசுவைப் பின்பற்ற சிறப்பு அழைப்பும், சிறப்பு அருளும் பெற்றிருக்கும் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் திருநாள். இந்த இனிய நாளை முன்னிட்டே நேற்று மாலை எம் இறையன்னை சபையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், பாக்கியராஜ், செபராஜ் என்னும் மூன்று அருட்சகோதரர்கள் கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் இறுதி வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து நற்செய்தியின் மகிழ்ச்சியை வாழ்ந்து காட்ட துணிவோடு முன்வந்திருக்கிறார்கள். தாயாம் திருச்சபையும், திருச்சபையில் நற்செய்தியின் மறுமலர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்த புனித லியோனார்தியாரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட எம் இறையன்னை சபையும் இந்த மூன்று துறவிகளையும் உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இந்நாளையொட்டிய சில நிகழ்வுகள் எழுப்பிய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

உரோமில் எங்கள் சபையின் தலைமையிடத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு மாலை வழிபாடும், இன்று மாலை ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளையுமே மேன்மை தாங்கிய கர்தினால்களே தலைமையேற்று நடத்தினார்கள். இது போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது கிறிஸ்துவின் சகோதரர்கள் என்னும் குழுமத்திலிருந்து சில அருட்தந்தையர்களும், அருட்சகோதரர்களும் வந்து வழிபாட்டில் உதவி செய்வது வழக்கம். அவர்களில் ஒரு அருட்தந்தையின் தலைமையில் வழிபாட்டின் அனைத்து காரியங்களும்; அச்சு பிறழாமல் ஒழுங்கு செய்யப்படும். நல்ல உயரமான, மிடுக்கான தோற்றத்தோடு, முகத்தில் ஒரு துளியும் பதற்றமின்றி, எவ்வளவு பெரிய வழிபாடு என்றாலும் நேர்த்தியாக நடத்திக் கொடுப்பது அவரது தனிச்சிறப்பு. அவரது பெயர் தெரியவில்லை என்பதால் வளர்ந்த மனிதர் என்று பெயர் வைத்துக் கொள்வோம்.

நேற்று மாலையும் அந்த வளர்ந்த மனிதரும், அவரது சீடர்களும் வந்திருந்தனர். வத்திக்கானில் இருப்பதிலேயே மிகவும் அதிகமாக வழிபாட்டு மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று அறியப்படும் புர்க் என்னும் கர்தினாலும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார். எல்லோரும் அவரது கையைப் பிடித்து சிறிது முதுகை வளைத்து முகம் தொடாமல் முத்தம் செய்தனர். அந்த வளர்ந்த மனிதர் முழந்தாள் படியிட்டு கர்தினாலின் மோதிரத்தை முத்தம் செய்தார். பின்னர் தன்னோடு இரண்டு சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கர்தினால் வழிபாட்டு ஆடைகளோடு ஆயத்தம் செய்ய உதவிகள் செய்தார். அனைத்தும் தயாரான போது வளர்ந்தவர் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சரிசெய்யும் வரை திரண்டிருந்த அனைவரும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். துல்லியமாகக் குறித்த நேரத்தில், தன் திருவாய் திறந்து, மிகவும் தெளிவான குரலில் சில அறிவுறுத்தல்களைக் கூறினார். குறிப்பாக வழிபாட்டில் உதவி செய்யும் தனது சீடர்களும், சபையின் அருட்பணியாளர்களும், கர்தினாலும் பலிமேடையை வணங்கிவிட்டு பீடத்தைச் சுற்றியுள்ள இருக்கைகளுக்கும், மற்றவர்கள் பீடத்திற்கு முன்னால் மக்களுக்கான பகுதியில் முதல் வரிசை இருக்கைகளுக்கும் செல்லுமாறு கூறினார்.

வருகைப் பவனி ஆரம்பமாகியது. பலிபீடத்தை வணங்கி அதற்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையின் ஒன்றில் என்னை நிலைநிறுத்திய பிறகுதான் தெரிந்தது எல்லா அருட்பணியாளர்களும் மக்கள் பகுதியின் முதல் வரிசைக்குப் போயிருந்தனர். சீடர்கள், பங்குத்தந்தை, கர்தினால் மற்றும் நான் மட்டுமே மேலே நின்றுகொண்டிருந்தோம். பாடல் நின்று போயிருந்தது. கர்தினால் வளர்ந்த மனிதரின் உத்தரவுக்காக காத்திருந்தார். மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது. வளர்ந்த மனிதர் எனது இந்த அறியாமையால் என்னைக் கடிந்து கீழே அனுப்பிவிடுவாரோ என்று நாணமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. அதற்குள் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார் கர்தினால். 

மேலே இருந்ததால் வளர்ந்த மனிதரின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்துவிடாமலும் பார்த்துக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமல்லவா? சீடர்கள் தங்கள் தலைவரின் கண்ணசைவைக் கூட மிகச் சரியாகப் புரிந்து கொண்டு துல்லியமாக அனைத்து காரியங்களையும் செய்தனர். வழிபாட்டின் எல்லா செயல்பாடுகளையும், வளர்ந்த மனிதர் அருகில் நின்று கவனித்து கொண்டிருந்தார். மரபுகளுக்கு பெயர் போன கர்தினாலே ஒரு கட்டத்தில் வளர்ந்த மனிதரின் கண் மொழிகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொண்டார். மாலை வழிபாட்டில், மரியாவின் புகழ்ச்சி பாடல் நேரத்தின் போது பீடத்தைச் சுற்றிலும் தூபம் போடும் தருணத்தில்தான் அது நிகழ்ந்தது.

கர்தினால் வழக்கமானத் திருப்பலியில் செய்வது போல பீடத்தின் நடுவில் நின்று திருச்சிலுவைக்கு தூபம் போட கையைத் தூக்கவும், பின்னால் கவனித்துகொண்டே நடந்து வந்த வளர்ந்த மனிதர் 'இல்லைஐஐஐ... முன்னே செல்லுங்கள்...இது மாலை வழிபாடுதான்...திருப்பலி அல்ல' என்று சொல்ல, கர்தினால் கைகளை மெதுவாகத் தாழ்த்திக்கொண்டார். அப்படியே சுற்றி என் அருகில் வளர்ந்தவர் வரும்போது வயிற்றைக் கலக்கிவிட்டது. இறங்கி கீழே போ என்று சொல்வார் எனத் தோன்றியது. என் அருகில் நின்றுகொண்டிருந்த சீடர் என்னிடம் மெதுவாக 'தாங்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம்' என்று சொன்னார். வழிபாடு முடிந்ததும் வளர்ந்தவர் கண்ணிலும், என் அருகில் இருந்த சீடரின் கண்ணிலும் படாமல் ஒருவழியாகத் தப்பிவிட்டேன்.

இன்று மாலைத் திருப்பலிக்கும், நேற்று மாலை போலவே கர்தினால் வருகை, அன்பு முத்தம், ஆடைகள் ஆயத்தம், வளர்ந்தவரின் முன் குறிப்பு போன்ற காட்சிகள் அச்சு பிசகாமல் நடந்தேறியது. நேற்றைய அனுபவத்தின் காரணமாக மக்கள் பகுதியின் முன்வரிசையில் வேகவேகமாகச் சென்று இடம்பிடித்து விட்டேன். இலத்தீன் வழிபாட்டு பாடல்களால் ஆலயமே அதிர்ந்தது. ஒரு பாடலை ஒரு ஏழு பேர் சேர்ந்து ஒரே கட்டையில் (சுதி) பாடுவது நம் ஊர் பாடல். அதே பாடலை ஒரு ஏழு பேர் தொடர்ச்சியாக ஏழு வேறு வேறு நேரத்தில் தொடங்கி, வேறு வேறு கட்டைகளில் பாடி ஒரே நேரத்தில் ஒன்றாக (ஒரு வழியாக) முடித்தால் அது இலத்தீன் பாடல். இப்படித்தான் நான் மிகவும் கடினமான இலத்தீன் பாடல்களை மிகவும் எளிமையாக்கி புரிந்துகொண்டுள்ளேன்.

கர்தினால் பீடத்திற்கு பின்னால் ஒரு பத்து அடி இடைவெளியில் இருந்த தனது இருக்கையின் முன் நின்று திருப்பலியைத் தொடங்க, பூசைப் புத்தகத்தை ஒரு சீடர் அவர் வாசிக்குமாறு பிடித்து கொண்டிருந்தார். கர்தினாலின் உயரத்திற்கு அவர் பிடித்த விதம் சரியாகவே இருந்தது. கர்தினால் பிதா, சுதன்... என்று ஆரம்பிக்கவும், சீடர் தன் தலைவரைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியில் சீடர் முழந்தாள் படியிட்டு தன் தலை மேல் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். வளர்ந்தவர் சிறிய சிரிப்போ, சிறிய கோபமோ வெளிக்காட்டாமல் நிமிர்ந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார். 

அவர் மேலே இருந்தாலும் எங்கள் பகுதியையும் கவனித்து, வழிபாட்டை அழகாக்கும் வண்ணம், கீழிறங்கி வந்து முன் வரிசையில் மூன்று பேரும், பின் வரிசையில் மூன்று பேரும் நிற்குமாறு சரிசெய்து விட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டார். அவர் எங்கே நிற்கிறார் என்பதை அவ்வப்போது பார்த்து, நாம் சரியாகத்தான் நிற்கிறோம் என்பதைச் சரிபார்த்துக்கொண்டேன். திடீரென்று அவரைக் காணவில்லை என்றால் மனது மிகவும் பதட்டமாகிவிடுகிறது. திடீரென்று நம்முன் தோன்றி நமது இருத்தலின், அல்லது நிற்றலின் தவறுகளைக் கடிந்து கொள்வாறோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டது. அவர் மீண்டும் மேலே தென்படும் போதுதான் மனது அமைதியானது.

நற்கருணை நேரம் வந்தது. அவரது சீடர்கள் முதல் நபர்களாக பீடத்திற்கு முன் வந்து தயாராக நின்றார்கள். முதல் இரண்டு சீடர்கள் எரியும் மெழுகுத் தண்டுகளையும், பின் நின்றவர் கர்தினாலின் செங்கோலையும் தாங்கி நின்று கொண்டிருந்தனர். கர்தினால் நற்கருணையைத் தருவதற்கு வந்து நின்றதும், வளர்ந்தவரின் கண்ணசைவுக்கேற்ப சீடர்கள் மெழுகுவர்த்திகளை ஓரத்தில் வைத்து விட்டு முழந்தாளில் நின்று செவ்வனே நற்கருணை பெற்று கொண்டனர். செங்கோல் வைத்திருந்த சீடருக்கு செங்கோலைப் பிடித்து கொண்டே முழந்தாளிடவும் முடியவில்லை. தன் தலைவரின் கட்டளையை மீறவும் மனம் ஒப்பவில்லை. மிகவும் தர்மச்சங்கடமாகப் போய்விட்டது. முடிந்தவரை குனிந்துகொண்டே நற்கருணை வாங்கிவிட்டார். கர்தினால் உட்பட, ஒரு இருபது பேரை தனது கண்ணசைவில் ஒழுங்குபடுத்திய அந்த வளர்ந்தவரை வியப்பாகப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

திருப்பலி முடிந்து பீடத்தை வணங்கி வளர்ந்தவரின் அறிவுறுத்தலின் படி பவனியாக மக்கள் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மக்களைப் பார்க்கலாமா? வேண்டாமா? பார்த்தால் சிரிக்கலாமா? தெரிந்தவர்கள் நின்றால் கைகளைச் சிறிதாக அசைத்து அவர்களை நான் பார்த்துவிட்டேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ளலாமா? என்றெல்லாம் தோன்றினாலும் வளர்ந்தவரின் அருகாமை அனைத்தையும் தடை செய்தது. கடைசி வரிசையில் ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்ப்பது மிகவும் எளிதான ஒரு உணர்வைத் தந்தது. அவர் அழுக்கான உடையில் நடுங்கிக் கொண்டே இருந்தார். பக்கத்து இருக்கையில் அவரது உடமைகளைக் கொண்ட ஒரு பொதியை வைத்திருந்தார். அவரது வரிசையில் அவரைத் தவிர வேறு யாருமே இல்லை. சிறிது கூன் விழுந்தவராக பவனியில் வந்து கொண்டிருந்த அருட்பணியாளர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். நான் அவரை நெருங்கிய போது, அவரது முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். நடுக்கத்தில் அவரது தலை ஆடிக்கொண்டேயிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டு விழவா, வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தது. என்னால் அதற்கு மேல் அவரைப் பார்க்க முடியவில்லை. 

திருப்பலி முடிந்து நல்ல உணவு ஏற்பாடாகியிருந்தது. கர்தினால் வழிபாட்டு ஆடைகளைக் களைந்து வருவதற்கு சிறிது தாமதமாகிக்கொண்டிருந்தது. இதனால் எரிச்சலடைந்த என் பக்கத்திலிருந்த ஒருவர், தனது தினசரி கால அட்டவணையில் இவ்வாறு பிழைவிடுவது மிகுந்த கவலையளிப்பதாகக் குறைபட்டுக்கொண்டார். பின்னர் சாப்பிட்டுவிட்டு, குளிருக்கு இதமாக வெப்பமூட்டப்பட்ட எனது அறைக்குள் நுழைந்து, படுக்கையில் விழுந்ததும், அந்த அழுக்கு உடையணிந்த பெரியவரும், நடுங்கிய அவரது முகத்தில், கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அவரது கண்களும் வந்து நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தன. 

சில கேள்விகள்:
1. உனது அர்ப்பணத்தின் நோக்கம் என்ன? 
2. ஆன்மீகம் என்றால் தன்னைக் கடப்பது என்று உனக்குத் தெரியுமா?
3. உன்னைப் பற்றிய நினைவை நீ அகற்றாமல் என் போன்றோரை அன்பு செய்ய இயலும் என்று நினைக்கிறாயா?
4. அன்னைத் தெரசாவை உனக்குத் தெரியுமா? 
5. உங்களது இல்லங்களில் பணியாற்றுபவர்கள் உன் போன்றோரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
6. மனிதர்கள் மாண்புடன் நடத்தப்படாத இடத்தில் நீ யார் பக்கமாக நின்றுகொண்டிருக்கிறாய்?
7. நீதியா? இரக்கமா? என்ற சூழ்நிலையில் நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?
8. உன் சகோதரனை மன்னிக்காமல், உனக்கு மன்னிப்பு உண்டு என்று எப்படி நம்பிக்கொண்டிருக்கிறாய்?

4 கருத்துகள்: