திங்கள், 5 செப்டம்பர், 2016

நீங்கள் வேறுநாட்டில் இருக்கும் போது - சில சிந்தனைகள் -1

எல்லோருக்கும் வணக்கம். எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எழுத்து என்பது ஒரு திறமை என்பதை விட ஒரு பழக்கவழக்கம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் எழுதினால் ஒரு சிறிய காரியத்தைக் கூட அழகாக, கோர்வையயாக மிக எளிதாக எழுதிவிட முடிகிறது. ஆனால் எப்போதாவது எழுதினால் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான காரியத்தைக் கூட மனம் விரும்புவது போல எழுத்தில் கொண்டு வர முடிவதில்லை. இந்த நாட்களில் நிறைய சிந்தனைகள் அவ்வப்போது 'எழுது! எழுது!' என்று தூண்டிய போதும் அமர்ந்து எழுத மனம் ஒன்றாமல் பழக்கப்பட்டக் காரியங்களையே செய்யும்படியாகிவிட்டது. எத்தனை கவித்துவமானத் தருணங்களை இப்படி வீணடித்தேனோ?

கடந்த ஆகஸ்டு மாதம் 26 ஆம் தியதியோடு இத்தாலிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் சபையின் தலைமை இல்லத்தில், எங்கள் சபையின் சக அருட்பணியாளர்களோடு தங்கியிருப்பதால் புதிய சூழ்நிலைக்கேற்றவாறு என்னைத் தகவமைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். சில பழைய நண்பர்கள் நட்பு வட்டத்திலிருந்து விடுபட்டார்கள். மரங்களில் இலைகள் உதிர்வதும், பின்னர் தளிர்ப்பதும் மிகவும் இயல்பாக இருக்கிறது. மனித மனங்களுக்கு மட்டும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் அதற்கு தேவைப்படவில்லை. அதில் வருத்தப்படவும் எதுவுமில்லை. அழகாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் இரு என்று. தண்ணீர் வந்து போனத் தடங்களைக்  கூட அனுமதிப்பதில்லை தாமரை இலைகள். அது தண்ணீரின் பிழையுமில்லை. இலையின் பிழையும் இல்லை. நம் வாழ்வில் எதிர்வரும் எல்லேருக்குமான நியதியும் அதுதான். மலர்வதை மட்டும் மறந்து விட வேண்டாம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் நிறத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டாலும் சில அடிப்படையான காரியங்களில் அச்சு அசலாக ஒரே மாதிரி எதிர்வினையாற்றுகிறார்கள். வேறுபடுத்துபவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பொதுவானப் புள்ளியைப் புரிந்து கொண்டு அந்தத் தளத்தில் உங்களை வைத்துக் கொண்டால் எந்த இடத்திலும், எந்த மனிதர்கள் மத்தியிலும் எளிதாக பழகிவிடலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. இன்பம், துன்பம் இந்த இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது. இவற்றைத் தருவிக்கும் காரணிகள்தான் ஒவ்வொரு சமூகத்தின் அரசியல், பொருளாதராம், பழக்கவழக்கம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. நம் ஊர் பொருளாதாரப் பின்னணியில் ஞாயிற்றுக்  கிழமை சாயங்காலம் வட்டிப்பணம் கட்டவேண்டுமே என்ற கவலை. வளர்ந்த நாடுகளில் சனிக்கிழமை சாயங்காலம் நண்பர்களோடு ஊர்சுற்ற காசு வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் ஒரு கவலையா என்று நாம் நினைப்போம். ஆம்! அவர்களைப் பொறுத்தமட்டில் அது கவலைதான்.

வளர்ந்த நாடுகளுக்கும் நமக்குமான மிக முக்கியமான வித்தியாசமாக நான் பார்ப்பது ஒன்றுதான். இங்கு நீங்கள் எங்கு சென்றாலும் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் தரமாகக் கிடைக்கின்றன. இதில் நகரம், மாநகரம், குக்கிராமம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்கள் யாரையும் நாடாமல் சுயமாக வாழ்வதற்குத் தேவையான ஓய்வூதியமும், நோய்வாய்ப்பட்டால் ஒரு காசு செலவில்லாமல் உயர்தரமான மருத்துவமும் கிடைக்கிறது. ஆயினும் நம்மைப் போலவே அவர்களும் கவலைப்படுகிறார்கள். பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே! பிள்ளைகளின் திருமணம் ஒரு ஆறுமாதம் கூட நிலைக்கவில்லையே! அதிகமாக வெயில் அடிக்கிறதே! அல்லது அதிகமாக குளிர் அடிக்கிறதே என்று கவலைப்படுவதற்கு இவர்களிடமும் நிறைய இருக்கின்றன.

நிறைய காரியங்களில் இந்த மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லாத ஓரளவு சமூக சமநிலையை நாடு முழுவதும் கொண்டு வந்துவிட்டார்கள். மக்களின் உயிர் பாதுகாப்புக்கு எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பார்கள். சாலைகளில் பாதசாரிகள்தான் எஜமானர்கள். மற்றவர்கள் நின்றுதான் செல்ல வேண்டும். ஹார்ன் அடிப்பதில்லை. எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டியிருப்பினும் பொறுமையாக ஒருவர் பின் ஒருவராக செல்வது என்று மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். சாலை விதிகளை மதிப்பதில் நாம் இன்னும் பூஜ்யத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம். சாலை விதிகளை மதிப்பது என்பது சக மனிதர்களை, அவர்களின் விலைமதிப்பற்ற உயிரை, அவர்களின் குடும்பங்களை, பிள்ளைகளை, ஏன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே மதிப்பது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொது இடத்தில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். நாம் நம் வீட்டின் வரவேற்பரையில் எச்சில் கழிப்பதோ, சாப்பாட்டு அறையில் சிறுநீர் கழிப்பதோ, பூஜை அறையில் குப்பை கொட்டுவதோ கிடையாது. ஆனால் பொது இடத்தில் எந்த உறுத்தலுமின்றி அவற்றைச் செய்கிறோம். இவர்கள் பொது இடங்களையும் தங்கள் வீடு போல போலவே பாவிக்கிறார்கள். எந்த கூச்சமுமின்றி ஒருவர் ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். முத்தமிட்டுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் நாம் மிக இயல்பான அன்பின் வெளிப்பாடுகளுக்கு தேவையற்றுக் கூச்சப்பட்டுக் கொள்கிறோம். திரை மறைவான பல அசிங்கங்களைக் கூச்சமின்றிக் கடந்து செல்கிறோம்.

குப்பை மேலாண்மை பற்றி பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் பொது இடங்களைப் பேண வேண்டிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டுக்காரனிடமிருந்து நம் மானத்தையும், டெங்கு, சிக்குன் குனியாக்களிடமிருந்து நம் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். குப்பைகளை முறையாக சேகரித்தல், எடுத்துச் செல்லுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றில் நமது உட்கட்டமைப்பு வசதிகள் எந்த நவீனத்தையும் எட்டவில்லை என்பதும் மிகவும் உண்மை. நாடு முழுவதும் ஐ.டி. துறைகள் வந்து பளபளப்பைக் கூட்டிவிட்டாலும், குப்பை சேகரிக்க இன்னும் துடைப்பமும், தூப்புக்காரியும் தான் என்றால் இதுதான் இந்தியாவின் முகம். 

இங்கே காவலர்கள் உங்களைப் பரிசோதிக்க வேண்டுமென்றாலும் 'தயவுசெய்து உங்கள் அடையாள அட்டையை நான் பார்க்க முடியுமா?' என்று மிகவும் அழகாக கேட்பார்கள். ஏதாவது சான்றிதழ்கள், இலவச சலுகைகள் என்று அரசு அலுவலகங்களுக்குச் சென்றாலும் உங்களுக்கு சிரமம் தந்து விடாமல் எளிதாக காரியத்தை முடித்துவிட மிகுந்த சிரத்தை எடுப்பார்கள். அரிதினும் அரிதாக, ஒருவேளை வாய்ப்பே இல்லாத பட்சத்தில் கூட 'மிகவும் வருந்துகிறோம். குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்து வாருங்கள். உடனே தந்துவிடுகிறோம்' என்று கூறுவார்கள். நம் ஊரில் பத்து ருபாய் விலை பெறாத இலவச வேட்டி, சேலை தருவார்கள். அதைத் தர வேண்டிய அலுவலர் தன் வீட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தருவதைப் போல நடந்து கொள்வதைப் பார்க்கும் போது நாம் யாரை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.

உலகமே பெருமைப்படத்தக்க ஏராளம் விசயங்கள் நம்மிடம் இருக்கின்றன. இப்போது நன்றாக தூக்கம் வருகின்றபடியினால் மீதியை நாளைத் தொடர்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக