வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஒரு உன்னதமான மனிதர். - 1

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது சில சிந்தனைகள் என்று நம் மனதில் பட்ட சில கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருந்த வேளையிலே இன்னொரு காரியம் என்னை எழுதச் சொல்லி அடம்பிடித்துக் கொண்டேயிருக்கிறது. மனதில் பட்ட ஒரு கருத்தை, அடுத்தவரைப் புண்படுத்தும் நோக்கமில்லாத ஒரு மொழியில் அவ்வப்போது நம்மால் வெளியிட முடிந்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்த்துவிடலாம் என்பதால் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலரோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. நாம் நன்றாக, மிகவும் இயல்பாக உணரும்படி ஜாலியாக பேசுவார்கள். இவை நல்லதுதான். ஆனால் பேசு பொருள் என்பது எப்போதும் மேலோட்டமானதாகவே இருக்குமென்றால் அந்தப் பேச்சினால் எந்தப் பயனும் இல்லை. இளையராஜா, தமிழ் சினிமா, கிரிக்கெட், வடிவேல், அரசியல் அல்லது இன்னொரு மூன்றாம் நபர் என்ற வகையாறாக்களிலே நம் பேச்சு நின்றுவிட்டால் அதற்குப் பெயர்தான் வீண்பேச்சு. ஒருவருக்கொருவர் உண்மையாகவே தாங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான சுதந்திரமே உண்மையான உறவினையும், நட்பினையும் வளர்த்தெடுக்கும். 

சிலர் தங்கள் தனிப்பட்டப் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று கொள்கை வைத்திருப்பார்கள். கவலை, பயம், பலவீனம், அவமானம், அந்தரங்கம், குடும்பம் போன்ற உள்ளார்ந்த காரியங்களை எக்காரணம் கொண்டும் யாரிடமும் வெளியிடமாட்டார்கள். இந்த மாதிரியானத் தருணங்கள் அனைத்திற்கும் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். முதல் நாள் 'என்ன ஆச்சு, ஏது ஆச்சு' என்று கேட்ககூட முடியாத படி கடுப்பாக இருப்பார்கள். இரண்டாம் நாள் நாம் அப்படி கேட்டு பதட்டமடைவதை  விரும்புவார்கள். மூன்றாம் நாள் மீண்டும் அதே இளையராஜா, அதே வடிவேல் என்று கலகலப்பாக மாறிவிடுவார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்கு நல்ல அறிமுகம். மிகவும் நல்ல மனிதர். எல்லோராலும் விரும்பப்படுபவர். அவரிடம் எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு குணம் உண்டு. நம் மீது கோபம் என்றால் அந்தக் கோபம் தீரும் வரையிலும் நம்மிடம் பேசுவதைத் தவிர்ப்பார். பார்த்தாலும் அமைதியாகச் சென்று விடுவார். எக்காரணம் கொண்டும் காரணத்தைச் சொல்லமாட்டார். உண்மையிலேயே நம்மீது கோபம் இருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. மேற்கூறிய வேறு எந்தப் பிரச்சனையாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். பிறகு இரண்டு மூன்று நாட்களில் எதுவுமே நடவாதது போல மீண்டும் வடிவேல், இளையராஜா என்று ஆரம்பித்துவிடுவார். இது ஒரு சுழற்சி முறையில் அவ்வப்போது வருடக்கணக்கில் நடந்து வருவதால், இதைப்பற்றி நானும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. 

இன்னொரு வாடிக்கையான விசயம் என்னவென்றால் அவ்வப்போது நாங்கள் ஏதாவது ஒரு வெட்டியானக் கருத்தைப் பற்றி காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதக்களம் யுத்தக் களம் போல இருக்கும். கருத்து எங்கள் ஊர் அழகா? உங்கள் ஊர் அழகா? பழைய படம் நல்லதா? புதிய படம் நல்லதா? என்ற வகையில் மிகவும் மொக்கையாக இருக்கும். காரசாரத்தின் உச்சியில் கோபதாபங்களும் வரும். பிறகு அதே மௌனப் புரட்சி. மூன்றாம் நாள் மீண்டும் இளையராஜா, அல்லது வடிவேல். இருந்தாலும் மிகவும் நல்ல கரிசனையான மனிதர். நம்மிடம் மட்டுமில்லாது நமது நண்பர்கள் யார் வந்தாலும்  உபசரிப்பிற்குப் பஞ்சமே இருக்காது. என்ன ஏதென்று சொல்லாமல், பேசாமல் இருந்து நம்மைக் கடுப்பேற்றும் இரண்டு நாட்களைத் தவிர்த்துப்  பார்த்தால் ஒரு உன்னதமான மனிதர்.

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த இரண்டு நாள் மெளனம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் வரை. அதற்கு பின்னர் தற்செயலான ஒரு சந்திப்பில் வழக்கமான வடிவேல், இளையராஜா கதைகளைத் தொடர்ந்து, கேட்க வேண்டமென்ற எனது முடிவை மீறி கேட்டுவிட்டேன். " என்ன இளவுதான் நடந்துச்சு உங்களுக்கு? இரண்டு வருஷமா உயிரை வாங்குறீங்களே!" என்று கத்தினேன். அவர் குழைந்து குழைந்து சொன்ன விசயம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது! மனித வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறலாம் தான். ஆனால் நாம் உயர்வாக நினைத்த ஒரு நட்பு இப்படி பரிதாபமாக முடிவுக்கு வரும் என்று என் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை!

இந்தக் கதை என்ன ஆனது என்பதை நாளைக்கு எழுதுகிறேன். மிகவும் நேரமாகிவிட்டது. எல்லோருக்கும் குட்நைட்.




16-9-2016, 5:6 AM

உன்னதமான மனிதர் 2

ஒரு தனிப்பதிவாக எழுதுவதற்கு இன்னும் நிறைய இருந்தாலும், முடிந்து போன ஒன்றிற்கு முற்றுப்புள்ளி ஒன்றுதான் சரியான முடிவுரை என்பதாலும், இன்னும் சில இங்கிதங்கள் கருதியும் உன்னதமான மனிதரின் இரண்டாம் பகுதியை எழுத மனம் விரும்பவில்லை. சொல்ல வந்த கருத்து இதுதான். உங்கள் மனதில் ஒருவர் மேல் கோபம் இருந்தால் உடனடியாக சொல்லிவிடுவது நல்லது. ஒரு வேளை உங்கள் கோபம் தவறான தகவல்களிலிருந்து வந்திருந்தால் நீங்கள் விளக்கம் பெற்றுக்கொள்ளக் கூடும். அல்லது உங்கள் கோபத்தில் அர்த்தமிருந்தால் அடுத்த நபர் தன்னைத் திருத்திக்கொள்ளக் கூடும். இந்த உடன்பாட்டிற்கு உடன்வராத உறவு எல்லாவிதமான நியாயங்களையும் இழந்து விடுகிறது. இதற்கு மாறாக கூரானக் கத்தியை கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு அலைவது மிகவும் ஆபத்தானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக