அறிவியல் - பெயரிலேயே இருக்கின்றது. அனைத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும். இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் எல்லா கேள்விகளுக்கும் விடை காணும். எல்லா நோய்களுக்கும் மருந்து தரும். முதுமையின் போதாமை களையும். மரணம் தவிர்க்கும். அல்லது குறைந்தபட்சம் தள்ளிப்போடும்.
ஒரு பெரிய குளம். அதில் ஒரு மணி நேரத்தில் ஒரு பூ பூக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அது இரண்டு பூவாகிறது. பின்னர் ஒரு மணி நேரத்தில் அது நான்கு ஆகிறது. இப்படியே ஆறு மாதத்தில் பாதி குளம் பூக்களால் நிரம்பி விடுகிறது. முழுக்குளமும் பூவாக இன்னும் ஆறுமாதம் தேவைப்படாது தானே? அடுத்த ஒரு மணி நேரத்தில் முழுக்கிணறும் பூவாகப் போகிறது. அந்த ஒரு மணிநேரம் மிகவும் அற்புதமானது.
அப்படிப்பட்ட ஒரு மணி நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை மனிதக் குலம் இலட்சம் ஆண்டுகளில் கண்டடைந்த எல்லாவற்றையும் விட இந்த இருபது ஆண்டுகளில் எட்டியிருக்கும் தூரம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இணையம் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் நடப்பதைக் காணும் ஒரு மகத்தான யுகத்தில் நாமும் இருக்கிறோம்.
வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து, காணாமல் போன மாட்டைக் கண்டுபிடித்துத் தரும் மந்திரக்காரர்கள் இன்னும் எங்கள் ஊர்ப்பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களது பேரப்பிள்ளைகள் ஸ்பேஸ் எக்ஸ்-இன் 5000 மெட்ரிக் டன் எடைகொண்ட 120 மீட்டர் உயர ராக்கெட், விண்கலத்தை ஏவிவிட்டு பத்திரமாகத் திரும்பிவருவதைத் தங்கள் ஆண்ட்ராய்டு திறன்பேசியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு தலைமுறைகளையும் நாம் சார்ந்திருக்கிறோம்.
அப்படியென்றால் ஆன்மீகம் என்னவாகும்? கடவுள் என்ன ஆவார்? ஒரு வேளை மரணிக்கா வாழ்வு அமைந்தால் மனிதன் மகிழ்ச்சி அடைந்து விடுவானா? வாழ்வின் அர்த்தம் தான் என்ன? இது போன்ற கேள்விகள் நிறைய பேரிடம் எழுவதைக் காண முடிகிறது. பெரிய வரலாற்று மாற்றங்கள் ஏதுமில்லாத காலத்திலேயே இத்தகையக் கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
அறிவியல் வளர்ச்சி ஏதுமில்லாத இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றங்கள் இயற்கையாக அமைந்தன. புறச் சூழலுக்கேற்றவாறு உயிரினங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய கால அவகாசம் இருந்தது. அவற்றின் மரபணுக்களிலேயே சில பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றைத்தான் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.
ஆனால் மனிதன் நெருப்பை, சக்கரத்தை, சட்டத்தை, வேளாண்மையை, வியபாரத்தை கண்டடைந்த வேகம் அவனது அகத்தின் ஆழத்தில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்குப் போதுமான கால அவகாசத்தைத் தரவில்லை. அந்த மரபணுவிற்கு இந்த உலகம் புதிது. இணையம் புதிது. ஏ.ஐ புதிது.
பிறந்தக் குழந்தை மறுகணமே தாயிடம் பாலருந்தும் ஞாபகத்தை தன் மரபணுவிலேயே சுமந்து கொண்டு வருகிறது. அது மட்டுமா? ஆதாம், ஏவாளிடம் இருந்த விலக்கப்பட்டக் கனிகளுக்கான வேட்கையையும் சுமந்துகொண்டே வருகிறது. காயின், ஆபேலிடம் இருந்த வெறுப்பையும் சுமந்துகொண்டே வருகிறது. சவுல், தாவீதிடம் இருந்த பொறாமை உணர்வையும் கொண்டிருக்கிறது.
அவனது மனம் ஏதேன் தோட்டத்திற்கு வெளியே எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்த தனிமையும், பிரிவும், புறக்கணிக்கப்பும், கையறு நிலையும், மரணபயமும் மனிதனை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
இவற்றையெல்லாம் நீக்கி மீண்டும் மனிதனை ஏதேன் தோட்டத்திற்குள் கொண்டு செல்ல சாத்தியக் கூறுகள் இருப்பதாக அறிவியல் கட்டியம் கூறுகிறது. உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் அளிக்கின்றன. ஆயினும் பெரும்பாலான மனிதர்கள் இவைகளை நம்புவதை விட, கடவுளை நம்புவதே மேல் என்னும் நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள்.
அந்தக் கடவுள் நம்பிக்கையில் மனிதர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். தாங்கள் தனிமையில் இல்லை. கடவுள் எப்போதும் உடனிருக்கிறார். மரணம் முடிவு அல்ல. முடிவில்லா காலத்திற்கானத் தொடக்கம். இறந்து போனவர்கள் இறைவன் தரும் அமைதியில் இளைப்பாறுகிறார்கள் என்பது போன்றக் கருத்துக்கள் இழப்புகளையும், வலிகளையும் எதிர்கொள்ள உதவியாக இருக்கின்றன.
ஒருவர் நம்பலாம். நம்பாமல் இருக்கலாம். அது ஒருவரின் தனிப்பட்டத் தேர்வு. என்னிடம் இப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போது, நான் ஏன் நம்பிக்கையின்மையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெறுமைக்குள் விழ வேண்டும். எதுவுமின்மைக்குள் நான் எதைக் கண்டடையப் போகிறேன். ஆகவே நான் நம்புகிறேன். ஆதனால் இருக்கிறேன். அது மட்டுமல்ல. அதனால்தான் இருக்க விரும்புகிறேன்.
கடவுளின் அன்பை சிந்திக்கும் போது, எனக்கு கீழ் வரும் விவிலிய வார்த்தைகள் சடசடவென நினைவுக்கு வருகின்றன. வாசித்துப் பாருங்களேன்.
தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். உன்னைக் காக்கும் கடவுள் உறங்குவதும் இல்லை. கண் அயர்வதும் இல்லை. உன் பெயரை என் வலக்கரத்தில் பொறித்து வைத்திருக்கிறேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது. என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
இதுபோன்ற ஆயிரம் வார்த்தைகள் எனது அகத்தின் ஆழத்தில், அன்பின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகின்றன. அறிவியலுக்காகவும், அரசியலுக்காகவும் என் அகத்தில் இருக்கும் கடவுள் தேடலை நான் கைவிடப்போவதில்லை. கல் எனக் கண்டால் கல். கடவுள் எனக் கண்டால் கடவுள். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதால் நான் கடவுளைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் நம்பிக்கையைத் தேரந்தெடுக்கிறேன்.