'ஹாய் மாலினி, ஐ எம் கிருஸ்ணன், நா இத சொல்லியே ஆகணும், நீ அவ்ளோ அழகு, இங்க வேற யாரும் இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டாங்க. அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ' என்ற வாரணம் ஆயிரம் திரைப்பட வசனம் மிகவும் பிரபலம். தேக்கி வைத்தக் காதலைக் கவிழ்த்துக் கொட்டிவிடத் துடிக்கும் இளம் மனம் அருமையாக வெளிப்படும் வசனம்.
இன்று நானும் அப்படி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும் என்று உணர்கிறேன். நான் துறவியாக பயிற்சி பெற வீட்டை விட்டு வெளியேறும் போது எனது வயது பதினேழு. 25 வயது நிறைந்த பொழுதில் பயிற்சி நிறைவுற்று அருட்பணியாளர் ஆனேன். இப்போது 37 வயது ஆகிறது. இந்த இருபது ஆண்டுகளில் என்னை நேர்மறையாக பாதித்த ஆளுமைகள் யார் யாரென்று யோசித்துப் பார்த்தால் எனக்கே மிகவும் வினோதமாக இருக்கின்றது.
நான் அறிந்த வரையில் என் முதல் முன் மாதிரி ஆன்மீகவாதி என்றால் அது காந்தியடிகள் தான். ஆவர் புறவுலகில் ஒரு பேராளுமை மிக்க மக்கள் தலைவராக இருந்தார். நாடு முழுவதும் பயணித்தார். உலக தலைவர்கள் முதல், உள்ளூர் விவசாயிகள் வரை அனைவரோடும் பழகினார். களைப்பறியாமல் உழைத்தார். செயல்பட்டுக்கொண்டே இருந்தார். ஆயினும் தனக்குள் ஒரு ஆன்மீகத்தை அன்றாடம் பேணினார். அவருக்கு புகழ்மிக்க அந்தப் புறவுலகைவிட, அந்த அகவுலகம் மிகவும் முக்கியமானதாகப் பட்டது. ஆதில் அவர் ஒரு வெளிப்படைத் தன்மையைப் பேணினார். பொது வாழ்வில் எல்லாம் அப்பட்டமாக இருக்க வேண்டும் என்று கருதினார். சுட்டாலும், எரித்தாலும் உண்மையின் ஒளியைக் கைவிடாத மகத்தான மனிதர் என்ற வகையில் அவர் ஒரு எட்டாக் கனியாக என்னைக் கவர்கிறார். மிக எளிய முறையில் கூட உங்களால் இந்த உலகை அசைத்துப் பார்க்க முடியும் என்ற அவரது மேற்கோள் மிகவும் பிடிக்கும்.
அடுத்ததாக நான் வியந்த, வியக்கும் பெரிய ஆளுமை கலைஞர் தான். கடவுள், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கையில்லாத, அந்தச் சமாச்சாரங்களை அவருக்கே உரிய நக்கல் சிரிப்போடு கடந்து செல்பவராகவும், கலாய்ப்பவராகவும் எனக்குத் தோன்றுகிறார். கலைஞர் எனக்கு வெறும் பிடித்த தலைவர் மட்டுமல்ல. நிச்சயமாக அது வேறு ஏதோவொன்று. ஒரு பெருங்காதல் போல அவரை நினைத்துக்கொள்கிறேன். காந்தியும், கலைஞரும் ஆன்மீகம், அரசியல், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் இரு வேறு துருவங்கள் என்றாலும், இருவருமே பொதுவாழ்வில் உச்சம் தொட்டவர்கள் என்பதே என்னைக் காந்திக்கு அடுத்ததாக (இணையாக அல்லது சில வேளைகளில் அதற்கும் மேலாக) கலைஞரைக் கருத வைக்கின்றது. உச்சம் என்று நான் கருதுவது அடைந்த பதவிகள் அல்ல. அதை எத்தனையே பொய்யான மனிதர்களும் அடைந்துவிடுகிறார்களே! ஆனால் அந்தப் பதவிகளை வைத்து எளிய மனிதர்கள் எழுந்து நடக்க, பெருங்கருணை மிக்கத் திட்டங்களைச் செயல்படுத்தினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலவாரியம், (கண்ணியம் மிக்க அந்த வார்த்தைகளை வடிவமைத்தவர் கலைஞரே), போக்குவரத்துக் கழகம், சமத்துவபுரம், உழவர் சந்தை என்று எத்தனையோ எத்தனையோ திட்டங்கள். கலைஞர் என்ற பேராளுமை சமரசங்களும் கொண்டவர்தான் என்றாலும் நிச்சயம் சாதாரண ஆள் இல்லை. தொட்டத் துறைகள் அனைத்திலும் உச்சம் கண்டவர் என்பதால் அவரைப் பற்றியக் கதையாடல்கள் இன்னும் நூற்றாண்டுகளுக்கு நின்று ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதால் அவரைத் தீவிரமாக வெறுப்பவர்கள், முற்றிலும் நிராகரிக்க முயல்பவர்கள் எரிச்சலில் உழன்றுகொண்டுதான் இருக்கவேண்டும்.
இப்பேராளுமைகள் தவிர்த்து இன்னும் நாம் கடந்து வந்துள்ள பயணத்தில் வியக்க வைக்கும் ஆளுமைகளாக ஒருசிலரைக் குறிப்பிடலாம். சுமகால எழுத்தாளர்கள் மனுஷ்ய புத்திரன், ப. ராகவன், சரவண கார்த்திக்கேயன், அண்ணன் ராஜராஜன் (திராவிட செயல்பாட்டாளர், சுயமுன்னேற்ற ஊக்குவிப்பாளர்) போன்ற ஒருசிலரைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மனுஸ்யபுத்திரன் அவர்களின் நீராலானது கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்தமானது. புலரியின் முத்தங்கள் படித்திருக்கிறேன். மேலும் அடைமழையென அவர் பொழியும் கவிதை மழைக்காகவே முகநூல் பக்கம் வந்து செல்கிறேன். ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளையும் அவர் கவிதை மொழியில், உணர்வு மொழியில் வாசித்து நெக்குருக நிற்க பிடிக்கும். அவருக்கு கலைஞரைப் பிடிக்கும். விடாப்பிடியாக இந்த அழுக்கு உலகை கவிதைச் சமர் செய்து அழகுபடுத்தும் அவரது பிடிவாதம் பிடிக்கும். 'செம்ம ஆள் சார் நீங்க' என்று அவரைப் பார்த்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
அடுத்ததாக இன்று இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்த ஆச்சர்யப்படுத்தும் ஆளுமை எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள். அவரது பதினான்கு புத்தகங்கள் என் கிண்டில் நூலகத்தில் இருக்கின்றன. கடைசியாக முழுமையாகப் படித்து உட்கிரகித்த புத்தகம் மணிப்பூர் கலவரம். அதன் பிறகுதான் ஜெயமோகன் அவர்களின் கன்னி நிலம் படித்தேன். கன்னி நிலம் உண்மையை புனைவாகப் படைத்தது. மணிப்பூர் கலவரம் இன்றைய நிலவரத்தை வரலாற்று பார்வையில் ஆராய்ந்து. தகிக்கும் உண்மையின் தராசு சரியாது சொல்லியது.
எழுத்தைக் கடந்தும் இம்மனிதர் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளின் கட்டுமஸ்தான, உருண்டு திரண்ட வடிவம் தான் இவர். நேரம் தவறாமை, சொன்ன சொல் தவறாமை, தொடங்கிய காரியத்தை முடித்தே தீருதல், அனைத்திலும் முழுக் கவனம், பிழையின்மை, பிசிறின்மை, போன்றவற்றை வாழ முடியும் என்பதற்கு முன்மாதிரியாக திகழும் அற்புதமான கர்ம யோகி. சாக்கு போக்குகளும், சமரசங்களும் இன்றி வாழும் ஒரு 'பெர்ஃபெக்ட் ஆன ஆள்' என்பதால் விளையாட்டுத்தனங்களுக்கு இடம் கொடாது கண்டிப்பான ஆசிரியருக்குரிய மரியாதையோடு இவரைப் பிடிக்கும்.
அவரது வாட்சப் சானலில் சமீபத்தில் அவர் எழுதிய ஜந்து நாவல் மற்றும் ஜென் கொலை வழக்கு தொடர்களை அன்றாடம் வாசித்தேன். எனக்குள் இருந்த புனைவு வாசகனை எங்குதான் தொலைத்தேன் என்று தெரியவில்லை. என்னால் வாசிக்க முடிந்ததே தவிர இன்னும் சிறுவயதில் என்னிடம் இருந்த வாசிப்பின்பத்தை இப்போது அனுபவிக்க முடியவில்லை. வாசிப்பிற்குப் பிறகு என்னில் எந்த தடத்தையும் விட்டுச் செல்லாது சென்றுவிட்ட உணர்வு.
இப்படிப்பட்ட தருணத்தில் 'என்னிடம் நீங்கள் கேட்க நினைக்கும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்... என் ஆர்வங்கள் அலையும் எது சார்ந்து நீங்கள் கேட்டாலும் நேர்மையாக பதில் சொல்வேன்.' என்று தனது மின்னஞ்சல் முகவரியும் கொடுத்திருந்தார். பார்த்த உடனே ஒரு கேள்வியை அனுப்பிவிட்டேன். கொஞ்சம் யோசித்திருந்தாலும் தயங்கியிருப்பேன். காலையில் தற்செயலாக வாட்சப் சானலைத் திறந்தால் எனது கேள்வியும் அதற்கானப் பதிலும் பிரசுரமாகியிருந்தது. ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். எத்தனைப் பணிகளுக்கு மத்தியில் இந்த மனிதர் நமக்காக நேரத்ததை தந்திருக்கிறார். யாரோவான எனக்கு அனுப்பிய இந்தப் பதிலைத்தான், அமெரிக்க அதிபர் கேள்வி கேட்டிருந்தாலும் தந்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பதில். ஜோடனைகள் இல்லாத இந்த செயல் நேர்த்தியை வியக்கிறேன். மகத்தான ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம், நன்றி மற்றும் அன்பு.
கேள்வி: தங்கள் அ-புனைவு புத்தகங்கள் மிகவும் எளிதாகவும், ஆர்வமூட்டும் நடையிலும் இருப்பதாக உணர்கிறேன். ஆனால் படிக்கத் தொடங்கிய யதி முடிக்க முடியவில்லை. ஜந்து அன்றாடம் படித்தும் மனதில் பதியவில்லை. அல்லது புரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? ஆன்றனி பிரான்சிஸ், ரோம்
பதில்: புரிந்துகொள்ளக் கடினமான விவகாரங்களைப் பாமர வாசகர்களும் உணர்ந்து தெளிய வேண்டும் என்பதே நான் எழுதும் சர்வதேச அரசியல் நூல்களின் அடிப்படை நோக்கம். தமிழில் அந்த இயலைத் தொட்டுத் துலக்க அதிகம் பேர் இல்லை. அதனாலேயே தமிழ் வாசகர்கள் உலக நடப்பு அறியாமல் இருக்கக் கூடாதல்லவா?
தவிர, non-fiction எழுதும்போது நான் ஒரு பத்திரிகையாளனாக மட்டுமே செயல்பட நினைப்பேன். சரியான தகவல்கள் - ஆதாரபூர்வமான தகவல்கள் - எளிய மொழி - நேரடியான வெளிப்பாடு. இவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அப்படித்தான் செய்ய வேண்டும்; அதுதான் அதற்கான ஒழுக்கம்.
ஆனால் நாவல் என்கிற கலை வடிவம் வேறு. கருத்து சொல்வது அதன் வேலையல்ல. கதை சொல்வதும் அதன் நோக்கமல்ல. வாழ்க்கை எனக்கு அளித்த சில சந்தர்ப்பங்கள், அனுபவங்களை விலகி நின்று பரிசீலித்து, மதிப்பிடப் பார்க்கிறேன். முடிவே இல்லாத எனது குழப்பங்களையும் வினாக்களையும் அப்பட்டமாக எடுத்து வைத்து விடை தேடிச் செல்கிறேன். உண்மையும் பொய்யும் யதார்த்தமும் கனவும் நறுமணமும் துர்நாற்றமும் உக்கிரமும் மென்மையும் அழகும் அருவருப்பும் கண்ணீரும் புன்னகையும் கலந்து துலங்குகிற வாழ்வனுபவங்களை அப்படி அப்படியே - அதே விதமாகத்தானே எடுத்து வைக்க முடியும்? சிறிது மிகை புகுந்தாலும் அது அலங்கோலமாகிவிடும். எனவே எழுதப்படும் பொருளுக்கேற்பப் புனைவின் மொழி உருமாற்றம் கொள்கிறது.
முறுக்குப் பிழியும் அச்சு போல ஒரு மொழிநடையை உருவாக்கி வைத்துக்கொண்டு, ஏதாவதொரு கதையை உருவாக்கி அதில் போட்டுப் பிழிந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளுக்கு அது உதவும். நாவல் வேறு வகை. அதை அப்படிச் செய்ய முடியாது. கூடாது. என்னுடைய ஒரு நாவலே இன்னொன்றைப் போல இராது. நாவலின் கருப் பொருளுக்கேற்ப மொழி தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். உத்திகளைக் கூடத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதில்லை. அந்தந்த நாவல், தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும்.
உதாரணத்துக்கு, நீங்கள் படித்த ஜந்துவை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வோர் அத்தியாயமும் தன்னளவில் ஒரு சிறுகதையைப் போன்ற நிறைவினைக் கொள்கிறது. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வாரப் பத்திரிகை அலுவலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விலகி நின்று சுட்டிக்காட்டுகிறதல்லவா?
இது திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. பணியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் சிக்கலில்லாமல் கழிந்தால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வோர் ஊழியரும் அன்றைய பொழுது நிறைவாகக் கழிந்ததாக நினைக்கிறார்கள். ஒரு முழுமையை ஒரு நாளைக்குள் தரிசித்துவிட்ட நிம்மதியுடன் மறுநாள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். ஆனால் இறுதிவரை யுத்தம்தான். அதில் சந்தேகமில்லை. அன்றன்றைய நாளின் நிறைவும் அடுத்த நாள் பற்றிய பதற்றமும் இறுதிவரை தொடரும் அமைப்பை வேறெப்படி வெளிப்படுத்த இயலும்?
தவிர அது ஒரு நபரின் கதையல்ல. ஒரு நிறுவனத்தின் கதையும் அல்ல. பத்திரிகை படிக்கும் வாசகர்களுக்கு அதன் பின்னால் இருந்து இயங்கும் ஒரு சாராரின் அன்றாடங்களை, அதன் அவலங்களை, நிச்சயமின்மையை, வலிகளை, வேதனைகளைத் துலக்கிக் காட்டுவதன் வாயிலாக என் அனுபவங்கள் எனக்குப் பயிற்றுவித்தவற்றை மீள எடுத்துப் பார்த்து மதிப்பீடு செய்துவிட்டுக் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்.
கட்டுரை நூல்களைப் படிப்பது போல நாவல் படிக்கக் கூடாது. நாமறியாத ஒரு புதிய உலகம், புதிய வாழ்க்கை - அது நமது வாழ்வோடு எந்தப் புள்ளியில் ஒன்றிணைகிறது என்கிற ஆர்வமே ஒரு வாசகரை நாவல்களுக்குள் வாழ வைக்கும்.
விடாமல் படித்துக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒருநாள் அதன் வாசல் உங்களுக்குத் திறந்தே தீரும். அப்போது அகப்படும் தரிசனம் மகத்தானதாக இருக்கும். வாழ்த்துகள்.