திங்கள், 23 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை -2 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -2 )

கடந்த கட்டுரையில் பார்த்தது போல தனிமைக்கு முதன்மைக் காரணம் சரியாக ஏற்றுக்கொள்ளப்படாத வாழ்க்கை மாற்றமே ஆகும். பவுல் தன் வாழ்வின் கடைசி மாற்றத்தின் காலத்தில் இருந்தார். அவருடைய காலம் நீரோ மன்னனின் கையிலோ, வயது முதிர்ச்சியிலோ அல்லது நோயிலோ முடிவுற போகிறது என்பதை உணர்ந்த பவுல், தனிமையை அனுபவிக்கிறார். 'ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கின்றேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்.' (2திமோ 4:7). 

2. பிரிவு

இரண்டாவது காரணம் பிரிவு. நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தொழில் காரணமாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலையாலோ பிரிந்திருக்க வேண்டிய நேரத்தில் தனிமை உணர்வு ஏற்படுவது இயல்பே. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' என்ற பாடலை வெளியூரிலிருந்து கேட்டால் தனி இன்பம் தான். மனிதர்கள் நலமோடு வாழ மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். உறவுகளோடு உறவாடுவதும், நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அத்தியாவசியத் தேவைகளே! 

பவுல் சிறையிலிருந்து எழுதுகிறார், 'விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்' (2திமோ 4:9). பவுல் ஒரு மக்கள் விரும்பி. எப்போதும் அவரோடு நண்பர்கள் இருந்தனர். அவரோடு பயணித்தனர். திருத்தூதுப் பயணத்தில் அவர் தனியாக எங்கும் சென்றதே இல்லை. செல்லுமிடமெல்லாம் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர். ஆனால் வாழ்வின் கடைசி காலத்தில் அவரோடு யாருமில்லை. இன்று போல 'சாப்பாட்டுக் குழு', 'லவ்லி ஃப்ரெண்டஸ்', 'பாசக்காரங்க' போன்ற வாட்ஸ்அப் குழுக்களுக்கான வசதிகளும் இல்லை. 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும், நூல்களையும், குறிப்பாக தோற்சுருளையும் எடுத்துவா' (2திமோ 4:13). 'குளிர் காலத்திற்கு முன் வர முழு முயற்சி செய்' . (2திமோ 4:13). பவுலின் இதயம் உயிர்த்த இயேசுவை அறிவிப்பதற்காகவே துடித்தது. அந்த இதயம் உணர்ந்த கனத்த தனிமையை இவ்வரிகள் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. தனிமையைச் சூடேற்றும் குளிர்காலம், அதைத் தணிக்கத் தடித்த போர்வை, கால அட்டவணைக்குட்படாத தூக்கம், அவ்வப்போது புத்தகம் படிப்பது, அறையின் மேல் விட்டத்தை வெறித்துப் பார்ப்பது, பிரிவு தருகின்ற தனிமையின் அங்க அடையாளங்கள். 

'விரைவில் வர முழு முயற்சி செய்' என்ற வார்த்தைகள் வெறும் அழைப்பு மட்டுமல்ல. அது ஒரு ஏக்கம். நீ வரும் வரை நான் இருப்பேனா என்றே தெரியவில்லை. சீக்கிரம் வா! உன்னைப் பார்க்க வேண்டும் என்ற இந்த ஏக்கம் இன்றும் நம்மில் எதிரொலிக்கிறது. வெளிநாடுகளில் வேலை செய்யும் பிள்ளைகளுடைய தாய், தகப்பனின் இந்த ஏக்கம், அந்திநேர அலைப்பேசி அழைப்புகளில் எதிரொலிக்கிறது. நம்மை விரும்பும் யாரிடமாவது நீண்ட நாள்களாக தொடர்பே இல்லாமல் இருக்கிறோமா? ஒரு சிறிய பாராட்டைத் தருவதற்கும் தாமதிக்கிறோமா? விரைவாக செய்துவிடுவோம். அந்த நபரோ அல்லது நாமோ நிரந்தரமானத் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் செல்வதற்கு முன்.

3. புரிதலின்மை

உறவுகளிடையே சரியான புரிதலின்மையும் தனிமைக்குத் தீனி போடும் இன்னொரு காரணியாம். உங்கள் திறமைக்கு ஒரு சவால் என்று தோழி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி. H0W 0UR M1ND C4N D0 AM4Z1NG 7H1NG5 என்று தொடங்கி ஒரு ஏழெட்டு வரிகளுக்குச் செல்கிறது அந்த குறுஞ்செய்தி. சந்தேகத்திற்கிடமின்றி உங்களால் இந்த ஆங்கில வரியை வாசிக்க முடிகிறது தானே. இது தான் நமது மூளையின் வலிமை. கறாரான ஆங்கில ஆசிரியரின் பார்வையில் நிறைய எழுத்துப் பிழைகள் இவ்வரியில் இருப்பினும், நம்மால் இதைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இந்த வார்த்தைகள் நமக்குப் பழக்கப்பட்டவை. இப்படி இருந்தால் இது இந்த வார்த்தைதான் என்ற முன் முடிவிற்குச் சென்றுவிடுகிறது நமது அறிவு. இது மிகவும் பயனுள்ள ஒரு செயல்பாடாக இருந்தாலும், எப்படி எழுத்துப் பிழையுள்ள தவறை, மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அது போலவே மிகச் சரியான ஒன்றை, தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. நமது சமூக உரையாடல்களில் அடிக்கடி நிகழும் புரிதலின்மைக்குக் காரணம் நமது பழக்கப்பட்ட பார்வைகளும், அதனால் தானாக நிகழும் முன்முடிவுகளுமே!

அலுவலகத்தில் எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் எல்லாம் மாறிவிடுகிறது. உங்களிடம் உங்கள் மேலதிகாரி நட்புடன் பழகுகிறார் என்ற சாதாரண நிகழ்வானது, நீங்கள் மற்ற ஊழியர்களைப் பற்றி மேலதிகாரியிடம் போட்டுவிடுகிறீர்கள் என்று ஒரு பெரிய மனசுக் காரரால் கிளப்பி விடப்படுகிறது. உங்களிடம் உங்கள் அலுவலக நண்பர்கள் கூட கொஞ்சம் 'கவனமாகவே' நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் மட்டும் அழைக்கப்படாத மாலைநேர விருந்துகள் அடிக்கடி நடக்கின்றன. அவர்களது போதை நேர பேச்சு முழுவதும் உங்களைப் பற்றியும், உங்கள் கடந்தகாலத் தவறுகள் பற்றியும், நீங்கள் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதற்கான காரண, காரியங்கள் பற்றியதாகவுமே இருக்கின்றன. நீங்கள் தனித்துவிடப்படுகிறீர்கள். 

நமது மூளை பழக்கப்பட்ட செயல்களை விளக்குவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றது. இவை பல நேரங்களில் தவறாகவே இருப்பதால் பிறரைப் பற்றிய தவறான புரிதலுக்கு மிக எளிதாக வந்துவிடுகிறோம். பிறரது செயல்பாடுகள் நமக்கு பயத்தை வருவிக்கின்றன. நமது முன்னேற்றத்திற்கு அது முட்டுக்கட்டையாவது கூட நமக்கு தெரிவதில்லை. 

'கன்னாவாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான்' (2திமோ 4:14) என்று பவுலடியார் குறிப்பிடுகிறார். எத்தகையத் தீமைகள் என்ற குறிப்புகளின்மையால், நம்மால் யூகிக்க மட்டும்தான் முடிகிறது. பவுலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கலாம். அவரது நற்செய்தி அறிவிப்புப் பணியில் முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். மக்களை அவருக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கலாம். இதனால் ஏற்கனவே தனிமைச் சிறையிலிருக்கும் பவுலடியாருக்கு இதுவும் ஒரு மனப்பாரமாகிப் போகிறது. குடும்பங்களை, நண்பர்களை, சொந்த ஊரை, அன்னை ஊட்டும் உணவை எல்லாம் துறந்து, நற்செய்திக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் குருக்களுக்கும், துறவிகளுக்கும் எதிராக பங்குகளில் கிளப்பிவிடப்படும் கதைகளுக்கு ஒரு அளவே இருப்பதில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக, தவறாக புரிந்து கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. மனம் விட்டு பேசி, புரிதலை சரி செய்வது கடினமாக இருக்கிறது. ஈகோ அதனை ஒத்துக்கொள்வதில்லை. 

பிறரை தனிமைப் படுத்தாமலும், நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ளாமலும் இருக்க உறவுகளில் புரிதல் அவசியம். சிலரை புரிந்துகொள்ளவே முடியவில்லையென்றாலும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தவறாக புரிந்துகொள்ள வேண்டாமே.!

தனிமை நீங்கும்.......கட்டுரை தொடரும்


வெள்ளி, 20 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை - 1 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -1)

தனிமை உணர்வே மனிதனை நம்பிக்கை இழக்கச் செய்யும் மிகப்பெரியக் காரணியாகும். சில சமயங்களில் நம்மை யாருமே அன்பு செய்யவில்லையோ, நம்மைக் கவனிப்பார் யாருமில்லையோ என்று கழிவிரக்கப்படுகின்றோம். நீங்கள் தனிமையாக உணர, தனியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நல்ல மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் தனிமையாக உணர முடியும். எத்தனை பேர் உங்களைச் சுற்றி இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தல்ல. அவர்களுடனான உங்கள் உறவே உங்கள் தனிமை உணர்வைத் தீர்மானிக்கின்றன.  

நீங்கள் நிறைய பணம் வைத்திருந்தும் தனிமையாக உணர முடியுமா? நம்மைப் போல் இல்லாமல் பணக்காரர்கள் ரொம்பப் பாவம். அவர்கள் தனிமை நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் மிகவும் அழகாக இருந்தும் தனிமையை உணர முடியுமா? தற்கொலை செய்துகொண்ட மர்லின் மன்றோ முதல் சில்க் சுமிதா வரையிலும் கேட்டுப்பாருங்கள். திருமணமாகியும் தனிமை வருமா? தனிமைக்குப் பயந்து திருமணமாகி, பின்னர் அதே தனிமை நோயினால் விவாகரத்து வாங்கும் தம்பதியினரைக் கேட்டுப் பாருங்கள்.

எல்லோரும் தங்கள் வாழ்வில் எப்போதேனும் நிச்சயமாகத் தனிமை நோய்க்குட்படுகிறார்கள். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பது போலவே, குணப்படுத்தும் காரணிகளும் பல இருக்கின்றன. சில தருணங்களில் தனிமையை நாமே வருவித்துக்கொள்கிறோம். தவிர்க்க முடியாத இன்னும் சில தருணங்கள் நம்மைத் தனிமைப்படுத்துகின்றன. இத்தகைய தனிமை நோயைத்தான் திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலே அனுபவிக்கிறார். சாவை எதிர்பார்க்கும் முதியவர் பவுல் தன் இளைய நண்பர் திமோத்திக்கு இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார். தனிமைச் சிறையிலிருக்கும் தன்னை வந்து பார்க்குமாறு ஏக்கத்தோடு எழுதுகிறார் பவுல்.

தனிமை நோய்க்கான காரணங்களைப் பார்ப்போமா?

1. மாற்றம்

வாழ்வின் பருவ மாற்றம் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாத வரையிலும் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. பல்வேறு நிலை மாற்றங்களையும், பருவ மாற்றங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே ஒரு முழு மனித வாழ்வாகிறது. எந்த மாற்றங்களும், தனிமையையும் சேர்த்தே கொண்டு வருகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப் படுவதைத்தான் பிறப்பு என்று கொண்டாடுகிறோம். வாரி அணைத்துத் தடவிக்கொடுக்கும் வரையிலும் குழந்தை அழுதுகொண்டுதானிருக்கிறது. பள்ளி வாழ்வின் முதல் நாளில் தனிமைப்படுத்தப்பட்டதன் பயத்தை இப்போதும் அடிவயிற்றில் கை வைத்துப் பார்த்தால் உணர முடிகிறது. வேலையில் சேர்வது தனிமை. வேலையை மாற்றுவதும் தனிமை. வேலை செய்தது போதும் என்று ஓய்வெடுக்கச் சொன்னாலும் தனிமை. போராட்டமெல்லாம் போதும் இனி ஓய்ந்து இளைப்பாறு என்று மரணப்பெண் தழுவினாலும் தனிமை. எல்லோருக்குமானது தனிமை.

வயது முதிர்ச்சியென்னும் பருவ மாற்றம் தானாகவே கொண்டு வரும் தனிமை போதாதென்று, பெற்றெடுத்தப் பிள்ளைகளே கவனியாது புறக்கணிக்கும் போது, அந்த இருபக்கத் தனிமை என்பது சுமக்கவே முடியாத சுமையாகிப் போகிறது. முதியோர் இல்லங்களிலிருக்கும் பெரியவர்களில் எழுபது சதவிகிதத்தினருக்கு ஒரு பார்வையாளர் கூட வருவதில்லை. காலச்சக்கரம் சுழலும் போது இதன் வலியை எல்லோரும் புரிந்து கொள்வோம். ஏனெனில் எல்லோருக்குமானது தனிமை.


                                                                                   தனிமை நீங்கும்....கட்டுரை தொடரும்

வியாழன், 29 அக்டோபர், 2015

ஒரு திருப்பயணமும், நிறைய நிறைய அனுபவங்களும் (A Pilgrimage Story)

இந்தக் கட்டுரை கடந்த ஜீலை 29 முதல் ஆகஸ்டு 9 வரையிலான எங்களது திருப்பயணத்தைப் பற்றியது. 'எங்களது' என்ற பன்மைச் சொல் இலண்டனில் வசித்துவரும் இலங்கைத் தமிழ் மக்களைக் குறிக்கிறது. மதிப்பிற்குரிய திரு.ரெக்ஸ் மற்றும் திரு.ஞானப்பிரகாசம் என்னும் அன்பர்களின் ஏற்பாட்டில் ஒரு பேருந்து நிறைய திருப்பயணிகளோடு முதல் நாளன்று லூர்து நகருக்குப் பயணமானோம். ரோமிலிருந்து பாரிசுக்குச் விமானித்து காமல் மேரி என்னும் தாயரின் இல்லத்தை அடைந்து, பின் அவரோடு சென்று இலண்டனிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்தை அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் 'என்ன ஃபாதர் இவ்வளவு சின்னவராக இருக்கிறாரே?' என்று அவர்களும், 'என்ன இவர்கள் எல்லோரும் இவ்வளவு பெரியவர்களாக இருக்கிறார்களே?' என்று நானும் பரஸ்பரம் வியப்படைந்தோம். நெடுநேரம் காத்திருந்து நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தாமல் போனால் வயிற்றுக்குள் ஒருமாதிரி உருளும் தானே! அது மாதிரி ஒரு 'ஃபீலிங்'. எல்மோவுக்குப் பக்கத்து இருக்கை எனக்குத் தரப்பட்டது. பார்த்த மாத்திரத்தில் நண்பரானார் 76 வயது இளைஞர் எல்மோ.

மாலை 8.30 –க்கெல்லாம் நெவேரா என்னுமிடத்தில் புனித பெர்னதெத் அம்மையாரின் திருவுடல் வைக்கப்பட்டுள்ள கன்னியர் மட சிற்றாலயத்தையடைந்தோம். இந்தப் புனிதைக்குத்தான் லூர்து நகரின் மரியன்னைக் காட்சி தந்தார். அப்படியென்றால் லூர்து நகரை நெருங்கிவிட்டோம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அதன் பின் ஒன்பது மணிநேர பயணத்திற்குப் பின் இளங்காலை ஏழு மணிக்குத்தான் அன்னையின் புனித நகரை அடைந்தோம். அன்னை தன் இரு கரங்களை நீட்டித் தன் பிள்ளைகளை வரவேற்பது போல இயல்பாக, எளிமையாக, அழகாக அமைந்திருந்தது ஆலயம். அடர்ந்த, உயர்ந்த, செழிப்பு மிக்க மலைகளின் அடிவாரத்தில், நீரோடைக்கு அருகில் இயற்கையின் அங்கமாகவே மாறியிருந்தது அக்கோவில். ஒவ்வொரு நாளும் மாலையில் திருப்பலி, இரவுணவுக்குப் பின்னர் செபமாலை பவனி, பகலில் சிலுவைப்பாதை என்று அங்கிருந்த மூன்று நாள்களுமே செப உணர்வால் நிரம்பியிருந்தது. குறிப்பாக சில்லென்ற மழைத்தூறலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் அமர்ந்து மெழுகுவர்த்தியைக் கையிலேந்தி, செபமாலை பவனியில் பக்தியோடும், நம்பிக்கையோடும் 'ஆவே மரியா!' என்று உணர்ச்சி பொங்க பாடல்களைப் பாடியும் கலந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான உடல் நலமற்றவர்களின் நம்பிக்கை, நம் ஆன்மீக நோய்களுக்கு நல் மருந்தாக அமைந்தது.

நண்பர் எல்மோவுக்கும் எனக்கும் ஒரே அறைதான் தரப்பட்டது. அறையில் இருக்கும் கொஞ்ச நேரங்களும் நம்பிக்கைக் கதைகளாலும், வாழ்க்கைப் பாடங்களாலும் நிரம்பியிருந்தது. எல்மோவுக்கு இறைஇரக்கத்தின் ஆண்டவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. இலங்கையிலிருந்து வெறுங்கையோடு வெளியேறி, பல தேசங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியாக கனடாவில் தஞ்சம் புகுந்த ஒன்றுமில்லாதவனை கடவுள் இன்று எல்லாமும் உள்ளவனாய் உருமாற்றியமைக்கு இறைவனின் அளவற்ற இரக்கமும், அவர்மீது தான் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையுமே காரணம் என்று எப்போதும் கூறுவார்.

ஆகஸ்டு முதல் தியதி காலையில், லூர்து அன்னையின் புனிதத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இத்தாலியின் வடக்கு பகுதியில் மோன்திகியாரி என்னுமிடத்தில் அன்னை மறைபொருளான ரோஜாவாக காட்சியளித்த ஆலயம் நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். மாலையில் விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் ஞாயிறு காலையில் ஆலயத்தை அடைந்தோம். பார்ப்பதற்கு சிறிய ஆலயமாக இருந்தாலும், ஏராளமான திருப்பயணிகளால் நிரம்பியிருந்த ஆலயத்தில் பக்தி மணம் கமழ்ந்தது. அலுவலகத்தில் அனுமதி பெற்று நல்லதொரு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினோம். அன்னை மரியாள், மோன்திகியாரியில் வசித்து வந்த பியரீனா என்பவருக்கு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ரோஜா மலர்களை சூடியவராக காட்சியளித்து, துறவியர்களுக்காகவும், குருக்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு. இங்கு அன்னை மரியாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு ஜீலை மாதமும் 13 ஆம் நாளன்று பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதே நாளில் தான் நானும் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன் என்பதை நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டேன்.

பின்னர் அனைவரும் வெனிஸ் நகர் நோக்கிப் பயணமானோம். வெனிஸ் நீர் சூழ் நகரம். பேருந்திலிருந்து இறங்கியதும் படகுப்பயணம். வழியில் வந்த குட்டி நகரம் போன்ற பிரமாண்டமான சுற்றுலாக் கப்பலைக் கண்டதும் அனைவரும் குழந்தைகளாகி, கப்பல் பயணிகளுக்கு கைகளை அசைத்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டது மறக்க முடியாத அனுபவம். பின்னர் புனித மாற்கு சதுக்கத்தில் அனைவரும் படகிலிருந்து இறங்கி, வெனிஸ் நகர கடைவீதிகளில் கரைந்தே போனோம். விதவிதமான, வண்ண வண்ணமான முகமூடிகள், கலைப் பொருட்கள் இந்நகரக் கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. இரவுணவை முடித்ததும் அன்றிரவே பதுவை நகரைச் சென்றடைந்தோம்.

ஆகஸ்டு 3, திங்கள் கிழமையில் கோடி அற்புதரின் திருவுடலையும், அழியாத நன்னாக்கினையும் தாங்கியிருக்கும் பதுவைப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி இறையன்பில் நெக்குருகிப் போனோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் எளிய துறவி அந்தோணியார் இன்னும் மக்களின் மனங்களில் அழியாத நினைவாகிப் போன அதிசயத்தை எந்த அறிவியலாலும் விளக்கிக் கூற முடியுமா?

அடுத்ததாக அசிசி நகரம். அமைதியின் கருவியாய் என்னையே மாற்றுமே! பகை உள்ள இடத்தில் அன்பையும், தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும், பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ஐயமுள்ள இடத்தில் உறுதியையும், விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும், இருள் உள்ள இடத்தில் ஒளியையும், மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும் நான் விதைப்பேனாக! என்ற மானுடப் பண்பாட்டின் மகத்துவமிக்க செபத்தை வாழ்வாக்கிய புனித அசிசியாரின் நகரம். உலகம் பகைமையையும், பிரச்சனைகளையும் முன்னிறுத்தும் இந்நாளில், அமைதியின் சின்னமாக அமைந்திருந்தது புனிதரின் நகரம். இறைவா அமைதியின் பாதையில் எங்களை வழிநடத்தும். வாழ்வின் போக்கில் நாங்கள் யாருடைய அமைதியையாவது குலைத்திருந்தால், அவர்களிடம் மன்னிப்பினை இறைஞ்சுகின்றோம். அவர்களுக்குத் தேவையான அமைதியை இரண்டு மடங்காகத் தாரும். யாரையேனும் நாங்கள் வெறுக்க நேர்ந்தால் அவர்களை இரண்டு மடங்கு ஆசீர்வதித்தருளும். எங்கள் தவறுகளை மன்னித்து, எங்கள் மனக்காயங்களைக் குணப்படுத்தும்.

எல்லா சாலைகளும் உரோமை நோக்கியே செல்கின்றன. ஆம்! பதுவையில் தொடங்கிய எங்களது பயணம், அசிசி வழியாக, இன்று மாலையே உரோமையை வந்தடைந்தது. திருச்சபையின் தலைமைப் பீடம் வத்திக்கானுக்கு அருகாமையில், அவுரேலியாவில் ஓர் விடுதியில் தங்கினோம். உரோமை நகரம் மனித நாகரீகத்தின் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுக் கருவூலம். இன்றளவும் உலகின் மொழி, அரசியல், அறிவியல், நிர்வாகம், வணிகம், சட்டம், உள்கட்டமைப்பு என்று அனைத்தும் விதைவிட்டது விவாதத்திற்கு இடமின்றி உரோமையில்தான் உள்ளது. வத்திக்கான் பேராலயம் கண்களை அகல விரிய வைக்கும் ஓர் வியப்பு. இவ்வளவு நுட்பங்களையும், உச்சங்களையும் மனிதன் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே எட்டிவிட்டானா என்ற ஆச்சரியம். பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்களும், தத்ரூபமானச் சிற்பங்களும். மைக்கிள் ஆஞ்சலோ, ரஃபேல், பெல்லீனி போன்ற இத்தாலிய மகாகலைஞர்களின் கைவண்ணங்களைத் தாங்கி நிற்கும் வத்திக்கான் அருங்காட்சியகம், சிக்ஸ்டைன் சிற்றாலயம் வாழ்நாளில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

உரோமையிலிருந்து பிரிய மனமின்றி ஆகஸ்டு ஆறாம் தியதி காலை பைசா நகர் நோக்கி மீண்டும் பயணம். பைசா நகர தலைமைப் பேராலயத்தின் மணிக்கூண்டுதான் இன்று உலகமெல்லாம் அறியப்படும் பைசா சாய்ந்த கோபுரம். இதன் காலத்தில் உலகெங்கும் கட்டப்பட்ட சாயாத கோபுரங்களெல்லாம் இன்று தடயமின்றி மறைந்த பின்னரும், சாய்ந்தும் சரிந்து விடாமல், விடாப்பிடியாக வாழ்வைப் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கைதான் இதன் கவர்ச்சிக்குக் காரணமென்று நினைக்கிறேன்.

இன்று இரவுக்குள் சுவிட்சர்லாந்து சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இருப்பினும் உரோமையில் தங்கியிருந்த விடுதியிலேயே திருப்பயணி ஒருவர் தனது கடவுச்சீட்டினை வைத்துவிட்டு வந்துவிட்டமையால், சூழ்நிலையை சுமூகமாக்க, அனைவரையும் திட்டமிட்டபடியே செல்லும்படி அனுப்பிவிட்டு, நான் உரேமைக்குத் திரும்பினேன். இரவே விடுதிக்கு வந்து அவரது உடமைகளைப் பெற்றுக்கொண்டு, வெரோனா, மிலான், கோமொ, தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் ஆர்த்-கோல்தாவு, பைபர்பர்க் வழியாக எயின்ஸ்டெல்ன் சென்று அங்குள்ள கறுப்பு மாதா பேராலயத்தை அடைந்தேன். பைசா நகரில் தொடங்கி ஆறு ரெயில்கள் மாறி மறுநாள் மதியம் 12 மணிக்கெல்லாம் குறித்த இடத்தை இறைவனின் வழிநடத்துதலின்றியும், எனக்காக பதற்றத்தோடும், குழப்பத்தோடும் காத்திருந்த மக்களின் செபங்களுமின்றி நிச்சயமாக அடைந்திருக்கவே முடியாது. மீண்டும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக்கொள்ள, இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் தியோரமா, மற்றும் ஆண்டவரின் பாடுகளை பண்டைய எருசலேம் விவிலியப் பின்னணியில் அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இடங்களையும் பார்வையிட்டு, சுவிட்சர்லாந்து அழகுக் காட்சிகளைப் கண்களால் களவாடிக்கொண்டே ஜெர்மனி நோக்கிப் பயணமானோம்.

ஜெர்மனியின் கிளெவே மாகாணத்திலுள்ள கெவலேயர் என்னுமிடத்தில் 'மடு மாதா திருவிழா' ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் விண்ணேற்பு தினத்தை முன்னிட்டு நடைபெறுகிறது. இலங்கையின் மடு மாதா திருவிழாவின் ஐரோப்பிய பதிப்பாகிய இவ்விழாவில், தமிழ் கிறித்தவர்கள் மட்டுமல்லாது, இந்துக்களும் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பாகவும், தாய் தேசத்தின் நலன் கருதி ஒன்றுசேரும் கூட்டு முயற்சியாகவும் இத்திருவிழா இன்னும் உணர்வுப்பூர்வமான அழுத்தம் பெறுகிறது. பெருவிழா முதல் திருப்பலியை மட்டக்களப்பு ஆயரும், மதியம் நடைபெற்ற இரண்டாவது திருப்பலியை கார்மல் சபையைச் சார்ந்த சார்லஸ் அவர்கள் நிறைவேற்ற, 'தாய் வீட்டிற்கு வந்திருக்கிறோம்' என்ற சிந்தனையில் மறையுரை ஆற்றியதை இன்றளவும் மகிழ்வோடு நினைவுகொள்கிறேன். இறைனுக்கு நன்றி! வேறு என்ன சொல்ல!

அன்று மாலை ரினயசன்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் காலையே பெல்ஜியம் நோக்கி பயணித்தோம். வழியில் ஜெர்மனியின் கோல்ன் நகர பேராலயத்திற்கு சென்றோம். 1248 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வாலயக் கட்டுமானப் பணி 1473 ஆம் ஆண்டுடன் முழுவதும் நிறைவடையாமல் நிறுத்தப்பட்டது. பின்னர் 1880 ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த திட்டப்படியே முழு ஆலயமும் கட்டிமுடிக்கப்பட்டது. 474 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்ட இவ்வாலயக் கோபுரத்தின் உயரம் வெறும் 515 அடிதான்! கடந்த ஆயிரமாண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த எத்தனையோ குழப்பங்களிலும், கத்தோலிக்க விசுவாசம் எந்த அளவு கட்டிக் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதை இவ்வாலயம் உயர உயர சொல்கிறது.

அங்கிருந்து கிளம்பி மதியவாக்கில் பெல்ஜியத்தின் லீஜெ மாகாணத்தின் பெனுவே என்னுமிடத்தில் உள்ள 'ஏழைகளின் கன்னித்தாய் அன்னை மரியாள்' என்னும் திருத்தலத்தை அடைந்தோம். மரியத்தே பெக்கோ என்னும் 11 வயது ஏழைச் சிறுமிக்கு அன்னை மரியாள் எட்டு முறைக் காட்சியளித்து தன்னை ஏழைகளின் தாயாக அறிவித்த அருள்மிக்க அவ்வாலயத்தில் ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியதோடு, எங்கள் திருப்பயணத்தின் அனைத்து புண்ணியங்களுக்கும் இறைவனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

அங்கிருந்து பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸை அடைந்தோம். இங்குதனர் பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம் அமைந்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தலைமையிடத்தை இந்த நகரம் பிரான்சின் ஸ்ட்ராஸ்போர்க்குடன் பகிரந்து கொள்கிறது. விடைபெறும் தருணம் வந்ததும் அனைவரும் நன்றிப்பெருக்குடன் நல்வார்த்தைகள் பல சொல்ல, அன்போடு நன்றிசொல்லி நான் அங்கிருந்து பிரான்சு தலைநகரம் பாரிசு நோக்கி செல்ல, திருப்பயணிகள் இலண்டனுக்குத் திரும்பிச் சென்றனர்.

பாரிசில் நான் முதல் நாளில் சந்தித்த தாயார் காமல் மேரி அவர்களின் இல்லத்தை அடைந்தேன். அங்கு அவர்களது மூத்த மகள் மருத்துவர் பிரமிளா அக்கா அவர்களது இல்லத்தில் இரவுணவு ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் காலை காமல் அம்மா மற்றும் எங்களோடு திருப்பயணத்தில் கலந்து கொண்ட அவர்களது உறவினர் பிலோமினா அம்மா இருவரும் என்னை பாரிசு நகரைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றனர். முதன் முதலில் திரு இருதய ஆண்டவர் பசிலிக்காவிற்கும், பின்னர் நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த ஈபிள் கோபுரத்திற்கும் சென்றோம். நகரின் எந்த மூலையில் நின்று பார்த்தாலும் ஈபிள் கோபுரத்தைப் பார்த்துவிட முடியும். எதிர்பார்த்ததை விட பிரமாண்டமான ஈபிள் கோபுரம், மிகுந்த பிரமிப்பை அளித்தது.

மதிய உணவானது பிரமிளா அக்காவின் ஏற்பாடு என்றபடியால் அவரது மருத்துவமனைக்குச் சென்றோம். வாசலில் இருந்த அறிவிப்பு பலகையில், தேசிய அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மருத்துவர் என்ற அடைமொழியுடன் மருத்துவர் பிரமிளா என பொறிக்கப்ட்டிருந்தது. இலங்கைப் போர்முனையிலிருந்து பதின்பருவத்தின் தொடக்கத்தில் பிரான்சு தேசம் தஞ்சம் புகுந்து, முற்றிலும் புதியதாக பிரஞ்சு மொழி பயின்று, தந்தை குடி நோயாளியாக இருந்தும், தாயாரின் தளராத தன்னம்பிக்கையினாலும், தியாகத்தினாலும், கடின உழைப்பாலும் படித்து தேசிய மதிப்பெண்ணுடன் மருத்துவராகி சேவை செய்யும் பிரமிளா அக்காவும், அவரது தாயாரும் பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கிறார்கள். அருமையான மதிய உணவை முடித்து பாரிசு ஓர்லி விமான நிலையத்திலிருந்து கிளம்பி இரவு உணவிற்கு, உரோமை வந்தடைந்தேன்.

பன்னிரெண்டு நாள்கள் திருப்பயணத்தில் நிறைய நிறைய அனுபவங்கள். நிறைய நிறைய ஆசீர்வாதங்கள். நிறைய நிறைய மனிதர்கள். பயணம் முழுவதுமே இறைவனின் உடனிருப்பை உணர்ந்தோம்.  தடங்கல்கள் பலவும் தடங்களாக மாறின அற்புதங்கள் ஏராளம். முடியாது என்ற நிலையிலும் கடைசியில் ஏதோ ஒரு கதவு எங்களுக்காக எப்போதும் திறந்தே இருந்தது. நிறைய நிறைய கற்றுக்கொண்டேன். இறைவனுக்கு கோடி நன்றிகள். இதனை செவ்வனே ஏற்பாடு செய்திருந்த திரு. ரெக்ஸ் அவர்களுக்கும், திரு. ஞானபிரகாசம் அவர்களுக்கும், வழியெங்கும் பகிர்வதற்கென்று ஏதேனும், எப்போதும் வைத்திருந்த அனைத்து திருப்பயணிகளுக்கும், கலகலப்பும், திறமையும் கொண்டு பாதுகாப்பான பயணத்தை நல்கிய இரு ஓட்டுநர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இந்த அருமையான மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திய அருட்பணி ஜான்சன், எஸ்ரோன், ஜெகன் மற்றும் நார்வேயைச் சார்ந்த பாசத்திற்குரிய திருவாளர் ஞானன் பிரான்சிஸ் அனைவருக்கும் நன்றிகள். எப்போதும் செபத்தில் இணைந்தே பயணிப்போம்.


புதன், 27 மே, 2015

'நண்பர்கள் ஜாக்கிரதை' (Beware! Friends....)


             நண்பனுக்காக உயிரைத் தருவதுதான் மேலான அன்பு என்று விவிலியம் கூறுகிறது. உயிரைத் தருமளவு சிறந்த நண்பர்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? திருக்குறள் சில வழிகளைக் காட்டுகிறது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்'. ' உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்பன மனதில் பட்டெனத் தோன்றும் சில எடுத்துக்காட்டுக்கள். அன்பு செய்பவரின் துன்பம் கண்டு கண்ணில் தோன்றும் சிறு துளி கண்ணீரே அன்பிற்கான சான்றுப் பத்திரம் என்று முதல் திருக்குறளும், ஆடை களையும் சமயத்தில் விரைந்து சென்று சரிசெய்யும் கைகளைப் போன்றவனே நண்பன் என்று இரண்டாம் திருக்குறளும் கூறுகின்றன. நட்பைப் பற்றிப் பேசினாலே நம்பிக்கைப் பிறக்கிறது. நம்மோடு இன்னொரு ஆளின் பலமும் சேர்வது போல ஓர் சக்தி பிறக்கிறது. அதுதான் நட்பின் சிறப்பு. இதையெல்லாம் நாமும் நம் வாழ்வில் நிச்சயம் அனுபவித்திருக்கிறோம்.

       வள்ளுவர் தொடங்கி வாட்ஸ் அப் வரையிலும் நட்பின் புகழ் பாடப்படுகிறது. நட்பு சிறப்புதான். ஆனால் நட்பு மட்டுமே சிறப்பு என்பதோ, மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப் தான் என்பதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நட்பும் மூழ்கும். நட்பின் நிலைத்தத் தன்மையில் நான் அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. இன்றைய எனது நட்பு எனக்குச் சிறப்புதான். நாளை அதன் நிலையைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. அதன் நாளைய புகழை நான் பாட விரும்பவுமில்லை.
         நண்பர்களை நான் விமர்சிக்க விரும்புகிறேன். நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் அளவுக்கதிகமாக உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. தாய், தந்தை, உடன்பிறப்புக்கள், உறவினர்கள், ஏன் சில சமயம் கடவுள் கூட நண்பர்களுக்குப் பிறகுதான் போன்ற கருத்துக்கள் என்னால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா உறவுகளும் முக்கியமானவையே. எல்லா உறவுகளிலும் கூடுதல், குறைகள் இருக்கின்றன. இதற்கு சிறிதும் கூட விதிவிலக்கல்ல நட்பு. நண்பர்களும் மனிதர்களே.

            அவர்கள் சில வேளைகளில் காட்டிக்கொடுக்கிறார்கள். சிலவேளைகளில் துரோகம் செய்கிறார்கள். சில வேளைகளில் ஓட்டம் பிடிக்கிறார்கள். சில வேளைகளில் மறுதலிக்கிறார்கள். சில வேளைகளில் பொறாமைப்படுகிறார்கள். தங்களது வெற்றிகளையும் மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் தீய நண்பர்களல்ல. நல்ல நண்பர்களே! பேதுரு போல அல்லது யூதாசு போல.

            அவர்களுக்கு நல்லது எனத் தோன்றினால் சொல்லிக்கொள்ளாமலே கூட சென்றுவிட அவர்கள் தயங்குவதில்லை. இப்போது போகட்டும். திரும்பி வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தால் உங்களை விட அப்பாவிகள் யாரும் இருக்க முடியாது. அவர்கள் திரும்பி வரும் போது உங்கள் நண்பர்களாகவே வருகிறார்கள். நண்பர்களை உங்களால் தண்டிக்க முடியாது. ஆதலால் நண்பர்களே! 'நண்பர்கள் ஜாக்கிரதை'

சனி, 7 பிப்ரவரி, 2015

சட்டமும் சமூகமும் (Law and Society)

சட்டமும் சமூகமும்

சட்டங்கள் என்றால் என்ன? 

சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட சமூகத்தின், அல்லது நாட்டின் குடிமக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்கும் வகையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்த விதிமுறைகளை யாரேனும் மீறும் போது அங்கு ஏற்பட்டிருக்கும்  சமனற்றத் தன்மையானது தண்டனைச் சட்டங்களின் மூலம் சமன் செய்யப்படுகிறது. ஆகவே சட்டங்களும், தண்டனைகளும் சமூகத்தின் சுமூகமான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். இந்த சட்டங்களினால் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சரி சமம் என்பது தௌ;ள தெளிவாவதோடு, அனைவரின் சட்டத்திற்குட்பட்ட சுதந்திரமும், உரிமைகளும் நிச்சயமாக உறுதி செய்யப்படுகிறது.

சட்டங்களின் தேவைதான் என்ன?

ஒரு கட்டடம் கட்டத் தொடங்குவதற்கு முன்பாக வரையப்படும் கட்டுமான வரைபடத்தைப் போன்றதே ஒரு சமூகத்திற்காக எழுதப்படும் சட்டங்களும். கட்டுமான வரைபடத்தினால் வரும் பயன்பாடு என்ன? அது கட்டட வேலையை எளிதாக்குகிறது. விரைவாக வேலை நடைபெற உதவுகிறது. ஏதேனும் பிழைகள் எற்படுமானால் வரைபடத்தின் மூலம் சரிசெய்வதும் எளிதாகிறது. மொத்தத்தில் கட்டடம் நாம் நினைத்தது போலவே அழகாகவும், வலிமையானதுமாக மாறுகிறது. இதைப்போன்றதுதான் சமூகத்திற்கும், சட்டங்களுக்குமான தொடர்பும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு, அனைவரது பிரதிநிதித்துவ பங்கேற்;போடு ஒரு சமூகத்திற்கானச் சட்டமானது எழுதப்படுகிறது. சில சட்டங்களின் தேவைகள் காலப்போக்கில் மாறும் போது, மீண்டும் அதே பிரதிநிதித்துவ பங்கேற்போடு இச்சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதும் அவசியமானதே. முக்கியமானது என்னவென்றால் சமூகத்தின் அழகிற்கும், நிலைத்தத் தன்மைக்கும் அடிப்படையானது, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டங்களை மதித்து அதன்படி நடப்பதுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

நாம் இந்தியர்கள் என்பதற்காக பெருமைப்படத்தக்க பலவற்றிலும் மிகவும் முக்கியமானதும், முதன்மையானதும் நமது அரசியலமைப்புச்சட்டம் ஆகும். இந்தியா என்ற குடியரசு இந்த அரசியல் அமைப்புச்சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்ட 26 சனவரி 1950 அன்றுதான் உருவானது. இந்தியக் குடியரசின் ஆணிவேராக இருப்பது நமது அரசியலமைப்புச் சட்டமே ஆகும். உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் தான் மிகவும் பெரியதாகும். இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்வேறு நாடுகளிருந்து பெறப்பட்டச் சட்டங்கள், இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மைக்கு ஏற்றதாக மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நமது அரசியலமைப்புச் சட்டமானது பிறநாட்டுச் சட்டங்களில் வெறும் தழுவல் என்று சொல்லிவிட முடியாது. வேறு எந்த நாட்டுச் சட்டங்களையும் விட, தனிச் சிறப்பும், தனி ஆளுமையும் கொண்டதே நமது அரசியலமைப்புச் சட்டமாகும். ஆயிரமாயிரம் மொழிகளையும், சமயங்களையும், இனங்களையும், கலைகளையும், கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்ளும், மதிக்கும், அரவணைக்கும், வளர்த்தெடுக்கும், மிகவும் நுட்பமானப் பணியை 64 ஆண்டுகளாக சுணக்கமின்றி செய்துவருவதிலிருந்தே அதன் சீரியச் சிறப்பானது புலனாகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்க ஜவர்கர்லால் நேரு, அம்தே;கர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல் போன்ற மாபெரும் தலைவர்கள் உட்பட 389 உறுப்பினர்களுடன் டிசம்பர் 9, 1946 அன்று உருவானது இந்;திய அரசியல் நிர்ணயக்குழு. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 299 ஆக மாறியது.  இவர்கள் 13 குழுக்களாகப் பிரிந்து சட்டங்களை உருவாக்கும் பணியினைச் செய்தனர். இந்தக் குழுக்களின் பங்களிப்புகளையெல்லாம் தொகுத்து ஓர் சட்ட வரைவினைத் தயார் செய்யும் மாபெரும் பொறுப்பானது டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான ஏழுபேர் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது இரவு, பகலான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும், இந்தியாவின் பன்மைத் தன்மைக்குச் சிறிதும் பாதிப்பில்லாமல், மாறாக அவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவானது 1948 சனவரியிலேயே வெளியிடப்பட்டது. எட்டுமாதங்கள் இவை மக்களின் பொது விவாதத்திற்கு விடப்பட்டது. மாநிலங்களின் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தகுந்த திருத்தங்களோடு 1949, நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் கையெழுத்திடப்பட்டது. இந்த சட்டத் தொகுப்பே 1950, சனவரி 26 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றளவும் இந்தியக் குடியரசை, மக்களாட்சி முறையில் நிலைநிறுத்தி வருகிறது.

நடைமுறையில் நமது சட்டம்

இதுவரையிலும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டங்களின் தனிச் சிறப்புகளைப் பார்த்தோம். இருப்பினும் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் எந்த அளவு மக்களால் மதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அந்தச் சட்டங்களின் பலனை அனைவரும் அனுபவிக்க முடியும். சட்டம் ஒன்று - .சமூகம் வேறொன்று என்று எந்த சமூகம் இருக்குமோ அங்கு நீதியை நிலைநாட்டுவதில் நாம் பல்வேறு சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உலகின் எத்தனையோ நாடுகளை விட இந்த விசயத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய வகையில் பலவீனமானமாக இருக்கும் ஓர் நாடு நம் பாரத நாடு. இத்தகைய சட்டத்திற்கும், சமூக பழக்கவழக்கங்களுக்குமான முரண்பாடுகள்தான் நம் இந்தியா ஒரு அடி முன்னேறினால் அதனை ஒன்பது அடி பின்னோக்கி இழுக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய முரண்பாடுகளை முன்னின்று களைய வேண்டியது காவல் துறை, நீதித்துறை, மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் அங்கிருப்போரும் இந்த சமூகத்தின் அமைப்புகளிலிருந்தே செல்வதால் அங்கு இத்தகைய முரண்பாடுகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லை. சாலைவிதிகள் பாதசாரிகளுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டுமெனச் சொல்கிறது. ஆனால் வலியவன் வாழ்வான் என்பதுதான் நடைமுறைச் சட்டமாக இருக்கிறது. பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் தண்டனைக்குரியக் குற்றச் செயல் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பதினெட்டு ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலசி ஆராயப்பட்டு , குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் ஒருவர் சிறைசெல்லும் போது பொதுச் சொத்துக்களை அரசே முன்னின்று அடித்து நொறுக்குகிறது. நீதிபதியைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டிகள் என்ன? தீர்மானங்கள் என்ன? சட்டம் ஆட்சி செய்யும் அளவிற்கு நாங்கள் இன்னும் பண்படவில்லை. தனிநபர் அதிகாரமும், காழ்ப்புணர்வுகளும், வெறிச் செயல்களுமே எங்களை ஆட்சிசெய்கின்றது என்று பிறர் நம்மை எள்ளி நகைக்கும் வகையில் பிரகடனப்படுத்தியது அந்ந அறுவறுக்கத் தக்கச் செயல்கள். இன்னும் பொது இடங்களை அசுத்தம் செய்யக் கூடாது என்ற சட்டமானது நமது இந்திய மனங்களில் எழுதப்படவில்லை என்பது நமது மிகப்பெரிய அவமானம். நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுக்க எத்தனையோ சட்டங்களும், அவற்றைக் கண்காணிக்க மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் இருப்பினும் லஞ்சத்தினால் வரையறைகள் தாராளமாக மீறப்படுகின்றன. சாலைகளில் ஒலிமாசுக்கும், புகை மாசுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. போக்குவரத்து காவலர்கள் வரவு செலவு பணியாளர்களாகவேப் பார்க்கப்படுவதனால் எளிதாக ஐம்பதுக்கும், நூறுக்கும் விதிகளை விற்றுவிடுகிறார்கள். திருமணம் செய்வது இருபத்தியொரு வயது நிரம்பிய தனி நபரின் உரிமை. ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலும், கட்டாயத் தலையீடும் இல்லால் இங்கு எந்தத் திருமணமும் நடைபெறுவதில்லை. தீண்டாமை தண்டனைக்குரியக் குற்றம். ஆனால் வெகு சாதாரணமாக இங்கு பொது வாழ்வில் சாதி பேதம் பார்;க்கப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகள் அநீதியானது. நான் வெளிப்படையாக சட்டத்தின் படிதான்; வாழ்வேன் என்று சாலைப் பக்கம் வந்தீர்கள் என்றால் 'சாவுகிராக்கி' என்ற பட்டப்பெயரோடுதான் திரும்பிச் செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான காரியம் இத்தகைய சமூகங்களில் வாழ்வது. எழுதப்பட்டச் சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையானது மீண்டும் மீண்டும் தகர்த்தெரியப்படும் போது அதனை நம்பி செயலில் இறங்குவது உயிருக்கே உலை வைப்பதாகப் போய்விடும். இருப்பினும் சட்டத்திற்கும், சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கும் இருக்கும் இடைவெளியை உடைத்து யாரேனும் ஒருசிலர் மட்டும் வாழ முற்பட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்களாகவோ, அல்லது தீவிரவாதிகளாகவே கருதப்படுகிறார்கள்.

இவ்வாறு பொதுவாழ்வில் சட்டங்களையும், அவற்றின் சமூகப் பங்களிப்பையும் மட்டும் பேசுவது எளிதானதுதான். ஆனால் நமது செயல்படு தளங்களில் நாம் எந்த அளவிற்கு முன்மாதிரியாக சட்டங்களை மதிக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவேத் தொக்கி நிற்கிறது. இன்னும் அதிகமாக சட்ட விழிப்புணர்வுகளை பாமர மக்களின் பார்வைக்குக் கொண்டு சேர்ப்பது இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகவே கருதுகிறேன். சட்டங்கள் இதயத்தில் எழுதப்பட்டு, இயல்பான பழக்கவழக்கமாக மாறும் போதுதான் நம் நாடு பாரத நாடு பண்பட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த விசயத்தில் மேலை நாடுகளை நாம் மிகவும் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று இந்தியாவில் விவாதிக்கப்படும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் தேவைகளையும், விளைவுகளையும் பற்றி இன்னும் கொஞ்சம் சூடாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். நன்றி.