செவ்வாய், 8 டிசம்பர், 2015

இது இரக்கத்தின் ஆண்டு (Jubilee Year Of Mercy - 2)


சனவரி முதல் டிசம்பர் வரை ஆங்கில நாட்காட்டி ஆண்டு என்று ஒன்று இருப்பது போலவே, தமிழகத்தில் ஜீன் முதல் மே மாதம் வரை கல்வி ஆண்டு என்று ஒன்று இருப்பது போலவே, கத்தோலிக்கத் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழாவிற்கான முன் தயாரிப்பின் காலமான திருவருகைக் காலம் தொடங்கி, கிறிஸ்மஸ் காலம், தவக்காலம், பாஸ்கா காலம், பொதுக்காலம் போன்றவற்றை உள்ளடக்கிய வழிபாட்டு ஆண்டு  என்ற ஒன்று இருக்கின்றது. இந்த வழிபாட்டு ஆண்டானது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, நவம்பர் இறுதி வாரத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடைகிறது. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டையும் குருக்கள் ஆண்டு, துறவிகள் ஆண்டு, பவுலின் ஆண்டு, குடும்ப ஆண்டு என்று ஏதேனும் ஒரு கருத்திற்காக அர்ப்பணிப்பது திருச்சபையின் வழக்கம். அது போல இருபத்தைந்து ஆண்டுகளுக்கொருமுறை யூபிலி ஆண்டாக திருச்சபை கொண்டாடுகின்றது. மேலும் காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப, தூய ஆவியின் தூண்டுதலால் சில சிறப்பு யூபிலி ஆண்டுகளும் அறிவிக்கப்படுகின்றன. அத்தகைய ஒன்றுதான் இந்த 'இரக்கத்தின் யூபிலி ஆண்டு'. (விரிவானத் தகவல்களை முதல் கட்டுரையில் ஏற்கனவே பார்த்தோம்.)

யூபிலி ஆண்டும் விவசாயமும்

யூபிலி ('யோவேல்') என்ற எபிரேயச் சொல் ஆட்டின் கொம்பை ஊதி, அருள்தரும் ஆண்டினை முழக்கம் இடுவதைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் லேவியர் புத்தகம் 25 ஆம் அதிகாரம் யூபிலி ஆண்டினைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது. வாரத்தின் ஏழாம் நாள் நிலத்திற்கும், பணியாளருக்கும், கால்நடைகளுக்கும் ஓய்வு அளிக்க வேண்டும். இது போல ஏழாம் ஆண்டு ஓய்வு ஆண்டு. அந்த ஆண்டு முழுவதும் நிலத்தில் பயிரிடாமலும், தானாக முளைத்ததை அறுவடை செய்யாமலும் நிலத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏழு ஓய்வு ஆண்டுகள் முடிந்து ஐம்பதாம் ஆண்டினை யூபிலி ஆண்டு என வகுத்து அந்த ஆண்டு முழுவதும் அருளின் ஆண்டாகக் கொண்டாடினர். யூபிலி ஆண்டு நிலத்துக்கு மட்டுமின்றி, உழைப்பவர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஓய்வு அளித்தது. அடிமைகளாக அல்லலுற்றவர்களுக்கு முழு விடுதலை அளித்தது. கடன்பட்டோரின் கடன்கள் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டது. சொந்த நிலத்தை பல ஆண்டுகளாக மீட்க முடியாதோருக்கு, அவர்களது நிலமானது யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்பட்டது. இவ்வாறு சமுதாயத்தைப் புதுப்பிக்கும் ஆண்டாக இருந்தது தூய யூபிலி ஆண்டு. இன்றைய யூபிலி விழாக்கள் இத்தகைய விடுதலைக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதே அர்த்தம் மிகுந்ததாகும்.

பண்டையக் கலாச்சாரங்களின் ஊற்றுக்களிலிருந்து நாம் பருகக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை இந்த விவிலியப் பகுதிகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. தமிழ், எபிரேயம் போன்ற பண்டைய வேளாண் மரபுகளில் சுற்றுச் சூழலை எள்ளளவும் பாதிக்கமால் இயற்கையோடு இயைந்து வாழ்வது பற்றிய உயரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. உலகிலேயே தலைச்சிறந்தது நமது தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமுமே என்பதை திருக்குறளைப் படிக்கும் போது தோன்றுகிறது. அதற்கு எந்த வகையிலும் குறைவுபடாத ஒரு பண்டையக் கலாச்சாரமாக இந்த யூபிலி ஆண்டைப் பற்றி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே யோசித்த எபிரேயக் கலாச்சாரத்தைக் கருதுகிறேன். விவிலியத்தில் இருக்கும் நூற்று ஐம்பது திருப்பாடல்கள்களும் உணர்வுப்பூர்வமான இன்னொரு புதையல். 

கடந்த வாரம் பாரிசு நகரில் நடைபெற்ற 21 ஆவது பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாட்டில் பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இத்தகைய மாநாடுகளினால் விளைந்த மாற்றங்களைப் பற்றியச் செய்திகளை நாம் வாசிக்க முடிவதே இல்லை. இயற்கை நேசமும், மானுட அன்பும் கலந்த அறிவியலே நமது இன்றைய தேவை. நடப்பதுதான் என்ன? ஆயுதங்களையும் அவர்களே உருவாக்குகிறார்கள். பின்னர் அவற்றை வியபாரம் செய்கிறார்கள். பின்னர் அந்த ஆயுதங்களிலிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்ற போர் செய்கிறார்கள். இந்தச் சண்டையில் சாதாரண தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில 'அதிகாரப்பூர்வமான தீவிரவாதிகளுக்கு' நோபல் பரிசு தரப்படுகிறது. இதுதான் இன்றைய காலகட்டம் சந்திக்கும் மிகவும் அபாயகரமான தீவிரவாத சுழற்சி.

நான் ஒளிந்து கொண்டேன்

விவிலியத்தில் கடவுள் மனிதனைப் பார்த்து கேட்கும் முதல் கேள்வி, 'நீ எங்கே இருக்கின்றாய்?' அதற்கு மனிதன், 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே நான் ஒளிந்து கொண்டேன்' என்றான் (தொ.நூ 3:9-10). கீழ்படியாமை என்னும் பொறி வைத்து மனிதனைப் பிடித்துக்கொண்டது சாத்தான். மனிதன் தனது பாவத்திற்கு பெண்ணே காரணம் என்று தனது ஆட்காட்டி விரலை அடுத்தவரை நோக்கி சுட்ட ஆரம்பித்தது அப்போதுதான். இப்போதும் விலக்கப்பட்ட கனிகளின் மீதான ஈர்ப்பு நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. அது தேவைக்கு அதிகமான செல்வமாக இருக்கலாம். அறத்தை மீறிய இன்பமாக இருக்கலாம். பொறுப்புகளைத் துறந்த சுதந்திரமாக இருக்கலாம். இக்கனிகளைத் தின்பதும், அதற்குக் காரணமாக அடுத்தவரைக் கைகாட்டுவதுமே பாவம் என்று தொடக்க நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. நமது திருமுழுக்கின் போதும், உறுதிபூசுதலின் போதும் நமக்கு அருளப்பட்ட தூய ஆவியின் கனிகளை விட, விலக்கப்பட்டக் கனிகள் கவர்ச்சியாக இருக்கின்றன. ஆதாமைப் போல் கீழ்படியாமையால் ஒளிந்து கொள்ளாமல், கடவுளின் முன் வந்து நிற்போம். அவர் நம்மைக் கண்டுபிடிக்கட்டும். 

நான் ஆண்டவரின் அடிமை

புதிய ஏற்பாட்டில் வானதூதர் அன்னை மரியாளை வாழ்த்துகிறார். 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். அன்னை மரியாள் சொல்கிறார்: 'நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்' (லூக்கா 1:26-38). இங்கே புதிய ஏவாள் ஆண்டவருக்கு கீழ்படிகிறாள். விளைவுகளைப் பாராமல் கடவுளின் திட்டத்திற்குக் கீழ்படிவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். பிறரது பார்வைக்கு முட்டாள்தனமான முடிவாக இருக்கலாம். பின்னொரு காலத்தில் நமக்கும் கூட அவ்வாறே தோன்றலாம். பெத்லகேம் விடுதிகளில் இடம் கிடைக்காமல் போனது போல எல்லோராலும் புறக்கணிப்பட்டு மாட்டுத் தொழுவத்திற்கு துரத்தப்படலாம். ஆனால் விலைமதிப்பற்ற மாணிக்கம் இயேசு இத்தகைய இடங்களில் தான் பிறக்கிறார். எனவே அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நமக்கு அன்னை மரியாளிடம் இருந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அன்னை 'ஆம்' என்று சொன்ன கணத்திலிருந்து, அவரை இறைவன் சிலுவையில் தொங்கியவாறே 'இதோ உம் தாய்' (யோவான் 19: 27) என்று நமக்கெல்லாம் தாயாகப் பரிசளித்தது வரையிலும் விடாது துரத்தின துன்பத்தின் கரங்கள். ஒரு எளிய பெண்மணிக்கு இருந்த மனபலத்தைப் பாருங்கள். விண்ணகம் எடுத்துச் செல்லப்படும் வரை அவள் கொண்ட நம்பிக்கையை மட்டும் அவள் ஒருபோதும் விட்டுவிடவில்லை. 'நீ இறைமகன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வா' (மத்தேயு 27:40) என்று படைவீரனின் வழியாக அலகை சோதித்த போது, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு, தான் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் விலகாத இயேசுவின் மனஉறுதிக்கு இணையானதுதான் அன்னை மரியாளின் நம்பிக்கையும். அதனால்தான் இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னையின் பங்களிப்பை திருச்சபை ஆர்ப்பரிப்புடன் கொண்டாடி அக்களிப்புடன் அகமகிழ்கின்றது. அன்னை மரியாள் நம்மில் ஒருவர். முழுவதும் மனிதர். ஒருவர் எந்த அளவிற்கு இறைவனின் திட்டத்திற்கு தன்னையே கையளிக்க முடியும் என்பதற்கு அன்னையே ஒரு முன்மாதிரி. அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத புனிதர்கள் அனைவரும் நமது முன்னோடிகளே! அவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்றால் அவர்களை கடவுளுக்கு இணையாக்கி விட்டோம் என்று சிலர் கதறுவது மிகவும் பாமரத்தனம். கடவுள் தனக்கு கீழ்படிந்த பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதியை நாம் கொண்டாடுகிறோம். தேர்வில் முதல்  மதிப்பெண் எடுத்த நம் நண்பனின் மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்கிறோம் அல்லவா? நாம் தோல்வியுறும் சமயத்தில் அவனது உதவியைப் பெற்றுக்கொள்கிறோம் அல்லவா? இதைப்போன்றது தான் கத்தோலிக்கத் திருச்சபை அன்னை மரியாளிடமும், அவரது கணவர் சூசையிடமும், எண்ணிலடங்கா புனிதர்களிடமும் கொண்டிருக்கும் நம்பிக்கையும். நண்பனின் வெற்றியில் பங்குகொள்ளதவர்களின் மனநிலை எத்தகைய வன்மங்களைக் கொண்டது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நமது சூழலில்

கத்தோலிக்கத் திருச்சபையின் யூபிலி ஆண்டானது உலகின் அனைத்துத் தலத்திருச்சபைகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆம்! யூபிலி ஒரு கொண்டாட்டத்தின் ஆண்டு. நாம் பாவத்தின் பிள்ளைகள் அல்ல. அருளின் பிள்ளைகள் என்பதை நினைவுபடுத்தும் ஆண்டு. நாம் நம்மையும், பிறரையும் அன்போடு ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் ஆண்டு. நம்மை அச்சுறுத்திய சென்னை-கடலூர் வெள்ளத்தில், இந்த இரக்கத்தின் யூபிலியை நாம் கண்கள் பனிக்க கண்டுகொண்டிருக்கிறோம். மனிதர்கள் முழு மனிதர்களாக செயல்படும் போது கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன். 

1. சென்னையில் பெய்த கனமழை பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தனர். இதனை அவர்கள் தங்களது வருமானத்திலிருந்து சேமித்து வழங்குவதற்காக கடந்த 3 நாள்களாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு அதில் மிச்சப்படுத்திய தொகையை மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் காசோலையாக வழங்கினர். இதை 'தமிழ் இந்து' நாளிதழில் (டிசம்பர் 8, 2015. யூபிலி ஆண்டின் முதல் நாள்) வாசித்த போது உண்மையாகவே அழுதுவிட்டேன். 'வரி தண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 21:31) என்ற இயேசுவின் வாக்கு நம் கண்முன் நிறைவேறிற்று. கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர்களின் வணக்கம் பற்றியே பதபதைத்துக் கொண்டிருப்பவர்களுக்குச் மட்டும் சொல்கிறேன். இத்தகைய தாய்மார்கள் இறையாட்சிக்கு உட்படுவதை நாங்கள் விழா எடுத்து கொண்டாட விரும்புகிறோம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

2. 'தமிழ் இந்து' இணைய நாளிதழில் வரும் செய்திகளை விட, அவற்றிற்கான வாசகர்களின் கருத்தை ஆவலுடன் படிப்பது என் வழக்கம். எப்போதும் இரண்டு வகையான கருத்துக்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும். இன்றைய (டிசம்பர் 8, 2015) நாளிதழில் எந்த ஒரு செய்திக்கும் நேரெதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இரு நபர்கள் மழை வெள்ளம் பற்றிய ஒரு செய்திக்கு இட்டிருந்த இணக்கமானப் பதில்கள்தான் அவற்றை இக்கட்டுரையில் பதியத் தூண்டுகின்றன.
நபர் 1:       'செ' என்ற புனைபெயரில் எழுதுபவர்.
'சென்னையில் இசுலாமிய சகோதரர்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மனிதாபிமானத்தின் அடையாளம் என்று சென்னையிலிருக்கும் என் உறவினர்கள் தெரிவித்தனர். பேரிறைவன் யாராயினும் அந்த இசுலாமிய சகோதரர்களுக்கு பெருங்கொடை அருள்வானாகுக.'
நபர் 2:       இவரது பெயர் ரெங்கநாத ஐயர்.
'இவர்கள் நமது சகோதரர்கள் அல்லவா? அப்புறம் ஏன் அவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?'
இது அவ்வளவு முக்கியமில்லாத ஒரு செருகலாகத் தோன்றலாம். ஆனால் இதுவும் என்னைத் தொட்டது. முதலாம் நபர் திராவிட சிந்தனை கொண்டவர். பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எப்போதும் கருத்து பதிவிடுபவர். இரண்டாமவர் ஒரு ஐயர். இருவரும் பேசுவது தங்களுக்கு சம்பந்தமில்லாத இசுலாமிய சகோதரர்களின் மனிதாபிமானப் பணிகளைப் பற்றி. சாதி, மதம், கொள்கைகள் எதுவும் மனிதாபிமானத்தின் முன் ஒன்றுமில்லாததாகிப் போகும் அதிசயத்தைக் காணமுடிந்தது. இதுவும் யூபிலியின் அடையாளம் தான்.

3. 'எனது இரத்த வகை 'ஓ பாசிட்டிவ்'. தேவைப்படுவோர் அணுகவும்' என்று ஒருவர் தனது அலைப்பேசி எண்ணைக் கொடுத்து முகநூலில் பதிவிட்டதாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஒரு கட்டுரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டடிருந்தார். பெறுவதை விட கொடுப்பதில்தான் இன்பம் என்பதையும் இந்த மழை நமக்குச் சுட்டிக்காட்டிவிட்டது. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தனது இரத்தத்தையும் கூட கொடுக்க மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். நாம் இன்னும் இறைவன் படைத்த நல்ல உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நண்பர்களே!

4. திரு. வை.கோ அவர்கள் சென்னையின் ஒரு பகுதியில் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பெண்மணியின் தட்டில் ஒரு அகப்பை உணவினை இடுகிறார். அடுத்த அகப்பையை எடுக்கும் முன் பெண்மணி திரும்பி விடுகிறார். வை.கோ அந்த பெண்ணைக் கூப்பிட்டு இரண்டாவது அகப்பை உணவையும் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். அந்தப் பெண்மணி கூறினாறாம், 'பின்னால் வருபவர்களுக்கு தேவைப்படலாம் ஐயா. மீதியிருந்தால் பிறகு வாங்கிக்கொள்கிறேன்' என்று. பேராசை என்னும் பேய் பிடித்த உலகத்திற்கு இந்தத் தாயார் நிறைய பாடம் சொல்லித் தருகிறார். 

5. எனது பள்ளிகால நண்பன் நேற்று என்னைத் தொடர்பு கொண்டான். தனக்கு ஒரு டெம்போ இருப்பதாகவும், நண்பர்கள் துணையோடு கடலூர் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு டெம்போ பொருள்களைச் சேகரிக்க முடிந்தால், தனது வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரினான். எத்தனை லோடு கிடைத்தாலும், அத்தனை முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினான். இதிலும் என்ன சிறப்பு என்றால் அவனது சொந்த ஊர் கன்னியாகுமரி. இப்போது வேலை செய்வது சவுதி அரேபியாவில். அவனது மனது எங்கிருந்தோ பதபதைக்கிறது கடலூரிலிருக்கும் தனது சகோதரர்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும். ஊரிலிருக்கும் இன்னொரு நண்பனின் உதவியோடு இதைச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம். 

இப்படி எத்தனை எத்தனையோ நெகிழ்ச்சியானப் பதிவுகளால் இந்த நாள்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. இந்த யூபிலி ஆண்டின் தொடக்கத்தில் நாம் இறைவனால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். நமது நம்பிக்கையைப் பலப்படுத்த இந்த ஆண்டு நமக்கு உதவட்டும். இயேசு என்ற தலைவரின் வழி தொடர இந்த ஆண்டு நமது கால்களுக்கு நிறைய ஆற்றலைத் தரவேண்டும் என்று விரும்புகின்றேன். எல்லைகள் இல்லாத மானுட சேவையில் நம்மையே இணைத்துக்கொள்வோம். பிறரன்புச் சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் வாழும் போதே நமக்குக் கிடைக்கும் மீட்பு. யூபிலி ஆண்டு அன்பின் ஆண்டு. சேவையின் ஆண்டு. மன்னிப்பின் ஆண்டு. நம்மைப் புதுப்பிக்க கிடைத்திருக்கும் இறைவனின் இரக்கத்தின் ஆண்டு! மகிழ்ந்து கொண்டாடுவோம்.

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பு யூபிலி ஆண்டுகள் (Jubilee Year of Mercy -1)

(அன்பு நண்பர்களே! காலம் கருதியும், நிகழ்வின் முக்கியத்துவம் கருதியும், கீழ்வரும் இந்தக் கட்டுரையானது முழுக்க முழுக்க இணையதளங்களிலும், வத்திக்கான் வானொலியின் செய்திகளிலிருந்தும் எடுத்து பதிவிடப்பட்டுள்ளது.-நன்றி)
ஒரு சிறிய 'ஃபளாஷ் பேக்':
பழங்கால யூத மரபில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேல் மக்கள் அனைவர் மத்தியிலும் சமத்துவத்தை நிலைநாட்டவும், தங்களின் சொத்துக்களையும், ஏன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இழந்தவர்கள் மீண்டும் அதைப் பெறவும், அடிமைகளும் கைதிகளும் விடுதலை பெறவும் இவ்வாண்டு கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்கத்தில் யூபிலி ஆண்டு எழுநூறு வருட வரலாற்றைக் கொண்டது. திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார். நூறு ஆண்டுக்கு ஒருமுறை இது கொண்டாடப்படுமாறு இவர் விரும்பினார். ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஆண்டைச் சிறப்பிக்க வேண்டும் என்று சொல்லி, 1475ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதுவரை 26 சாதாரண யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 2000மாம் ஆண்டில் கடைசியாக இது நிகழ்ந்துள்ளது.
ஆயினும், 16ம் நூற்றாண்டில், சில குறிப்பிட்ட நிகழ்வை வைத்து சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கும் பழக்கம் ஆரம்பமானது. மீட்பின் 1950ம் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை 2ம் ஜான் பால் 1983ம் ஆண்டில் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். இதே காரணத்திற்காக 1933ம் ஆண்டு சனவரி 6ம் தேதி திருத்தந்தை 11ம் பயஸ் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் இரு சிறப்பு யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.
சிறப்பு யூபிலி ஆண்டுகள் சாதாரண யூபிலி ஆண்டுகளைப் பாதிப்பதில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து இதுவரை கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன.
முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ்(1585-1590) அவர்களால் அறிவிக்கப்பட்டது. இவர் தனது பாப்பிறைப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றின் சிறப்பு தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.
1. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு ஆரம்பத் திருப்பலி
 அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, இச்செவ்வாய் அகில உலக கத்தோலிக்கத் திருஅவைக்கு மிக முக்கியமான நாள். இன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவின் முன் நின்று, நீதியின் கதவுகள் திறக்கட்டும் என்று சொல்லி புனிதக் கதவை தனது இரு கரங்களாலும் தள்ளித் திறந்து வைத்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி  ஆண்டை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'கடவுளின் நன்மைத்தனம் மற்றும் அன்புக்கு அருகில் இரக்கத்தின் யூபிலி நம் எல்லாரையும் அழைத்துச் செல்வதாக!' என்ற டுவிட்டர் செய்தியையும் இச்செவ்வாயன்று வெளியிட்டு இந்நாளை மேலும் சிறப்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இன்று காலையில் வானம் மந்தாரமாக,கார்மேகங்களால் நிறைந்திருந்து இலேசாக தூறல் விழுந்தாலும், அதிகாலை இருளான நேரத்திலே வத்திக்கானைச் சுற்றி ஏராளமான திருப்பயணிகள் கூட்டம். கடந்த நவம்பர் 13ம் தேதி பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னிட்டு, இத்தாலியில், குறிப்பாக, உரோமையில், இன்னும் குறிப்பாக வத்திக்கானைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் காவல்துறையினர் அதிகப்படியாக பணியில் இருந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, இச்செவ்வாய் விழாத் திருப்பலியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இம்மக்கள் எல்லாரும் நன்றாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் கொன்சிலியாசியோனே நெடுஞ்சாலையின் துவக்கத்திலே மக்கள் பரிசோதிக்கப்பட்டனர். இப்படி நாலா பக்கங்களிலிருந்தும் பரிசோதனைகள் நடந்தன. இத்தாலிய காவல்துறை, இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புத் துறையினரும், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இத்திருப்பலி நேரத்தில் விமானங்கள் எதுவும் வத்திக்கான் பகுதியில் பறக்கக் கூடாது என்ற ஆணையையும் இத்தாலிய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்தது.
இத்திருப்பலியில் கலந்து கொள்ள இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா தனது மகள் லவ்ராவுடன் வந்திருந்தார். இத்தாலியப் பிரதமர் மத்தேயோ ரென்சி, அவரின் மனைவி அஞ்ஞேசே, இன்னும் பல முக்கிய அரசுப் பிரதிநிதிகள், பெல்ஜிய நாட்டு அரசர் ஆல்பர்ட், அரசி பவுலா, இளவரசர் லொரென்ஸ், இளவரசி Astrid, செக் குடியரசின் செனட் அவையின் உதவித் தலைவர் Miluse Horska, நாடாளுமன்ற உதவித் தலைவர் Petr Gadzikஜெர்மனியின் உதவி அரசுத்தலைவர் Bundestag johannes Singhammer, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் Nicola Renzi  மற்றும் Lorella Stefanelli  உட்பட பல பிரிதிநிதிகள் வந்திருந்தனர். உரோம் யூதமதத் தலைவர் Riccardo Di Segni அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கு நல்வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளார். யூதர்கள் Chanukka'h ஒளி விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த யூபிலி ஆண்டு ஆரம்பிக்கின்றது. இருளும்,அடக்குமுறையும், சகிப்பற்றதன்மையும் உள்ள இடத்தில் இந்த யூபிலி ஆண்டு ஒளியைக் கொண்டு வருவதாக என வாழ்த்தியுள்ளார் ரபி Di Segni. இன்று காலை 9.15 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவிலுள்ள பியத்தா அன்னை மரியா பீடத்திற்கு முன்பாக, இத்திருப்பலியில் கலந்து கொள்ள வந்திருந்த நாடுகளின் பிரதிநிதி குழுக்களைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்குப் பின்னர், கர்தினால்களுடன் பவனியாக திருப்பலி மேடைக்கு வந்து விழாத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி தொடங்கியதும் கார்மேகம் இலேசாக கலைந்து கதிரவனின் ஒளி வீசத் தொடங்கியது. மலயாளம், சீனம், அரபு, ஸ்வாகிலி உட்பட பல மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு இடம்பெற்றது. குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் காணிக்கைப் பவனியில் காணிக்கைகளை எடுத்துச் சென்று திருத்தந்தையின் ஆசிர் பெற்றனர். பச்சிளங்குழந்தையையும், பிள்ளைகளையும் முத்தமிட்டார் திருத்தந்தை. இத்திருப்பலியின் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது.
2. இரக்கத்தின் யூபிலி ஆரம்பத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத்தில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை தலைமையேற்று நடத்திய திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரை:
அன்பு சகோதர, சகோதரிகளே, இன்னும் சிறிது நேரத்தில், இரக்கத்தின் புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன். இந்த எளிமையான சடங்கினை, இன்றைய இறைவார்த்தையுடன் இணைத்துச் சிந்திக்கும்போது,அடையாளச் செறிவு மிகுந்ததாய் தெரிகிறது. ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த ஓர் இளம்பெண்ணிடம், 'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று (லூக்கா 1:28) வானதூதர் கபிரியேல் சொன்னதை, இன்றைய இறைவாக்கில் கேட்டோம்.
வானதூதர் கபிரியேல் மரியாவின் இல்லத்தில் நுழைந்தபோது, மிக ஆழமான, அறியமுடியாத மறையுண்மைகள்,மரியாவின் மகிழ்விற்குக் காரணமாக அமைந்தன. நிறைவான அருள், மனித வரலாற்றை மாற்றக்கூடிய வகையில், மனித மனங்களை உருவாக்கக்கூடும்.
அமல உற்பவப் பெருவிழா, கடவுளின் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த அன்பு, பாவத்தை மன்னிப்பது மட்டுமல்ல, அந்தப் பாவத்தின் கறையே மரியாவின் மீது விழாதவாறு காத்தது. எதிர்வரும் ஆபத்தை முன்னோக்கிப் பார்த்து, காப்பது  இறைவனின் அன்பு.
தொடக்க நூலில் நாம் கேட்ட வார்த்தைகள், நம் தினசரி வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது. நம் வாழ்வை நாமே சமாளிக்கமுடியும் என்ற உணர்வில், இறைவனின் திட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் நம் அனுபவம்,இந்த வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பாவத்தின் வரலாற்றை, இறைவனின் அன்பு, மன்னிப்பு என்ற வரலாற்றின் ஒளியில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். இறைவன் தரும் இந்த வாக்குறுதியின் உன்னத சாட்சியாக, அமலியாய் பிறந்த கன்னி நமக்கு முன் நிற்கிறார்.
இந்த சிறப்பான புனித ஆண்டு, அருளின் கொடை. புனிதக் கதவு வழியே நாம் செல்லும்போது, நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்திக்க வரும் இறைவனின் அளவற்ற அன்பை மீண்டும் கண்டுணரப் போகிறோம். கடவுளின் இரக்கத்தைக் குறித்து நாம் இந்த ஆண்டில் உறுதி பெறுவோம். கடவுளின் இரக்கத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று பேசுவதற்கு முன், அவரது தீர்ப்பினால் தண்டிக்கப்படுவோம் என்று பேசும்போது, இறைவனுக்கும், அவரது இரக்கத்திற்கும் நாம் தவறிழைக்கிறோம் (புனித அகுஸ்தீன்). தீர்ப்புக்கு முன், இரக்கத்தை வைக்கவேண்டும்; இரக்கத்தின் ஒளியில்தான் அவரது தீர்ப்பு எப்போதும் செயலாற்றும். அன்பு செய்யப்படுகிறவர்கள், பயம் கொள்ளக்கூடாது என்பதால், புனிதக் கதவின் வழியே செல்லும்போது, நமது பயத்தை ஒதுக்கிவிடுவோம்.
இன்று நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, மற்றொரு கதவையும் நினைவுகூருவோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகிற்குத் திறந்துவைத்த அக்கதவை நினைவில் கொள்வோம். இந்தச் சங்கம், அனைத்திற்கும்  மேலாக, ஒரு சந்திப்பின் சங்கமாக அமைந்தது. இன்றைய உலகின் மனிதர்களுக்கும், திருஅவைக்கும் இடையே நிகழ்ந்த உண்மையான சந்திப்பு அது. பல ஆண்டுகளாக தனக்குள்ளேயே வாழ்ந்துவந்த திருஅவை, தூய ஆவியாரின் தூண்டுதலால், வெளியேறி வந்து, மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு அது. மக்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சந்திக்க திருஅவை வந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், மக்களைச் சந்திக்கும் மறைப்பணியை நாம் அதே சக்தியோடு, ஆர்வத்தோடு மீண்டும் மேற்கொள்கிறோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழி வெளிப்பட்ட திறந்த மனநிலையை புறக்கணிக்கக் கூடாது என்ற சவாலை இந்த யூபிலி நமக்கு முன் வைக்கிறது. அருளாளர் 6ம் பவுல், சங்கத்தின் இறுதியில், சொன்ன நல்ல சமாரியரின் உணர்வு, நம்மிடமும் விளங்குவதாக. புனிதக் கதவின் வழியே நாம் கடந்து செல்லும்போது, நல்ல சமாரியரின் இரக்கம் நமதாக விளங்க, நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
 3. தூய பேதுரு பசிலிக்கா புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு
இச்செவ்வாய் வத்திக்கான் வளாகத்தில் இடம்பெற்ற திருப்பலியில் இறுதி ஆசிருக்கு முன்னதாக புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு தொடங்கியது. சகோதர சகோதரிகளே, நம் மீட்பர் இயேசுவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் வழிநடத்தப்பட்டு மற்றும் அமல அன்னை மரியின் பாதுகாவலில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பிக்கிறோம். நம் முன்னால் புனிதக் கதவு திறக்கிறது. இப்புனிதக் கதவு கிறிஸ்துவே. நம் இதயங்களை தூய ஆவியாரின் செயலுக்குத் திறந்து வைப்போம். கிறிஸ்துவின் பெயரில் அமைதியில் புனிதக் கதவை நெருங்கிச் செல்வோம் என்று ஒரு தியாக்கோன் முதலில் வளாகத்தில் வாசித்தார். 
பின்னர் பீடப் பரிசாரகர் குழுவைத் தொடர்ந்து, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் பிரதிநிதிகள் குழுக்களும், ஆயர்களும், கர்தினால்களும் பவனியாக, தூய பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவின் முன் சென்று நின்றனர். அதன்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சென்று புனிதக் கதவின் முன்நின்றார். அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வாழ்த்திய பின்னர் செபம் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லாம் வல்ல இறைவா, இரக்கமும் மன்னிப்பும் நிறைந்தவரே, நற்செய்தியின் மகிழ்வில் சகோதர சகோதரிகளை அன்பு கூரவும், அருளின் ஆண்டில் வாழவும் எங்களுக்கு வரம் தாரும். தூய ஆவியாரைத் தொடர்ந்து எம்மில் பொழிந்தருளும் என்று செபித்து அமல அன்னையின் உதவியையும் நாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் நீதியின் கதவுகள் எனக்குத் திறக்கட்டும் என்று சொல்லி, மரபுப்படி தனது இரு கரங்களாலும் புனிதக் கதவை மூன்று முறை தள்ளித் திறந்தார். பின்னர் அவ்விடத்தில் நின்று சிறிது நேரம் செபித்தார். பின்னர் அவர் பசிலிக்கா உள்ளே போய் நிற்க, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றார். பின்னர் கர்தினால்களும் ஆயர்களும், மற்றவர்களும் புனிதக் கதவு வழியாகச் சென்றனர். பசிலிக்காவில் தூய பேதுரு கல்லறைப் பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரிய சிலுவை முன்நின்று தலைவணங்கிச் செபித்து தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில்,உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள், அமைதியில் செல்லுங்கள் என்று தியாக்கோன் ஒருவர் கூறினார். அத்துடன் புனிதக் கதவு திறக்கும் திருவழிபாடு நிறைவடைந்தது. அதன்பின்னர் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ மத்தரெல்லா உட்பட இத்திருப்பலியில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் குழு புனிதக் கதவு வழியாகச் சென்று செபித்தனர்.

இச்செவ்வாய் காலை திருப்பலிக்குப் பின்னர் பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனிதக் கதவு திருவழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி சொல்லியதோடு அனைத்து விசுவாசிகளும் அவரை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நேயர்களே, 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும். இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு காலத்தில் கருணைச் செயல்களில் ஈடுபடுவோம். 'நம் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல்...(லூக்.6:36)' நாமும் இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். 
 4. அமல அன்னை விழாவன்று, திருத்தந்தையின் மூவேளை செப உரை
இச்செவ்வாய், கொண்டாடப்பட்ட அமல அன்னை பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மூவேளை செப உரை:
அன்பு சகோதர, சகோதரிகளே, நம் முதல் பெற்றோரின் வழி வந்த பாவத்திலிருந்து மரியன்னை காக்கப்பட்டார் என்பதை இன்று தியானிக்க வந்துள்ளோம். இறைவனின் அளவற்ற இரக்கத்தால் காப்பற்றப்பட்ட முதல் மனிதப் பிறவி, மரியா. இரக்கத்தின் யூபிலி துவங்கும் இந்நாளில், மரியாவை அன்போடு தியானிக்க விழைகிறோம்.
நாம் வாழ்வில் 'ஆம்' என்று சொல்லும்போது, அமல அன்னையின் விழாவில் நாம் முழுமையாகப் பங்கேற்கிறோம். வாழ்வில் நம்பிக்கை இழந்துள்ள நம் சகோதர, சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்க முன்வருவதன் வழி, நம் 'ஆம்' வெளிப்படுகிறது. இவர்களைக் குறித்தே இயேசு, 'நான் பசியாய் இருந்தேன்,நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன்,என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35லி36) என்று கூறினார்.
நாம் வாழ்வில் பெற்றுள்ள அனைத்தும் கொடை, அனைத்தும் இரக்கம் என்பதை, இன்றைய விழா நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் இரக்கத்தை மீண்டும் நாம் கண்டுகொள்ள, அன்னை மரியா நமக்குத் துணை புரிவாராக.
 5. இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக அமையச் செபிப்போம்
நற்செய்தியின் முதன்மைச் சொல் இரக்கம் என்று இச்செவ்வாய் நண்பகல் மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் உரோம் ஸ்பானிய வளாகத்திலுள்ள அமலமரி நினைவுச் சின்னம் முன்நின்று செபிக்கவிருப்பதை அறிவித்தார்.
அன்னை மரியாவிடம் பிள்ளைக்குரிய பக்தியின் செயலாக, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவுக்கும் இச்செவ்வாய் மாலையில் தான் செல்லவிருப்பதாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவிடம், திருஅவையையும், முழு மனித சமுதாயத்தையும், குறிப்பாக, உரோம் நகரையும் அர்ப்பணித்துச் செபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நாளில் இரக்கத்தின் கதவு வழியாக நான் சென்றேன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் சென்றார்கள்,நாம் எல்லாரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நம் வாழ்த்தைத் தெரிவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரக்கத்தை நிரம்பப் பெறும் ஓர் புனித ஆண்டாக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இருப்பதற்குச் செபியுங்கள்,இதேபோல் எனக்கும் இருப்பதற்கு இயேசுவிடம் கேளுங்கள், எனக்கு இவ்வருள் அதிகம் தேவைப்படுகின்றது என்றும் வத்திக்கான் வளாகத்தில் மூவேளை செப உரைக்குக் கூடியிருந்த எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் 

(வத்திக்கான் வானொலியின் தமிழ் பிரிவிற்கே இந்த முதல் கட்டுரை சொந்தமாகும். நன்றி)

யூபிலி ஆண்டும் விவசாயமும்,  நான் ஆண்டவரின் அடிமை, சென்னை-கடலூர் மழை வெள்ள சூழலில் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் சிந்தனைகளை உள்ளடக்கிய  'இது இரக்கத்தின் ஆண்டு -2' என்னும் எனது இரண்டாவது கட்டுரையினை வாசிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
http://antonyfrancisomd.blogspot.it/2015/12/jubilee-year-of-mercy-2.html

செவ்வாய், 1 டிசம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை -3 (Everyone Feels Loneliness at Times in Their Life - 3)

மீண்டும் தனிமையைப் பற்றி எழுதுவது அயற்சியாக இருக்கின்றது. இருப்பினும் தனிமைக்கு ஒரு முடிவுகட்டியே ஆக வேண்டுமல்லவா? தனிமைக்கு மாற்றம், பிரிவு, புரிதலின்மை என்ற மூன்று காரணங்களோடு கடைசியாக ஒன்று புறக்கணிப்பு. 

4. புறக்கணிப்பு

இதனை விளக்குவது எனக்கு கடினமாகப் படுகிறது. மனது சொல்ல நினைப்பதை இந்த வார்த்தை அப்படியே சொல்லிவிடும் என்று நான் நம்பவில்லை. ஒரு சிலரை நாம் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதுகிறோம். அது ஒருதலைக் காதலாக இருக்கலாம். அல்லது ஒரு சிலர் நம்மோடு நீண்ட காலமாக நல்ல நட்போடு பழகுகிறார்கள். பரஸ்பர உறவாக இருக்கலாம். மொத்தத்தில் நல்ல பாசத்தில் ஊறித்திளைத்து, ஒருவர் மற்றவருக்கு ஒரு சமூக அடையாளமாக இருக்கும் அளவு முக்கியமான ஒரு உறவு. ஏதோ ஒரு சிறு காரணத்தால்  உங்கள் உறவில் கடுகு விதையினும் சிறியதாக ஒரு விரிசல் ஏற்படுகிறது. நாளைடைவில் ஓர் நாள் திரும்பிப் பார்க்கும் போது எல்லாம் கடந்த காலமாகிப் போயிருக்கிறது. உறவு புதுப்பிக்க இயலாத வண்ணம் முடிந்து போயிருக்கிறது. எதிர்காலத்திற்கான எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் நண்பரை நீங்கள் முழுவதுமாய் இழந்து இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறீர்கள். உங்களைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாத இந்த வலியை, எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் உங்கள் இதயம் கனத்துப் போய் கிடக்கிறது. 

சில துரோகங்கள் திட்டமிடப் படாமலே நடந்தேறிவிடுகின்றன ஒரு கொடிய விபத்தைப் போல. இருப்பினும் இரக்கமற்றதாய் இருக்கின்றன அதன் வலிகள். அதற்குப் பின்னரான உங்கள் காலம் தனிமையின் கனத்தைச் சுமந்தவாறே பயணிக்கின்றன. கூறப்பட்ட நான்கு காரணங்களிலும் நெருங்கிய நட்பு ஒன்றால் மிக எளிதாகப் புறக்கணிக்கப்படுதலே கனமானதாகவும், வலி நிறைந்ததாகவும், உங்கள் செயல்பாடுகளை முடக்கிப் போடுவதாகவும் அமைகின்றன.

உலகப் பிரச்சனைகளைக் கூடத் தீர்த்து வைப்பதில் கையாளப்படும் முக்கிய ஆயுதங்கள் இரண்டு. ஒன்று போர். இன்னொன்று பேச்சு வார்த்தை. ஒரு புறக்கணிப்பை விட கருணை மிக்கதாய் இருந்தாலும் அவனோடு போர் புரிய வேண்டாம். உங்கள் நண்பன் மிக எளியவன். மேலும் உங்களது பிரச்சனை ஒரு போருக்கான காரணத்தைக் கொண்டிருக்கவில்லை. சிறந்த வழி பேச்சுவார்த்தைதான். பேசிப் பாருங்களேன்! 

தனிமையைக் கையாள்வோம்!

நிறைய பாதிப்புகளைத் தனிமை ஏற்படுத்தவில்லையென்றால் நாம் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் நீங்கள் அல்லாத ஒன்றாக அது உங்களை மாற்றிவிடுகிறதென்றால் உடனடியாக செயல்பட வேண்டும். தனிமை தனது கொடிய ஆக்டோபஸ் கரங்களால் உங்களைச் செயல்பட விடாமல் சிறைபிடிக்குமுன் அதன் விலங்குகளை உடைத்து நீங்கள் விடுதலைக்; காற்றைச் சுவாசிக்க வேண்டும். 

தனிமை நம்மை பல கரங்களால் பிடித்து வைக்கிறது. வேலை வேலை என்று வேறு எதையும் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு ரகம். இவர்கள் சிறிது காலத்திலேயே கடுமையான உடல் உழைப்பால் களைப்பும், மனச் சோர்வுமடைகிறார்கள். மகிழ்ச்சியை  விலைக்கு வாங்க முயற்சிப்போர் இன்னும் சிலர். நமக்குள்ளிருந்து உருவாகும் ஒன்றை எந்த சந்தையிலும், எந்த விலையுயர்ந்த பொருட்களிலும் வாங்க முடியாது என்பதை உணர்ந்து ஏமாற்றமடைகிறார்கள். இன்னும் சிலர் எதையுமே செய்யாமல் உண்பதும், உறங்குவதுமாக தங்களுக்குள் புதைந்திருக்கும் அபரிமிதமான ஆற்றலைக் கண்டுகொள்ளாமல், தங்களது வாழ்வை வீணாக்குகிறார்கள். இவையெல்லாவற்றிலும் கொடியது சிலர் குடிப்பழக்கத்திற்கும், ஒழுக்கமற்ற வாழ்விற்கும் தங்களைக் கையளிப்பது. மரணத்தை விடத் துயரமானது வாழும் போதே மரணிப்பது. 

தனிமை நோயிலிருக்கும் ஒருவர் முதலில் இழப்பது வாழ்வின் மீதான நம்பிக்கையை. அன்பும், அரவணைப்பும் அந்த நபருக்குத் தேவைப்படுகிறது. இன்றைய அறிவியல் கடவுள் துகளைக் கண்டடைந்துவிட்டதாக சந்தோஷப்படுகிறது. உலகின் மிக மிகத் தாமதமானக் கண்டுபிடிப்பு இதுவாகத்தான் இருக்கும். கடவுளின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட கடவுளின் துகள் தான் நீயும், நானும். உன்னைப் புதிதாகப் படை. உனது உலகம் உன்னில் பருகட்டும் நாளைய வாழ்வுக்கான நம்பிக்கையை! 

தனிமையைத் துரத்த சில வழிகள்

1. காற்றுள்ள போதே

எந்த காரணத்தாலும் வந்திருக்கலாம் உங்கள் தனிமை. எதுவும் நிரந்தரமாக உங்களைத் தனிமைப் படுத்த முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எந்த காரணமுமின்றியும் தனிமையாய் இருக்க நீங்கள் பழகிவிட்டிருப்பீர்கள். ஆகவே காரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை வலிந்து ஏற்படுத்துங்கள். எதுவுமே செய்யமலிருக்கத் தூண்டும் சோதனையைக் குறித்து கவனமாயிருங்கள். 'சும்மா இரு! சும்மா இரு!' என்று சொல்லும் தனிமையின் குரலைக் கட்டாயமாகத் தள்ளி போடுங்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல கிடைத்த தனிமையை (நேரத்தை), அருமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு பயனுள்ள ஆற்றலை முழுமையாக, எந்த இடைஞ்சலுமின்றி, செயல்படுத்துங்கள். புத்தகம் வாசிப்பது, இசை ஆர்வமுள்ளவர்கள் அதில் கவனம் செலுத்துவது, புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய மக்களைச் சந்திப்பது போன்றவை சில பயனுள்ள பொழுது ஆக்கங்கள். 

பெரும்பாலும் தனிமை நோயால் அதிகம் பாதிக்ப்பட்டிருப்போர் தங்களை கவனிக்கத் தவறுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான உணவு, அன்றாட உடற்பயிற்சி, சரியான  உறக்கம் போன்றவற்றை அவர்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் பவுலடியார் தனிமையில் வாடிய போதும் தனது நண்பருக்கு கடிதம் எழுதுகிறார்;. போர்வையையும், புத்தகத்தையும் எடுத்து வருமாறு கூறுகிறார். போர்வை உடலின் மீதான அக்கறை, புத்தகம் மனத்தின் மீதான அக்கறை. முப்பது வருட மறைபரப்புப் பணிக்கான பரிசு கடைசி காலத்தில் சிறை வாழ்வு, நண்பர்களின் எதிர்ப்பு, புறக்கணிப்பு என்பதைப் பற்றி அழுது வடியாமல் தான் செய்ய வேண்டியதைச் செய்கிறார். நமக்கு கிடைத்தது புதிய ஏற்பாட்டில் ஒரு புத்தகம். இதுதான் காற்றுள்ள போதே தூற்றுவது. செயல்பாட்டிற்கு அதிகம் வாய்ப்பில்லை என்று புலம்பும் அருட்பணியாளர்கள், புதிய செயல்பாடுகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தைப் பவுலடியாரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

2. புன்னகை பழகுங்கள் நண்பர்களே! 

'நான் முதன் முறையாக வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றார்கள். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக' (2தெச 4:16) என்று பவுலடியார் கூறுகிறார். தனிமை உங்கள் எளிய மனத்தைக் கடினமாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பூக்கூடையில் யாரும் கறி வாங்குவதில்லை. வெறுப்பால் உங்கள் இதயத்தை நிரப்பிவிடாதீர்கள். எப்போதும் சலிப்பாகவும், கசப்பாகவும் பேசிக்கொண்டிருந்தால் உங்களோடு இருப்பவர்களும் விரைவில் ஓட்டமெடுத்துவிடுவார்கள். வலிகளில்லாத வாழ்க்கையில்லை. வைரமுத்து சொல்வார்: 'எனக்கு எதிரிகளில்லை. அவர்கள் தூரத்து நண்பர்களென்று'. உங்களைப் புறக்கணிப்பவர்களை தூரத்து நண்பர்களாக்குங்கள். அவர்களுக்கு உங்கள் நேரத்தைச் செலவழிக்காதீர்கள். பக்கத்துக் கதவில் உங்கள் அன்பிற்காக ஒரு உள்ளம் காத்திருக்கலாம். புன்னகை பழகுங்கள் நண்பர்களே!

3. செபம் என்னும் ஆயுதம்

'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்' (யோவான் 14:18) என்பது நம் தலைவரின் வாக்குறுதி. 'தனிமையில் இனி நான் இல்லை. தலைவன் இருக்கின்றான்' என்ற பாடல் நான் அடிக்கடி கேட்கும் ஒரு  பாடல். ஆடம்பரம் எதுவும் தெரியாத ஒரு எளிய இளம் அருட்பணியாளரை எனக்குத் தெரியும். செய்வதற்கென்று எதுமே இல்லாதது போல உணர்கிறேன். நான் என்ன செய்வது என்று ஒரு முறை அவரிடம் கேட்டேன். சிறப்பான பதில் எதையும் எதிர்பார்க்காமல், விளையாட்டுத் தனமாகத்தான் கேட்டேன். அவர் சொன்னார்: ' செபம் செய் தம்பி!' என்று. பங்குத் தளங்களுக்குச் சென்ற பின் நீயே ஆசைப்பட்டாலும் செபம் செய்வதற்கு சரியான நேரமும், தேவையான தனிமையும் கிடைப்பதில்லை. ஆகவே கிடைக்கும் நேரத்தில் செபம் செய்யக் கற்றுக் கொள் என்றார். ஒவ்வொரு நிகழ்வையும் கவனமாக உற்று நோக்கினால் கடவுள் பேசுவதைத் தெளிவாகக் கேட்கலாம். ஏனென்றால் 'கடவுள் நம்மோடு' என்பதுதான் இம்மானுவேல் என்ற நம் தலைவரின் பெயராம். தனிமையைத் துரத்தும் தலைச் சிறந்த ஆயுதம் செபம் தான். உங்கள் தோல்வியை, வலிகளை இதயத்தோடு, இதயம் பேசுவது போல் கடவுளிடம் பேசுங்கள். செபம் என்னும் ஆயுதம் கொண்டு தனிமை என்னும் பேயை விரட்டுங்கள். 

4. உங்களுக்குள்ளிருந்து வெளியேறுங்கள்

உங்களை விடவும் பெரிய ஏமாற்றங்களையும், துன்பங்களையும் அநியாயமாக அனுபவித்து வருபவர்கள் உங்கள் அருகாமையிலேயே இருக்கலாம். உங்களது வாழ்வைப் பற்றி எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் பெற்றோராகக் கூட இருக்கலாம். அவர்களது கதைகளைக் கேட்டால் உங்களது காரணங்களெல்லாம் ஒன்றுமேயில்லாததாகிவிடும். உங்களுக்குள்ளேயே புதைந்துவிடாமல், பிறருக்காக உயிர்த்தெழுங்கள். 

'கோரி டென் பூம்'  என்பவர் ஆம்ஸ்டர்டம் என்னும் நெதர்லாந்து (டச்சு) நாட்டின் தலைநகரில் பிறந்தவர். எழுத்தாளர், சமூக சேவகி, என்று பன்முக ஆளுமை கொண்ட பெண்மணி என்றாலும் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் இனப்படுகொலையிலிருந்து பல யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியவர் என்பதற்காகவே மிகவும் அறியப்படுகிறார். அவரைப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வினை 'புகலிடம்' (The Hiding Place) என்னும் புத்தகத்தில் பதிவு செய்கிறார். இளவயதில் இவரை எட்டிப்பார்க்கிறது காதல். தலைகீழாகக் காதலிக்கிறார்கள். திடீரென்று அவர்களுக்குள் ஒரு பிரிவு. சிறிது காலத்திலேயே அவரது நெருங்கியத் தோழியுடன் அவரது காதலருக்குத் திருமணம் என்னும் செய்தி இவரது செவிகளை எட்டுகிறது. புறக்கணிப்பின் உச்சத்தில் உடைந்து போய்விடுகிறார் கோரி. அப்போது அவரது தந்தையின் ஞானமிகுந்த அறிவுரை அவரைக் காப்பாற்றுகிறது. 'கோரி! உனது அன்பிற்கான வழியானது இப்போது அடைக்கப்பட்டுவிட்டது. இதனை உனக்குள் நீ புதைத்துவிடாலம். அது உன்னையே தின்று விடும். அல்லது மானுட சமூகத்திற்கானச் சேவையில் உனது அன்பை நீ அர்ப்பணிக்கலாம் என்றார். கோரி இரண்டாவது வழியைத் தேர்வு செய்கிறார். 

விவிலியத்தை தனது வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்ட இந்த அம்மையார், சிறப்பாக 'மன்னிப்பு' என்னும் கோட்பாட்டினை முதன்மையாகப் பரப்புகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சமூகங்களிடையே இணைப்பை ஏற்படுத்தியச் சேவைக்காக உலகின் பல நாடுகளிலும் உயர்ந்த விருதுகளைப் பெற்று அமெரிக்காவில் தனது நிறைந்த வயதில் இறைவனில் அமைதி கண்டார். இத்தகைய பெருவாழ்வு வாழ்ந்தோரின் கதைகளை வாசிப்தே ஒரு உற்சாகம் தரும் நன் மருந்தாகிறது.

5. இயேசுவில் இணைவோம்

வாழ்வில் எப்போதும் யாரையும் தனிமைப்படுத்தாமல் சமூகத்தில் பாலங்களை ஏற்படுத்தியவர்தான் நம் ஆண்டவர் இயேசு. தனிமையின் அனைத்து வலிகளையும் தனது வாழ்வில் அறிந்தவர். 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' (யோவான் 11:16) என்ற சீடரும், 'எல்லோரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும், நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்' (மத்தேயு 26:34) என்றவரும், இயேசுவைப் பிடிக்க வந்த காவலர்கள் முன்னிலையில் 'ஆடையின்றி தப்பியோடியதை' (மாற்கு 14:52) விவிலியம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. தனிமையில் அவதிப்படும் நண்பர்களுக்கு விவிலியம் ஒரு அற்புதமான நண்பனாக இருக்கமுடியும். குறிப்பாக திருப்பாடல்கள், யோபு புத்தகம், மற்றும் பிற இறைவாக்கினர்களின் புத்தகங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனித அனுபவங்களின் அடிப்படை குணங்கள் எதுவும் மாறிவிடவில்லை என்பதை நமக்குச் சுட்டிக்காட்டி நமது பார்வைகளை விரிவாக்குகின்றன. இன்னும் ஆழமான, அற்புதமான, ஒரு பகுதி இயேசுவின் பாடுகளை ஒட்டிய விவிவலியப் பகுதிகள். ஒவ்வொரு நற்செய்தியின் கடைசி நான்கு அல்லது ஐந்து பிரிவுகளில் இயேசுவின் சிலுவைப் பாடுகளை வாசித்து தியானிப்பதும், நமது துன்பங்களை இயேசுவின் பாடுகளோடு தியானிப்பதும் நம்மை உயிர்ப்பை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இயேசுவைக் காட்டிக்கொடுத்தல், தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்துதல், பிலாத்துவிடம் கொண்டு செல்லுதல், படைவீரர்கள் ஏளனம் செய்தல், சிலுவையில் அறைதல், உயிர்விடுதல் எதிலுமே இயேசு தனது இயல்பை மாற்றிக்கொள்ள வில்லை. அவரோடு பயணித்துப் பார்த்தால் அவரது இதயம் உணர்ந்த தனிமையின் வலியானது, அவரது உடல்வலியைக் காட்டிலும் அதிகமாக அவரை வருத்தியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கையறு நிலையிலும் அவர் தனக்காக அழ வேண்டாம் என்கிறார். இன்றே வான்வீட்டில் என்னோடு இருப்பாய் என்று கள்வர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். தந்தையே இவர்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. எனவே இவர்களை மன்னியும் என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னிக்கிறார். தனிமையில் நாம் நம்மைத் தொலைத்துவிடாமலிருக்க, சூரியனிடமிருந்து ஒளிபெரும் நிலவு போல, இயேசுவோடு உடனிருந்து, அவரது ஒளியை பெற்று பிறருக்கும் வழிகாட்டுவோம்.

நன்றி! 
(தனிமை பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரானது ரிக் வாரன் (Rick Warren)அவர்கள் எழுதிய 'வாழ்வின் கடினமானக் கேள்விகளுக்கு கடவுளின் பதில்' (God's Answers to Life’s Difficult Questions) என்னும் ஆங்கிலப் புத்தகம் வழங்கிய உள்ளுணர்விலிருந்து எழுதப்பட்டது. இப்புத்தகம் எழுப்பும் இன்னும் பல கேள்விகளோடும், பதில்களோடும் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதலாம் என்று இருக்கின்றேன். உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி)

திங்கள், 23 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை -2 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -2 )

கடந்த கட்டுரையில் பார்த்தது போல தனிமைக்கு முதன்மைக் காரணம் சரியாக ஏற்றுக்கொள்ளப்படாத வாழ்க்கை மாற்றமே ஆகும். பவுல் தன் வாழ்வின் கடைசி மாற்றத்தின் காலத்தில் இருந்தார். அவருடைய காலம் நீரோ மன்னனின் கையிலோ, வயது முதிர்ச்சியிலோ அல்லது நோயிலோ முடிவுற போகிறது என்பதை உணர்ந்த பவுல், தனிமையை அனுபவிக்கிறார். 'ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கின்றேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்.' (2திமோ 4:7). 

2. பிரிவு

இரண்டாவது காரணம் பிரிவு. நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தொழில் காரணமாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலையாலோ பிரிந்திருக்க வேண்டிய நேரத்தில் தனிமை உணர்வு ஏற்படுவது இயல்பே. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' என்ற பாடலை வெளியூரிலிருந்து கேட்டால் தனி இன்பம் தான். மனிதர்கள் நலமோடு வாழ மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். உறவுகளோடு உறவாடுவதும், நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அத்தியாவசியத் தேவைகளே! 

பவுல் சிறையிலிருந்து எழுதுகிறார், 'விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்' (2திமோ 4:9). பவுல் ஒரு மக்கள் விரும்பி. எப்போதும் அவரோடு நண்பர்கள் இருந்தனர். அவரோடு பயணித்தனர். திருத்தூதுப் பயணத்தில் அவர் தனியாக எங்கும் சென்றதே இல்லை. செல்லுமிடமெல்லாம் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர். ஆனால் வாழ்வின் கடைசி காலத்தில் அவரோடு யாருமில்லை. இன்று போல 'சாப்பாட்டுக் குழு', 'லவ்லி ஃப்ரெண்டஸ்', 'பாசக்காரங்க' போன்ற வாட்ஸ்அப் குழுக்களுக்கான வசதிகளும் இல்லை. 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும், நூல்களையும், குறிப்பாக தோற்சுருளையும் எடுத்துவா' (2திமோ 4:13). 'குளிர் காலத்திற்கு முன் வர முழு முயற்சி செய்' . (2திமோ 4:13). பவுலின் இதயம் உயிர்த்த இயேசுவை அறிவிப்பதற்காகவே துடித்தது. அந்த இதயம் உணர்ந்த கனத்த தனிமையை இவ்வரிகள் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. தனிமையைச் சூடேற்றும் குளிர்காலம், அதைத் தணிக்கத் தடித்த போர்வை, கால அட்டவணைக்குட்படாத தூக்கம், அவ்வப்போது புத்தகம் படிப்பது, அறையின் மேல் விட்டத்தை வெறித்துப் பார்ப்பது, பிரிவு தருகின்ற தனிமையின் அங்க அடையாளங்கள். 

'விரைவில் வர முழு முயற்சி செய்' என்ற வார்த்தைகள் வெறும் அழைப்பு மட்டுமல்ல. அது ஒரு ஏக்கம். நீ வரும் வரை நான் இருப்பேனா என்றே தெரியவில்லை. சீக்கிரம் வா! உன்னைப் பார்க்க வேண்டும் என்ற இந்த ஏக்கம் இன்றும் நம்மில் எதிரொலிக்கிறது. வெளிநாடுகளில் வேலை செய்யும் பிள்ளைகளுடைய தாய், தகப்பனின் இந்த ஏக்கம், அந்திநேர அலைப்பேசி அழைப்புகளில் எதிரொலிக்கிறது. நம்மை விரும்பும் யாரிடமாவது நீண்ட நாள்களாக தொடர்பே இல்லாமல் இருக்கிறோமா? ஒரு சிறிய பாராட்டைத் தருவதற்கும் தாமதிக்கிறோமா? விரைவாக செய்துவிடுவோம். அந்த நபரோ அல்லது நாமோ நிரந்தரமானத் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் செல்வதற்கு முன்.

3. புரிதலின்மை

உறவுகளிடையே சரியான புரிதலின்மையும் தனிமைக்குத் தீனி போடும் இன்னொரு காரணியாம். உங்கள் திறமைக்கு ஒரு சவால் என்று தோழி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி. H0W 0UR M1ND C4N D0 AM4Z1NG 7H1NG5 என்று தொடங்கி ஒரு ஏழெட்டு வரிகளுக்குச் செல்கிறது அந்த குறுஞ்செய்தி. சந்தேகத்திற்கிடமின்றி உங்களால் இந்த ஆங்கில வரியை வாசிக்க முடிகிறது தானே. இது தான் நமது மூளையின் வலிமை. கறாரான ஆங்கில ஆசிரியரின் பார்வையில் நிறைய எழுத்துப் பிழைகள் இவ்வரியில் இருப்பினும், நம்மால் இதைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இந்த வார்த்தைகள் நமக்குப் பழக்கப்பட்டவை. இப்படி இருந்தால் இது இந்த வார்த்தைதான் என்ற முன் முடிவிற்குச் சென்றுவிடுகிறது நமது அறிவு. இது மிகவும் பயனுள்ள ஒரு செயல்பாடாக இருந்தாலும், எப்படி எழுத்துப் பிழையுள்ள தவறை, மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அது போலவே மிகச் சரியான ஒன்றை, தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. நமது சமூக உரையாடல்களில் அடிக்கடி நிகழும் புரிதலின்மைக்குக் காரணம் நமது பழக்கப்பட்ட பார்வைகளும், அதனால் தானாக நிகழும் முன்முடிவுகளுமே!

அலுவலகத்தில் எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் எல்லாம் மாறிவிடுகிறது. உங்களிடம் உங்கள் மேலதிகாரி நட்புடன் பழகுகிறார் என்ற சாதாரண நிகழ்வானது, நீங்கள் மற்ற ஊழியர்களைப் பற்றி மேலதிகாரியிடம் போட்டுவிடுகிறீர்கள் என்று ஒரு பெரிய மனசுக் காரரால் கிளப்பி விடப்படுகிறது. உங்களிடம் உங்கள் அலுவலக நண்பர்கள் கூட கொஞ்சம் 'கவனமாகவே' நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் மட்டும் அழைக்கப்படாத மாலைநேர விருந்துகள் அடிக்கடி நடக்கின்றன. அவர்களது போதை நேர பேச்சு முழுவதும் உங்களைப் பற்றியும், உங்கள் கடந்தகாலத் தவறுகள் பற்றியும், நீங்கள் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதற்கான காரண, காரியங்கள் பற்றியதாகவுமே இருக்கின்றன. நீங்கள் தனித்துவிடப்படுகிறீர்கள். 

நமது மூளை பழக்கப்பட்ட செயல்களை விளக்குவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பார்த்த மாத்திரத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றது. இவை பல நேரங்களில் தவறாகவே இருப்பதால் பிறரைப் பற்றிய தவறான புரிதலுக்கு மிக எளிதாக வந்துவிடுகிறோம். பிறரது செயல்பாடுகள் நமக்கு பயத்தை வருவிக்கின்றன. நமது முன்னேற்றத்திற்கு அது முட்டுக்கட்டையாவது கூட நமக்கு தெரிவதில்லை. 

'கன்னாவாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான்' (2திமோ 4:14) என்று பவுலடியார் குறிப்பிடுகிறார். எத்தகையத் தீமைகள் என்ற குறிப்புகளின்மையால், நம்மால் யூகிக்க மட்டும்தான் முடிகிறது. பவுலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கலாம். அவரது நற்செய்தி அறிவிப்புப் பணியில் முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். மக்களை அவருக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கலாம். இதனால் ஏற்கனவே தனிமைச் சிறையிலிருக்கும் பவுலடியாருக்கு இதுவும் ஒரு மனப்பாரமாகிப் போகிறது. குடும்பங்களை, நண்பர்களை, சொந்த ஊரை, அன்னை ஊட்டும் உணவை எல்லாம் துறந்து, நற்செய்திக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் குருக்களுக்கும், துறவிகளுக்கும் எதிராக பங்குகளில் கிளப்பிவிடப்படும் கதைகளுக்கு ஒரு அளவே இருப்பதில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக, தவறாக புரிந்து கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. மனம் விட்டு பேசி, புரிதலை சரி செய்வது கடினமாக இருக்கிறது. ஈகோ அதனை ஒத்துக்கொள்வதில்லை. 

பிறரை தனிமைப் படுத்தாமலும், நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ளாமலும் இருக்க உறவுகளில் புரிதல் அவசியம். சிலரை புரிந்துகொள்ளவே முடியவில்லையென்றாலும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தவறாக புரிந்துகொள்ள வேண்டாமே.!

தனிமை நீங்கும்.......கட்டுரை தொடரும்


வெள்ளி, 20 நவம்பர், 2015

எல்லோருக்குமானது தனிமை - 1 (EVERYONE FEELS LONELINESS AT TIMES IN LIFE -1)

தனிமை உணர்வே மனிதனை நம்பிக்கை இழக்கச் செய்யும் மிகப்பெரியக் காரணியாகும். சில சமயங்களில் நம்மை யாருமே அன்பு செய்யவில்லையோ, நம்மைக் கவனிப்பார் யாருமில்லையோ என்று கழிவிரக்கப்படுகின்றோம். நீங்கள் தனிமையாக உணர, தனியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நல்ல மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் தனிமையாக உணர முடியும். எத்தனை பேர் உங்களைச் சுற்றி இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தல்ல. அவர்களுடனான உங்கள் உறவே உங்கள் தனிமை உணர்வைத் தீர்மானிக்கின்றன.  

நீங்கள் நிறைய பணம் வைத்திருந்தும் தனிமையாக உணர முடியுமா? நம்மைப் போல் இல்லாமல் பணக்காரர்கள் ரொம்பப் பாவம். அவர்கள் தனிமை நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நீங்கள் மிகவும் அழகாக இருந்தும் தனிமையை உணர முடியுமா? தற்கொலை செய்துகொண்ட மர்லின் மன்றோ முதல் சில்க் சுமிதா வரையிலும் கேட்டுப்பாருங்கள். திருமணமாகியும் தனிமை வருமா? தனிமைக்குப் பயந்து திருமணமாகி, பின்னர் அதே தனிமை நோயினால் விவாகரத்து வாங்கும் தம்பதியினரைக் கேட்டுப் பாருங்கள்.

எல்லோரும் தங்கள் வாழ்வில் எப்போதேனும் நிச்சயமாகத் தனிமை நோய்க்குட்படுகிறார்கள். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பது போலவே, குணப்படுத்தும் காரணிகளும் பல இருக்கின்றன. சில தருணங்களில் தனிமையை நாமே வருவித்துக்கொள்கிறோம். தவிர்க்க முடியாத இன்னும் சில தருணங்கள் நம்மைத் தனிமைப்படுத்துகின்றன. இத்தகைய தனிமை நோயைத்தான் திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலே அனுபவிக்கிறார். சாவை எதிர்பார்க்கும் முதியவர் பவுல் தன் இளைய நண்பர் திமோத்திக்கு இரண்டாவது கடிதத்தை எழுதுகிறார். தனிமைச் சிறையிலிருக்கும் தன்னை வந்து பார்க்குமாறு ஏக்கத்தோடு எழுதுகிறார் பவுல்.

தனிமை நோய்க்கான காரணங்களைப் பார்ப்போமா?

1. மாற்றம்

வாழ்வின் பருவ மாற்றம் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாத வரையிலும் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. பல்வேறு நிலை மாற்றங்களையும், பருவ மாற்றங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே ஒரு முழு மனித வாழ்வாகிறது. எந்த மாற்றங்களும், தனிமையையும் சேர்த்தே கொண்டு வருகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப் படுவதைத்தான் பிறப்பு என்று கொண்டாடுகிறோம். வாரி அணைத்துத் தடவிக்கொடுக்கும் வரையிலும் குழந்தை அழுதுகொண்டுதானிருக்கிறது. பள்ளி வாழ்வின் முதல் நாளில் தனிமைப்படுத்தப்பட்டதன் பயத்தை இப்போதும் அடிவயிற்றில் கை வைத்துப் பார்த்தால் உணர முடிகிறது. வேலையில் சேர்வது தனிமை. வேலையை மாற்றுவதும் தனிமை. வேலை செய்தது போதும் என்று ஓய்வெடுக்கச் சொன்னாலும் தனிமை. போராட்டமெல்லாம் போதும் இனி ஓய்ந்து இளைப்பாறு என்று மரணப்பெண் தழுவினாலும் தனிமை. எல்லோருக்குமானது தனிமை.

வயது முதிர்ச்சியென்னும் பருவ மாற்றம் தானாகவே கொண்டு வரும் தனிமை போதாதென்று, பெற்றெடுத்தப் பிள்ளைகளே கவனியாது புறக்கணிக்கும் போது, அந்த இருபக்கத் தனிமை என்பது சுமக்கவே முடியாத சுமையாகிப் போகிறது. முதியோர் இல்லங்களிலிருக்கும் பெரியவர்களில் எழுபது சதவிகிதத்தினருக்கு ஒரு பார்வையாளர் கூட வருவதில்லை. காலச்சக்கரம் சுழலும் போது இதன் வலியை எல்லோரும் புரிந்து கொள்வோம். ஏனெனில் எல்லோருக்குமானது தனிமை.


                                                                                   தனிமை நீங்கும்....கட்டுரை தொடரும்