செவ்வாய், 22 ஏப்ரல், 2014

குட்டித் தம்பியும், புது நன்மையும் (First Holy Communion And My Cute Brother)

வீடே கலகலப்பாயிருந்தது. அத்தை, மாமா, பெரியப்பா வீட்டு அண்ணன், சித்தி, பாப்பா என்று யாவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். எனது புதுநன்மை விழாவிற்குத்தான் இத்தனை தடபுடல் ஏற்பாடுகள். இந்தமுறை நானும் எனது செல்ல தம்பியும் சேர்ந்தே புதுநன்மை பெற இருக்கிறோம் என்ற நினைவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இத்தோடு பதினேழு முறை இயேசு படத்திற்கு முன் ஓடிச் சென்று மூச்சிறைக்க 'நன்றி இயேசப்பா' என்று சொல்லிவிட்டேன். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பத்தாம் திருவிழாவிற்கே எனக்கு புதுநன்னை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் ஆகியிருந்தது. அப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது. என்னால் புதுநன்மை பெற முடியவில்லை. மருத்துவ மனைக்கு வந்தா யாரும் புதுநன்மை தருவார்கள்?

அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தம்பி மூன்றாம் வகுப்பு. அவனுக்கு என் மேல் ரொம்ப பாசம். எப்போதும் அக்கா! அக்கா! என்று என் பின்னாலேயே ஓடி வருவான். நான், அபி, சுஜி, குமாரி என்று என் வகுப்பு பிள்ளைகளுடன் விளையாடினாலும் அவன் என் கூடவே வருவான். நான் தான் திட்டுவேன். 'டேய் போடா! உன் வகுப்ப பசங்க கூட வெளையாட வேண்டியதுதானே!' என்று பல முறை அவனை விரட்டுவேன். ஆனாலும் அவனுக்கு அக்காதான் உலகம். நான் அம்மா மடியில் படுத்துக்கிடப்பேன். அவன் என் கால்களில் தலை வைத்துக்கொள்வான். அம்மா எனக்கு தலை வாரிக்கொண்டிருப்பாள். அவன் என் முகத்தையே ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பாசமானத் தம்பி யாருக்குமே கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். இப்போது அவனோடு சேர்ந்து இந்தத் திருவிழாவில் புதுநன்மை வாங்குவதற்காகத்தான் அந்த விபத்து நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அந்த விபத்தும் நன்மைக்கே!

ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் என்னோடு சேர்த்து பதிநான்கு பேருக்கு புதுநன்னை வழங்க பத்தாம் திருவிழாவிற்கு ஆயர் வருகிறார் என்று ரோஸ்லின் சிஸ்டர் சொன்னது இப்போதும் காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தான் ஆயரை ஒரு முறை பார்த்திருப்பதாகவும், அவர் குண்டாக, தலையில் ஒரு அழகான தொப்பியும், கையில் ஒரு கோலும் வைத்திருப்பார் என்றும் அபி என் காதில் கிசுகிசுத்தாள். மனம் முழுவதும் ஆயர், அவரது தொப்பி, செங்கோல், புதுநன்னை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தம்பியும் மிகவும் சந்தோசமாக இருந்தான். ஏழாம் திருநாளுக்கே மாமா எனக்கு வெள்ளை நிற கவுனும், தங்க நிறத்தில் ஒரு அழகான காலணியும் வாங்கி வந்தார்கள். மாமா வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருந்தார்கள். தாத்தா, பாட்டி, சித்தி,  என்று வீடே கலகலப்பாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. சித்திக்கு அப்போது கல்யாணமே ஆகியிருக்கவில்லை.

எல்லாரும் வந்து என் தலையில் சிலுவை போட்டும், கன்னத்தில் முத்தியும், நிறைய தின்பண்டங்கள் வாங்கி வந்தும் ஒரு குட்டி இளவரசியைப் பார்ப்பது போலவே என்னைப் பார்த்தார்கள். வீடு நிரம்ப விருந்தினர்கள் இருந்தாலும் தம்பி என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை போல இவன் அக்கா பிள்ளை என்று அம்மா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒன்பதாம் திருவிழாவிற்கு கேரளாவிலிருந்;து மேளக்காரர்கள் வந்து தங்களது இசைக்கருவிகளை தட்டியும், ஊதியும் சரிபார்த்துக்கொண்டிருந்தது ஒலிப்பெருக்கியில் கேட்டது. தெரு முழுவதும் வண்ண விளக்குகள், மேள வாசிப்புகள் என்று இருந்தாலும் மனதில் நாளை காலை வருகை தரும் ஆயர், தொப்பி, செங்கோல், மற்றும் புதுநன்மை இவைகள் தான் நிரம்பியிருந்தன. அப்போதுதான் அது நடந்தது. தூரத்தில் பெரியப்பா கையில் ஏதே பெரிய பையுடன் வருவதைப் பார்த்ததும் நான் ஓடி சென்று தெருவில் இறங்கியதும், ஏதோ ஒன்று என்னை இடித்துத் தள்ளியதும் மட்டுமே இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அதன் பிறகு நான் மருத்துவமனையில் தான் கண் திறந்தேன்.

பின்னர் நடந்ததை அம்மா சொல்லிதான் தெரிந்து கொண்டேன். வேகமாக வந்த இருசக்கர  வாகனம் ஒன்று என்னை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமலேயே சென்று விட்டது. என் தம்பிதான் வழக்கம் போல என் பின்னாலேயே ஓடி வந்திருக்கிறான். தலையில் அடிபட்டதால் நான் உடனே மயங்கி விழ அவன் தான் கத்தி கதறி எல்லாரிடமும் சொல்ல, திருவிழா இரைச்சலுக்கு மத்தியிலும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து விட்டார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பங்குத்தந்தை அவரது காரிலேயே என்னை எடுத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தலையில் அடி என்பதான் நிறைய இரத்தம் வெளியெறி கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. உடனடியாக ஏபி நெகட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவர் அவசரப்படுத்தினாலும் அங்கு என் தம்பியைத் தவிர யாரிடமும் குறிப்பிட்ட அந்த இரத்த வகை இல்லை.

அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால், மாமா தான் என் தம்பியிடம் விசயத்;தை சொல்லியிருக்கிறார். என் தம்பி நிலைமை தெரிந்தும் உடனே இரத்தம் கொடுக்க மறுத்து அழத்தொடங்கிவிட்டான். எல்லாரும் எடுத்துச் சொல்லியும் தம்பி இரத்தம் தர ஒப்புக்கொள்ளவே முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டது. இரத்தம் செலுத்தப்பட்டதும் நான் ஓரளவுக்கு திடமாகி கண்களைத் திறந்து விட்டேன். தம்பிதான் அசதியில் தூங்கிவிட்டிருந்தான். எனக்கு அடி பலமாக இருந்தாலும் உள்காயமோ, முறிவுகளோ இல்லை என்றும் இரண்டு நாள்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் மருத்துவர் சொல்லிய பிறகுதான் எல்லாருக்கும் உயிர் வந்திருக்கிறது. அம்மா தம்பியை மடியில் கிடத்தி இரத்தம் கொடுத்த அவனது கைகளைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அவன் கண்களைத் திறந்ததும் அவன் கேட்ட கேள்விதான் இந்தக் கதையையே உங்களிடம் சொல்ல வைத்தது. 'நான் இன்னும் சாகலையா?' ஒரு முறை இரண்டு முறையல்ல பல முறை வியப்போடு அவன் எல்லாரிடமும் கேட்ட கேள்வி இதுதான்: 'நான் இன்னும் சாகலையா?'. இரத்தம் கொடுத்தால் தான் இறந்து விடுவோம் என்றுதான் அவன் முதலில் மறுத்திருக்கிறான். பின்னர், தான் இறந்தர்லும் பரவாயில்லை தான் அதிகம் நேசிக்கும் அக்காவிற்காக, அதாவது எனக்காக, அவன் சாகவும் முடிவு செய்தே இரத்தம் கொடுத்திருக்கிறான்.

நற்கருணை என்பதன் உண்மையான அர்த்தத்தை எனக்கு கற்றுக்கொடுத்த என் செல்லத் தம்பிக்கும் எனக்கும் நாளை புதுநன்மை. நீங்களும் அவசியம் வாருங்கள். 

திங்கள், 24 மார்ச், 2014

மரி'யாள்
யாழ் கொண்டுதானே
இசை மீட்டுவர்!
என்ன ஆயிற்று கடவுளுக்கு?
மரி'யாள்' கொண்டு மீட்டுகிறார்
இயேசு என்னும் இசையை...

கைதேர்ந்த கலைஞன்
விரலுக்கு வீணை அடிமை
கடவுளுக்கு அன்னை மரியாள்!

உயிர் வளி ஊதி
விரல் செய்யும் வித்தையில்
நாத சுர ஜனனம்
கடவுளின் ஆவிக்கு
அஞ்சல்காரனோ கபிரியேல்!

மரிமலர் தரித்த கர்ப்பத்தில்
பனிமலர் பிறந்த அதிசயம்
பாலன் இயேசு!

கனி ஒன்றைத் தாங்கி
கனிவோடு சென்றதோ
பூமரம்!
பகலவனைச் சுமந்து
பணிசெய்யச் சென்றதோ
பனித்துளி!
அன்னை மரியாள்
எலிசபெத்தை சந்திக்கிறார்
ஆண்டவரின் அலைவீச்சில்
சிணுங்கும் அலைபேசியாய்
எலிசபெத் வயிற்றில் யோவான்

பழுத்த இலை
பச்சை இலையை வாழ்த்த
பாடுகிறது பச்சை இலை
படைத்தவனைப் புகழ்ந்து!

இறைவா நீர் போற்றி!
இரவு நேர தடாகம் நான்
நிலவு உம் ஒளி தாங்கி நிற்கிறேன்
இனிவரும் கவிஞரெல்லாம்
இந்தக் குளத்திற்குமன்றோ
பா பாடுவர்

தரைநோக்கும் மொட்டுக்கள்
உம் ஒளிபட்டு மலராகி மகிழ
செருக்கோடு வான் நோக்கும் புற்கள்
உம் வெப்பத்தால் பதராகி போனதுவே!
வாக்கு மாறாத தந்தையே

நீர் வாழிய! வாழியவே!

ஞாயிறு, 12 மே, 2013


புலிகளின் வருகை மிக விரைவில்....
தொடை நடுங்கிகளின் கவனத்திற்கு!

திங்கள், 12 மார்ச், 2012

மகதலா மரியாவின் தான்மையும், மேன்மையும் (Mary Magdelene, in a Feminist perspective)

               மகதலா மரியாவின் தான்மையும், மேன்மையும்

முன்னுரை

பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடு மீசன்
மண்ணுக்குள் ளேசில மூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்'
என்பது பெண்ணியப் போராளி பாரதியாரின் உண்மை வரிகள். இன்றளவும் பெண் விடுதலையை வெறும் ஏட்டளவிலும், உதட்டளவிலும் மட்டுமே கொண்டுள்ள ஆணாதிக்க, பெண்ணடிமைத் திருச்சபைக்கு புத்தித் தெளிவூட்டும் திறம் கொண்ட வீரப் பெண்ணாக, தான்மைத் தெளிவும், பணி மேன்மையும் கொண்டு, இயேசுவின் உண்மைச் சீடத்தியாக வலம் வந்த மகதலா மரியாவின் வாழ்க்கை என்னுள் ஏராளம் சிந்தனைகளைக் கிளறி விட்டதன் பயனே இக்கட்டுரையாக்கம். பத்தோடு ஒன்று பதினொன்றாக மாறிவிடாமல், இப்பெண்ணின் வாழ்வு நமக்குக் கற்றுத் தரும் பாடங்களைக் நம் அன்றாட வாழ்வில் முழுக் கவனத்தோடு செயல்படுத்தினால் பெண்விடுதலை சாத்தியமாவது எளிதனாகதாகும் என் நம்பிக்கை.

விவிலியத்திலிருந்து

 'பொல்லாத ஆவிகளினின்றும், நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும் ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியாவும்,... மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்' (லூக்கா 8:2-3).
 'வாரத்தின் முதல் நாளான்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்ளூ' (யோவான் 20:1-2)
 'மகதலா மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்'(யோவான் 20: 11).
 'இயேசு அவரிடம் 'மரியா' என்றார். மரியா திரும்பிப் பார்த்து 'ரபூனி' என்றார்' (யோவான் 20: 16)
 'மரியா புறப்பட்டுச் சென்று இயேசுபோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.' (மாற்கு 16: 9)

யார் இந்த மகதலா மரியா?

 கலிலேயா கடற்கறையிலுள்ள, திபேரியா என்னும் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஓர் இடத்தின் பெயர்தான் மகதலா என்பதாகும். மரியா இப்பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்ளூ அதன் அடிப்படையிலேயே அவர் இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. லூக்கா 7: 36 இல், இயேசுவின் காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணம் பூசிய பாவி என்று கூறப்பட்ட அந்தப் பெயர் குறிப்பிடப்படாதப் பெண், யோவான் 11 இல் நாம் காணும், லாசர், மற்றும் மார்த்தாவின் சகோதரியான பெத்தானியாவைச் சார்ந்த மரியா மற்றும் நம் புரட்சிப் பெண் மகதலா மரியா ஆகிய மூவரும் ஒருவரே என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் பரவலான நம்பிக்கை. ஆயினும் இதைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏன் இந்தக் குழப்பம்?

தெர்த்துல்லியன் லூக்கா 7 இல் காணும் பெயர் குறிப்பிடப்படாத, பாவி என்று கூறப்பட்ட பெண்ணும், யோவான் 12 இல் காணும் லாசரின் சகோதரியான பெத்தானியா மரியாவும் இயேசுவின் காலடிகளைக் கழுவி, கூந்தலால் துடைப்பதால் இருவரும் ஒரே நபராக இருக்கக் கூடும் என்பது தெர்த்துல்லியனின் கருத்து. இருப்பினும் இந்த இரண்டு செயல்பாடுகளும் வௌ;வேறு மனநிலையில், வௌ;வேறு இடங்களில் நடைபெற்றதாக இருப்பதால் இருவரும் ஒரே நபராகக் கொள்ள இயலாது என்று ஒரிஜன் கூறுகின்றார். இது இவ்வாறு இருக்க, பெயர் குறிப்பிடப்படாமல் வெறுமனே பாவி என்று அறியப்பட்ட பெண்ணும், மகதலா மரியாவும், தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக லூக்கா நற்செய்தியில் இடம் பெறுவதால் இருவரும் ஒரே நபராக இருக்கக் கூடும் என்று பெரிய கிரகோரியார் கருதுகிறார். இதன் அடிப்படையிலேயே கத்தோலிக்கத் திருச்சபை மனம் திருந்துதல் (பாவி என்று அறியப்பட்ட பெண்), இயேசுவின் வார்த்தைக்குச் செவிகொடுத்தல் (பெத்தானியா மரியா), அவருக்கும் அவரது மக்களுக்கும் பணிவிடை புரிதல் (மகதலா மரியா) என்னும் மூன்று விழுமியங்களையும் கொண்ட ஒரே நபராக மகதலா மரியாவை அறிவித்து அவரது விழாவினை ஜுலை 22 ஆம் நாளன்று கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இருப்பினும் இக்கருத்தில் எந்த பொருளும் இருப்பதாகக் கருதாத கீழைத் திருச்சபை இம்மூன்று நபர்களையும் தனித்தனியே விழாக் கொண்டாடி சிறப்பு சேர்க்கின்றது.

கிரகோரியாரின் மடலிலிருந்து

 'மதலேனா ஆண்டவரின் கல்லறை காலியாக இருப்பதைக் காண்கிறார். சீடர்களிடம் விரைந்து சென்று அதனை அறிவிக்கிறார். அவர்களும் வந்து பார்;;க்கிறார்கள். ஆனால் 'சீடர்கள் வீடு திரும்பினர். மகதாலா மரியா கல்லறைக்கருகில் வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்' (யோவா 20: 10-11) இதைப் பற்றிச் சற்றுச் சிந்திப்போம். மற்ற சீடர்கள் போய்விட்டாலும், கல்லறையை விட்டு நீங்காமல் நின்ற இந்தப் பெண்ணின் இதயத்தில் சுரந்த அன்பைப் பாருங்கள். ஆண்டவரைத் தேடியும் காண இயலாத கட்டத்தில் கூடத் தேடிக்கொண்N இருக்கிறார். கண்ணீரும் கம்பலையுமாகத் தேடுகிறார். அன்புத் தீ அவரிடம் பற்றி எரிகிறது. 'அவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களோ' என்று எண்ணிக்கொண்டேத் தேடுகிறார். மற்றெல்லோரும் போய்விடினும் தாம் மட்டும் தங்கியிருந்து தேடியதால் அவர் மட்டுமே ஆண்டவரை முதலில் கண்டு கொண்டார். எந்த ஒரு நற்செயலும் நிறைவேற விடா முயற்சி தேவை. 'இறுதிவரை முயல்பனே மீட்பு பெறுவான்' என்று உண்மையின் ஊற்று உரைத்தாரன்றோ?' என்று திருத்தந்தை தூய பெரிய கிரகோரியார் மகதலா மரியாவைப் பற்றிய விளக்க உரையில் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

என் பார்வையில்

 நற்செய்திக் குறிப்புகளை வாசித்ததிலிருந்தும், விவிலியக் களஞ்சியங்களின் அடிப்படையிலும், எனது சிந்தனையிலும் பார்க்கும் பொழுது மகதலா மரியவை, பாவியாயிருந்து மனம் திரும்பியப் பெண்ணாகக் கொள்வதும், இயேசுவின் காலடியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்து பெத்தானியா மரியாவாகக் கொள்வதும் வலுக்கட்டயாமாக இம்மூவரையும் ஒன்றாகச் சேர்த்துத் ஏன் திணிக்க வேண்டும் என்ற வினா எழும்புகிறது.. இக்கருத்து மகதலா மரியாவின் சமூக வாழ்க்கையையும், பாலஸ்தீனத் தெருக்களில், வெயிலிலும் மழையிலும், மக்கள் ஏற்றுக்கொண்ட போதும், எதிர்க்கும் போதும்,  இயேசுவோடு அலைந்து திரிந்து அவரது பணியில் மற்ற (ஆண்) திருத்தூதர்களைப் போலவோ, அல்லது அதைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ முழுப்பங்கெடுத்ததையும் மறைக்கவும், குறைத்து மதிப்பிடவும், மழுங்கடிக்கவும் மேற்கொள்ளும் முயற்சியாகவேக் கருதுகிறேன். இதை என் சொந்தக் கருத்தாகக் கொள்ளாமல், நற்செய்திச் சான்றுகளோடுப் பொருத்திப் பார்த்தால் மகதலா மரியாவின் பணிச்சிறப்பு நன்கு விளங்கும்.

நம் காலப் பெண்களுக்கு

மீண்டும் பாரதியே நினைவுக்கு வருகிறான்:
'நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!'
நீ பெண் என்பதால் மட்டுமே உன் தான்மை அழிக்கப்படும். மேன்மை புறக்கணிக்கப்படும். உன் மாபெறும் வல்ல செயல்கள் மிகவும் சாதாரணமாக அர்த்தம் கொள்ளப்படும். பெண்ணே! என் சகோதரியே! மனம் தளராதே! நம் ஆண்டவர் இயேசுவைப் போல, அக்ரகாரத்தில் முளைத்த முதல் முறுக்கு மீசைக்குச் சொந்தக்காரரானப் பாரதியையைப் போல இன்றும் பல போராளிகள் நம் மத்தியில் உண்டு. உன் பணிகளை, உன் தான்மைகளை வெறுமனே சில முட்டாள்களின் கருத்துக்களுக்கு ஒப்பிட்டு உன்னையேத் தாழ்த்திக்கொள்ளாதே. திருச்சபை உனக்குத் தகுந்த அங்கீகாரம் தரவில்லை என்று புலம்பாதே. அது உண்மையான இயேசுவின் சீடரையும், சீடத்தியையும் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக வரலாறே இல்லை. உன் அங்கீகாரம் இயேசுவிடமிருந்து நேரடியாக வருவததைப் புரிந்து கொள். உன் சேவை இச்சமூகத்திற்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் பலர் இன்னும் நம்மிடையே உள்ளனர். எக்காரணத்திலும் மனம் தளராதே. முன்னேறு. உன்னைச் சுற்றிலும் அறிவிலிகளாக வலம் வரும் உன் சகோதரர்களின்பால் இரக்கம் கொண்டு ஆணும் பெண்ணும் இறைவனின் பார்வையில் சமம் என்னும் முழு உண்மையை நோக்கி முன்னேற்று. உன் சகோதரனின் வாழ்த்துக்கள்.!

உதவிய நூல்கள்:
1. ஆர். எஸ். அமல்ராஜ், புனிதர்களின் பாதையில், (திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம், 2001).

2. Aj. Mausolfe, Saint Companions for each day, (Mumbai: St. Paul’s, 2006).
3. New Catholic Encyclopedia, second edition, Vol. 2, (New York: Thomson-Gale Publications, 2003).