வியாழன், 18 டிசம்பர், 2014

கடவுளும், காதலும் (God and Love)


கடவுளும், காதலும்

இரண்டாயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற மக்களின் இதய சிம்மாசனத்தில் அரியணை கொண்டு ஆ;ட்சி செய்யும் ஒப்பற்ற அன்புடைய நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவிற்காக தயார் செய்யும் காலம் தான் திருவருககை; காலம். சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையின் வேகத்தில் எங்கு செல்கிறோம் என்ற இலக்கும் மறந்து விடலாம். சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்பதையும் நாம் கவனியாமல் இருந்து விடலாம். சற்று நின்று, இளைப்பாரி, சரிபார்த்து மீண்டும் செல்வதுதானே சரியாக இருக்கும். அவ்வாறு நின்று, பார்த்து, சரிசெய்யும் காலம் தான் இந்த திருவருகைக் காலம்.
திருவருகைக் காலத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பதாகும்.

 காத்திருத்தல் என்பது ஓர் அனுபவம். காத்திருத்தலில் பல வகைகள் உண்டு. காதலியில் வருகையை எதிர்பார்த்து பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் காதலர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றலரந்த மலர் போல பளிச்சென்றிருக்கும் முகம். பரபரக்கும் கண்கள். அத்துமீறி துடிக்கும் இதயம். எப்போது நிகழும் அந்த ஒளி பொருந்தியவளின் வருகை. பார்த்தால் மட்டும் போதும். இந்த நாள் இனிய நாளாகும் என்ற ஏக்கத்தோடு காத்திருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். காத்திருத்தல் என்பது அயற்சியான ஒன்றல்ல. அது பரவசமான பொழுது. அது கவலைக்கும், கண்ணீருக்குமான பொழுது அல்ல. மாறாக நம்பிக்கையின் பொழுது. ஒரு வேளை யாரைப் பார்த்து விட்டு இந்த நாளைத் தொடங்கலாம் என்று காத்திருக்கிறோமோ, அந்த நபர், அந்த அன்பான நபர், ஒளி பொருந்திய அந்த நபர் மாலை வரையிலும் தமது தரிசனத்தைத் தரவில்லையென்றால் என்ன நிகழும், அந்த நபர் மீது எரிச்சல் வரும் என்று நினைக்கிறீர்களா? இனியும் அந்த நபருக்காகக் காத்திருத்தல் வீணானது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் காதல் வயப்படவில்லை என்று அர்த்தம். ஒன்று செய்யுங்கள். உங்கள் இதயத்தின் நான்கு அறைகளிலும் பட்டாம் பூச்சியைப் பறக்கவிடும் எளிய ஒருவரை நிச்சயம் கடவுள் படைத்து அனுப்பியிருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள்.

சொல்ல வந்தகை விட்டுவிட்டு வேறு எதையே பேசுவது போலிருக்கிறதா? இத்தகைய காதல் அனுபவத்தை கடவுளுக்காகக் காத்திருக்கும் அனுபவத்தோடு ஒப்பிட விரும்புகிறேன். இது என்னுடைய விநோதமானக் கண்டுபிடிப்பு அல்ல. உலகின் மூத்த கலாச்சாரங்கள் அனைத்திலுமே கடவுளுக்கும், காதலுக்கும் முடிச்சு போடும் காரியங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி சுடர்கொடியினால் திருமாலவனின் திருமுகம் மலர்ந்த அற்புதமான ஒப்புமையெல்லாம் நம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. 

ஒளிபொருந்திய இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் ஏக்கம் என்பது ஒவ்வொரு இதயத்திற்கும் உண்டு. தாயைக் காணாது தவிக்கும் பச்சிளம் குழந்தையின் ஏக்கத்தைப் போன்றது அது. அனைத்து மாயைகளையும் களைந்து அவரது பிரசன்னத்தில் கரைந்து போகும் ஏக்கம் எல்லோருக்கும் உண்டு. இந்தத் தேடல் என்பது ஒரு பாராமுகம் காட்டும் கடவுளுக்கானத் தேடல் அல்ல. காணாமல் போனவர் கடவுள் அல்ல. நாம் தாம் காணாமல் போய்விட்டோம். நாமே ஏற்படுத்திக் கொண்ட தேவைகளில் நம்மையே நாம் தொலைத்து விட்டோம். நம்மைக் கண்டடையும் தருணத்தில் கடவுளையும் நாம் கண்டடைவோம். ஏனென்றால் மனுவுறுவானக் கடவுளின் பெயர் 'இம்மானுவேல்'. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்மோடு' என்று விவிலியம் சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக