திங்கள், 22 டிசம்பர், 2014

உறவுகள் நிச்சயம் உருவமற்று இருப்பதில்லை (Let's Love and Let's Live)


வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்  (யோவான் 1:14)

உறவுகள் தான் நமது உலகை வடிவமைக்கின்றன. நல்ல உறவுகள் இருப்பின் நமது உலகம் நல்ல உலகம். பணமும், அதிகாரமும் தராத பாதுகாப்பையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும்  மனித உறவுகள் மட்டுமே தர முடியும். இலக்கற்ற பயணங்கள் நம்மை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை என்பது தெரிந்தும் ஏதோ ஒன்றை நோக்கி நாம் ஓடுகிறோம். முகம் தெரியாத முகநூலில் புகைப்படங்களோடு நம்மில் பலர் காட்டும் ஆர்வம் தான் என்ன? இணையத்தின் முடிவற்ற பதிவுகளிலோ, தொலைக்காட்சியின் நாடகக் கண்ணீரிலோ, பழைய பாடல்களிலோ, கொடிய குடியிலோ உறங்குவதற்குத் தேவையானக் களைப்பினைச் செயற்கையாக உருவாக்கி இனி முடியாது எனும் பட்சத்தில் பதற்றத்தோடோ படுக்கைக்குச் சுமையாகி ஓய்வின்றி மகிழ்வின்றி, அழகின்றி விடியலாமா நம் அதிகாலை.?

உறவுகள் நிச்சயம் உருவமற்று இருப்பதில்லை. முகவரியற்று இருந்தாலும் முகமற்று ஒருபோதும் இருப்பதில்லை. பார்வை எல்லைகளுக்குப்பால் இருப்பவர்களிடம் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவையேனும், இடையறாத கவன ஈர்ப்புகளால் உங்களையே சுற்றிவரும் சதையும், இரத்தமுமான மனிதர்களிடம் காட்டமுடியவில்லையென்றால் உடனடியாக ஒருநாள் விடுமறை எடுத்து யோசிப்போமா?

நெடுங்காலமாக நாம் எதிர்கொள்ளாது புறக்கணித்த நம்  மனசாட்சி களைப்பாகி உணர்விழந்து கிடக்கிறது. வலுக்கட்டாயமாக உசுப்பி விட்டு அதன் கேள்விகளை எதிர்கொள்வோம். எத்தனை பேரை அநியாயமாகப் புறக்கணித்து விட்டோம். நமது உருவத்தை அவ்வளவு பெரிதாக்கிக் கொள்வதில் தான் உறவுகளுக்கான இடத்தையும் நம்மை வைத்தே அடைத்துக் கொள்கிறோம். எதார்த்தங்களை நேர்மையாக எதிர்கொள்ள அஞ்சுவதால் எதார்த்தங்களையெல்லாம் மூடி மறைக்கும் ஒரு மிகப் பெரிய பொய்யான உருவத்தைத் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறோம். நிஜத்தில் நாம் எல்லாம் மிகவும் எளிய மனிதர்கள். அதனால் தான் கடவுள் தாம் இருப்பது போலல்லாமல் நாம் இருப்பது போல் வந்தார். பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போலவே இருந்தார். ஆனால் நாம்தாம் நம்மைப் போல இருப்பதற்கு அஞ்சுகிறோம்.

எடுத்த விடுமுறையை வீணாக்கி விடாமல் அழுதேனும் கரைத்து விடுவோம் கல்லாகிப் போன இதயத்தை. நிறைய வேண்டாம், ஒரு சிறிய புன்னகை போதும். இந்த உலகத்தின் மகிழ்ச்சியில் நீங்கள் பங்கெடுத்த பெருமிதம் கொள்ளலாம். சிலரது நாளை அற்புதமாக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஓர் அழுத்தமான முத்தத்தைக் கடைசியாக எப்பொழுது கொடுத்தீர்கள்?

தொடுதல் ஒரு அற்புதமான வரம். அதிலும் அழுத்தமான தொடுதலும், அரவணைப்பும் வாழ்வில் இன்னும் ஒருபடி நாம் மேலே செல்லமுடியும் என்பதற்கான உந்து சக்தியைத் தரக்கூடியது. அதனால்தான் விளையாட்டுகளில் வீரர்கள் தோற்றாலும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். வென்றாலும் தழுவிக்கொள்கிறார்கள். கரங்கள் இணையும் போது பிறக்கின்ற சக்தி அணுக்கள் பிரியும் போது தோன்றும் சக்தியை விட பன்மடங்கு பலமானது. உலகிலேயே அதிகமான சகோதரனும், சகோதரியும் உள்ள நமது நாட்டில் இந்த தொடுதல் சக்தியை யாரும் பயன்படுத்துவதே இல்லை. உளப்பூர்வமான தொடுதல் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. ஒரே திசையிலான காந்தங்களைப் போல நாம் விலகியே பழகுகிறோம். சாதி, தீண்டாமை, தீட்டு போன்ற மடத்தனங்களிலிலிருந்து நாம் மீண்டு வந்தாலும் விடாது கறுப்பு என்பது போல தொடுதல் பாவம் என்ற ஆதிநோய் நம்மைப் பீடித்திருக்கிறது. அதனால் தான் காமத்திற்காக மட்டுமே தொடுகிறான். இல்லையென்றால் கற்பழிப்பிற்காகத் தொடுகிறான். நட்பாகத் தழுவுதல், குழந்தைகளாகக் கட்டிப்பிடித்தல் போன்றவற்றில்தான் நாம் முழுமையாக வளர்கிறோம் என்று நினைக்கிறேன். தொடுதல் மிகவும் இயல்பானது. அதற்காக நாம் வலிந்து எதுவும் செய்யத் தேவையில்லை. நல்ல உதாரணம் வெற்றிக்களிப்பில் நம்மை அறியாமல் கட்டிப் புரள்கிறோமே. நம் ஊரில் பூனைக் குட்டிகள் கூட தொட்டுவிளையாடுகின்றன. பொறாமையாக இல்லையா நமக்கு? ஒழுங்கான தொடுதல் இல்லாமல் போனதால்தான் தெருவில் முத்தப் போராட்டங்களெல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. மூட நம்பிக்கைகள் இல்லையென்றால் முத்தப் போராட்டங்களுக்கானத் தேவையே இருந்திருக்காது. அன்றாட வாழ்க்கையில் அதிகமாகத் தொட்டுப்பழகுபோம். பழகியபின் அது இயல்பாக நிகழும்.

கடவுள் மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார். எல்லோரையும் அவர் கட்டித் தழுவினார். யாவரும் அவரைத் தொடுவதற்கு அவர் அனுமதித்தார். தம்மைத்  தொட்ட இரத்தப் போக்கினால் அவதியுற்றப் பெண்ணிற்கு குணமளித்தார். இறந்து போன மனிதர்களையும் தம் தொடுதலினால் உயிர்ப்பித்தார். பார்வை கொடுத்தார். கேட்கச் செய்தார். மாற்றுத்திறனாளி ஒருவரை தம் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கச் செய்தார் எல்லாம் தொடுதலின் அற்புதங்கள். இதை ஏன் நாம் நம் சகோதர சகோதரிகளுக்குத் தர மறுக்கிறோம். அல்லது நாமே ஏன் இந்த அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள தயங்குகிறோம்.?

முதலில் உங்கள் நுரையீரலின் மொட்டை மாடிக்கு மட்டும் மூச்சுவிடுவதை விட்டு  இன்னும் கொஞ்சம் ஆழமாக தரைதளம் வரையிலும் காற்று புக அனுமதியுங்கள். வீணாக்கியவை போகட்டும். இனிவரும் காலம் வாழும் காலமாகட்டும். மலையிலிருந்து விழுதல், தீயைத் தின்னுதல், பல்லிடுக்கில் பாம்பை விடுதல், போன்ற வாழ்விற்கு அப்பாற்பட்ட சாதனைகளில் மிஞ்சுவது எதுவுமில்லை. உண்மையில் அதுவும்ஏதோ ஒரு குறைபாடுதான். நிறைவோடு வாழ்தலே சாதனைதான் என்பதால்வாழ்வோம்;
 அழகான உறவுகளால் நம் உலகை  அணி செய்வோம். வட்ட முகத்தில் பொட்டாக ஒரு மனைவி, கருவிழியாய் குழந்தைகள், மூக்குத்தி, காதணி, முத்து மாலை, ஐம்பொன் வளையல், வெள்ளிக் கொலுசு என்று உங்கள் உறவுகளை எப்போதும் அதே புதுமையுடனும், அதே அழகுடனும் பராமரித்து பாதுகாப்போம்.  வாழ்தல் ஒருமுறைதான் என்பதால் அழகாக வாழ்வோம்!

2 கருத்துகள்: