வெள்ளி, 17 மார்ச், 2017

தவக்காலம் இரண்டாம் வாரம் சனி (18-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 15:1-3,11-32

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர்.
3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்;

11. 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.
14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;
15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.
16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
17 அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!
18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார்.
20 'உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
21 மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.
22 தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;
23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.

24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25 'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,
26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.
27 அதற்கு ஊழியர் அவரிடம்,  'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார்.
28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
29 அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
31 அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'

சிந்தனை : 
கடந்த வழிபாட்டு ஆண்டினைத் தாயாம் திருச்சபையானது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக கொண்டாடி மகிழ்ந்தது. இரக்கத்தின் ஆண்டானது அறிவிக்கப்பட்ட போது உலகின் புறச்சூழலானது போர் மேகம் சூழந்ததாக இருந்தது. உலகெங்கும் வன்முறை வெறிபிடித்து ஆடியது. கடற்கரையோரங்களின் மீன் குஞ்சுகளைப் போல மடிந்து கிடந்தனர் மனிதக்குழந்தைகள். அகதிகளாக கடலில் தத்தளித்தவர்களைக் கரை சேரக்கூட அனுமதிக்காத வெறுப்புக்காற்று பரவிக்கிடந்தது. உலகின் நாகரீகமான நகராக அறியப்பட்ட பாரிஸ் நகரம் தீவிரவாதத் தீயில் எரிந்துகொண்டிருந்தது. துருக்கி, ஏமன், சிரியா போன்ற நாடுகள் குண்டுவெடிப்புகளின் உக்கிரத்தால் வாழ இயலா தேசங்களாகிக்கொண்டிருந்தன. இராணுவத்தினரைப் பழிவாங்குவதற்காக அவர்களது குழந்தைகள் படித்தப் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் இரக்கமற்று சுட்டுத்தள்ளியதில் பிஞ்சுக் குழந்தைகளின் இரத்த ஆறு பெஷாவர் நகரில் ஓடியதை உலகமே பார்த்துப் பதறியது. இது போன்ற பல பதற்றமான புறச்சூழல்களுக்கு மத்தியில்தான் திருச்சபை இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்தது. போருக்கும், வெறுப்புக்கும் பதிலாக நாம் இரக்த்தையும், மன்னிப்பையும் பற்றி அதிகமாகப் பேசினோம். எண்ணற்றக் கிறிஸ்தவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கும், வன்முறைக்கும் பலியாகிக் கொண்டிருந்த நேரத்தில், நாம் மனிதாபிமானத்தை முன்னிறுத்தி மத வேறுபாடுகளின்றி அகதிகளுக்குப் புகலிடம் அளித்தோம். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல! காயத்திற்கு மருந்து இன்னொரு காயம் அல்ல! மன்னிப்பு எளிதான ஒரு மதிப்பீடு அல்ல! அது பல வலிகளையும், இழப்புகளையும், துரோகங்களையும் தாண்டி வரவேண்டிய துணிச்சல்.  திருச்சபை இயேசு ஆண்டவரின் இரக்கத்திற்கு இன்னும் அதிகம் அதிகமாய் சான்று பகரவேண்டும். அதற்காக எம் இரத்தம் சிந்தப்படினும் அது எமக்கு மகிழ்ச்சியே. அன்பின் ஆட்சி மலரட்டும்! 

செபம் :
மனம் மாறி திரும்பி வந்த இளைய மகனை மன்னித்து, ஏற்றுக்கொண்டு, அரவணைத்த தந்தையைப் போல் இறைவா, நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் மனதினைத் தாரும். யாருக்கும் நாங்கள் 'பெரிய அண்ணனாக' இல்லாமல், உண்மையான சகோதரனாய், சகோதரியாய் வாழத் தேவையான ஆற்றலைத் தாரும். எங்கள் முயற்சியாலோ, நற்செயல்களாலோ அல்ல, உமது இரக்கத்தாலும், அன்பாலுமே நாங்கள் மீட்கப்படுவோம் என்ற உண்மையை நாங்கள் உணர்ந்தவர்களாய், தாழ்ச்சி என்னும் விழுமியத்தை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைபிடிக்கும் அருளைத் தாரும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக