திங்கள், 3 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் திங்கள் (3-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:1-11

1 இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.
2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
4 'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?' என்று கேட்டனர்.
6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார்.
8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.
9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
10 இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' என்று கேட்டார்.
11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.

சிந்தனை : 
மேலும் ஒரு நன்கு பரிட்சயமான ஒரு நற்செய்திப் பகுதி. 'விபசாரத்தில் பிடிபட்டப் பெண்' 'உங்களில் குற்றம் இல்லாதவர் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்' போன்ற வார்த்தைகள் நவீன ஹேஷ்டேக் போல மிகவும் பரவலாக அறியப்பட்ட விவிலிய வார்த்தைகள். 

விபசாராத்தில் பெண்கள் மட்டுமே பிடிபடுவது இயேசுவின் காலத்திலிருந்தே தொடரும் நிகழ்வாக இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. இன்னும் ஒரு அடி கூட நம் சமூகம் இந்த விஷயத்தில் முன்னேறவில்லை என்பதை நினைக்கும் போது ஆணாதிக்கம் எந்த அளவு சமூகத்தின் தடித்த தோலாக, மரத்துப் போன ஒன்றாகிப்போய்விட்டது என்பதை உணரமுடிகிறது. 

முற்றிலும் நேர்மையான மனிதர்கள் யாருக்கும் எதற்கும் பயப்படப்போவதில்லை. அவதூறுகள், பழிச்சொற்கள் போன்ற எதுவும் அவர்களை எதுவும் செய்துவிடமுடியாது. அவர்களின் நேர்மையின் பரிசாக பல துரோகங்களை, அவமானப் பொறிகளைத் தாண்டியும் அவர்கள் துணிவோடு சமூகத்தை எதிர்கொள்வதற்கும், மக்களை ஈர்ப்பதற்கும் அவர்களது குற்றம் காண முடியாத நேர்மையும், உண்மையுமே காரணமாக இருக்கும். 

இயேசுவை மாட்டிவிடவேண்டும் என்பதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். அவரது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அவரை மாட்டிவிட முடியுமா? என்று கங்கனம் கட்டிச் செயல்பட்டனர். இதற்கு ஒரு சோறு பதம் தான் இன்றைய நற்செய்திப் பகுதி. சில இக்கட்டானச் சூழல்களில் நாம் தவறாக சில வார்தைகளை விட்டுவிடுவோம். அல்லது சில வார்த்தைகளைச் சொல்லாமல் விட்டுவிட்டு பின்பு வருத்தப்படுவோம். 

ஆனால் இயேசு இத்தகையச் சூழல்களுக்கெனத் தனிப்பயிற்சி எடுத்தவர் போல மிகச் சிறப்பாக எதிர்வினையாற்றுவார். அவரிடம் விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் அவருடன் ஈகோ பிரச்சனை கொண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். யூதர்களின் சட்டப்படி விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணைக் கொல்ல வேண்டும். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் யுதர்களை (பாலஸ்தீன, இஸ்ரேல் பகுதி) ஆட்சி செய்தது உரோமையர்கள். உரோமையர்களின் சட்டப்படி ஒரு 'காலனீய' நாட்டினருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. ஆக இயேசு ஒரு 'நேர்மையான' யூதராக, மோசேயின் சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அப்பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் படி கூறியிருப்பார். ஆனால் உரோமையரின் சட்டப்படி மிகப்பெரும் தண்டனைக்குள்ளாகியிருப்பார். அதே நேரம் அவளைக் கொல்லாதீர்கள் என்று கூறியிருந்தால் மோசேயின் சட்டத்தை மதிக்காதவராகி பெரும்பாலான யூதர்களின் அவமதிப்புக்கும், தலைமைச் சங்கத்தின் தீர்ப்புக்கும் ஆளாகியிருப்பார். ஆனால் இயேசு ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல், ஒரு மூன்றாம் தீர்வினை முன்வைக்கிறார். த பெஸ்ட் என்பது போன்ற ஒரு முடிவு. பாவி மனம் திரும்புவதற்கான ஒரு வாய்ப்பினையும், பரிசேயர்களின் தந்திரப்பொறியியிலிருந்து தப்புவதையும், ஆண்களின் மனசாட்சியை ஒரு நல்ல குண்டூசியால் குத்தி கேள்வி கேட்பதையும் அவரது நிதானமான பதிலால் சாத்தியமாக்குகிறார். 

பொதுவாக நமது சமூகச் சூழலில் நம்மோடு ஈகோ பிரச்சனை கொண்டவர்களது செயல்பாடுகள் நமக்கும், நமது செயல்பாடுகள் அவருக்கும் எந்த காரணமும் இல்லாமலேயே எரிச்சலை வரவைக்கும். இந்த மாதிரி நபர்களிடம் நாம் எளிதாக நமது சமநிலையை இழந்துவிடுவோம். தேவயற்ற பதற்றம் தான் காரணம். ஆனால் இயேசு இத்தகையச் சூழல்களுக்கு ஒரு முதிர்ச்சியான தலைமைப்பண்பு கொண்டவர்கள் எடுக்கும் முடிவாக ஆம், இல்லைகளைக் கடந்த ஒரு மூன்றாம் தீர்வை முன்வைக்கிறார். நம்மைப் பற்றிய காரியங்களில் ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் கூறக் கற்றுக் கொடுத்த நம் ஆண்டவர் பிறரைக் குறித்தக் காரியங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்பகுதியில் தெளிவாகக் காட்டுகிறார்.

ஒரு நாளில் எத்தனை பேரின் மீது நம் வார்த்தைகளால் கல்லெறிகிறோம். அதுவும் அந்த நபர்களின் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டு? கல்லெறிவதை நிறுத்திவிட்டு, தவறியவர்கள் திருந்திவாழ நமது மன்னிப்பையும், ஆதரவையும் தருகின்றோமா? சிந்திப்போம். நல்ல மனிதர்களாக வாழும் கலையை இயேசு ஆண்டவரிடமே கற்றுக் கொள்வோமா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக