புதன், 5 ஏப்ரல், 2017

தவக்காலம் ஐந்தாம் வாரம் புதன் (5-4-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 8:31-42

31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்றார்.
33 யூதர்கள் அவரைப் பார்த்து, 'உங்களுக்கு விடுதலை கிடைக்கும'; என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!' என்றார்கள்.
34 அதற்கு இயேசு, 'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை. மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.
36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.
38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்' என்றார்.
39 அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.
40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!
41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்' என்றார். அவர்கள், 'நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்' என்றார்கள்.
42 இயேசு அவர்களிடம் கூறியது 'கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்.

சிந்தனை : 
  இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்கிறார். இதே யோவான் நற்செய்தி 14:6 இல் 'வழியும், உண்மையும், வாழ்வும் நானே' என்கிறார். எனவே இன்று இயேசு கூறும் வார்த்தையை 'இயேசு உங்களுக்கு விடுதலை அளிப்பார்' என்றும் புரிந்து கொள்ளலாம். இயேசு கூறும் உண்மை என்பது ஒரு மதிப்பீடு மட்டுமல்ல. அது ஒரு ஆள். அவரே இயேசு.
   'உண்மையா? அது என்ன?' (யோவான் 18:38) என்று பிலாத்து இயேசுவிடம் கேட்குமிடத்திலும், நாம் நினைவுகூறவேண்டியது இதுதான். பிலாத்துவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கவே இல்லை. உண்மையா அது யார்? என்று கேட்டிருந்தால் இயேசு நிச்சயம் பதில் கூறியிருப்பார்.
   ஆக நம் வாழ்வில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய உண்மையாக இருப்பவர் நம் ஆண்டவர் இயேசு மட்டுமே. அவரை நாம் நெருங்கும் போது உண்மையை நெருங்குகிறோம். பாவம் என்னும் பொய்மை நம்மை விட்டு அகன்று விடுதலை உணர்வைப் பெறுகின்றோம்.
  இயேசு கூறும் இந்த பாவ அடிமைத்தனத்தை, யூதர்கள் புற அடிமைத்தனமாகப் புரிந்து கொள்கின்றனர். எனவேதான் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்கிறார்கள். ஆயினும் அவர்களது அரசியல் வாழ்வில் எகிப்தியர் தொடங்கி, பாலஸ்தீனர்கள், பாரசீகர்கள், கிரோக்கர்கள் போன்றோருக்கும், இறுதியாக இயேசுவின் காலத்தில் உரோமையர்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்ததை மறுக்கிறார்கள். கடவுள் ஒருவரே யூதர்களின் அரசர் என்ற இறையியல் அடிப்படையில் அவர்கள் வேற்று நாட்டு அரசர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களது அன்றாட வாழ்வில் அடிமைத்தனத்தின் சுமைகளை அனுபவிக்கத்தான் செய்தார்கள்.
  இந்தச் சூழ்நிலையில் இயேசுவும் அவர்களது பாவ அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, மனம் திருந்த விடுக்கும் அழைப்பு அவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லைதான். இயேசுவைப் பொறுத்தமட்டில் பாவத்திலிருந்து விடுபடும் அகவிடுதலையே முதன்மையானதாகும். எல்லா மனிதர்களும் அகவிடுதலை அடையும் போது அங்கே அடக்கியாளவும், அடங்கிப்போகவும் யாரும் இருக்கப்போவதில்லை. இதுவே இயேசு காணவிரும்பிய இறையாட்சியின் தத்துவமாகும்.
  இந்தத் தவக்காலம் நமக்கு அளிக்கும் அருமையான வாய்ப்பினைப் பயன்படுத்தி இயேவில் நம்பிக்கை கொள்வோம். பாவ வாழ்வு நம்மில், நம் உறவுகளில் ஏற்படுத்தியிருக்கும் புண்களை, அவரது பரிசுத்த இரத்தத்தால் குணமாக்க முன்வருவோம். புத்துணர்சியோடு புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வோம். இயேசு என்னும் உண்மை நமக்கு விடுதலை அளிப்பதாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக