உலகம் மிகப் பெரியது தான். நான் அதைப் பற்றிச் சொல்லவில்லை. நான் சொல்லும் உலகம் மிகச் சிறியது. நான் வாழும் இடம். நான் அன்றாடம் புழங்கும் இடம். நான் வளரும் இடம். இங்கு இருக்கும் பெரும்பாலானவற்றை நான் மாற்றிக்கொள்ள முடியாது. என் வகுப்புத் தோழர்கள், என் விடுதி அறையைப் பகிர்ந்து கொள்பவர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகவாதிகள் போன்று என் மேல் உரிமை உள்ளதாகக் கருதிக்கொள்பவர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது தான் என் உலகம். ஆட்டோ காரனைப் பிடிக்கவில்லை என்றால் பேருந்தில் போகலாம். ஆனால் எல்லா இடங்களிலும் நான் விரும்பும் நபர்களை மட்டும் நான் தேர்ந்து கொள்ள முடியாது.
எனக்கு சிலரைப் பிடிக்கிறது. சிலரைப் பிடிக்கவில்லை. அவர்களுக்கும் நான் அப்படித்தான். என்னைச் சுற்றியிருக்கும் மரம், செடி, கொடிகளைப் போலவே அவர்களையும் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அனைத்திற்கும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தால் என் உலகத்தில் அமைதி இருக்காது. வளரச்சிக்கான நேரத்தை உணர்ச்சி எடுத்துக்கொள்ளும்.
வீட்டில் நான் அப்பாவின் இளவரசியாக இருக்கலாம். சமூகத்திற்கு நீங்கள் யார் தெரியுமா? 8.2 பில்லியன் மனிதக் கூட்டத்தில் ஒருவர். பத்து எறும்புகளும் நம் கண்களுக்கு ஒன்றுபோலத்தான் தெரிகிறது அல்லவா? அது போலத்தான் நீங்களும், நானும். ஆனால் நாம் எல்லோருமே நம்மைத் தனித்துவமானவர்களாக, அதைவிடக் கொடுமை பிறரை விட சிறப்பானவர்களாகக் கருதிக்கொள்கிறோம். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பிறரும் அவ்வாறேக் கருத வேண்டும், நடத்த வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நாம் 'நான்' என்று கருதும், நம் அடையாளத்தின் மீது சின்னச் சின்னக் கீறல்கள் விழத்தான் செய்யும். 'நீ ஒரு பொருட்டே கிடையாது' என்று ஒருவர் சொல்லாம். 'நீ உன்னையே மாற்றிக்கொள்' என்று இன்னொருவர் சொல்லலாம். ஆனால் நான் என்னைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பதுதான் முக்கியம். அதில் நான் நானே உறுதியாக இருக்கிறேனா என்பது அதைவிட முக்கியம். இந்த என்னைப் பற்றிய அடையாளங்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ள அவசியமில்லை. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். உலகம் என்பது நீங்கள் அன்றாடம் புழங்கும் இடம் அவ்வளவுதான். மற்ற உலகத்திற்கு உங்கள் இருப்பைப் பற்றியே எந்த அக்கறையும் இல்லை. ஆகவே நம் எல்லோருடைய இடமும் மிகச் சிறியதுதான்.
என்னைப் பற்றிய எனது எண்ணங்கள், நான் வைத்திருக்கும் பிம்பங்கள் மிகையானதாகவோ, குறைவானதாகவோ இருக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உங்கள் உலகம் உங்களைப் பார்ப்பதற்கும், உங்கள் பிம்பத்திற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கும் போது பொருத்தமின்மைகள் ஏற்பட்டு உள்ளும், புறமும் சமநிலை குலைகிறது. உறவுச்சிக்கல்கள் ஏற்படுகிறது.
காலும், காலணியும் சரியாக பொருந்தினால்தான் பயணம் எளிதாக அமையும். அது போல நம்மைப் பற்றிய நம் பிம்பங்களும், நமது உலகத்தின் ஏற்பும், விலகலும் அதிகமாக முரண்படாத போது உறவுகள் எளிதாக அமையும். அப்படியென்றால் நமது அடையாளங்களை எப்படி உருவாக்குகிறோம் என்பது முக்கியம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். ஆனால் காக்கைக் குஞ்சுகள் வளர்ந்த பிறகு, தான் மின்னிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ஆகவே பிள்ளைகள் வளரும் போது தங்களைப் பற்றி யாரோ சொன்னவைகளைக் கொண்டு தங்கள் மன பிம்பங்களை உருவாக்கக் கூடாது. மாறாக தனது அன்றாட செயல்களைக் கொண்டே உருவாக்க வேண்டும். உங்கள் செயல்கள் தான் உங்கள் உலகத்திற்கு நீங்கள் முன்வைக்கும் உங்கள் பிம்பம். உங்கள் எண்ணங்கள் அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக