திங்கள், 21 ஜூலை, 2025

அவன் ஏழை என்பதாலேயே

வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். நாம் ஏதோவொன்றை நினைத்துக்கொண்டு முகப்புத்தகத்தைத் திறந்தால், அங்கே கவிஞர் மனுஸ் நமக்காக அதே மன ஓட்டத்தை நகலெடுத்து ஒரு கவிதை எழுதி வைத்திருப்பார். அதுபோல கட்டுரையாளர்களிடம் ஒருநாள் யாராவது சொல்வார்கள் என்றால் நானே நம்பியிருக்கமாட்டேன்.

ஆனால் எனக்கு நடந்தது. நேற்று இரவு ஒரு வேகத்தில் ஆசிரியரிடம் ஒரு வாக்குறுதி அளித்துவிட்டேன். எனது ப்ளாக்கில் ஒரு பத்து கட்டுரையாவது எழுதிவிட்டு மீண்டும் வருகிறேன் என்று. 

அனாதிகாலத்துக் கனியான ஆப்பிளின் பதினாறாவது (கூடுதல் வகையறா) அலைபேசியை வாங்கி ஏக்கம் தீர்த்த நான் அடைந்த முதல் ஏமாற்றமே தமிழ் டைப்பிங் தான். யமுனாவின் கைகள் பாபுவின் தலைமயிரைக் கோதிக்கொண்டே 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே?' என்ற கேள்வியின் பரிதாபத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என் ஏமாற்றம். 

இதற்கு முன் வைத்திருந்த ஒரு ஆண்ட்ராய்டு காரன், சங்க காலத்தமிழில் பேசினாலும் துல்லியமாக டைப் செய்துவிடுவான். கெட்டிக்காரன். அவன் ஏழை என்பதாலேயே அவனை அவமரியாதையாக நடத்தியதைக் குறித்து நேற்றிரவு முதல் முறையாக வருத்தப்பட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து பார்த்தால் வாட்சப் சேனலில் ஆசிரியர் பராமரிப்புக் கலை கட்டுரையைப் பகிர்ந்து மேக் -கின் உன்னதங்களைப் விதந்தோதியிருந்தார். 

ஆசிரியருக்கு ஒரு கேள்வி. தங்கள் அலைப்பேசியும் ஆப்பிள் தானா? அதில் தமிழில் டைப் செய்வது அல்லது குரல் டைப் செய்வது சிரமமாக இல்லையா? அதற்கு ஒழுங்காக செயல்படாத ஜுபோர்டு (கூகுள் ஆள்) தவிர்த்து வேறு எதாவது நல்ல ஆப்பு இருக்கிறதா?

நான் இன்னும் பாரம்பரியமான பாமினி எழுத்துருவைக் கொண்டு, சன்னல் சுவடிகளில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

எனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் சிதறாமல் கொட்டி வைக்க வாய்ஸ் டைப் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆப்பிள் போனில் அதை (தமிழில்) செயல்பட வைக்க என்ன ஆப்பு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்களேன்! புண்ணியமாகப் போகும். 


ஞாயிறு, 20 ஜூலை, 2025

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

வணக்கம். தங்களது அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற இறைவன் உங்களுக்கு நல்ல உடல், உள்ள நலம் தர வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு பள்ளிக்கூடம். ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர். காலை மாணாக்கர் கூடுகையின் போது, கூச்ச சுவாபமுள்ள ஒரு மாணவனின் பெயரை கூப்பிட்டு 'முன்னாடி வா!' என்று சொன்னால் எப்படி உணர்வான்? அப்படி ஒரு உணர்வை கடந்த 5 ஆம் தியதி தங்களது வாட்சப் வாய்க்காலில் எனது பெயரைக் கண்டதும் உணர்ந்தேன். 'ஆன்டனி ப்ரான்சிஸ், நான் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் விதத்தில் பதிலளிப்-பாராவுக்குக் கேள்விகள் அனுப்பவும். (ஆனால் திங்கள்தான் பதிலளிப்பேன்.)'

எத்தனை முறை அதை வாசித்தேன் என்று தெரியவில்லை. என்னை யாரும் இந்த அளவிற்கு வியக்க வைத்ததில்;லை. அம்மாவின் அளவுகடந்த அன்பைக் குறிந்து வியத்திருக்கிறேன். கலைஞரின் பன்முக ஆற்றலை, திறனை, உழைப்பைக் குறித்து வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வாட்சப் வசதியால் தான் உங்களைப் போன்ற மிகவும் தனித்துவமான மாபெரும் ஆளுமையோடு இவ்வளவு நெருக்கமாக உணர முடிகிறது. 

ஏற்கனவே உங்களிடம் சமயம், இறைநம்பிக்கை குறித்தெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவ்வளவு எழுத்துப்பணிகளுக்கு மத்தியிலும் பதில் வராத கேள்விகளே இல்லை. உங்களது நேரத்தை வீணடிக்கிறேனோ நினைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ ஜெயமோகன் அவர்களின் சோத்துக்கணக்கு கதையில் வரும் கெத்தேல் சாகிப் போல கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். நாங்கள் பெற்றுக்கொண்டேயிருக்கிறோம். அறிவையும், ஆளுமையையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். 'அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும், மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை?' என்ற அக்கதையின் இளைஞனாக என்னை உணர்கிறேன். 

பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்ற இரு மார்க்கங்களில் ஒருவர் இறைவனை அல்லது மகிழ்ச்சியை அடையலாம் என்ற தத்துவத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு கர்ம மார்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. விளைவுகளைப் பற்றி (போற்றல், தூற்றல், லைக், டிஸ்லைக்) எந்த அக்கறையும் இன்றி, செயல் ஒன்றே என்று ஒன்றிப்போகும் பாங்கு எங்களுக்கும் கொஞ்சம் அமையட்டும். 

அன்பிற்கு நன்றி!

ஆன்றனி பிரான்சிஸ்