பகுதி 1
தவக்கால 5 ஆம் ஞாயிறு (மார்ச் 22, 2026)
எசே 37, 12-14, தி.பா 129, ரோமையர் 8, 8-11, யோவான் 11, 11-45
(அருட்தந்தை பெர்னாந்தோ அர்மெல்லினி அவர்கள் இத்தாலிய மொழியில் ஆற்றிய மறையுரையானது கருத்துச்சிதைவின்றி மொழிச்சுதந்திரத்தோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றிய நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்த உதவக்கூடும். Fr. ஆன்றனி பிரான்சிஸ், OMD)
'தெய்வங்கள் மனிதகுலத்தைப் படைத்தபோது, மரணத்தை மனிதகுலத்திற்கு என்று ஒதுக்கினார்கள். வாழ்வை மட்டும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டார்கள்' என்று உலகின் மிகப்பழமையான இலக்கியங்களில் ஒன்றான மெசபத்தோமியாவின் கில்கமேஷ; காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரணமில்லா வாழ்வைத்தரும் மரத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் கில்கமேஷpடம் மதுபான விற்பனையகத்தை நடத்திக்கொண்டிருக்கும் சிதுரி என்னும் பெண் கூறியதே இவ்வரிகள். இதைக் கேட்டு மனமுடைந்த அவ்வீரன் இவ்விதிக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்துகொள்கிறான். மரணம் என்பது 'திரும்பி வாராத தேசத்திற்கு' மேற்கொள்ளும் பயணம்.
மிகப் பழமையான யூதக் கோட்பாடுகளின்படியும் இருளும், சலனமின்மையும், நினைவழிந்து போவதுமே மரித்தவர்களின் இருப்பிடத்தைச் சூழ்ந்துள்ளன. பழைய ஏற்பாட்டில் இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், ஆன்மாவின் அழிவின்மையைப் பற்றியும் மிகச்சிலக் குறிப்புகளே உள்ளன. அரிதான அக்குறிப்புகளும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன.
'மரத்திற்காவது நம்பிக்கையுண்டு. அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும். அதன் குருத்துக்கள் விடாது துளிர்க்கும். அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப் போனாலும், தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும். இளஞ்செடி போல் கிளைகள் விடும். ஆனால் மனிதர் மடிகின்றனர். மண்ணில் மறைகின்றனர். உயிர் போனபின் எங்கே அவர்கள்? ஏரியில் தண்ணீர் இல்லாதுபோம். ஆறும் வறண்டு காய்ந்துபோம். மனிதர் படுப்பர். எழுந்திருக்கமாட்டார். வானங்கள் அழியும் வரை அவர்கள் எழுவதில்லை. அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை' என்று யோபு 14:7-12 இல் வாசிக்கின்றோம். இந்த ஏமாற்றம் நிறைந்த மனச்சோர்வே திருப்பாடல் ஆசிரியரின் வாயில் ஓர் கழிவிரக்கத்தின் வேண்டுதலாக வெளிப்படுகின்றது. 'என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர். என் ஆயட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை. உண்மையில் மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவர்கள். அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர். அவர்கள் வருந்து உழைப்பது வீண். அவர்கள் சேமித்து வைக்கின்றனர். ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார். நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.' (தி.பா 39: 5-7, 13)
ஆதி காலத்தின் அறிவொளி பேராளுமைகளும் இவ்வாறே இறப்பின் முன்பான தங்கள் திகைப்பை, போதாமையை, விரக்தியை, வேதனையை வெளிப்படுத்தினர். உலகின் மீது உயிர்த்த இயேசுவின் பாஸ்கா பெருவெளிச்சம் பிரகாசிக்கும் முன்பாக, மூடப்பட்டக் கல்லறைக் கதவுகளின் அடர்த்தியான இருள் எவ்வளவு கனமிக்கதாக இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டவே, இத்தகையப் பெருமூச்சுக்களைச் சேமித்து வைக்கும் பெட்டகமாக திருவிவிலியம் திகழ்கின்றது.
இச்செய்தியை
நம் இதயத்தில் ஆழமாகப் பதியவைக்க திருப்பாடல் ஆசிரியரோடு நாமும் சொல்வோம்: 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்' (தி.பா 23:4)
முதல் வாசகம்: எசே 37, 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ஹஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
பாபிலோனுக்கு கி.மு 597 இல் அடிமைகளாக இழுத்துச்செல்லப்பட்ட இஸ்ராயேல் மக்களிடையே எசேக்கியேல் என்ற ஒரு குருவும் இருந்தார். பிற்காலத்தில் நாடுகடத்தப்பட்ட அந்த அந்நிய நிலத்து அகதிகள் திரளின் இறைவாக்கினாராக மாறினார். 'எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதத்தின் ஐந்தாம் நாள். எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து, 'நகர் வீழ்ந்துவிட்டடது' என்றான்' (எசே 33,21). இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, நெபுகத்நேசரின் படைவீரர்கள் அந்த நகரைக் கைப்பற்றித் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார்கள். அவர்கள் பிடித்துச் சென்ற புதிய கைதிகள், ஏற்கனவே மெசப்பத்தோமியாவில் இருந்தவர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர்.
தோல்வியுற்று, மனமுடைந்த நிலையில் அங்கிருந்த மக்களிடையேதான் எசேக்கியேல் தன் இறைவாக்குப் பணியைச் செய்கிறார். அவர்களோ 'எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்' (எசே37:11) என்றார்கள். அவர்கள் தங்களை உயிரற்றப் பிணங்களாகக் கருதினார்கள். நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை என்னும் கல்லறையில் பல ஆண்டுகள் நம்பிக்கையின்றி கழிந்ததால், தங்களை மட்கிப் போன உலர்ந்த எலும்புக்கூடுகளாகவே உணர்ந்தார்கள்.
அப்படியென்றால் எல்லாம் முடிந்து விட்டதா? எம் தந்தை ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வாதத்தின் வாக்குறுதிகள், மக்களின் பாவத்தால் வீணாகிவிட்டனவா? இனி கடவுள் வாக்கு பிறழாதவர் இல்லையா? இரு பெருநதிகளின் நகரமான மெசபத்தோமியாவின் பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் சிதறிக்கிடக்கும் உலர்ந்து எலும்புக்குவியலாக மாறிப் போன இஸ்ரயேலுக்கு இனி கதியேதுமில்லை என்பது உறுதிதானே? (எசே 37:1-3)
இந்த வரலாற்றுச் சூழலில்தான், முன்னெப்போதும் கண்டிராத, கேட்டிராத ஒரு புதுமையை எசேக்கியேல் அறிவிக்கிறார். 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.' (எசே 37:12-13). ஆக இந்த இறைவாக்கு நாம் வழக்கமாகப் புரிந்துகொள்வதைப் போன்ற 'இறந்தவர்களின் உடல்சார்ந்த உயிர்த்தெழுதலைக்' குறிக்கவில்லை. மாறாக நாடுகடத்தப்பட்ட மக்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவதையே குறிக்கின்றது. ஆயினும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், வேறு வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த யூத ரபிக்கள் இவ்வரிகளை ஆழ்ந்து தியானித்து மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். மெசியாவின் வருகையின் போது நீதிமான்கள் அனைவரும் மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்ற சிந்தனை மலர்வதற்கு இவ்வரிகளே பெரும்பங்காற்றியது என்றால் மிகையாகாது.
கடவுளின் ஆவி எங்கெல்லாம் பிரசன்னமாகின்றதோ, அங்கெல்லாம் வாழ்வு தளிர்க்கின்றது. தொடக்கத்தில் கடவுள் நிலத்தின் புழுதியிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சை ஊதியபோது இது நிகழ்ந்தது. 'மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொ.நூ 2:7).
இந்த உயிரளிக்கும் ஆவியானவர் இன்றும் கூட செயலாற்றுகின்றார். மரணத்தின் அச்சம் சூழந்த ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், மக்களினங்கள் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாக நிலவும் பகையுணர்ச்சிகள், சமூகப் பிரிவினைகள், பிணக்குகள், குடும்பத்து உறுப்பினர்களிடையே நிலவும் கசப்புணர்வுகள், புரிதலற்றி நிலைகள் என அனைத்திலும் ஆண்டவரின் ஆவியானவர் புதிய உயிரோட்டத்தை அளிக்க முடியும். அவரால் மீட்டெடுக்கப்பட முடியாததென்று எதுவுமில்லை. உலர்ந்து போன எலும்புகளைக் கூட ஒன்றிணைத்து அவரால் உயிர் கொடுக்க முடியும்.
குணப்படுத்த முடியாத காயங்களும்,
அழகுபடுத்த முடியாத அசிங்கங்களும்,
திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்புகளும் இறையரசில் இல்லை!
இரண்டாம் வாசகம் (உரோமையர் 8:8-11)
சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
எல்லா மனிதர்களுக்கும் இறப்பு உண்டு. வாழ்வின் 'நிலையற்ற தன்மை' மற்ற விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான மற்றும் தவிர்க்கவே முடியாத உயிரியல் விதியாகும்.
மனுவுருவெடுத்த இறைமகன் இயேசுவும் இறந்தார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார். அது எப்படி நடந்தது? எது அவரை உயிர்த்தெழச்செய்தது?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் இவ்வினாவிற்கு பதிலளிக்கின்றார். 'அவர் கடவுளின் ஆவியைத் தன்னுள் முழுமையாகக் கொண்டிருந்தார்'. நாம் ஏற்கனவே பார்த்தது போல கடவுளின் ஆவி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். இயேசுவிடம் என்றுமே அழியாக கடவுளின் வாழ்வு இருந்தது.
மனித வாழ்விற்குத்தான் ஒரு தொடக்கமும், முடிவும் உண்டு. ஆனால் கடவுளின் வாழ்வு நித்தியமானது. அவருக்குத் தொடக்கமுமில்லை. முடிவுமில்லை. இயேசு இத்தகையக் கடவுளின் வாழ்வைக் கொண்டிருந்தார். சிலுவையில் அவருடைய இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றாலும், கடவுளின் ஆவி அவரை உயிர்பெற்றெழுந்து கடவுளின் மாட்சிமைக்குள் அழைத்துச் சென்றது.
பவுல் தொடர்ந்து கூறுவது போல, திருமுழுக்கின் வழியாக நாமும் அதே ஆவியையும், அதே வாழ்வையும் பெற்றுக்கொண்டுள்ள படியினால் இனி நாம் சாக முடியாது. இவ்வுலகில் நமது வாழ்வு முடிவுக்கு வரலாம். ஆனால் அதுவே அனைத்துக்குமான முற்றுப்புள்ளி அல்ல. இயேசுவை உயிர்த்தெழச் செய்த அதே ஆவியானவர், நமக்குள்ளும் குடிகொண்டிருப்பதினால், நமது அழியக்கூடிய உடல்களுக்கும் நித்தியமான வாழ்வைத் தரவல்லவராக இருக்கின்றார்.
(நற்செய்தி பகுதிக்கான விளக்கத்தைப் பகுதி 2 இல் பார்க்கலாம்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக