சனி, 3 மார்ச், 2012

சுவர்க் கோழியும், கைப்பிடியளவு வெளிச்சமும் (The Death of the Tamilians)

பின்னிரவு முடியும் கருக்கலில்
கைப்பிடியளவு வெளிச்சம் முளைத்து
ஊருக்குள் கூவு என
சுவர்க்கோழியிடம் சொன்னது!

அதிர்ச்சியூட்டும் செய்திகளில்
பாதிக்கப்படுவோர் இருப்பின்
கேட்பதைத் தவிர்ப்பது நலம்
என்றது வெளிச்சம்

அதிர்ச்சியடைந்தது கோழி
இந்த ஊரிலாவது அதிர்ச்சியாவது?

குஸராத்தில் வேண்டாம் என்றான்
கேரளத்தில் விரட்டி விட்டான்
வந்தோரை வரவேற்கும் இந்த ஊரில்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
அணுஉலை வந்தபோது!

பார்க்கும் தூரத்தில்
ஓரினம் ஒழிந்த போது
பழையத்துணி போலக் கிழிந்த போது
உடையோடு உடல் கீறும்
முள்ளிவாய்க்காலின் முனங்கல் கேட்டபோது
யாருக்கும் அதிர்ச்சியில்லை
செத்தவன் தமிழன்தானே!

யாரைக் கொன்றாலும்
கருணைக்கு இடமுண்டு
நீங்கள் தமிழன் இல்லையென்றால்
என்ற முடிவை எதிர்த்து
முத்துக்குமரன் செத்தது போல
தன்னை எரித்துச் செத்தாள் செங்கொடி
என்ற  செய்தி கேட்டும்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
கேட்டால் யார் அந்த செங்கொடி என்பர்!

எல்லை கடந்த ஆழியின்
சுனாமி என்னும் கொடும்பசியினும்
அதிகமாக பெருகும் இலங்கைப் பினாமிகளின்
குருதியின் மீதானத் தீராப்பசிக்கு
குதறப்பட்ட தமிழ் மீனவர்களின் ஈரசடலங்களில் வீசும்
சவநெடியின் வீச்சமறிந்தும்
இங்கு யாருக்கும் அதிர்ச்சியில்லை
எல்லை கடந்தால் இப்படித்தானென்று எடுத்துக்கொள்வர் போல..

இடிபோல எதிரி இருப்பினும்
இடிச்ச புளி போல இருந்தே
பழகி விட்டோம்
கரகரத்தது சுவர்க்கோழி

புளி, கார திருச்சபையின்
எதிர்வினை பற்றி
விளக்கம் கேட்டது வெளிச்சம்
பேசாமலே இருந்தது சுவர்க்கோழி

எச்சரிக்கை
சுவர்க்கோழியின் செவிகளைச் சுட்ட
கையளவு வெளிச்சத்தின் வெப்பம்
எதிர்வினைகளின்றி சோம்பும்
யாரையும் சுடக்கூடும்!

தமிழனே உனக்கு நுறு சூடு
நல்ல மாட்டுக்கு
மட்டும் தான் ஒரு சூடு

எதையேனும் தின்னும் வெறியைக் கூட்டிக்கொள்ள
தவக்கால ஒடுக்கங்களில்
செயற்கையானக் கொடும்பசிகளில்
மாமிசருசி பெருகும்படியாய் உங்கள்
கோரைப்பற்களைத் தீட்டிக்கொள்பவர்களெனில்
கை நிறைய உப்பை அள்ளித் தின்றுபாருங்கள்
கொஞ்சமேனும் சொரணை வரக்கூடும்

காவிரிநீர், ஈழப்போர்,
அலைக்கற்றை ஊழல்,
முல்லைப்பெரியாறு அணை,
கூடங்குளம் அணுஉலை
ஒன்றிலும் ஒன்றுபடாத இனமே
ஒன்றாக வீசாதக் காற்றை
புயல் என்பவன் மூடன்

ஒன்றுபடக் கூவு சுவர்க்கோழியே
தமிழன் ஒன்றுபடக்கூவு
தின்று விட எண்ணும் பேதைக் கூட்டம்
இன்றே சென்றுவிடக் கூவு

வந்தேறி வாதையெல்லாம்
வெந்துவிடக் கூவு
அழிக்கும் அணுஉலையே
அவிந்துவிடக் கூவு

ஏமாற்றும் அரசுகளை
நீ மாற்றக் கூவு
ஏமாறும் எம்மக்கள்
பாராளக் கூவு...

இறையரசு வேட்கையுடன்
பிரான்சிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக