புதன், 8 பிப்ரவரி, 2017

பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

தற்செயலாக பழைய கோப்புகளைக் கணிணியில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய மறையுரைச் சிக்கியது. திருச்சி திருச்சிலுவை மகளிர் கல்லூரியில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் இரண்டு பேராசிரியைகளுக்காக நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்க என்னை அழைத்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுதான். இருந்தாலும் இந்த எழுத்து நம் வலைப்பூவில் பகிரத்தக்கதே என்ற எண்ணம் தோன்றியது. வாசித்துப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு ஆசிரியரை மனதில் நினைத்துக்கொண்டு! 

பேராசிரியைகள் ஓய்விற்கான திருப்பலி மறையுரை
போராசிரியைகள்: திருமதி பியூலா மோசஸ், திருமதி ஜோஸ்பின் லீலா
வாசகங்கள்: யோசுவா 23:2-9, திருத்தூதர் பணிகள் 20:17-24, யோவான் 13:31-35

கிறிஸ்து இயேசுவில் மிகவும் அன்பிற்குரியவர்களே! இன்றைய விழா நாயகர்களாக வீற்றிருக்கும் பேராசிரியைகள் இருவருக்கும் எனது செபம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

'மொழியாய் முதிர்ந்தது ஒலி,
கவியாய் முதிரந்தது மொழி,
என்னவாய் முதிரும் கவி?' 
என்று கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையிலே வினா எழுப்புகிறார். என்ன அர்த்தம்? ஒலியின் உச்சம் மொழி. மொழியின் உச்சம் கவி. அப்படியென்றால் கவியின் உச்சம் என்ன? இப்போதைக்கு கவிதான் மொழியின் உச்சமாக இருக்கும் பட்சத்தில் 36 வருடங்கள், 34 வருடங்கள் என்று பணியின் உச்சத்தை எட்டியிருக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கு என் எளிய பரிசு இக்கவி!

மந்தையில் இரண்டு ஆடுகள்
புற்களை மேயும் சாதராரண ஆடுகளல்ல
பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

கண்மை காலத்தில் பணியேற்று
கடவுள் துகள் காலத்தில் விடைபெறுகிறார்கள்
சகாப்தங்கள் பல பார்த்த சாதனையாளர்கள்

'எமர்ஜென்சி' இவர்களை உள்ளே தள்ளியது
'எலெக்ஷன்' இவர்களை வெளியேற்றுகிறது
கல்வி தியாகிகள்

வானொலி பிள்ளைக்கும்
வாக்மேன் பிள்ளைக்கும் 
வரலாறு படைக்க வழிகாட்டியவர்கள்
வழி நெடுக வலி பார்த்தவர்கள்

நாம் கற்கையில் 
அவர்கள் நிற்கிறார்கள்
வாழ்வில் வளமாகி நாம் நிற்கையிலும்
அவர்கள் கற்கிறார்கள்

வளாகத்தில் நிழற்பரப்பும்
விளாக மரங்கள்
இவர்களுக்கு விதையிலேயே அறிமுகம்!
வகுப்பறையில் கற்பித்தாலும்
எத்தனை தேசங்களில் பரவியதோ
இவர்கள் கற்பித்தலின் வாசனை

எத்தனை ஆசிரியர்களுக்கு
பதியமிட்டதோ இவர்களது வகுப்பறை
இவர்கள் இருவரும்
பக்கக்கன்றுகளுக்கு  உயிரூட்டிய தலை வாழைகள்

எத்தனை வீடுகளில்
விளக்கேற்றியிருக்கும்
இவர்கள் கை பிடித்து கற்பித்த
வளை கரங்கள்
வாழ்க நீவீர்! பல்லாண்டு பாரினில் புகழோடு!

அன்பிற்குரியவர்களே! கடவுள் எப்படி இருக்கிறார் தெரியுமா?
-சின்னக்குறிப்பிடத்தில் படித்திருப்பீர்கள். தாமாக இருக்கிறார். தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார் என்று.
-சைவ மதத்தை பின்பற்றும் தொண்டர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் சிதம்பரத்திலே நடராசராக நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்று. நடனம் என்பது கடவுளின் இயக்கத்தை குறிக்கிறது.
-வைணவ மதத்தைப் பின்பற்றும் அன்பர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் ஸ்ரீரங்கத்திலே பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் என்று. பள்ளிகொண்டிருத்தல் என்பது சயன நிலை. அதாவது உறக்க நிலை.

ஒரே கடவுள் ஒரே நேரத்தில் இயக்கமாகவும் இருக்கிறார். ஓய்வு என்னும் உறக்கமாகவும் இருக்கிறார். பணியும் ஓய்வும் வேறு வேறானதல்ல. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும், சார்ந்தும் பிரிக்க இயலாததுமாய் இருக்கின்றது. எனவே இங்கு நடைபெறும் நிகழ்வானது உங்கள் பணியின் முடக்கமல்ல. இன்னொரு பணியின் தொடக்கமேயாகும்.
பணியும், ஓய்வும் மாறி, மாறி வந்தாலும் ஒன்று மட்டும் மாறாதது என்று நம்மால் உறுதிபடக் கூறமுடியும். அது என்ன தெரியுமா? தேனினுமினிய இயேசுவின் நாமம்.

விவிலியத்திலே இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் என்ன? 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அவருக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவீர்'. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். 

அவர் நம்மோடு இருப்பதால் தான் அவரைப் பற்றிய நினைவுகள் நம் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. 
நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில், பாவிகளோடும், சீடர்களோடும் சேர்ந்து உணவுண்டு மகிழ்ந்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சவால்களை சந்தித்த தருணங்களில் வாழ்வு முழுவதுமே சவால்களை சந்தித்த  இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சாதனைகள் புரிந்த துருணங்களில் 'இவரே என் அன்பாரந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று தந்தையால் பாராட்டப்பெற்ற இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சரிந்து விழுந்து கடுந்துயருள்ள வேளைகளில் 'என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்!' என்று சிலுவையிலே கதறிய இயேசு நம்மோடு இருக்கின்றார்.
துன்பங்கள் கடந்து பின் வாழ்வு ஒளிபெறுவதை உணர்ந்து கடவுளன்பை நாம் சுவைத்த தருணங்களில் உயிர்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் விவிலியம் முழுவதுமே நமக்கு உணர்த்தும் பாடம். திருப்பாடல் 121 இல் அதன் ஆசிரியர் ஒரு வினா எழுப்புகிறார்.

'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன்!. எங்கிருந்து எனக்கு உதவி வரும்? என்று. பின் அவரே பதிலளிக்கிறார்
'விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.'

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று உணர்ந்து துணிவோடு வாழ்வை எதிர்கொண்டவர்கள் தான் விவிலிய மாமனிதர்களாகிய ஆபிரகாம், மோசே, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட யோசுவா, சாமுவேல், தாவீது போன்றவர்களெல்லாம்.

நீங்கள் பிறந்ததிலிருந்து பணியேற்ற நாள் வரையிலும், நீங்கள் பணியேற்ற நாளிலிருந்து பணி உச்சமடைந்த இந்த நாள் வரையிலும் உங்களோடு இருந்த அதே கடவுள் தான் இனிவரும் காலமும் உங்களோடு இருப்பார் என்பதை உணர்த்தவே இந்த விழா!

வாசன் ஐ கேர் விளம்பரத்திலே வரும் ஓர் அருமையான வசனம் 'நாங்க இருக்கோம்'
இது நாள் வரையிலும் இந்தக் கல்லூரியிலே கற்பித்தாலாக இருக்கட்டும், வழிகாட்டுதலாக இருக்கட்டும், நாட்டு நலப்பணித்திட்டமாக இருக்கட்டும், துறைத் தலைவர் பணியாக இருக்கட்டும் இன்னும் கல்லூரியின் பல்வேறு விழாக்களாக இருக்கட்டும் 'நாங்க இருக்கோம்' என்று முன்வந்து உழைத்து, உழைத்து தங்களையே உருக்கி உருக்கி எத்தனையோ மாணவியரின் வாழ்வைச் செதுக்கியிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்து நாம் கூற வேண்டிய தருணம் இது:    'நாங்க இருக்கோம்'. 

வெறும் வார்த்தைகளால் அல்ல: 'நான் உங்களிடையே அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று இயேசு கூறிய அன்புக் கட்டளையை வாழ்வாக்குவதன் மூலம் நாம் இயேசுவின் சீடர்கள் என்று தொர்ந்து உலகிற்கு எடுத்துரைப்போம். 

நமது அன்பானது சாதி, மத, இன, நிற, பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற புரிதலை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டியும், இன்று பணி உச்சமடைந்து ஓய்வின் மூலம் மிச்சப்பணியாற்ற கல்லூரி என்னும் எல்லைகளைக் கடந்து செல்லும் இரு போரசிரியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கடவுள் இடமும், வலமும் இருந்து பாதுகாத்து, பராமரிக்க வேண்டியும் அவர்கள் மனதிலே நினைத்து வைத்திருக்கின்ற காரியங்கள் நிறைவேற வேண்டியும் இத்திருப்பலியிலே தொடர்ந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக