வெள்ளி, 24 மார்ச், 2017

தவக்காலம் மூன்றாம் வாரம் சனி (25-3-2017)

இன்றைய நற்செய்தி : லூக்கா 1:26-38

26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' என்றார்.
34 அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார்.
35 வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார்.
38 பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

சிந்தனை : இன்று கபிரியேல் வான தூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறிய பெருநாளைத் தாயாம் திருச்சபையானது கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாளைக் குறித்த விசுவாசப் பேருண்மைகள் நான்கு. அன்னை மரியாள் இறைவனின் தாய் (சனவரி 1), எப்பொழுதும் கன்னி (மார்ச் 25), விண்ணேற்படைந்தவர் (ஆகஸ்டு 15), மற்றும் அமல உற்பவி (டிசம்பர் 8) என்ற இந்த நான்கு பேருண்மைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்விலிருந்து பிரிக்க இயலாதவைகளாகத் திருச்சபை வரையறுத்துக் கூறுகின்றது. அன்னை மரியாள் நம் ஆண்டவரைக் கருத்தாங்கிய இன்றைய நாளிலிருந்து பத்தாவது மாதமாகிய டிசம்பர் 25 அன்று கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை, பாவத்தின் கறைபடாது தன் வாழ்வை விலைமதிப்பற்றப் பலியாக இறைவனுக்குக் கையளித்தன் மூலம் விண்ணக, மண்ணகத் திருச்சபையின் தாயாகவும் திகழ்கின்றார். இது எங்ஙனம் ஆகும் என்று அன்று அன்னை மரியாள் கேட்ட அதே கேள்வியைத்தான் இன்றும் நம்மிடமிருந்து பிரிந்த சகோதரர்களும் கேட்கின்றனர். அதற்கானப் பதிலை வானதூதரே கூறுகின்றார்: 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை'. அன்னை மரியாள் இந்த இறைவார்த்தையை முழுமையாக நம்பினார். 'இதோ ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்றார். நாமும் அன்னை மரியாளின் பரிசுத்தக் கன்னிமையிலும், தாய்மையிலும் முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தவர்களாக அவரோடு இணைந்து சொல்வோமா? 

செபம்: 'இறைவா! இதோ உம் அடிமை! உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்! இன்பமோ, துன்பமோ, அவற்றைத் துணிவோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் அன்பில் நாங்கள் நாளும் வளர்ந்து, அன்னை மரியாள் பெற்றுக் கொண்ட விண்ணகப் பேரின்ப வாழ்வை நாங்களும் பெற்றுக்கொள்வோமாக! அன்னையே! திக்கற்றவற்களுக்கு ஆதரவே! எங்களின் கண்ணீரை, துன்பத்தை, பலவீனங்களை நன்கு அறிந்தவரே! எங்கள் கைகளைப் பிடித்து வழிநடத்தும்! உம்மைப் போன்ற தூய வாழ்வை நாங்களும் வாழ எங்களுக்குத் தேவையான மனத்துணிவைத் தாரும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக