சனி, 25 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் ஞாயிறு (26-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 9:1-41

1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.
2 'ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
3 அவர் மறுமொழியாக, 'இவர் செய்த பாவமும் அல்ல இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல. கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்.
4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது. அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார்.
6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,
7 'நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், 'இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?' என்று பேசிக்கொண்டனர்.
9 சிலர், 'அவரே' என்றனர்; வேறு சிலர் 'அவரல்ல. அவரைப்போல் இவரும் இருக்கிறார்' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், 'நான்தான் அவன்' என்றார்.
10 அவர்கள், 'உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?' என்று அவரிடம் கேட்டார்கள்.
11 அவர் அவர்களைப் பார்த்து, 'இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது' என்றார்.
12 'அவர் எங்கே?' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், 'எனக்குத் தெரியாது' என்றார்.
13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.
15 எனவே, 'எப்படிப் பார்வை பெற்றாய்?' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்.
16 பரிசேயருள் சிலர், 'ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது' என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், 'பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?' என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், 'உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?' என்று மீண்டும் கேட்டனர். 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றார் பார்வை பெற்றவர்.
18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
19 'பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?' என்று கேட்டார்கள்.
20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக, 'இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.
21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்' என்றனர்.
22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
23 அதனால் அவருடைய பெற்றோர், 'அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்' என்றனர்.
24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்றனர்.
25 பார்வை பெற்றவர் மறுமொழியாக, 'அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்' என்றார்.
26 அவர்கள் அவரிடம், 'அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?' என்று கேட்டார்கள்.
27 அவர் மறுமொழியாக, 'ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?' என்று கேட்டார்.
28 அவர்கள் அவரைப் பழித்து, 'நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது' என்றார்கள்.
30 அதற்கு அவர் 'இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!
31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!
33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது' என்றார்.
34 அவர்கள் அவரைப் பார்த்து, 'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?' என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, 'மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?' என்று கேட்டார்.
36 அவர் மறுமொழியாக, 'ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்' என்றார்.
37 இயேசு அவரிடம், 'நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்' என்றார்.
38 அவர், 'ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்' என்று கூறி அவரை வணங்கினார்.
39 அப்போது இயேசு, 'தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்' என்றார்.
40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, 'நாங்களுமா பார்வையற்றோர்?' என்று கேட்டனர்.
41 இயேசு அவர்களிடம், 'நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்' என்றார்.

சிந்தனை: 
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் ஒத்தமைவு நற்செய்திகள் என்றழைக்கப்படுகின்றன. இந்த மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு போன்ற அடிப்படையானத் தரவுகள் பெரும்பாலும் ஒன்று போலவே தரப்பட்டிருக்கின்றன. கால அடிப்படையில் மாற்கு நற்செய்தியே முதன்முதலில் எழுதப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டு, மேலும் தங்களுக்குக் கிடைத்த புதிய தரவுகளையும் சேர்த்தே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் எழுதினர். 

ஆனால் யோவான் நற்செய்தியானது ஒரு தனித்துவமான அமைப்பினையும், பெரும்பாலும் ஒத்தமைவு நற்செய்திகள் கூறாத செய்திகளையும் தாங்கி நிற்கிறது. செய்திகளை மட்டுமே நேரடியாகக் கூறாமல், செய்திகளுக்குப் பின்னால் இயேசு ஆண்டவரைப் பற்றிய ஆழமான இறையியல் கருத்துக்களைத் தாங்கி நிற்கும் கருவூலமாகத் திகழ்கின்றது.

கடந்த வாரம் ஞாயிரன்று நாம் தியானித்த சமாரியப் பெண்ணுக்கும், இயேசுவுக்குமான உரையாடல் ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும். இயேசுவை அப்பெண் முதலில் யூதர் என்றும், பின்னர் இறைவாக்கினர் என்றும், தொடர்ந்து இறைமகன் என்றும் அடையாளம் கண்டுகொள்வார். இயேசு ஆண்டவர் அப்பெண்ணின் பார்வையில் இருக்கும் திரையினை, அவரோடு உரையாடுவதன் மூலம் மெல்ல மெல்ல நீக்குகிறார். அப்பெண்ணின் மூலம் அவரது ஊரே இயேசு ஆண்டவரை மெசியா என்று அடையாளம் கண்டுகொள்வதாக அப்பகுதி நிறைவடையும். 

அது போலவே இன்றைய நற்செய்திப் பகுதியும் மிகவும் ஆழமான இறையியல் கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றது. 'ஆழமான இறையியல்' என்பது ஆராய்ச்சியாளர்கள் மட்டும் புரிந்து கொள்வது என்று பொருள் கொள்வதற்கல்ல. மாறாக ஒவ்வொரு உரையாடலையும் நாம் சற்றுப் பொறுமையாக உள்வாங்கி வாசித்தால், அவை நம் உள்ளத்தையும் தொட்டுப் பேசும். நாமும் அந்த உரையாடல்களின் கதாபாத்திரங்களாவோம். ஒவ்வொருவரின் வாழ்வின் அனுபவங்களிலிருந்து இயேசுவை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வைகளே இந்த நற்செய்தியின் சாரம்சமாகும். 

எப்படியாவது இயேசுவை மாட்டிவிட்டு அவரது வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் யூதர்கள் 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்கிறார்கள். அவர்களின் பார்வையில் ஓய்வு நாளில் குணமாக்குவது பாவம். அதனடிப்படையில் மாசற்றச் செம்மறியாகிய இறைவனையேப் பாவி என்று சொல்லத் துணிகிறார்கள். அதிகார வெறி, அதைத் தக்கவைக்க கடுமையானச் சட்டங்கள், சுயநலம், பொறாமை போன்ற துர்குணங்கள் அவர்கள் கண்களை மறைத்துவிட்டமையால் அவர்கள் கண்களிருந்தும் பார்வையற்றவர்களே! 

ஆனால் பிறவியிலிருந்தே கண்பார்வையற்ற நபரோ, இயேசு ஆண்டவரின் அரும்செயலை அனுபவித்தவராய், அவரோடு உரையாடுபவராய் மாறிய பின்னர், 'ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்' என்று கூறி அவரை வணங்குகிறார். இந்த நற்செய்திப் பகுதியை நம் வாழ்வோடு இணைத்துப் பார்த்து  வாசிக்கும் போது நாமும் நம் ஆண்டவர் இயேசுவை இன்னும் நெருக்கமாகக் கண்டுகொள்வோம். அவரில் நம்பிக்கை கொண்டு, வாழ்வில் எதிர்வரும் சவால்களைக் கண்டுப் பதறாமல், பார்வை பெற்றவர்களாய் துணிவோடு எதிர்கொள்வோம். 

செபம் : நாங்கள் பார்வை பெறவேண்டும் ஆண்டவரே! எங்கள் சகோதர சகோதரிகளை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ளத் தடையாக எங்கள் கண்களை மறைத்திருக்கும் நிறம், இனம், மொழி, சாதியப் பாகுபாடுகளை முற்றிலும் களைந்திட நாங்கள் பார்வை பெறவேண்டும். தீமையின் கவர்ச்சிகள் எங்கள் கண்களை மறைக்காமல், நன்மையின் கனிகளை நாங்கள் கண்டுணரப் பார்வை பெற வேண்டும். நாங்கள் பார்வை பெறவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக