வெள்ளி, 31 மார்ச், 2017

தவக்காலம் நான்காம் வாரம் வெள்ளி (31-3-2017)

இன்றைய நற்செய்தி : யோவான் 7: 1-2, 10, 25-30

1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.
10 தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
25 எருசலேம் நகரத்தவர் சிலர், 'இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
26 இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
27 ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே' என்று பேசிக் கொண்டனர்.
28 ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், 'நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
29 எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே' என்றார்.
30 இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

சிந்தனை : 
அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. நேரம்: அதுதானே எல்லாம்! ஆம்! நண்பர்களே! ஏதாவது நல்ல காரியங்கள் வீடுகளில் நடைபெறுவதற்கு முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது நம் ஊர்களில் இன்றளவும் வழக்கத்திலிருக்கும் நடைமுறை. அவனுக்கென்னப்பா! எல்லாம் அவன் நேரம்! என்று நன்மைக்கும், தீமைக்கும் நேரம் என்ற ஒன்றைக் காரணம் காட்டுவதையும் கேட்டிருக்கிறோம். இங்கு இயேசு குறிப்பிடும் நேரம் என்பது அவரது தந்தையின் திருவுளம். அவர் அத்திருவுளம் நடைபெறும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று வெறுமனே இருந்துவிடாமல், எப்போதும் செயல்படுபவராகவே இருந்திருக்கிறார். நன்மை என்றால் அதை ஓய்வின்றி (ஓய்வுநாளில் கூட) செய்துவிடுகிறார். தீமை என்றால் அதை எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் தட்டிக்கேட்கிறார். கடமையைச் செய்கிறார். பலனை தந்தையின் திருவுளத்திற்கு விட்டுவிடுகிறார். நாமும் நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எதிர்ப்பிலும், துன்பத்திலும் மனம் தளராது நன்மை செய்ய முற்படுவோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக