செவ்வாய், 3 மார்ச், 2020

முதல் கோணல் முற்றும் கோணல் இல்லைத்தானே! (The Story of our Tour to Rome and St.Christopher)

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். ஆனால் பழமொழிகள் பொய்த்துப் போகும் தருணங்கள் கவித்துவமாகின்றன. எங்கள் சமீபத்திய ரோம் பயணத்திலும் அப்படித்தான் அமைந்தது. சான் பெர்டினான்டோ (San Ferdinando) தெற்கு இத்தாலியில் பூலியா (Puglia) மகாணத்தில் உள்ள சிறு நகரம். ஆலயத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள பதின்ம வயதுடைய இளைஞர்கள் எட்டு பேர் என்னோடு ரோம் நகருக்கு சுற்றுலா செல்வதென முடிவாயிற்று. ஓட்டுநரோடு ஒன்பது பேர் கொண்ட எங்கள் வேனில் பயணம் செல்வதற்கான ஆயத்தங்கள் இரண்டு வாரமாக நடைபெற்றன. ஜான்னி வண்டிக்கு தேவையான காரியங்கள் என்னென்ன என்று ஒரு நீண்ட பட்டியல் கொண்டு தினமும் வந்து ஒவ்வொன்றாக சரிபார்த்தான். பிரேக் ஆயில், என்ஜின் ஆயில், ஸ்டியரிங் ஆயில் எல்லாம் புதிதாக மாற்றப்பட்டது. ஆபத்து காலத்திற்கு தேவையான மாற்று சக்கரம், சிவப்பு முக்கோணம், மின்னும் மேலாடை இன்னும் என்னென்னவோ...!! ஒரு ஐந்து மணி நேர பயணத்திற்கு இவ்வளவு முன்னேற்பாடுகளா என்று வாயில் ஈ புக நின்றுகொண்டிருந்தேன். இது தவிர ரோமிலிருக்கும் மூன்று நாட்களில் எங்கு செல்ல வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், இடங்களுக்கிடையான தூரம், அகலம் என்று அலசி ஆராய ஒரு ஐந்தாறு சந்திப்புகள், ஒரு வாட்சப் குழு!  

சனிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு பயணம் ஆரம்பித்தவுடன் மரியா செபம் சொல்லத் தொடங்கினாள். கடைசியில் என் பங்கிற்கு "அன்னை மரியாவே" என்றேன். அனைவரும் "எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்றனர். "புனித கிறிஸ்டோபரே" என்றேன். 'எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்' என்று சொன்ன வாயோடு, 'யாரு அந்த ஆளு' என்றனர். நல் பயணத்தின் பாதுகாவர் என்றேன். கிறிஸ்டோபர் கொலம்பஸ் தானே என்றான் கிளவுதியோ! உடனே எல்லோரும் 'ஹஹஹா' என்று சிரிக்க ஆரம்பித்தனர். நான் (விக்கிபீடியா துணையோடு) புனித கிறிஸ்டோபர் ஒரு மறைசாட்சி; இவர் மூன்றாம் நூற்றாண்டில் நடந்த வேதகலாபனையில் கொல்லப்பட்டிருக்கலாம். இவர் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த நபரா அல்லது புனைவுக்கதையா என்பது குறித்து ஒத்தக் கருத்து இல்லை. மரபுவழிக்கதையின் அடிப்படையில் இவர் குழந்தை இயேசுவை தன் தோளில் சுமந்து ஆற்றைக் கடக்க உதவியதாக நம்பப்படுகிறது. ஆகவே இவர் பயணம் செய்வோருக்கு பாதுகாவலர் என்றேன்.  

சரியாக 15 நிமிடத்தில் வேன் பழுதாகி விட்டது. எவ்வளவு அழுத்தினாலும் ஒரு 20 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாமல் மெல்ல மெல்ல திரும்பிவந்துவிட்டோம். மேடான சாலையில் சிலர் இறங்கி தள்ள வேண்டியதாயிற்று. சூழ்நிலை எதுவாயினும் இன்பமும், துன்பமும் நம் கையில்தானே! பயணமே கேள்விக்குறியான நேரத்திலும் வழியெங்கும் கேலியும், கிண்டலும், பாட்டும், சிரிப்பும் வழக்கத்தை விட அதிகமாயிருந்தன. குறிப்பாக புனித கிறிஸ்டோபரை வெச்சி செஞ்சிட்டாங்க! எல்லா பழியும் கடைசியில் அவர் தலையில் தான் விடிந்தன. நான் இதிலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி அவர்கள் மனதைத்  தேற்றப் பார்த்தேன். ஆனால் அதற்கானத் தேவையில்லாதபடி அவர்கள் ஜாலியாகவே இருந்தனர். 

திரும்பி வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற நேரத்தில் தந்தை லூயிஜி ஒரு ஐடியா கொடுத்தார். அதன் படி இரண்டு காரில் செல்வதென முடிவாயிற்று. காரின் சாவியைக் கொடுத்து நல்பயண வாழ்த்துக்கள் என்றார். என்னோடு ஐந்து பேரும், ஜான்னியின் காரில் நான்கு பேருமாய் திட்டமிட்டதைவிட மூன்று மணிநேரம் தாமதமாக மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். மாலையின் மங்கிய வெளிச்சத்தில் இசையும், சிரிப்பும் நிரம்பி வழிய ஒரு வீணையின் தந்தி போல சாலையில் கார் இதமாகப் பயணித்தது. 

இரவு 12.10 மணிக்கு ரோம் புறவழிச்சாலைக்கு அருகில் உள்ள எங்கள் தோரேமவுரா (Torremaura) இல்லம் வந்துடைந்தோம். கார் சாவியை அங்கு எங்களுக்காக காத்துக்கொண்டிருந்த தந்தை ரொசாரியோவிடம் கொடுத்துவிட்டு உடனே மெட்ரோ இரயிலேறி நாங்கள் தங்கவேண்டிய நகரின் மையப்பகுதியில் இருக்கும் கம்பித்தெல்லி (Campitelli) இல்லம் வந்தடைந்தோம். பசியில் இப்போது வயிறு வயலின் வாசிக்க ஆரம்பித்தது. அருகில் ஒரு மேக்டொனல்ட்ஸ் (McDonald's) கண்டுபிடித்து ஒரு பர்கரை தொண்டைக் குழிக்குள் இறக்கிவிட்டு வீடு திரும்பி படுக்கையில் விழும் போது எங்கோ ஒரு கோவிலில் மணி  மூன்று முறை அடித்தது. 

காலை ஏழு மணிக்கு எழும்பி, தயாராகி வத்திக்கான் மியூசியம் சென்றோம். வரலாறு காணாத கூட்டம் வரிசையில் எங்களுக்கு முன்பே காத்திருந்தது. ஆமையின் வேகத்தை விட சற்றே அதிகமான வேகத்தில் ஒன்றரை மணி நேரத்திற்குள் மியூசியத்திற்குள் நுழைந்தோம். ஓவியங்களும், சிற்பங்களும், கட்டட வேலைப்பாடுகளும், உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட பழம்பொருட்களும், ரபேல், கரவாஜோ, மைக்கேலாஞ்சலோ போன்றோரின் படைப்புக்களும் என்று ஒரு கலைக்கடலில் நான்கு மணிநேரம் நீந்திவிட்டு மதியம் ஒரு மணிக்கு வெளியேறினோம். எதிரிலேயே ஒரு பர்கர் அரசர் (Burger King) இருந்தது. வயிற்றை நிரப்பினோம். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல! கலையாக, தியாகமாக, தலைவனாக, அல்லது நம்பிக்கைக்குரிய அடிமையாக கூட இருக்கலாம்! தன்னை வெளிப்படுத்துவதினாலே  தான் வரலாற்றில் வாழ்கிறான் என்று உள்ளுணர்வு சொல்லியது. தந்தை ஜெரியின் வரியில் சொல்வதென்றால், 'உன்னை வெளியிடு! இல்லை பலியிடு!'

ரோம் நகரம் மனித குலத்தின் ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றும் வழிபாட்டுத்தலமாக மக்களின் அன்றாட பயன்பாட்டிலிருக்கும் பாந்தயோன் (Pantheon) என்னும் 2113 ஆண்டுகள் பழமையான பெருங்கோவில், அதன் தனிச்சிறப்பு வாய்ந்த மையத்திறப்பு கொண்ட குவிந்த மேற்கூறை, நகரைக் கீறிச்செல்லும் டைபர் நதி, அதிலிருக்கும் அழகிய பாலங்கள், நடைபாதைகள், கொலொசேயம், பிரம்மிப்பூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட கோவில்கள், சிற்பச் சிறப்புடன் நீரூற்றுக்கள், சதுக்கங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் தான்! சொல்லில் வடிக்க முடியாக உணர்வுகளை எப்படிச் சொல்வது? தமிழும், திருக்குறளும், கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் ஏற்படுத்தும் உணர்வுகளுக்கு சற்றும் குறைவில்லாதது ரோம்  என்றும் சொல்லலாம்!

ஒவ்வொரு முறையும் ரோமில் முதன் முறையாக பார்ப்பதற்கு ஏதோவொன்று இருக்கும். இந்த முறை மால்டா சதுக்கத்தில் உள்ள பூக்கோ தி ரோமா (ரோமின் துளை) அவ்வாறு ஆச்சர்யப்படுத்தியது. தோரேமவுரா பங்கின் அலக்சாந்ரோ தான் எங்களுக்கு வழிகாட்டினான். இங்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான். எங்கள் கம்பித்தேல்லி இல்லத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. இதுவரையிலும் கேள்விப்பட்டதேயில்லை. ஏழு குன்றுகளின் நகரமான ரோமின் ஏதோவெரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏறிச்சென்றோம். வரிசையாக இருக்கும் கட்டிடங்களில் ஏதோவொரு கட்டிடம் போலத்தான் இருந்தது. அதன் வாயிற்கதவின் சாவித்துவாரத்தின் வழியாக கண்களை வைத்துப் பார்த்து இதுதான் என்று உறுதிசெய்தான். நாங்களும் பார்த்தோம். ஆம்! சாவித்துவாரத்தின் வழியாகத் தெரிவது வத்திக்கான் பேரலயத்தின் ஒளிரும் கோபுரம். அங்கிருந்து வத்திக்கான் ஒரு ஐந்து கி.மீட்டராவது இருக்கும். ஆனால் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் தோட்டத்தை நேராக ஒழுங்கு படுத்தி இயற்கை பைனாகுலர் போல மாற்றியிருக்கிறார்கள். இரவின் இருட்டில் கண்களில் ஒளிரும் அக்கோபுரம் தொடும் துரத்தில் இருப்பது போலத் தோன்றுவதுதான் சிறப்பு. மேலும் நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இடம் இத்தாலி. அக்கட்டிடம் மால்டா நாட்டின் துதரகத்திற்கு சொந்தமானது. பார்ப்பதோ வத்திக்கான் நாட்டின் கோபுரம். இதுவும் ஒரு தனிச்சிறப்புதானே!

ரசனையும், ருசியும் மிக்க இப்பயணம் செவ்வாயன்று மதிய உணவோடு முடிவுக்கு வந்தது. தோரேமவுரா இல்லத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யூதர்கள் வசிக்கும் கெத்தோவில் பீட்சா தி பெரிதா என்னும் இனிப்பு வாங்கிக்கொண்டு சென்றோம். அரைத்த ரூக்கொலோவில் சிறுசிறு சிக்கன் துண்டுகளைப் பிரட்டி அதில் பாஸ்தா செய்திருந்தார்கள். பச்சை நிறத்தில் அழகாகவும், சுவையாகவும் இருந்தது. ஆஞ்சலா, நிக்கோலா இருவருக்கும் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. நிறைய இனிப்பு வகைகளும் நிறைந்த ஒரு திருப்தியான மதிய உணவு. மதியம் 3.30 மணிக்கு கிளம்பி ஒன்பது மணிக்கு சான் பெர்டினாந்தோ வந்து சேர்ந்தோம். நல்ல பயணம்.
கார் சாவியை தந்தை லூயிஜியிடம் கொடுத்தேன். "அய்யோ! என் சாவியில் இருந்த புனிதரின் மெடல் எங்கே?" என்றார். நான் தோரேமவுராவில் தந்தை ரொசாரியோவிடம் சாவியை கொடுத்துச் சென்றதை நினைவுபடுத்தி அவர்களது கேட் சாவியில் இருக்கிறதா என்று பார்த்தேன். நினைத்தது போல அங்குதான் இருந்துது. சரி! அந்த சாவிக் கொத்தில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டேன். தந்தை லூயிஜி, "இது நான் இந்தியாவிற்கு சென்றிருந்த போது தந்தை மனோகர் எனக்கு நினைவாக இருக்கட்டும் என்று கொடுத்தார். அதுமட்டுமில்லை! இதில் இருக்கும் புனிதர் நல்பயணத்தின் பாதுகாவலர் புனித கிறிஸ்டோபர்" என்றார். அதிர்ந்துவிட்டேன். கடமையே கண்ணாக அவர் எங்ககூடத்தான் இருந்தாரா!? முதல் கோணல் முற்றும் கோணல் இல்லைத்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக