சனி, 7 ஜனவரி, 2023

வினைமுடித்தன்ன…


மகிழ்ச்சியில் பெரும் மகிழ்ச்சி தொடங்கிய ஒரு காரியத்தை செய்து முடித்தலால் வரும் மகிழ்ச்சி ஆகும். கடந்த அக்டோபர் முதல் நாள் புனித குழந்தை தெரசாள் திருநாள் அன்று தொடங்கிய என்னுடைய '98 நாளில் விவிலிய வாசிப்பு'  (இத்தாலிய மொழியில்) திட்டமிட்டபடியே ஜனவரி 6 அன்று நிறைவுற்றது.

ஒருவர் ஒரு காரியத்தை செய்வதற்கு தீர்க்கமாக விரும்பும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அவருக்கு உதவி செய்யும் என்று பவுலோ கொயலோ அவருடைய அல்கெமிஸ்ட் நாவலில் குறிப்பிடுகிறார். இதனை பல வேளைகளில் உணர்ந்திருந்தாலும், இந்த முறை மிகவும் துல்லியமாக பிரபஞ்சத்தின் உதவியை உணர முடிந்தது.

நாகர்கோவிலில் இருக்கும் என்னுடைய உறவினர் ஒருவர் 100 நாளில் விவிலிய வாசிப்பிற்கான அட்டவணையை முதன்முதலாக செப்டம்பரில் கொடுத்தார். அவர் அந்த அட்டவணைப்படியே வாசித்து முடித்ததாகவும் சொன்னார். பல்வேறு அலைச்சல்கள் நிறைந்த ஒரு காலக்கட்டம் என்பதால் என்னால் முடியும்  என்று நினைக்கவில்லை. தற்செயலாக அதனை செயல்படுத்த அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கியதோடு முகநூலிலும் பதிவிட்டேன்.

தனிப்பட்ட நற்செயல்களை பொதுவெளியில் பதிவிடுவதற்கு பெரிய தயக்கம் இருந்து. ஆயினும் என்னை நானே ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்துவதற்கு அது உதவும் என்று கருதினேன். ஆகவே தான் சில நாட்களில் வாசிப்பதற்கு ஆர்வம் குன்றிய போதிலும், இயலாத மனநிலையிலும், சூழ்நிலையிலும், சொன்ன வார்த்தையை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தினால் என்னையே வற்புறுத்தி வாசித்தேன். 73 புத்தகங்களை உள்ளடக்கிய கத்தோலிக்க திருவிவிலியத்தை பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலிலிருந்து ஒரு பகுதியாகவும், மையத்தில் இருக்கும் திருப்பாடல்களில் இருந்து ஒரு பகுதியாகவும், புதிய ஏற்பாட்டின் மத்தேயு நற்செய்திலிருந்து ஒரு பகுதியாகவும் அன்றாடம் 3 பகுதிகள் அட்டவணைப்படி வாசிக்க வேண்டும். ஆயினும் சில நாள்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் வாசிப்பது, அல்லது ஒரு பகுதியை இரண்டு மூன்று நாட்களுக்கு வாசித்துவிட்டு, பொறுமையாக கடன்பட்ட பகுதியை வாசிப்பது என்று சென்று கொண்டிருந்தேன். போக்கிரி படத்தில் குடுமி வைத்த வடிவேலு அவர்கள் பச்சக் பச்சக் என்று அடிவாங்குவது போல ஒரு கட்டத்தில் வாசிப்பில் குழப்பமும், சுமையும் அதிகரித்தது.

முழுக்க முழுக்க கிண்டில் உதவியோடு தான் பாதி விவிலியம் வாசித்தேன். ஒரு நாள் வாசிக்க தவறினாலும் அடுத்த நாள் சுமை இரண்டு மடங்கானது. ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கை இழந்து கைவிடும் நிலையில் இருந்த போது எழுத்தாளர் சரவண கார்த்திக்கேயன் அவர்களின் ஒருகோடி காலடிகளைப் பின்பற்றி நவம்பர் 20 முதல் அன்றாடம் பத்தாயிரம் காலடிகள் நடைபயிற்சியை தொடங்கினேன். நடைபயிற்சி சமயத்தில் பழைய ஏற்பாட்டு நூல்களை ஆடியோ புத்தகமாக கேட்கத் தொடங்கினேன். இது என் வாசிப்பு சுமைகளை வெகுவாக குறைத்தது. புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டும் கட்டாயம் கிண்டிலில் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆடியோ வாசிப்பு எளிதாக இருந்தாலும் பார்த்து வாசிப்பதில் இருக்கும் சுகமும், சிந்தனைக்கான தளமும் குறைவாகவே இருப்பது ஒரு குறைபாடு தான். ஒரு சில நாட்களில் பைபிளை அச்சு பதிப்பிலும் வாசித்தேன். அனைத்திலும் கிண்டில் வாசிப்பே சிறந்ததாக கருதுகிறேன்.

தொடர் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பெரிய பெரிய காரியங்களை அமைதியாகச் செய்து சிறு புன்னகையோடு கடந்து செல்பவர்கள் இருக்கும் போது, 98 நாட்களில் பைபிள் வாசிப்பது ஒன்றுமே இல்லைதான். ஆயினும் இத்தாலிய மொழியில் வாசிப்பதில் இருக்கும் மனத்தடை நீங்கியது மட்டுமின்றி, ஒரு காரியத்தை திட்டமிட்டு செயல்படுத்த நினைத்தால், எந்த சூழ்நிலையும் அதைத் தடுக்க இயலாது என்ற ஒரு பாடத்தைப் புத்திக்குள் புகுத்தியமையால் என்னளவில் இது ஒரு நல்ல தொடக்கமாகவே கருதுகிறேன்.


1 கருத்து:

  1. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்
    எண்ணிய திண்ணிய ராக பெறின்!
    வாழ்த்துகள் யா!

    பதிலளிநீக்கு