ஞாயிறு, 22 ஜனவரி, 2023

பழக்கவழக்கங்களும், மனமாற்றமும் (Habits and Conversion)

முன்னுரை

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது', 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பன நாம் நன்கறிந்த பழமொழிகள். சிறுவயது பழக்கவழக்கங்கள் நம் வாழ்வின் கடைசி நிமிடம் வரை நம்மோடு தொடர்கின்றன; அவற்றை மாற்றுவது கடினம் என்பதே இவற்றின் பொருள் ஆகும். சாதாரணமாக மனித அனுபவங்களிலிருந்து கண்டறியப்பட்ட இவ்வுண்மையினை இன்றைய உளவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆகவே இக்கட்டுரையானது அன்றாட பழக்கவழக்கங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் மனமாற்றத்திற்கு எவ்வாறு அடிப்படையாகின்றன என்று கூற முற்படுகின்றது.

பழக்கவழக்கங்கள்

HABIT என்கின்ற ஆங்கில வார்த்தையில் H என்ற எழுத்தை நீக்கிவிட்டால் A BIT இன்னும் மிச்சமிருக்கின்றது. A-ஐ நீக்கிவிட்டால் இன்னும் ஒரு BIT இருக்கின்றது. B -ஐ நீக்கிவிட்டால் இன்னும் IT இருக்கின்றது. ஆகவே பழக்கவழக்கங்கள் எப்போதும் நம்மோடு இருக்கின்றன. அவை நல்லவையா, கெட்டவையா என்பதைப் பொறுத்தே நம் வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமைகின்றன. பழக்கவழக்கங்கள் நம்மோடு பிறப்பவை அல்ல. அவற்றை நாம் தான் உருவாக்குகின்றோம். நாம் வாழும் சூழலும், அதற்கான நமது எதிர்வினைகளுமே நமது பழக்கவழக்கங்கள் உருவாக அடிப்படையாகின்றன. நாமே உருவாக்கிய ஒன்றை நாம் நினைத்தால் மாற்றவும் முடியும் தானே?

மனம்

மனம் என்பது என்ன? மனம் என்பதை ஒரு சொல்லில் விளக்க முடியாது. நம் எண்ணங்கள், கற்பனைகள், சிந்தனைகள் போன்றவற்றின் ஒரு தொகுப்பு என்று புரிந்து கொள்ளலாம். நான் யார்? என்ற கேள்விக்கு விடை எனது பெயரோ, எனது தோற்றமோ, எனது பின்புலமோ மட்டுமல்ல. நான் என்பது முதன்மையாக எனது உள்ளார்ந்த மனமே ஆகும், அதனால் தான் திருவள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

என்கிறார். மனத்தூய்மையே அறம். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று விளக்கம் தருகிறார் கலைஞர்.

மனமும், பழக்கவழக்கங்களும்

இந்த மனதிற்கும், நமது பழக்கவழக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் (லூக்கா 6:45) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைகள் தான் எத்துணை உண்மை. நம் மனம் நல்ல கருவூலமாக இருக்கும் போது நமது பழக்கவழக்கங்களும் நல்லவையாக மாறும். ஆகவே நாம் நம் மனதை மாற்றாத வரையில், நமது பழக்கவழக்கங்களையும் மாற்றுவது கடினமே. அப்படியே மாற்றினாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (லூக்கா 6:43).

பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம்

ஒரு பருப்பொருள் என்பது பல சின்னஞ்சிறிய அணுக்களின் தொகுப்பே ஆகும். அது போல பல சின்னஞ்சிறிய பழக்கவழக்கங்களின் தொகுப்பே நம் வாழ்வு ஆகும் என்று ATOMIC HABITS என்னும் புத்தகத்தில் ஜேம்ஸ் கிளியர் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில் காணும் பெரும்பாலானக் கருத்துக்கள் அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். காலையில் எழுந்ததும் நம் படுக்கையை ஒழுங்கு செய்வது, வண்டி சாவி, குடை போன்ற பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, சரியான நேரத்தில் தூங்கச்செல்வது போன்ற சிறிய செயல்பாடுகள் நம் வாழ்விற்கு பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது தான் அப்புத்தகத்தின் மையக்கருவாகும். நம்ப முடிகிறதா? ஆம்! நாம் யார் என்பது நமது படிப்போ, பட்டமோ, பதவியோ அல்ல! நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம்? எத்தகைய வெற்றிகளை அடைய விரும்புகிறோம் என்பது அல்ல? மாறாக நாம் யார் என்பது இன்று நாம் என்ன செய்கின்றோம் என்பதே ஆகும்.

பழக்கவழக்கங்களை மாற்றுவது எப்படி?

ஒரு வெற்றுக் கோப்பையிலும் காற்று இருக்கிறது. காற்று இல்லாமல் ஆக்க வேண்டுமென்றால் எளிய வழி அதில் வேறு எதையாவது (எ.கா: நீர், மாவு) நிரப்ப வேண்டும். அது போலத்தான் நம் பழக்கவழக்ககங்களை மாற்ற வேண்டுமென்றால் புதிய பழக்கவழக்கங்களை உருவாக்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள் நம்மில் உருவாக மூன்று தூண்டுகோல்கள் உள்ளன. அவை,

1.   இலக்கு  நோக்கிய பழக்கவழக்கம்: நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது என் இலக்காக இருக்கும் போது, நான் கட்டாயம் தினந்தோறும் இரண்டு மணி நேரம் கூடுதலாகப் படிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதனால் நான் தொலைக்காட்சி, அலைப்பேசியில் செலவழிக்கும் என் பழையப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்வேன். ஆயினும் நான்  என் இலக்கையே நினைத்துக் கொண்டிருப்பதால் இன்று நான் செய்யும் செயல்களை சுமையாகக் கருதவும், விரும்பும் மதிப்பெண்களைப் பெற்ற பிறகு படிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் வாய்ப்பிருக்கிறது.

2. அமைப்பு நோக்கிய பழக்கவழக்கம்: நான் தேர்வில் வாங்கும் மதிப்பெண்களைப் பற்றி அதிகம் அக்கறைப்படப் போவதில்லை. ஆனால் தினந்தோறும் படிப்பதை நான் விரும்புகிறேன். அது இலக்கு பற்றிய பதற்றத்தைக் குறைப்பதோடு, அதை நோக்கியப் பயணத்தை ரசிக்கவும்  செய்கிறது. கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அடிக்கடி கூறுவது இதுதான், நாங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. நன்றாக, முழு ஈடுபாட்டோடு, குழுஉணர்வோடு விளையாடினோமா என்பதுதான் முக்கியம். ஆகவே என் ஒரு நாளை நான் விரும்பும் படியான செயல்களைக் கொண்டு கட்டமைக்க விரும்புகிறேன். அது என்றாவது ஒருநாள் என்னையும் அறியாமல் வெற்றிகளைக் காணச்செய்யும்.

3. சுய அடையாளம் நோக்கிய பழக்கவழக்கம்: நான் என்னை நன்கு படிக்கும் ஒரு மாணவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், நான் தினந்தோறும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வேன். நான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று என்னை அடையாளப்படுத்தினால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கையைச் சுழற்றி கற்பனையில் கூட பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன். நண்பர்கள் வற்புறுத்துவதால் சிலர் மதுப்பழக்கத்திற்குள் விழுந்துவிடுகிறார்கள். பிறகு வருந்துகிறார்கள். பின்னர் ஒருநாள் மீண்டும் நண்பர்கள் வற்புறுத்தும் போது, நான் குடியை விட்டுவிட விரும்புகிறேன் என்று சொன்னால் நிச்சயம் இந்த ஒரு முறை மட்டும் என்று மீண்டும் வற்புறுத்துவர். ஆனால் நான் இப்போது குடிகாரன் இல்லை என்று தான் விரும்பும் சுயஅடையாளத்தை முன்னிலைப்படுத்தும் போது அதற்கான மதிப்பும், பலனும் அதிகம். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை விட, நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதே உங்கள் பழக்கவழக்கங்களைத் தீர்மானிக்கின்றன.

நிறைவாக:

பழக்கவழக்கங்களின் மாற்றமே மனமாற்றம் என்று வார்த்தையில் சொல்லாவிடினும் வாழ்க்கையில் சொல்லியவர் நம் ஆண்டவர் இயேசு.

1.   அனைவருக்கும் நிறைவாழ்வு என்னும் இலக்கினைக் கொண்டிருந்தார். அது வேறு எங்கோ வானத்தில் இல்லை. உங்களுக்கு அருகில் உள்ளது என்றார்.

2.   பணிவிடை செய்யவே தான் வந்திருப்பதாகக் கூறியதோடு தெருக்கள் தோறும் சென்று கற்பித்தார். சீடர்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு குழுவாக செயல்பட்டார். பசித்திருப்போருக்கு உணவளித்தார். நோயுற்றோரைக் குணமாக்கினார். ஒதுக்கப்பட்டோருக்கு சுயமரியாதையை அளித்தார். அன்றாட நாளை இவ்வாறு நற்பணிகளால் கட்டமைத்தார். அதில் பெருமகிழ்ச்சி கண்டு கடவுளைப் புகழ்ந்தார்.

3.   தான் கடவுளின் மகன் என்ற தன் அடையாளத்தை மையமாகக் கொண்டு தன் அன்றாடப் பழக்கவழக்கங்களை அமைத்துக்கொண்டார். தான் இறைமகன் என்ற அடையாளத்திற்கு எதிராக எதையும் அவர் செய்யவில்லை. நாமும் இறைமக்கள் என்ற அடையாளத்தை முதன்மையாகக் கொள்ளவேண்டும் என்பதற்காக, கடவுளைத் தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தந்தார்.

உங்கள் ஒளி மனிதர்கள் முன் ஒளிர்க! என்ற நம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற நல்லப் பழக்கவழக்கங்களை நமதாக்கி வாழ்வில் நிறைவைக் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக