தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல். நம்மைச் சுற்றி வளிமண்டலம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் அரசியல் பேச்சு, அலப்பறைகளுக்கு குறைவே இல்லாதபடி பார்த்துக்கொள்கின்றன நமது மீடியாக்கள். பத்திரிக்கை, டிவி, வானொலி என்ற காலம் போய் இப்போது யூடியூப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டகிராம் என்று எங்கு நோக்கினும் அரசியல், அரசியல், அரசியல்.
இன்று நேற்றல்ல, நம்மைப் பொறுத்த வரை என்றுமே இப்படித்தான் இருந்திருக்கிறது நமது அன்றாட வாழ்க்கை. ஒரு சாதாரணக் காலைப் பொழுதைக் காட்சிபட்படுத்த டீக்கடை பெஞ்சில், தினத்தந்தியை கையில் வைத்துக்கொண்டு பெரிசுகள் அரசியல் பேசுவதைக் காட்டினால் நீங்களும் டைரக்டர்தான். அரசியல் - அதற்கு அடுத்து சினிமா. மூன்றாவது வேண்டுமானால் கிரிக்கெட். சீசனுக்கேற்ப இம்மூன்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஆகாயத்திற்கு அடுத்து நீக்கமற நிறைந்திருப்பது அரசியல்.
படித்த மக்கள். அரசியல் விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால் நாம் சட்டென்று கேரளாவைக் கைகாட்டுவோம். அங்கே வீட்டுக்கு வீடு பத்திரிக்கைகள் வாங்குவார்கள். தெருவுக்கு தெரு கம்யூனிஸ்ட் சகாக்கள், காங்கிரஸார்கள் அல்லது தொழிற்சங்கவாதிகள் என்று யாராவது போராட்டம் நடத்திக்கொண்டிருப்பார்கள். அங்கும் நம்மைப் போலவே மக்கள் அரசியில் பேச்சுக்களில் பேரார்வம் கொண்டவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு இறையியல் மாணவன் ஒரு கையில் விவிலியத்தையும், மறு கையில் அன்றாட பத்திரிக்கையையும் வைத்திருக்க வேண்டும் என்று எங்கள் இறையியல் கல்லூரியில் கற்றுத்தந்தார்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இறைவார்த்தையின் ஒளியில் காணவும், காலத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ற செயல்பாடுகளை முன்னெடுக்கவும் ஒருவர் பத்திரிக்கை வாசிப்பது அவசியம் என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் நாம் கொஞ்சம் அல்ல ரொம்ப கூடுதலாகவே பத்திரிக்கையிலும், அது கொண்டு வந்து கொட்டும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் மூழ்கிவிடுகிறோம் என்றே நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இத்தாலியில் வசித்தாலும் சமீபமாகத்தான் இத்தாலியப் பத்திரிக்கைச் செய்திகளை கொஞ்சம் வாசிக்கிறேன். இங்கும் வழக்கமான அரசியல்வாதிகள் உண்டு. கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று எதற்கும் பஞ்சமில்லாத ஒரு மனிதக் கூட்டமாகத்தான் கருத வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவோ, ஜெர்மனியோ எங்கும் இதுதான் கதை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாய் மனிதனைக் கடித்தால் அது நிகழ்வு. ஆனால் ஒரு மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி. செய்திகள் சுவாரசியத்தையும், வியாபார நோக்கத்தையும் தான் முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. உண்மையான நிகழ்வுகளை அது அப்படியே பிரதிபலிப்பதில்லை.
ஆயினும் நமக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு மிக முக்கியமான வித்தியாசத்தை உறுதியாகச் சொல்ல முடியும். இங்கு அரசியலை, நீதித்துறையை, காவல்துறையை, குற்றச்செயல்களை தனித்தனியாக அணுகுகிறார்கள். எல்லவற்றையும் அரசியலோடு கலப்பதில்லை. ஒரு அசாதாரண நிகழ்வு நடக்கிறதென்றால் இங்கே அது செய்தியாகிறது. அதற்கான காரண காரியங்கள் அலசி ஆராயப்படுகிறது. தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் அது தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அந்தக் கடைசி படிநிலையில் தான் அரசியல்வாதிகள் வருகிறார்கள். பெரும்பாலும் அந்த நிகழ்வை ஒரு ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனையாக அடையாளம் காண்பதும், அதைச் சரி செய்வதும் அனைத்து பாராளுமன்றவாதிகளின் கடைமையாக உணர்கிறார்கள். இதுதானே நல்ல முறையாக இருக்கமுடியும்? அந்நிகழ்வு தொடர்பான தனிமனிதர்களின் கருத்துக்கள் முதல் பக்கமாகவோ, தலைப்புச் செய்தியாகவோ ஆக்கிரமிப்புச் செய்வதில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் யாரும் கொடுக்க வேண்டியதில்லை என்பது இந்தச் சமூகத்தின் நிலைப்பாடு.
நமது ஊரில் அந்நிகழ்வு நடந்த அடுத்த நொடியே அரசியல்வாதிகள் முன்வரிசைக்கு வந்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவனோ, அல்லது குற்றவாளியோ அவனது அடையாளங்கள், கட்சி சார்புநிலைகள் அவசர அவசரமாக ஆரயாப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்தே அனைத்து பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. அடுத்ததாக ஆளுங்கட்சி அறிவிக்கும் நிவாரணங்கள், எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள், சாதாரண மக்களும் தங்கள் சார்புநிலைகளுக்கேற்ப பேசிபேசி அடுத்த நிகழ்விற்கு தாவிவிடுவதுதான் நடக்கிறதே தவிர உறுப்படியாக ஏதாவது தீர்வுகள் எட்டப்பட்டிருக்கின்றனவா என்றால் பூஜ்யம் தான் பதில்.
விபத்துச் செய்திகள் ஆயிரம் வருகின்றன. ஆனால் சாலைக் கட்டமைப்புக் கோளாறுகள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன. மாண்புக் கொலைகளும் அதைச் சுற்றி சாதி அரசியலும் செய்திகளாகின்றன. தடுப்பதற்கான சமூக மனநிலை மாற்றமோ, சட்டதிட்டங்களோ, நிரந்தர தீர்வுகளோ எட்டப்படுவதில்லை. நமது சமூக மாற்றத்தில் பத்திரிக்கைகள் எந்த சுண்ணாம்பையும் எடுத்துவைப்பதில்லை என்பதே மிகவும் வருந்தத்தக்க கசப்பான உண்மை. அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவர்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டும் புதிய, பழைய, எல்லா தலைமுறையின் நேர்மை சிறிதுமற்ற ஊடகவியலாளர்கள் தான் நமது மக்களாட்சியையே கேளிக்கை நிகழ்ச்சியாக்குபவர்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு குற்றம் நடக்கிறது என்றால் (குற்றங்கள் நடக்காத மனித சமூகங்கள் வேறு கிரகத்தில் எங்காவது இருந்தால் தான் உண்டு) அதற்கான எதிர்வினைகள் விவாதிக்கப்படவேண்டும். காவல் துறையின் துரிதம், திறன் விவாதிக்கப்படலாம். குற்றத்திற்கு காரணமான குற்றவாளியின் வயது, தூண்டுதலுக்கு காராணமான சூழ்நிலைகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்யலாம். மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கலாம். அதைவிடுத்து சம்பந்தமேயில்லாமல் சர்ச்சைக் கருத்துக்களை உமிழ்வதையே பிறவிப்பயனாகக் கருதும் ஒருசில தரைமட்ட அரசியல் வியாதிகளிடம் கருத்துக்களைப் பிடுங்கி பெரியச் செய்தியாக்கி சமூகத்திற்கு எந்தப்பயனும் தப்பித் தவறியும் நடந்துவிடாது பார்த்துக்கொள்பவர்கள் நமது பத்திரிக்கை வர்க்கத்தினர்.
தமிழகத்தின் எந்த ஊரிலும் வார்டு உறுப்பினராகக் கூட தகுதியற்ற (மக்களாட்சியில் தகுதி என்பது மக்களின் ஓட்டு மட்டுமே) பொய்யில் ஊறிய பேச்சுச் சீமான்களெல்லாம் பிழைப்பு நடத்துவது மீடியாக்களால்தான். சீமான்களையும், விஜய்களையும், எச்.ராஜாக்களையும் வைத்து தொழில் நடத்தும் மீடீயாக்கள் இந்த சமூக விரோதிளால் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் பொறுப்பெடுக்கவேண்டும். ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பலூன் விஜயின் வருகையின் போது கரூரில் நடந்த நெரிசல் கொலைச் சம்பவத்திற்கு மீடியாக்கள் தார்மீகப் பொறுப்பேற்று, இரத்தக்கறை படிந்த அந்த நபரை சிபிஐ விசாரணை முடியும் வரையிலாவது மீண்டும் தங்கள் சானலில் காட்டுவதற்கு வெட்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக