வெள்ளி, 30 ஜனவரி, 2026

பூக்குழி - சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது

"பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன"-  ஆசிரியர் பெருமாள் முருகன்

கடந்த பதிவின் தொடர்ச்சியாகவும் இதனைக் கருதலாம். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் குடியரசில், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கருத வாய்ப்பிருக்கிறது. நமது 2026 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு அடுத்த நாள் தமிழ் இந்து பத்திரிக்கையில் வாசித்த செய்தி என்ன தெரியுமா?

'காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்'. 'புறக்கணித்தல்' என்பதற்கான விளக்கத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தருகிறார்: 'இளைஞரோ, இளம்பெண்ணோ தங்கள் விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது. அவர்களுடைய குடும்பத்தினரை சமூக ரீதியாக புறக் கணிக்க வேண்டும். குறிப்பாக, சமூக நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. பால் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கக் கூடாது. அக்குடும்பத்தினரை யாரும் வேலைக்கு அழைக்கக் கூடாது. அவர்களுடைய நிலத்தில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது.  இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கும் அக்குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.'

2013 ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள்  'பூக்குழி' நாவலைச் சமீபத்தில் தான் வாசித்தேன். அப்புத்தகம் தருமபுரி இளவரசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் வாசித்த உடனேயே மனதுக்குள் திக்கென்று இருந்தது. அப்புத்தகம் காதலித்தப் பெண்ணைக் கோவிலில் திருமணம் செய்து தன் சொந்த ஊருக்கு அழைத்து வரும் குமரேசன், அவனது காதல் மனைவி சரோஜா, அவனது அம்மா மாராயி மற்றும் இன்னும் மிகச் சில கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட சிறிய நாவல் ஆகும்.  

மாராயி இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தாலும், காடு, கழனியில் கடுமையாக உழைத்து தன் ஒரே மகன் குமரேசனை வளர்த்தவள். ஊருக்கு வரும் முட்டைக்கார பாய் அவனை நகரத்தில் ஒரு 'கலர்' கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். அங்கு கிடைக்கும் நண்பன் பெரியசாமி மூலம் விரைவில் தொழில் கற்றுவிடுவதோடு அவன் தங்கியிருக்கும் வரிசை வீட்டருகிலேயே சரோஜாவுடன் காதல் மலர்வதோடு, அவளைத் திருமணம் செய்து தன் வீட்டிற்கும் அழைத்துவருகிறான். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கும் சவால்களே கதையின் சாரம். இருவரின் அகவாழ்வின் கனிவும், புறவாழ்வின் கசப்பும் கலந்த ஒரு அற்புதமானக் கதை பூக்குழி.

பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை  Pyre என்ற தலைப்பில் புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. அப்புத்தகமானது 2023 ஆம் ஆண்டுக்கான புக்கர்  பரிசுக்கான பதிமூன்று புத்தகங்கள் அடங்கிய  நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்புத்தகத்தைக் குறித்து “It’s so tense, it leaves  you gasping for air” என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் 60 ஆவது அகவை கொண்டாடப்படும் இந்த ஆண்டில் சாதிக்கு எதிரான அவரது எழுத்துக்கள் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று விழைகிறேன். 

கிராமங்களை எப்போதும் மெய்யழகன் படம் போல பச்சைப் பசேல் என்ற நிலப்பரப்போடும், வெள்ளாந்தியான மனிதர்களோடும் அடையாளப்படுத்தும் அப்பாவி மனிதர்கள் நீங்களென்றால், இப்பூக்குழி இந்தியக் கிராமங்களின் உண்மையானக் கோர முகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அல்லது நியாபகப்படுத்தும். 

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் சாதியப் புற்று நோய் வேர்விட்டிருக்கிறது. கிறிஸ்தவம் இப்புற்று நோய்க்கு மருந்தாகும் வாய்ப்பினை ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. வரனை ஏன் இன்னொருவர் பார்க்க வேண்டும் என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், சொந்த சாதியில் வரன் பாரக்கும் படலம் இல்லாத ஒரு கிறிஸ்தவ பங்கினைக் காட்டுங்களேன். சாதிய அடிப்படையில் பங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மறைமாவட்டத்தையே பிரிக்கும் அளவிற்கு துணிந்துவிட்டார்கள். சாதிய அடிப்படையில் ஆயரை, சபை தலைவர்களை, சாதிய பிரிதிநிதித்துவங்களை மிகச் சாதாரணமாக ஒரு கிறிஸ்தவனால் கடந்து போக முடியுமளவிற்கு தோல் மரத்துவிட்டது. 

இதை எதையுமே வெளிப்படையானத் தரவுகளைக் கொண்டு நிரூபிக்க முடியாதுதான். ஆனால் எங்கள் (முன்னாள்) பங்கினையே எடுத்துக்கொள்ளுங்கள். இராமனாதிச்சன்புதூர் ஒரு மிகச்சிறிய ஊர். எந்த நிர்வாகச் சிக்கல்களும் இல்லாமல் ஒரே ஆலயம் கொண்ட, ஒரே பங்காக இருக்க எல்லாச் சாத்தியக் கூறுகளும் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அருமையான ஊர். ஆனால் முகவரியில் தான் அது ஒரே ஊர். கிறிஸ்தவர்களின் அகவரியில் அது இரண்டு ஊர். இஞ்ஞாசியாருக்கு ஒரு பங்கு. ஆரோக்கிய நாதருக்கு கிளைப்பங்கு. அங்கும் இங்கும் பெரும்பாலும் திருமண கொடுக்கல் வாங்கல் இன்றும் கிடையாது. சரி இதெல்லாம் என்றோ நடந்து விட்ட அவலத்தின் விளைவுதானே என்று கடந்து போக முடியாதபடிக்கு கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் இரண்டு பகுதிளுக்கும் இடையில் இருப்பதைத்தான் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் திருவள்ளுவர். இட்டார் பெரியார், இடாதோர் இழிகுலத்தார் என்று இரண்டு சாதிகளை மட்டும் அடையாளப்படுத்தினார் அவ்வையார். சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்றார் பாரதியார். மனிதர்களைப் பிரிப்பதற்கே சாதி உண்டானது. மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காகவே அதை நாம் அழிக்க வேண்டும் என்றார் பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அறிஞர் அண்ணா. இளைய தலைமுறை சாதிப்பெயரை பெருமையாக அல்ல. வெட்கமாக உணர்வது போல மாற்ற வேண்டும் என்றார் கலைஞர். 

ஆனால் சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது.


2 கருத்துகள்:

  1. Thought provoking! What a…….

    பதிலளிநீக்கு
  2. ஜான் ரிச்சர்டு1 பிப்ரவரி, 2026 அன்று 2:36 PM

    நல்ல பதிவு. இறப்பிற்குப் பின் இடக்கூடிய இடங்களைப் பிரித்து வைத்திருக்கும் கூட்டம் யாவும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே!

    எங்கள் சாதியைச் சேர்ந்த ஆயரே வேண்டும் என்று அருட்பணியாளர்களே இணைந்து பெட்டிசன் போடும் காலம் எப்போது மாறுமோ?

    பதிலளிநீக்கு