பகுதி 2
தவக்கால 5 ஆம் ஞாயிறு (மார்ச் 22, 2026)
எசே 37, 12-14, தி.பா 129, ரோமையர் 8, 8-11, யோவான் 11, 11-45
(அருட்தந்தை பெர்னாந்தோ அர்மெல்லினி அவர்கள் இத்தாலிய மொழியில் ஆற்றிய மறையுரையானது கருத்துச்சிதைவின்றி மொழிச்சுதந்திரத்தோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றிய நமது புரிதலை இன்னும் ஆழப்படுத்த உதவக்கூடும். Fr. ஆன்றனி பிரான்சிஸ், OMD)
யோவான் நற்செய்தியின் பதினொன்றாம் பிரிவு முழுவதுமே இலாசர் உயிர்பெற்ற நிகழ்வு குறித்த விவரணையாகவே இருந்தாலும், குறிப்பிட்ட அந்தப்
புதுமையோ இரண்டு வசனங்களில் நிகழ்கிறது. (43-44). மீதமுள்ள பகுதி முழுவதும் உரையாடல்களாலேயே நிறைந்துள்ளது. நீர் நிரம்பியக் கிணற்றின் ஆழமானப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள் போலவே இந்த உரையாடல்களும், கிறிஸ்தவத்தின் ஆழமான நம்பிக்கையான உயிர்ப்பினைக் குறித்த புரிதலுக்கு வழிகாட்டுகின்றன. யோவான் நற்செய்தியில் புதுமைகள் வெறும் அதிசயங்கள் அல்ல. மாறாக இயேசு யார் என்பதை வெளிப்படுத்தும் அடையாளங்கள். உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே என்ற இயேசுவின் பிரகடனத்தை, யோவான் நற்செய்தியாளர் இலாசர் உயிர்பெற்ற நிகழ்வின் வாயிலாக நிறுவுகிறார்.
இந்த நற்செய்திப் பகுதியில் இலாசருக்கு நிகழ்வது 'மீண்டும் உயிர்பெறுதல்' மட்டுமே. உயிர்த்தெழுதல் அல்ல. மீண்டும் மரணத்தை நோக்கிய இவ்வுலகியல் வாழ்விற்கு திரும்புவதும் (இலாசர் உயிர்பெறுதல்), மரணமேயல்லாத கடவுளின் வாழ்வில் நுழைவதும் (இயேசு உயிர்த்தெழுதல்) முற்றிலும் வேறானவை. முதலாவது ஒரு தற்காலிகமான மீட்சி. மற்றது மரணத்தின் மீதான நிரந்தர வெற்றி.
இந்த தெளிவின் தொடர்ச்சியாக, இந்த நற்செய்திப்பகுதியிலுள்ள சில முரண்களையும், மனித புரிதல்களுக்கு கடினமாகத் தோன்றும் சில விவரங்களையும் கவனிப்போம். ஒரு நிகழ்வு தொடர்பான விவரங்களைக் கொண்டு சேர்க்கும் செய்தித்தாள்களைப் போல நற்செய்தியை நாம் அணுகக்கூடாது. அதே நிகழ்வின் ஆழமான இறையியல் உண்மைகளைப் பரிசீலிப்பதன் மூலமாக நமது இறைநம்பிக்கையை வளர்ப்பதும், வழிநடத்துவதுமே நற்செய்தியின் நோக்கமாகும்.
1. வித்தியாசமானக் குடும்பம் (வசனம் 1-3): மார்த்தா, மரியா, இலாசரை உள்ளடக்கிய பெத்தானியக் குடும்பத்தில் சகோதர, சகோதரியைத் தவிர கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை போன்ற வேறு எந்த உறவுகளும் குறிப்பிடப்படவில்லை.
2. இயேசுவின் விவரிக்கமுடியாத நடத்தை (வசனம் 6): 'இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.' இலாசரை சாக அனுமதிப்பது போலத் தோன்றவில்லையா? ஏன் இயேசு உடனடியாகத் தலையிடவில்லை?
3. அதிர்ச்சியூட்டும் கூற்று (வசனம் 15): 'நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்' என்ற இயேசுவின் கூற்று நம்மைத் திகைப்படையச் செய்யக்கூடும். சாகும் தருவாயில் நண்பன் இருக்கும் போது, அவர் எப்படி மகிழ்ச்சியடையக்கூடும்?
4. மார்த்தா மற்றும் மரியாவை 'சாலையில்' சந்தித்தல் (வசனம் 17-28) தொலைவில் இயேசு வருவதை மார்த்தா 'எப்படியோ' தெரிந்து கொள்கிறார். இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆன பின்னும் இயேசு அவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்லவில்லை. மார்த்தா சென்று மரியாவிடம் சொல்கிறார். மரியா வந்து இயேசுவை சந்திக்கிறார். இயேசு ஏன் மார்த்தாவோடு உடன் செல்லவில்லை?
5. இயேசுவின் வாக்குறுதி (வசனம் 25-26): 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?' என்ற இயேசுவின் கூற்றை எப்படி புரிந்துகொள்வது? எல்லோரையும் போலவே கிறிஸ்தவர்களும் இறக்கிறார்களே!
6. இயேசுவின் கண்ணீர் (வசனம் 35): இலாசரை உயிர்ப்பிக்கப் போகிறோம் என்பதை நன்றாக அறிந்திருந்தும், இயேசு ஏன் அழுகிறார்? இயேசு போலியாக அழுவது போலத் தோன்றவில்லையா?
7. பெத்தானியக் குடும்பத்திற்கு என்ன ஆனது?: இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான, அவர் அன்புகொண்டிருந்த, இக்குடும்பத்தைப் பற்றி இந்த நிகழ்விற்குப் பின் நற்செய்தியில் வேறு எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. புதிய ஏற்பாட்டின் மற்றப் பகுதிகளில் ஒரு இடத்தில் கூட இவர்கள் குறிப்பிடப்படவில்லை.
8. ஒத்தமைவு நற்செய்தியாளர்களின் மௌனம்: இவ்வளவு பெரிய ஒரு அருமடையாளத்தைப் பற்றி மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது.
இக்கேள்விகள் அனைத்தும் வரலாற்றுக் குறிப்பின் பிழைகள் போலத் தோன்றலாம். ஆனால் யோவான் தனது வாசகர்களுக்கு ஒரு நிகழ்வின் வெறும் மேலோட்டமான அறிக்கையைச் சமர்ப்பிக்க விரும்பவில்லை. மாறாக அடர்த்தியான ஓர் இறையியல் பகுதியை வழங்க விரும்புகிறார். நோயாளி இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், பெரும் வியப்பை ஏற்படுத்திய ஒரு குணமளிக்கும் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமான, 'உயிர்த்தெழுந்த இயேசுவே வாழ்வின் கடவுள்' என்ற உண்மையை உரக்கப் பதிவு செய்கிறார்.
இக்குடும்பம் ஒரு கிறிஸ்தவ சமூகத்தையே (அன்பியத்தை, பங்குத்தளத்தை, மறைமாவட்டத்தை) குறிக்கின்றது. இங்கு சகோதரிகளும், சகோதரர்களும் உண்டு. மேலோர்-கீழோர் என்ற பாகுபாட்டிற்கு இடமே கிடையாது. இயேசு அவர்களை அன்பு செய்தார். பல இடங்களில் இலாசர் இயேசுவின் நண்பர் (வசனம் 3, 5, 11, 36) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 'நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டடேன். உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்று யோவன் 15:15 இல் இயேசு கூறுவதை நினைவுபடுத்துகிறது. இயேசுவால் நேசிக்கப்படும் ஒவ்வொரு நம்பிக்கையாளரும் ஒரு 'இலாசர்'தான்.
இந்த நம்பிக்கையாளர் சமூகத்தில் ஒரு துன்ப நிகழ்வு நடக்கிறது. அது தீர்க்க இயலாத ஒரு புதிரை நம் முன் வைக்கின்றது. ஒரு சகோதரனின் மரணம். இத்துயரத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா என்று கேட்கும் சீடர்களுக்கு இயேசு என்ன பதிலளிக்கிறார்? ஒரு நண்பனை நேசிப்பவர் அவரை சாகவிட்டார் அல்லவா? இயேசு இலாசரின் நண்பராகவும், நம் நண்பராகவும் இருக்கும்போது அவர் ஏன் அத்துர்மரணத்தைத் தடுக்கவில்லை?
அவர் ஏன் இரண்டு நாட்கள் தாமதிக்கிறார் என்பதை மார்த்தா மற்றும் மரியாவைப் போலவே நம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய அன்பின் அடையாளமாக அவர் உடனே தலையிடுவார் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். 'ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்' (வசனம் 21, 32) என்ற மறைமுகமான, அதே வேளையில் நியாயமானக் குற்றச்சாட்டு நம்முடையதும் ஆகும்.
மரணம் அது நம்முடையதோ, அல்லது நாம் நேசிப்பவர்களுடையதோ, நமது இறைநம்பிக்கைக்கு கடுமையான சோதனையாக அமைகின்றது. அவர் 'இங்கே இல்லை', அவரது அன்பால் நம்மைத் தாங்கிக்கொள்ளவில்லை என்ற கையறு நிலை நமக்குள் ஐயத்தை எழுப்புகின்றது.
இலாசரின் இறப்பை அனுமதிப்பதன் மூலம் இயேசு ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றார். உயிரியல் ரீதியான மரணிப்பைத் தடுப்பது அவருடைய நோக்கமல்ல. தற்காலிகமான இவ்வாழ்வைத் தள்ளிப்போடுவதைக் காட்டிலும், நிலையான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்வதையே இயேசு தனது பணி முதன்மையாகக் கருதினார். இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றே! அது முடிவடைவதும் நல்லது தான்.
கிறிஸ்தவ சீடத்துவம்
இந்தக் கோணத்தில் பார்க்கும் போது, பல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடனும், கிறிஸ்தவத்துடனும் கொண்டுள்ள தங்கள் உறவின் தன்மையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டியுள்ளது. மதம் என்பது வெறுமனே அதிசயத் தலையீடுகளுக்கான அவசரகால கோரிக்கையாகச் சுருங்கிவிடும்போது, அது நம்பிக்கை நெருக்கடிக்கு இட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாகின்றது. நோய், வேதனை மற்றும் துர்நிகழ்வுகளின் போது இறைவனின் இருத்தலையே நாம் கேள்விக்குட்படுத்துகின்றோம்.
சீடர்களுடனான உரையாடலின் மூலமாக மரணத்தின் மீதான அச்சத்தையும், நமக்குள் இருக்கும் நிச்சயமற்றத் தன்மையையும் நற்செய்தியாளர் வெளிப்படுத்துகின்றார். மரணம் என்பது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்று அஞ்சுவது ஒரு சராசரி மனிதனின் இயல்பான எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் இந்த அச்சமே கிறிஸ்துவின் சீடனுக்கு மிகப்பெரிய எதிரி. சீடத்துவம் என்பது தனது வாழ்வை இழக்கவும் தயாராக இருக்கும் துணிச்சலைக் குறிக்கின்றது. அன்பின் மிகுதியினால் தன்னையே கையளிப்பதே சீடத்துவம். மண்ணில் விழுந்து மடியும் கோதுமை மணி மட்டுமே மிகுந்த பலனைத் தரும் என்பதை உணர்ந்து வாழ்வதே கிறிஸ்தவ சீடத்துவம்.
இயேசுவின் வார்த்தைகளில் மரணம் அதன் சரியானப் பார்வையில் முன்வைக்கப்படுகின்றது. தனது நண்பரின் மரணத்தைத் தடுக்காதது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறுகிறார். ஏனெனில் மரணம் அவரைப் பொறுத்தவரை நிரந்தர அழிவு அல்ல. சரிசெய்ய முடியாத பிழையும் அல்ல. மாறாக அது முந்தைய நிலையைவிட அளவிட முடியாத ஒரு மேலான நிலையின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.
இப்போது இந்த நற்செய்திப் பகுதியின் மையமான மார்த்தாவுடனான உரையாடலுக்கு வருவோம்.
இலாசர் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அக்கால நம்பிக்கையின் படி, முதல் மூன்று நாட்களில் ஒரு நபர் இன்னும் முழுமையாக இறக்கவில்லை என்று கருதப்பட்டது. நான்காம் நாளில் தான் உயிர் அவரைவிட்டு நிரந்தரமாக நீங்குவதாக நம்பினர். இலாசர் இறந்த துல்லியமான நாளையும், நேரத்தையும் தருவது நற்செய்தியாளரின் நோக்கமல்ல. ஆனால் உண்மையாகவும், நிரந்தரமாகவும் இறந்துவிட்ட ஒருவருக்காக இயேசு என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடையளிக்க அவசியமான ஒரு முக்கியமானத் தகவலாகும். தொடரும் உரையாடலின் வாயிலாக ஒரு சீடனின் மரணம் என்ன பொருளைக் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள நற்செய்தியாளர் வழிநடத்துகின்றார்.
'நீர் இங்கே இருந்திருந்தால்' தனது எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வின் முன்னால் மனிதன் தன் தோல்வியை ஒப்புக்கொள்வதாகும். பாசக்கயிற்றிலிருந்து தப்பிக்க மனிதன் மேற்கொள்ளும் எல்லா பகீரத முயற்சிகளும் அவனையே கேலி செய்கின்றன. மரணம் இருக்கிறது என்றால் கடவுள் இல்லையோ என்றும், கடவுள் இருக்கிறார் என்றால் மரணம் நிழ்வது ஏன் என்றும் எழும்பும் கேள்விகள் நமது நம்பிக்கைகளின் மீதான புரிதலின்மையின் வெளிப்பாடுகளே!
மார்த்தா சதுசேயர்களைப் போலல்லாமல் இறந்தோர் உயிர்த்தெழுவார்கள் என்று நம்பிய ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். உலக முடிவில், தனது சகோதரரும் மற்ற அனைத்து நீதிமான்களோடும் மீண்டும் உயிர்பெற்று எழுவான் என்பதை உறுதியாக நம்பினார்.
நிறைய கிறிஸ்தவர்கள் கருதுவது போலவே, மார்த்தாவும் உலக முடிவில் உயிர்ப்பு என்னும் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், இது யாருக்காவது ஆறுதலைத் தரமுடியுமா? கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும் உயிர்ப்பின் கனியால் யாருக்கு என்ன பலன்? கடவுள் ஏன் ஒருவரை மரணிக்க வைத்து, பிறகு பின்னெடுங்காலத்திற்குப் பின் உயிர் கொடுக்க வேண்டும். ஏனு; அவ்வாறு காத்திருக்க வைக்க வேண்டும்? உடல் இல்லாமல் ஆன்மா மட்டும் எப்படி இருக்க முடியும்? இத்தகைய உயிர்ப்பு நம்பகத்தன்மையற்றதாகத் தோன்றவில்லையா? ஒரு மனிதன் இறக்கும் போது, அவரைப் போலவே இன்னொருவரைக் கடவுள் உருவாக்கினார் என்றாலும் (குளோனிங் போல), இருவரும் ஒருவர் அல்லவே!
கிறிஸ்துவை நம்புபவர் எல்லோரையும் போல் இறந்து, பின்னர் உலக முடிவில் உயிர்த்;தெழுவோம் என்று நம்புபவர் அல்ல. மாறாக கிறிஸ்துவால் மீட்கப்பட்டவருக்கு இறப்பு இல்லை என்பதே அவனது நம்பிக்கை. மரணம் வாழ்வில் ஒரு முறிவு அல்ல. அது ஒரு மாற்றம்.
இயேசு மார்த்தாவிடம் அறிவிக்கும் இந்தப் புதிய மற்றும் தனித்துவமானச் செய்தியைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
(பகுதி 3 தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக