புதன், 22 மார்ச், 2023

இறைவனின் குரல் கேட்டல்

தொடக்கத்தில் வாக்கு இருந்தது

யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது

காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது

போ என அதைத் தான் துரத்திட வாய் மறுக்குது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது

கவிஞர் தாமரை அவர்கள் மாறா என்ற திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடல் வரிகள் இக்கட்டுரைக்கு நல்ல தொடக்கமாக அமையும் என நினைக்கிறேன். ஏதோவொரு குரல்தான் மனிதர்களை இயக்குகிறது. இரும்புத் துகள்களை ஈர்க்கும் காந்தம் போல மனிதர்கள் அக்குரலை நோக்கி செல்கிறார்கள்.

இந்திய தத்துவவியலில் ஸ்ருதி-ஸ்ம்ருதி என்கின்ற கருத்தாக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலி-எதிரொலி என்று இதனை மிக எளிமைப்படுத்தி புரிந்துகொள்ளலாம். ஸ்ருதி என்பது அனைத்திற்கும் ஆதாரமான ஒலி. அவ்வொலியே காலங்களைக் கடந்தும் இப்பேருலகை இயக்குகிறது. ஸ்ம்ருதி அந்த ஒலியின் விளக்கவுரை போன்றது. மானுட வரலாற்றில் எதிரொலிப்பது. தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது (யோவான் 1:1). அந்த வாக்கு (ஸ்ருதி) மனிதர்களின் மனதில் எதிரொலிக்கும் போது (ஸ்ரும்தி) அன்பாக வெளிப்படுகிறது.

நானும் மயங்கிப் போனேன்

பவுலோ கொயலோவின் அல்கெமிஸ்ட் நாவலில் சந்தியாகு என்னும் சிறுவனைத் தனக்கானப் புதையலைத் தேடிப் பயணிக்க வைத்தது அக்குரலே! ஆபிரகாமை தான் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டிலிருந்து கண்காணாத ஒரு புதிய நாட்டை நோக்கி செலுத்தியது அந்தக் குரலே! இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்று மோசேயிடம் பேசியது அக்குரலே! ஆண்டவரே பேசும்! உம் அடியான் கேட்கிறேன் என்று சிறுவன் சாமுவேல் பதிலுரைத்தது அக்குரலுக்கே! 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன் என்று எசாயா கூறுவது அக்குரலைப் பற்றியே! 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் என்று அன்னை மரியாவிற்கு நம்பிக்கை அளித்தது அக்குரலே! உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்று தந்தை யோசேப்புவை சரியான முடிவுகளை எடுக்கத் தூண்டியது அக்குரலே! 'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று திருத்தூதர் பவுலிடம் வினவியது அக்குரலே!. 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்ட பொழுதில் பேதுரு துயருற்று, 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்று பதிலுரைத்தது அக்குரலுக்கே!

அந்த குரல் அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, மன்னிப்பு அனைத்தையும் உள்ளடக்கிய தந்தையின் குரல். அதனை ஒருவர் வெறும் காதுகளால் கேட்க முடியாது. நம்பிக்கையுடன் கூடிய இதயத்தின் காதுகளால் நிச்சயம்  உணர முடியும். அது தந்தையின் குரல் என்றாலும் அது தாயின் கருவில் பாதுகாப்பாக இருக்கும் ஒரு குழந்தையின் உணர்வைத் தரவல்லது. மனிதர்கள் தங்களையே அந்த அன்பின் குரல்கேட்டு அர்ப்பணிக்க முன்வருகிறார்கள்.  ஆண்டவரே! நீர் என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப் போனேன்! (எரேமியா 20:7).

இறைவனின் குரல்

விருப்பமானப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது போல் இறைவனின் குரலை நாம் தேர்வு செய்ய முடியாது. அக்குரல்தான் நம்மைத் தேர்வு செய்யும். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் (யோவான் 15:16).

இக்குரல் சிலரை வானத்து நிலவைப் போல ஒளிவீச அழைக்கிறது. சிலரை காட்டு மலர்களைப் போல மணம் வீச அழைக்கிறது. அக்குரலைக் கேட்டு நம்பிக்கையோடும், துணிச்சலோடும் முன்வரும் போது அக்குரலே வழிகாட்டியாகவும் இருக்கிறது. என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது. அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உம் திருச்சட்டத்தை விரும்புவோருக்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு. அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை (திருப்பாடல் 119).

வானத்து நிலவாக

பராமரிப்பும், பாதுகாப்பும் மிக்க லொரேட்டோ துறவற சபையில் சேரந்து, பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றிய அன்னைத் தெரசாவிற்கு கடவுளின் குரல் ஒரு இரயில் பயணத்தின் போது கேட்டது. உதவி கேட்டு கண்ணீருடன் நின்ற ஒரு ஏழையின் குரலில் அவர் கடவுளின் அழைப்பை உணர்ந்தார். தான் தேர்ந்துகொண்ட துறவு வாழ்வைத் துறந்து, இறைவன் தன்னைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தார். கடவுள் அவர் வழியாக மாபெரும் வல்ல செயல்களை ஆற்றினார். வானத்து நிலவாக இன்றும் புனித அன்னை ஒளிவீசுகிறார்.

காட்டு மலராக

திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது சுற்றுச்சூழல் இறையியல் பாடத்திற்காக அருட்தந்தை ஜான் பீட்டர் அவர்கள் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்றார். காடுகள், வயல்வெளிகள் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் தானே! ஆனால் நாங்கள் சென்றதோ அருகாமையில் இருக்கும் ஒரு அய்யப்பன் ஆலயத்திற்கு. ஆலயம் ஒரு பள்ளிக்கூடம் போலவும், பள்ளிக்கூடங்கள் ஒரு ஆலயம் போலவும் இருக்க வேண்டும் என்ற கல்வெட்டு ஆலய வாயிலில் நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்ததும் அகமும், புறமும் தழுவும் ஆழமான அமைதி. அங்கே ஓரிடத்தில் ஒரு நபர் ஒரு சிறிய ஆர்மோனிய இசைக் கருவியை இசைத்து இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார். பல நாட்கள் அதன் பிறகு நான் அவ்விடத்திற்கு சென்றிருக்கிறேன். அந்நபர் அதே இடத்தில் பாடிக்கொண்டேயிருப்பார். இன்று நீங்கள் சென்றாலும் அவர் பாடிக்கொண்டுதான் இருப்பார். கவனிப்பாரற்ற இடத்திலும் காட்டுமலர்கள் மணம் வீசுவது போல அவரது அழைத்தல் இறைவனைப் பாடுவது என்று புரிந்துகொள்கிறேன்.

நீ எங்கே இருக்கிறாய்? நீ இங்கே என்ன செய்கிறாய்?

நிகழ்வு 1: மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று கேட்டார் (தொடக்கநூல் 2:8)

நிகழ்வு 2: பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, 'எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?' என்று ஒரு குரல் கேட்டது (1 அரசர் 19:11-13)

இரண்டு நிகழ்விலும் இறைவனின் குரல் மென்மையாக ஒலிப்பதையே காண்கிறோம். நீ எங்கே இருக்கிறாய்? நீ இங்கே என்ன செய்கிறாய்? என்ற கேள்விகளை கடவுள் நம்மிடமும் எழுப்புகிறார். தன் உருவிலும், சாயலிலும் உடல்கொடுத்து, தன் மூச்சுக் காற்றினால் உயிர்கொடுத்த இறைவனின் குரலைக் கேட்காமல், பாவத்தின் அடையாளமான பாம்பின் குரல் கேட்டதினால் ஆதாமும், ஏவாளும் மரங்களுக்கிடையே ஒளிந்துகொண்டனர். பாம்பின் குரல்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பணத்தின் மீதான, அதிகாரத்தின் மீதான, அதீத ஊனின்பத்தின் மீதான பாம்பின் குரல்கள் எப்போதும் கீச்சிட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள் (தொடக்கநூல் 3;:6). கண்களுக்குக் களிப்பூட்டும் விளம்பர உலகின் கூச்சல்களுக்கு மத்தியில், கடவுளின் மெல்லியக் குரலைக் கேட்கவும் இறைவனின் உதவி வேண்டும். மனம் குழம்பிய நிலையில் இறைவனின் குரலைக் கேட்பது கடினம். அமைதியில் அக்குரல் தெளிவாக நம்மிடம் பேசும். நாம் கடவுளின் தொடர்பு எல்லைக்கு அருகில் தான் இருக்கிறோமா?   

ஆயினும் அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி

மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது (யோவான் 12:3). நம் வாழ்க்கை அந்த நறுமணத் தைலத்தைப் போன்றது தான். சில வேளைகளில் அக்குவளையைக் கவிழ்த்துக் இயேசுவின் காலடிகளில் கொட்டிவிடத் தோன்றுகிறதா? என்னைப் பொறுத்தமட்டில் இறையழைத்தல் என்பது அதுதான். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலிப்பியர் 4:2) பெருந்திரளானப் புனிதர்களும், மறைசாட்சிகளும், துறவு வாழ்விலும், இல்லற வாழ்விலும் புனிதம் கண்டவர்களும் கடவுளின் குரலைக் கேட்டுத் தங்கள் வாழ்வை அக்குரலுக்காக அர்ப்பணிக்க முன்வந்தவர்களே!

பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது 

வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது

அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை   

எல்லாம் வாரியிறைக்கலாம்;

ஆயினும் அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி!

(இனிமை மிகு பாடல்கள் 8:7)


ஞாயிறு, 22 ஜனவரி, 2023

பழக்கவழக்கங்களும், மனமாற்றமும் (Habits and Conversion)

முன்னுரை

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது', 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பன நாம் நன்கறிந்த பழமொழிகள். சிறுவயது பழக்கவழக்கங்கள் நம் வாழ்வின் கடைசி நிமிடம் வரை நம்மோடு தொடர்கின்றன; அவற்றை மாற்றுவது கடினம் என்பதே இவற்றின் பொருள் ஆகும். சாதாரணமாக மனித அனுபவங்களிலிருந்து கண்டறியப்பட்ட இவ்வுண்மையினை இன்றைய உளவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆகவே இக்கட்டுரையானது அன்றாட பழக்கவழக்கங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் மனமாற்றத்திற்கு எவ்வாறு அடிப்படையாகின்றன என்று கூற முற்படுகின்றது.

பழக்கவழக்கங்கள்

HABIT என்கின்ற ஆங்கில வார்த்தையில் H என்ற எழுத்தை நீக்கிவிட்டால் A BIT இன்னும் மிச்சமிருக்கின்றது. A-ஐ நீக்கிவிட்டால் இன்னும் ஒரு BIT இருக்கின்றது. B -ஐ நீக்கிவிட்டால் இன்னும் IT இருக்கின்றது. ஆகவே பழக்கவழக்கங்கள் எப்போதும் நம்மோடு இருக்கின்றன. அவை நல்லவையா, கெட்டவையா என்பதைப் பொறுத்தே நம் வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமைகின்றன. பழக்கவழக்கங்கள் நம்மோடு பிறப்பவை அல்ல. அவற்றை நாம் தான் உருவாக்குகின்றோம். நாம் வாழும் சூழலும், அதற்கான நமது எதிர்வினைகளுமே நமது பழக்கவழக்கங்கள் உருவாக அடிப்படையாகின்றன. நாமே உருவாக்கிய ஒன்றை நாம் நினைத்தால் மாற்றவும் முடியும் தானே?

மனம்

மனம் என்பது என்ன? மனம் என்பதை ஒரு சொல்லில் விளக்க முடியாது. நம் எண்ணங்கள், கற்பனைகள், சிந்தனைகள் போன்றவற்றின் ஒரு தொகுப்பு என்று புரிந்து கொள்ளலாம். நான் யார்? என்ற கேள்விக்கு விடை எனது பெயரோ, எனது தோற்றமோ, எனது பின்புலமோ மட்டுமல்ல. நான் என்பது முதன்மையாக எனது உள்ளார்ந்த மனமே ஆகும், அதனால் தான் திருவள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

என்கிறார். மனத்தூய்மையே அறம். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று விளக்கம் தருகிறார் கலைஞர்.

மனமும், பழக்கவழக்கங்களும்

இந்த மனதிற்கும், நமது பழக்கவழக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் (லூக்கா 6:45) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைகள் தான் எத்துணை உண்மை. நம் மனம் நல்ல கருவூலமாக இருக்கும் போது நமது பழக்கவழக்கங்களும் நல்லவையாக மாறும். ஆகவே நாம் நம் மனதை மாற்றாத வரையில், நமது பழக்கவழக்கங்களையும் மாற்றுவது கடினமே. அப்படியே மாற்றினாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (லூக்கா 6:43).

பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம்

ஒரு பருப்பொருள் என்பது பல சின்னஞ்சிறிய அணுக்களின் தொகுப்பே ஆகும். அது போல பல சின்னஞ்சிறிய பழக்கவழக்கங்களின் தொகுப்பே நம் வாழ்வு ஆகும் என்று ATOMIC HABITS என்னும் புத்தகத்தில் ஜேம்ஸ் கிளியர் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில் காணும் பெரும்பாலானக் கருத்துக்கள் அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். காலையில் எழுந்ததும் நம் படுக்கையை ஒழுங்கு செய்வது, வண்டி சாவி, குடை போன்ற பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, சரியான நேரத்தில் தூங்கச்செல்வது போன்ற சிறிய செயல்பாடுகள் நம் வாழ்விற்கு பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது தான் அப்புத்தகத்தின் மையக்கருவாகும். நம்ப முடிகிறதா? ஆம்! நாம் யார் என்பது நமது படிப்போ, பட்டமோ, பதவியோ அல்ல! நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம்? எத்தகைய வெற்றிகளை அடைய விரும்புகிறோம் என்பது அல்ல? மாறாக நாம் யார் என்பது இன்று நாம் என்ன செய்கின்றோம் என்பதே ஆகும்.

பழக்கவழக்கங்களை மாற்றுவது எப்படி?

ஒரு வெற்றுக் கோப்பையிலும் காற்று இருக்கிறது. காற்று இல்லாமல் ஆக்க வேண்டுமென்றால் எளிய வழி அதில் வேறு எதையாவது (எ.கா: நீர், மாவு) நிரப்ப வேண்டும். அது போலத்தான் நம் பழக்கவழக்ககங்களை மாற்ற வேண்டுமென்றால் புதிய பழக்கவழக்கங்களை உருவாக்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள் நம்மில் உருவாக மூன்று தூண்டுகோல்கள் உள்ளன. அவை,

1.   இலக்கு  நோக்கிய பழக்கவழக்கம்: நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது என் இலக்காக இருக்கும் போது, நான் கட்டாயம் தினந்தோறும் இரண்டு மணி நேரம் கூடுதலாகப் படிக்க பழகிக்கொள்ள வேண்டும். இதனால் நான் தொலைக்காட்சி, அலைப்பேசியில் செலவழிக்கும் என் பழையப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்வேன். ஆயினும் நான்  என் இலக்கையே நினைத்துக் கொண்டிருப்பதால் இன்று நான் செய்யும் செயல்களை சுமையாகக் கருதவும், விரும்பும் மதிப்பெண்களைப் பெற்ற பிறகு படிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் வாய்ப்பிருக்கிறது.

2. அமைப்பு நோக்கிய பழக்கவழக்கம்: நான் தேர்வில் வாங்கும் மதிப்பெண்களைப் பற்றி அதிகம் அக்கறைப்படப் போவதில்லை. ஆனால் தினந்தோறும் படிப்பதை நான் விரும்புகிறேன். அது இலக்கு பற்றிய பதற்றத்தைக் குறைப்பதோடு, அதை நோக்கியப் பயணத்தை ரசிக்கவும்  செய்கிறது. கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அடிக்கடி கூறுவது இதுதான், நாங்கள் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. நன்றாக, முழு ஈடுபாட்டோடு, குழுஉணர்வோடு விளையாடினோமா என்பதுதான் முக்கியம். ஆகவே என் ஒரு நாளை நான் விரும்பும் படியான செயல்களைக் கொண்டு கட்டமைக்க விரும்புகிறேன். அது என்றாவது ஒருநாள் என்னையும் அறியாமல் வெற்றிகளைக் காணச்செய்யும்.

3. சுய அடையாளம் நோக்கிய பழக்கவழக்கம்: நான் என்னை நன்கு படிக்கும் ஒரு மாணவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், நான் தினந்தோறும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வேன். நான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று என்னை அடையாளப்படுத்தினால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கையைச் சுழற்றி கற்பனையில் கூட பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன். நண்பர்கள் வற்புறுத்துவதால் சிலர் மதுப்பழக்கத்திற்குள் விழுந்துவிடுகிறார்கள். பிறகு வருந்துகிறார்கள். பின்னர் ஒருநாள் மீண்டும் நண்பர்கள் வற்புறுத்தும் போது, நான் குடியை விட்டுவிட விரும்புகிறேன் என்று சொன்னால் நிச்சயம் இந்த ஒரு முறை மட்டும் என்று மீண்டும் வற்புறுத்துவர். ஆனால் நான் இப்போது குடிகாரன் இல்லை என்று தான் விரும்பும் சுயஅடையாளத்தை முன்னிலைப்படுத்தும் போது அதற்கான மதிப்பும், பலனும் அதிகம். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை விட, நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதே உங்கள் பழக்கவழக்கங்களைத் தீர்மானிக்கின்றன.

நிறைவாக:

பழக்கவழக்கங்களின் மாற்றமே மனமாற்றம் என்று வார்த்தையில் சொல்லாவிடினும் வாழ்க்கையில் சொல்லியவர் நம் ஆண்டவர் இயேசு.

1.   அனைவருக்கும் நிறைவாழ்வு என்னும் இலக்கினைக் கொண்டிருந்தார். அது வேறு எங்கோ வானத்தில் இல்லை. உங்களுக்கு அருகில் உள்ளது என்றார்.

2.   பணிவிடை செய்யவே தான் வந்திருப்பதாகக் கூறியதோடு தெருக்கள் தோறும் சென்று கற்பித்தார். சீடர்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு குழுவாக செயல்பட்டார். பசித்திருப்போருக்கு உணவளித்தார். நோயுற்றோரைக் குணமாக்கினார். ஒதுக்கப்பட்டோருக்கு சுயமரியாதையை அளித்தார். அன்றாட நாளை இவ்வாறு நற்பணிகளால் கட்டமைத்தார். அதில் பெருமகிழ்ச்சி கண்டு கடவுளைப் புகழ்ந்தார்.

3.   தான் கடவுளின் மகன் என்ற தன் அடையாளத்தை மையமாகக் கொண்டு தன் அன்றாடப் பழக்கவழக்கங்களை அமைத்துக்கொண்டார். தான் இறைமகன் என்ற அடையாளத்திற்கு எதிராக எதையும் அவர் செய்யவில்லை. நாமும் இறைமக்கள் என்ற அடையாளத்தை முதன்மையாகக் கொள்ளவேண்டும் என்பதற்காக, கடவுளைத் தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தந்தார்.

உங்கள் ஒளி மனிதர்கள் முன் ஒளிர்க! என்ற நம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற நல்லப் பழக்கவழக்கங்களை நமதாக்கி வாழ்வில் நிறைவைக் காண்போம்.

சனி, 7 ஜனவரி, 2023

வினைமுடித்தன்ன…


மகிழ்ச்சியில் பெரும் மகிழ்ச்சி தொடங்கிய ஒரு காரியத்தை செய்து முடித்தலால் வரும் மகிழ்ச்சி ஆகும். கடந்த அக்டோபர் முதல் நாள் புனித குழந்தை தெரசாள் திருநாள் அன்று தொடங்கிய என்னுடைய '98 நாளில் விவிலிய வாசிப்பு'  (இத்தாலிய மொழியில்) திட்டமிட்டபடியே ஜனவரி 6 அன்று நிறைவுற்றது.

ஒருவர் ஒரு காரியத்தை செய்வதற்கு தீர்க்கமாக விரும்பும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அவருக்கு உதவி செய்யும் என்று பவுலோ கொயலோ அவருடைய அல்கெமிஸ்ட் நாவலில் குறிப்பிடுகிறார். இதனை பல வேளைகளில் உணர்ந்திருந்தாலும், இந்த முறை மிகவும் துல்லியமாக பிரபஞ்சத்தின் உதவியை உணர முடிந்தது.

நாகர்கோவிலில் இருக்கும் என்னுடைய உறவினர் ஒருவர் 100 நாளில் விவிலிய வாசிப்பிற்கான அட்டவணையை முதன்முதலாக செப்டம்பரில் கொடுத்தார். அவர் அந்த அட்டவணைப்படியே வாசித்து முடித்ததாகவும் சொன்னார். பல்வேறு அலைச்சல்கள் நிறைந்த ஒரு காலக்கட்டம் என்பதால் என்னால் முடியும்  என்று நினைக்கவில்லை. தற்செயலாக அதனை செயல்படுத்த அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கியதோடு முகநூலிலும் பதிவிட்டேன்.

தனிப்பட்ட நற்செயல்களை பொதுவெளியில் பதிவிடுவதற்கு பெரிய தயக்கம் இருந்து. ஆயினும் என்னை நானே ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்துவதற்கு அது உதவும் என்று கருதினேன். ஆகவே தான் சில நாட்களில் வாசிப்பதற்கு ஆர்வம் குன்றிய போதிலும், இயலாத மனநிலையிலும், சூழ்நிலையிலும், சொன்ன வார்த்தையை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தினால் என்னையே வற்புறுத்தி வாசித்தேன். 73 புத்தகங்களை உள்ளடக்கிய கத்தோலிக்க திருவிவிலியத்தை பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலிலிருந்து ஒரு பகுதியாகவும், மையத்தில் இருக்கும் திருப்பாடல்களில் இருந்து ஒரு பகுதியாகவும், புதிய ஏற்பாட்டின் மத்தேயு நற்செய்திலிருந்து ஒரு பகுதியாகவும் அன்றாடம் 3 பகுதிகள் அட்டவணைப்படி வாசிக்க வேண்டும். ஆயினும் சில நாள்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் வாசிப்பது, அல்லது ஒரு பகுதியை இரண்டு மூன்று நாட்களுக்கு வாசித்துவிட்டு, பொறுமையாக கடன்பட்ட பகுதியை வாசிப்பது என்று சென்று கொண்டிருந்தேன். போக்கிரி படத்தில் குடுமி வைத்த வடிவேலு அவர்கள் பச்சக் பச்சக் என்று அடிவாங்குவது போல ஒரு கட்டத்தில் வாசிப்பில் குழப்பமும், சுமையும் அதிகரித்தது.

முழுக்க முழுக்க கிண்டில் உதவியோடு தான் பாதி விவிலியம் வாசித்தேன். ஒரு நாள் வாசிக்க தவறினாலும் அடுத்த நாள் சுமை இரண்டு மடங்கானது. ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கை இழந்து கைவிடும் நிலையில் இருந்த போது எழுத்தாளர் சரவண கார்த்திக்கேயன் அவர்களின் ஒருகோடி காலடிகளைப் பின்பற்றி நவம்பர் 20 முதல் அன்றாடம் பத்தாயிரம் காலடிகள் நடைபயிற்சியை தொடங்கினேன். நடைபயிற்சி சமயத்தில் பழைய ஏற்பாட்டு நூல்களை ஆடியோ புத்தகமாக கேட்கத் தொடங்கினேன். இது என் வாசிப்பு சுமைகளை வெகுவாக குறைத்தது. புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டும் கட்டாயம் கிண்டிலில் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆடியோ வாசிப்பு எளிதாக இருந்தாலும் பார்த்து வாசிப்பதில் இருக்கும் சுகமும், சிந்தனைக்கான தளமும் குறைவாகவே இருப்பது ஒரு குறைபாடு தான். ஒரு சில நாட்களில் பைபிளை அச்சு பதிப்பிலும் வாசித்தேன். அனைத்திலும் கிண்டில் வாசிப்பே சிறந்ததாக கருதுகிறேன்.

தொடர் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பெரிய பெரிய காரியங்களை அமைதியாகச் செய்து சிறு புன்னகையோடு கடந்து செல்பவர்கள் இருக்கும் போது, 98 நாட்களில் பைபிள் வாசிப்பது ஒன்றுமே இல்லைதான். ஆயினும் இத்தாலிய மொழியில் வாசிப்பதில் இருக்கும் மனத்தடை நீங்கியது மட்டுமின்றி, ஒரு காரியத்தை திட்டமிட்டு செயல்படுத்த நினைத்தால், எந்த சூழ்நிலையும் அதைத் தடுக்க இயலாது என்ற ஒரு பாடத்தைப் புத்திக்குள் புகுத்தியமையால் என்னளவில் இது ஒரு நல்ல தொடக்கமாகவே கருதுகிறேன்.