சனி, 30 நவம்பர், 2019

அந்த மரணம் ஒரு இறகைப் போல காற்றில் உதிர்கிறது (When a man dies alone...)


நவம்பர் மாதம் இன்றோடு முடிகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் இளைப்பாற வேண்டி இந்த மாதத்தில் செபிப்பார்கள். மனிதன் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் முதன்மையானது இறப்பு. இடஒதுக்கீடு, வயது மூப்பு போன்ற நடைமுறையில் உள்ள எந்த ஒழுங்குகளையும் மரணம் கடைபிடிப்பதில்லை. அது ஒரு தனி டிபார்ட்மென்ட். யாரும் கேள்வி கேட்க முடியாது. செய்யும் வேலைகளை, செல்லும் பயணங்களை அந்த இடத்தில் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட வேண்டியதுதான். வேறு யாராவது பார்த்துக்கொள்வார்கள். மரணம் சில வேளைகளில் தேன் கூடு போல அமைதியாக இருக்கும். கொலைத்தொழிலை விட்டுவிட்டு எமன் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டது போல, எல்லாரும் கொஞ்சம் மரணம் மறந்திருப்போம். திடீரென தேன்கூடு கலைவது போல தெரிந்தவர்கள் கலைந்து போவதைப் பார்த்து திக்கற்று நின்றிருப்போம். 

ஒரு நடுவயது பெண்மணி அழுதுகொண்டே வந்தார். பேச ஆரம்பிக்கவே சிலபல நிமிடங்கள் ஆயிற்று. தனக்கு கொடிய புற்று நோய் இருப்பதாகவும், தான் அடுத்த ஈஸ்டருக்கு இருப்பேனோ, இல்லையோ என்று தேம்பிக்கொண்டிருந்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில துன்பங்களைக் குறுக்கிடாமல் கேட்டாலே போதும். புத்தி சொல்ல எதுவும் வரவில்லை என்றால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அவர் அமைதியாகும் வரையில் காத்திருந்து சொன்னேன். உண்மையைச் சொன்னால், நானும் அடுத்த ஈஸ்டருக்கு இருப்பேனா என்றே தெரியாது. இந்தக் கோவிலில் நீங்கள் பார்க்கும் எல்லோருக்கும் இது பொருந்தும். இருக்கும் வரையில் வாழ்வு மதிப்பிற்குரியது. வாழ்ந்து விட்டு செல்வோமே! என்ற பதிலில் சற்று திருப்தியடைந்தவராய் சென்றார்.

போனவாரம் இரவு 8 மணி அளவில் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். கட்சிகாரார். கடந்த 20 வருடங்களாக தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து பேசி, பழகி, காலநேரமின்றி கட்சிக்காக உழைத்து தேர்தலுக்குப் பின் பார்வைக்கு அதிகம் தென்படாத பக்கத்து ஊர்க்காரர். மொத்தம் நான்கு பேர்கள். அம்மா தேனீர் போட செல்ல, ஒவ்வொருவரும் கடுங்காப்பி போதும், சீனி சேர்க்க வேண்டாம் என்று வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, நண்பர் மட்டும் தனக்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னாராம். 65 வயதிலும் தனக்கு சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சனைகள் எதுவுமின்றி நலமாக இருப்பதாக சொன்னாராம். தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனதால், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்திருக்கிறார். இரவு வீட்டிற்கு செல்லும் போது கடையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு சென்று படுத்திருக்கிறார். காலையில் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மாலை சந்திரன் மறைந்தார்.

இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். கிளைமேட் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். அவ்வளவாக குளிரவில்லை. பாதம் மட்டும் வெறைக்கிறது என்றேன். உடனே நினைவுபடுத்தி ஒரு நிகழ்வினைச் சொன்னார். அவரது சிறுவயதில் அவரது தாத்தா இறந்துவிட்டார். அவரும் அவரது தங்கையும் இறந்த தாத்தாவின்  அருகில் நிற்கிறார்கள். தங்கை தாத்தாவின் பாதங்களைத் தொட்டுப்பார்த்துவிட்டு, தாத்தாவுக்கு குளிரும்! கால்களை மூடுங்கள் என்றாராம். சொல்விட்டு அவரே சிரித்தார். நீங்களும் கால்களை மூடிக்கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். நான் என் கால்களையேப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

இலவச இணைப்பு: ஒரு கவிதை (எடையற்ற மரணங்கள்- மனுஷ்யபுத்திரனின் புலரியின் முத்தங்கள் புத்தகத்திலிருந்து)
எதிர்பாராமல் இறந்த
நண்பனைப் பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்
"இறந்தவனுக்கு குழந்தைகள் உண்டா?"
என்று கேட்டாள்
"இல்லை
அவனுக்குத்
திருமணமே ஆகவில்லை"
என்று நான் பதிலளித்தபோது
"நல்லவேளை" என்று சொல்லிவிட்டு
நாக்கைக் கடித்துக்கொண்டாள்
தனித்து வாழ்பவர்கள்
இறக்கும்போது
அந்த மரணம்
ஒரு இறகைப் போல
காற்றில் உதிர்கிறது
அது
அவ்வளவு எடையற்றதாக இருக்கிறது!

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கடைசியாக ஒரு நல்ல செய்தி (An Inspirational Story of Kausalya Shankar)


நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். பதின் பருவத்தின் நுழைவு வாயில். சாதாரணமாக எதிர் பாலின ஈர்ப்பு தொடங்கும் ஒரு வயது. எங்கள் பள்ளி இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்த போதிலும், ஆண், பெண் நட்பு பாராட்டுதல் முற்றிலும் பழக்கமில்லாத ஒரு காலகட்டம். அரசு பள்ளியாயிருந்த போதும் மாணாக்கர் எண்ணிக்கையின் காரணமாக ஒவ்வொரு வகுப்பும் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஏ பிரிவு ஆண்கள் மட்டும், பி பிரிவு பெண்கள் மட்டும், சி பிரிவு ஆண்-பெண் இருபாலருக்கும் என்ற விகிதமுறையானது இப்போது வரையிலும் என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. அறிவுப் பெருந்தகையினரின் ஒப்பற்ற தீர்க்கத்தரிசனங்களைப் புரியாமலே வியக்கிறேன். 

பிறர்க்கின்னா முற்பகல் செய்த வினைப்பயனோ என்னமோ தெரியவில்லை! எனக்கு ஏழு-ஏ தான் கிடைத்தது. விரும்பத்தகாத ஒரு பிரிவு. வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் ஏ பிரிவுதான் சூத்திரர்களுக்கு அடுத்து வரும் கீழ் அடுக்கு. சரியான சேவல் பண்ணை. கரடுமுரடுகள் கல்விபயிலும் ஏ பிரிலும், கவித்துவத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அப்பாலை நிலத்திலும் காதல் முளைத்தது. ஏழு-சி பயின்ற அந்தக் குழந்தையோடு (12 வயது சட்டப்படி பச்சைக் குழந்தை) டியூசன் படிக்கும் நண்பனிடம் எனக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கும் என்றும், அந்தக் குழந்தைக்கு என்னைப் பிடிக்குமா? என்றும் கேட்டு வரச் சொன்னேன். மருந்துச் செடியின் பெயரை மறந்த அனுமான் மலையைப் பெயர்த்து எடுத்து வந்தது போல அவன் அதை எழுத்தில் பொறித்து அவளிடம் கொடுத்துவிட்டான். 

மறுநாள் காலை அந்தக் குழந்தை ஒரு துண்டுக்காகிதத்தோடு முத்தம்மாள் டீச்சரை நெருங்க 'எல்லாம் நிறைவேறிற்று' என்று என்னையே டீச்சரிடம் கையளித்தேன். 'உங்க அம்மாவிற்கு இப்படி ஒரு பையனா? உங்க அக்காவிற்கும், அண்ணனுக்கும் இப்படி ஒரு தம்பியா?' என்று கேள்வி-47 மூலம் துளைத்தெடுத்தார்கள். காட்டுத்தீயாய் இந்தச் செய்தி பரவியது. சில பழைய படங்களில் விபச்சாரக் குற்றம் சாட்டப்படும் பெண்ணைச் சுற்றி நின்று ஊர்வாய் பேசுவதை ஓசையின்றி காட்டுவார்களே! அது உண்மையாகவே அன்று நிகழ்ந்தது. அதற்கு நானே சாட்சி.

ஒரு சிறிய வயதில் நடந்த ஒரு சிறிய நிகழ்வுதான். ஆனால் நிரந்தரத் தழும்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு இருந்தது. காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்.  அதற்காகத் தான் இந்த முன் கதைச் சுருக்கம். 

சமீபத்தில் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். பரியேறும் பெருமாள் மற்றும் 96. சாதிய நோய் தொற்றியிருக்கும் சமூகம் காதலைப் பார்த்து எபோலாவை விட அதிகமாக அஞ்சுகிறது. அதனால் தான் அதனை உடனே நசுக்கிவிடத் துடிக்கிறது. காதலை அழிப்பதைத் தெய்வத்திற்கு செய்யும் தொண்டாகக் கருதுகிறது. மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு ஒபாமா என்னும் கறுப்பினத்தவர் அதிபரான போது ஓரளவேனும் நிறைவேறியது போல, காதலுக்குத் தடை சொல்லாத தமிழ்ச் சமூகம் உருவாக இன்னும் எத்தனை தலைமுறைகள் நாம் காத்திருக்க வேண்டும்? காதலுக்கு எதிரான சமூக வன்முறைகளை புறநானூற்றின் போர்க்களம் போல வலியோடும், வலிமையோடும் ஆவணப்படுத்தியப் படம் பரியேறும் பெருமாள். 

96 ஒரு பதின் பருவக் காதலின் நினைவுகளை மென்மையாக அசை போடவைத்தது. அசைத்துப் போட்டது என்றும் சொல்லலாம். சொல்லத் துணிவில்லாமல், வெல்ல வழியில்லாமல், பெற்றோரைக் காயப்படுத்தக் கூடாது என்று, அக்காள்-தங்கையைக் கரை சேர்க்க என்று ராம்-களாலும், ஜானகிகளாலும் நிரம்பி வழிகின்றன நம் ஊரின் காதல் கதைகள். 96 ஒரு வலி(மை)மிகு அகத்துப் பாடல். 

திருமணத்தில் நிறைவேறாத இரண்டு காதல் கதைகளை இப்படங்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தின. காதல் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் திருமணங்களில் கட்டாயம் காதல் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக நம்புகிறேன். 

நம் ஊரின் திருமணங்கள் விசித்திரமான பலவற்றை நம்புகிறது.  சொந்த சாதியில் இருக்க வேண்டும். சாதகம் பொருந்த வேண்டும். சொத்து, பணம், வேலை வேண்டும். மிகவும் பக்கத்திலும் இல்லாமல், மிகவும் தூரத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று திருமண தேர்வுக்கான எல்லைகளை ஒரு தீப்பெட்டி அளவில் சுருக்குகிறது. 27 அல்லது 29 என்ற ஒற்றைப்படை வயதில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். குழந்தை திருமணங்கள் தான் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் குழந்தைத் தனமானத் திருமணங்களை ஒழிப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை. எங்கு பார்த்தாலும் அழுகையும், அங்கலாய்ப்புமாக இருக்கின்றன. ஏன் இதைப் பற்றி நாம் பேச மறுக்கிறோம்?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000 ஆவணக் கொலைகள் நடப்பதாகவும், வருடந்தோறும் இதன் எண்ணிக்கை 796 சதவிதம் அதிகரிப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுபோக விபத்தாக, தற்கொலையாக குருதி சிந்தியக் காதலர்கள் எத்தனைபேரோ?

அப்படி மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டவர்தான் சங்கர். தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்தப்பியவர் அவரது காதல் மனைவி கவுசல்யா. கூலிப்படையை ஏவிக் கொன்றது கவுசல்யாவின் தந்தை என்னும் மனிதநிலைக்கு இன்னும் பரிணாம வளர்ச்சி பெறாத ஒரு மிருகம். அந்தக் கொலைக்கு ஆதரவாக எத்தனை சாதிய மிருகங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் குரூரக் குரலை எழுப்புகின்றன என்பதைப் பார்க்கும் போது, நம் சமூகத்தில் வாழ்வதை விட வடக்கு சென்டினல் தீவே பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.

கடைசியாக ஒரு நல்ல செய்தியோடு முடிக்கிறேன். எதிர்காலத்திற்கான எல்லா வெளிச்சங்களையும் பறிகொடுத்தப் பிறகும் இனி இருந்தென்ன என்று முடங்கிவிடாமல் சாதியக் கொடுமைகளுக்கெதிராக இந்தியா முழுமைக்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது அன்புத் தங்கச்சி கவுசல்யாவின் குரல். சங்கர் சமூகநீதி அறக்கட்டளை மூலம் ஆவணக்கொலைகளுக்கெதிராக தனிச்சட்டம் வேண்டி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 9-12-2018 அன்று பறையிசைக் கலைஞரான சக்தி என்பவரை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து சாதிமறுப்பு மறுமணம் செய்து கொண்டார். கொலையுண்ட சங்கரின் பாட்டி மாலை எடுத்துக்கொடுக்க, அவரது குடும்பத்தாரின் நல்லாசீரோடு இத்திருமணம் நிறைவுற்றது என்று பத்திரிக்கையில் வாசித்த போது கண்களில் நீர் கசிந்தது. நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் மண்ணில் இதைச் சாத்தியப்படுத்திய பெரியார்களின் கரங்களை இறுகப் பற்றி என் நன்றி நிறைந்த வணக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன். இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொதுநோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் பணிகளுக்கு மத்தியிலும் சமூத்தின் கடைக்கோடியில் நல்லது ஒன்று கண்டாலும் உடனே பாராட்டும் அன்புத்தலைவர் கலைஞரின் பணியைத் தொடர்ந்து செய்யும் திரு.ஸ்டாலின் சாதிகளற்றச் சமுதாயத்தை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். கவுசல்யா-சக்திக்கு அன்பு வாழ்த்துக்கள்!

புதன், 14 நவம்பர், 2018

அப்பாவின் சொத்து - சிறுகதை

இன்னும் இரண்டு நாளில் கிறிஸ்மஸ் பண்டிகை. இரவு பூசைக்கு முன்பாக கோவில் கொடியேற்றி 1 ஆம் தியதி மாதாவுக்கு தேர் எடுத்து திருநாள் கொண்டாடுவது ஊர் வழக்கம். தெருவெங்கும் அலங்கார வளைவுகளும், வண்ண வண்ண விளக்குகளுமாக ஊரே களைகட்டத் தொடங்கியிருந்தது. 

அசிசி மட்டும் எதிலுமே மனம் ஒன்றாமல் படுத்திருந்தான். பகலிலும் கதவு, சன்னலைச் சாத்தி கும்மிருட்டில் தூங்குவதே அவனது பழக்கமாகிவிட்டது. கம்யூட்டர் இஞ்சினியரிங் முடித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முடித்துவிட்டான் என்று சொல்ல முடியாது. மூன்று முறை முயன்றும் இன்னும் ஒரு தாள் அரியர் வைத்திருக்கிறான். இருட்டில் துழாவி செல்போனை எடுத்து அழுத்தி மணி பார்த்தான். மணி மதியம் 2.50 ஆகியிருந்தது. திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூசி நீர் பெருகியது. 

கதவு தட்டும் சப்தம் கேட்டது. இரண்டு மூன்று முறை தட்டிவிட்டு நிறுத்திவிட்டால் எழும்ப வேண்டாம் என்று அமைதியாக இருந்தான். காதைக் கூர்மையாக்கி யார் என்பதை யூகிக்க முயற்சி செய்தான். கோவிலில் 'யேசு ராஜா வந்திருக்கிறார்' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 'வந்த ஆள் போயாச்சு' என்று நிம்மதியாக உணர்ந்தான். தனது இரண்டு வயதுத் தாடியைப் பிடித்து நீவி விட்டான். கடுமையாக பசி எடுக்கவே, காலையில் ஆலி பாட்டி கொண்டு வந்த இட்லி மீதம் இருக்கிறதா என்று  யோசனையில் ஆழ்ந்தான். 

அதற்குள் வாட்சப்பில் பிரிட்டோவின் அழைப்பு வெளிச்சத்தை மின்னி அதிர, ஆள்காட்டி விரலால் அலைப்பேசியின் தொடுதிரையை வலப்பக்கமாகத் தடவி 'சொல்லுடா நண்பா' என்றான். 'டேய் அசிசி! கதவ திற! நான் வாசலில் தான் நிக்கிறேன்' என்றான் பிரிட்டோ. இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து நேற்றுதான் ஊருக்கு வந்திருந்தான். இருவரும் ஒன்றாம் வகுப்பு முதல் இஞ்சினியரிங் வரை ஒன்றாக படித்தவர்கள். பிரிட்டோ படிப்பில் கெட்டிக்காரன். தற்சமயம் பக்ரைனில் ஒரு பெரிய கம்பெனியில் மானேஜராக இருக்கிறான். 'அசிசி! நீ மட்டும் அரியரை முடித்தால் எனது கம்பெனியிலேயே வேலைக்கு எடுத்துக்கொள்வேண்டா நண்பா! தயசு செஞ்சு எக்சாம் கிளியர் பண்ணுடா!' என்று எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பான். 

வேகமாகக் கைலியை இடுப்பில் சரி செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் அசிசி. மகிழ்ச்சியில் கட்டித் தழுவிக் கொண்டனர். தனது நண்பனுக்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து அசிசியின் கையில் கட்டிவிட்டுக்கொண்டே 'கிளம்பு! வெளியே போறோம்' என்றான் பிரிட்டோ. முகத்தைக் கழுவித் துண்டால் அழுத்தத் துடைத்து, வழக்கமான கறுப்பு ஜீன்ஸ், நீல சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே பிரிட்டோவின் பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்து 'எங்கே போலாம்' என்றான். 'வந்துதான் பாரேன். நான் உன்னை நல்ல இடத்துக்கு மட்டும்தான் கூட்டிட்டு போவேன்' என்றபடியே ஆக்ஸிலேட்டரை உறுமினான். ஐந்து நிமிடத்தில் வண்டி பங்கு மேடையின் அருகில் நின்ற புன்னை மர நிழலில் நின்றது. 

பங்குத் தந்தை கிழவர் ஃபாதர் கையில் தீர்த்த செம்புடன் நின்று கொண்டிருந்தார். 'பிரிட்டோ! நீங்க டீக்கன் பிரதரைக் கூட்டிட்டு உங்க அன்பியம் போயிடுங்க! நானும் உங்க நண்பரும் ஏழாம் அன்பியம் போறோம்' என்றார்.  

நண்பனின்  பேச்சைக் கேட்டு வந்தது ரொம்ப தவறு என்று மனதிற்குள் நினைத்தான். ஃபாதர் சாப்பிடச் சொன்ன போதுதான் வயிறு பசி மீண்டும் ஞாபகம் வந்தது. நண்பன் தனக்காக வாங்கி வந்த  வாட்சை இப்போது மிகவும் ரசித்துப் பார்த்தான். மணி 3.30 ஆகியிருந்தது.

'நான் இப்பதான் டவுனுக்கு போய்விட்டு வந்தேன். ஊர்த் தலைவர் வீட்டிலிருந்து இன்னைக்கு சாப்பாடு! பிரியாணி சாப்பிடுவீங்கதானே?' பரிமாறிக்கொண்டே பேசத் தொடங்கினார் ஃபாதர். 'என்ன தம்பி! எவ்வளவு நாள் தான் இப்படி அறைக்குள்ளேயே இருப்பீங்க?' அசிசி பதில் எதுவும் சொல்லவில்லை. அப்பாவின் நினைவு வந்தது. வேகமாக எழுந்து கிச்சன் வாசிலில் இருந்த வாளியைச் சரித்து கையைக் கழுவினான். 'எனக்கு ஏழாம் அன்பியத்தில் யாரையுமே தெரியாது. நான் கிளம்புறேன் ஃபாதர்' என்றான். 'தம்பி இன்னைக்கு ஒரு நாளும் என் கூட வாங்க! அதன் பிறகு உங்க விருப்பம்' என்று சொல்லிக் கொண்டே அவரும் சாப்பாட்டை முடிக்காமலே கையைக் கழுவினார்.

வாசலிலேயே ரெஜினா அக்கா காத்திருந்தார்கள். மூவருமாகக் நடக்க ஆரம்பித்தார்கள். தெரிந்தவர்கள் யாரையும் பார்த்துவிடக்கூடாது என்று கவனமாக இருவருக்கும் பின்னால் நடந்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போல இருந்தது அவனுக்கு. சொகுசான இடத்திலிருந்துதான் எத்தனைக் கேள்விகள்! 'இன்னும் வேலைக்கு போகலையா? இப்படியே எவ்வளவு நாள் இருக்கப் போற? இவனுக்குலாம் சோறு குடுக்கிறாளே அந்தக் கிழவியைச் சொல்லணும்.' 

'இதுதான் முதல் வீடு. இங்கிருந்தே ஆரம்பிச்சா டீக்கடையோடு ஏழாம் அன்பியம் முடிஞ்சிரும்' என்ற ரெஜினாளிடம், 'நீ வீட்டுக்குள்ளே போய் ஊரு கதையெல்லாம் பேசாம இருந்தா வேகமா முடிச்சிரலாம்' என்றார் ஃபாதர். இப்போதே முகத்தில் வியர்க்கத் தொடங்கியிருந்தது. 

'பையன் யாரு? புதுசா இருக்கான்' என்று எல்லா வீட்டிலும் ரெஜினா அக்காவிடம் விசாரித்தார்கள். 'கீழத்தெரு ஆட்டோக்காரர் பையன். பேரு அசிசி' என்று சொன்னவுடன் கையைப் பிடித்துக்கொண்டு 'இந்தக் காலத்துல அப்படி ஒரு நல்ல ஆள நான் பார்த்ததே இல்லை தம்பி! அவரு பிள்ளையா நீங்க! நல்லாயிருங்க!' கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் சொல்லிவிட்டார்கள். மந்திரிப்பு முடியும் போது எட்டு மணி ஆகியிருந்தது. ரெஜினா அக்கா அவரது வீடு வந்ததும் ஓடிச்சென்று ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்து ஃபாதரிடம் கொடுத்து காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

தெருவில் ஆங்காங்கே 'ஃபாதர் போராரு! கூடவே அசிசியும் போறான்!' என்று சொல்வது அவனது காதில் விழுந்தது. இருப்பினும் தான் நினைத்த அளவு மோசமாக எதுவும் நடக்க வில்லை என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தான். மேடையின் முன் டீக்கன் பிரதரும், பிரிட்டோவும் நின்றுகொண்டிருந்தார்கள். புதிதாக இரண்டு ஸ்டார்கள் வாசலில் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு பத்து பதினைஞ்சு சிறுவர்கள் குடிலைச் சுற்றி தொலைக்காட்சி விவாத அரங்கம் போல ஏதேதோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். 
டி.வி அறையில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐந்து நட்சத்திர விடுதியின் பஃபே போல நீண்ட மேசை நிறைய உணவு வகைகளால் நிறைத்திருந்தார்கள். என்ன நடக்கிறது என்பது போல பிரிட்டோவைப் பார்த்தான். 'கிறிஸ்மஸ் இரவில் எல்லோரும் பிசி. இன்னைக்கு நீயும் வந்திருப்பதால் ஃபாதர் இன்றே கிறிஸ்மஸ் டின்னர் ஏற்பாடு செய்துவிட்டார். இவங்க எல்லோரும் ஆதரவற்ற சிறுவர்கள்' என்றான் பிரிட்டோ.

சிறுவர்களின் சத்தம், விளையாட்டு, கிறிஸ்மஸ் விருந்து என்று அசிசி இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பத்து மணி இருக்கும். விருந்து ஐஸ்க்ரீம் வரைக்கும் வந்திருந்தது. ஃபாதர் அவனை தனியாக அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார். என்ன என்பது போலப் பார்த்தான் அசிசி. 

'தம்பி! உங்க அப்பா நிறைய பணம் சம்பாதிக்கலனாலும் நிறைய மனிதர்களைச் சம்பாதிச்சிருக்காரு. கொஞ்ச வருமானத்திலயும் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்காரு. சின்ன வயசிலேயே உன் அம்மாவை இழந்துட்டாலும் திரும்ப கல்யாணம் கூட பண்ணிக்காம உனக்கு தாயும், தகப்பனுமா இருந்தாரு அந்த மனுசன். அவரு இறந்தது உண்மையிலேயே துரதிஸ்டம் தான். ஆனா இரண்டு வருசமாகியும் நீ இப்படி வீட்டை பூட்டிக்கிட்டு உள்ளேயே இருந்தா நியாயமா? அதனாலதான் இந்த ஊரு அன்னம்மாள் சிஸ்டர்ஸ் நிறைய பேருகிட்ட உதவி கேட்டு இந்த தொகைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீ இத தர்மமா நினைக்க வேண்டாம் தம்பி! கடந்த முப்பது வருசமா இந்த ஊரு ஃபாதர், சிஸ்டர்ஸ் கிட்ட சவாரிக்கு அவரு காசு வாங்கினதே இல்ல! இது உங்க அப்பாவோட சொத்து' என்று சொல்லிக்கொண்டே ரெஜினா அக்கா கொடுத்த பையைத் திறந்து பணத்தை எண்ணினார். இருபத்தைந்து புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள். அசிசியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வடிந்தது. ஃபாதர் அவனது தோளைத் தொட்டதும்தான் தாமதம் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'அப்பா! அப்பா! அப்பா!' என்று கதறினான். இரண்டு வருட அழுகையையும் மொத்தமாக அழுதான்.

மறுநாள் காலை பிரிட்டோ தனது பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தான். ஃபோன் ஒலித்தது. 'சொல்லுடா அசிசி! எப்படி இருக்க? நைட் நல்லா தூங்கினியா?' என்றான். 'ஹலோ! பிரிட்டோ! என்கூட வரமுடியுமா? அப்பாவின் ஆட்டோவை ஒர்க்சாப்பில் விடனும். வரும்போது சிஸ்டம் சாப்ட்வேர் புக்ஸ், கிளாஸ் நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா! கிறிஸ்மஸ்-லிருந்து ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்! ஏப்ரல் மாசம் எக்சாம் கிளியர் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்! அதன் பிறகு கடவுள் பாத்துக்குவாரு பிரிட்டோ......!' பிரிட்டோ மிகுந்த மகிழ்ச்சியோடு அசிசியின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். 

சுமைகளை சுமப்போரே! சோர்ந்து போனோரே! 
முடியாது என்று முடங்கிவிட்டீரோ!
இனி விடியாது என்று நொடிந்துவிட்டீரோ!
எல்லோரும் வாருங்கள் என்னிடம்! நான் இளைப்பாற்றுகிறேன்!
காற்று விரும்பிய திசையில் வீசுகிறது!
தூய ஆவியில் பிறந்தோர் யாவருக்கும் இது பொருந்தும்! 
என்றார் நம் ஆண்டவர் இயேசு!
ஆம் நண்பனே! உனக்குத்தான் சொல்கிறேன்!
குணப்படுத்த முடியாத காயங்களும்
அழகுபடுத்தப்பட முடியாத அசிங்கங்களும்
திருத்தி எழுதப்பட முடியாதத் தீர்ப்புகளும்
இறையரசில் இல்லை!


புதன், 26 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 4 (Let's speak out)

சாதியம் இந்தியாவின் சாபம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவரும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கணியன் பூங்குன்றனாரும், சாதிகள் இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று ஒளவையாரும், சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாரதியாரும் நம் பெருமையின் முகங்களாக இருக்கும் அனைவருமே சாதியால் நமக்கு தலைக்குனிவே என்று சொல்லிவிட்டார்கள். பிறப்பால் எல்லோரும் சமமே என்று சொல்ல வேண்டியத் தேவை திருவள்ளுவருக்கே இருந்திருக்கிறது எனறால் சாதியம் நம் சமூகத்தில் எளிதாக பிடுங்கியெறிய முடியாதபடி வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தனிமனிதர்களுடைய மனசாட்சியின் குரலானது வரலாற்றில் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது என்று பார்த்திருக்கிறோம். ஆனால் சாதியத்திற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒலித்த தனிமனிதக்குரல்கள் சமூகத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பது மலைப்பாக இருக்கிறது. நம்முடைய இலக்கியங்களும், மொழியின் சிறப்பும், எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சின்னங்களும் நாம் ஒரு மாபெரும் நாகரீகத்தின் பிள்ளைகள் என்று பெருமைப்பட வைக்கின்றன. ஆனால் அன்றாடம் எத்தனைக் காட்டுமிராண்டித் தனமான செய்திகளைக் கண்டு குறுகிப்போகிறோம்.

தேநீர் கடையில் தெறிக்கும் பேச்சுக்கள் முதல் பேஸ்புக், வாட்ஸ்அப் சலசலப்புகள் வரையிலும் நம் பேசுபொருளாக இருப்பவை மிகப்பெரும்பாலும் சினிமாவும், அரசியலுமே. அதை விட்டால் பழம்பெருமை, அல்லது நகைச்சுவை என்ற பெயரில் கேலி, கிண்டல். தவறில்லைதான். ஆனால் நாம் இன்னும் பேசவேத் தொடங்காத பல அடிப்படையானக் காரியங்கள் இருக்கும் போது சினிமாவும், அரசியலும் நம் கவனத்தை அளவுக்கதிகமாக இழுப்பது மிகவும் தவறாகப்படுகின்றது. 

நாம் சங்கோஜப்படும் சில காரியங்களை திறந்த வெளியில் பேசாத வரையிலும் சமூகத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. சாதியின் பெயரால் அன்றாடம் நடக்கும் ஆணவக்கொலைகள், வறியவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு போன்றவற்றில் காட்டப்படும் பாராபட்சங்கள் இதைப்பற்றியெல்லாம் நாம் என்று பேசப்போகிறோம். தொல்.திருமாவளவன் போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் பேசினாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குரலாக மட்டுமே முத்திரை குத்தப்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டப்படி வாய்ப்பிருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் சமத்துவ சமுதாயம் என்பது கண்களுக்கு எட்டாதத் தொலைவிலேயே உள்ளது. 

தனிமனித மாற்றங்கள் சமுதாயத்தை மாற்றிவிடும் என்பது ஒரு மிகையானக் கற்பனையே அன்றி வேறில்லை. சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்: தனி மனிதர்கள் மாறினால் அந்தக் குடும்பமே மாறும். குடும்பங்கள் மாறினால் அந்த ஊரே மாறும். ஊர், நாடு, உலகம் என்று ஒரு மாயத்தேர் ஓடும். ஆனால் நடைமுறையில் எத்தனையோ தனிமனிதர்கள் சாதியத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும் இன்னும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் சாதியின் பெயரால் குழுக்குள் செயல்படுவதையும், இளைய மனங்களில் தீயவிதைகள் துவப்படுவதும், கிறிஸ்தவ சமயத்திற்குள்ளும் சாதியநோய் பீடித்திருப்பதையும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. கடவுளை அப்பா என்று அழைக்கும் நாம் சாதியின் பெயரால் மனிதர்களைப் பிரித்துப் பார்த்தோம் என்றால் அந்தக்கடவுளையே இழிவுபடுத்துத்துகிறோம்.

சாதி மறுப்பு ஒரு ஒட்டுமொத்த நாட்டின் குரலாக ஒலிக்க வேண்டும். ஊடகங்கள் தொடர்ந்து இதைப்பற்றி பேச வேண்டும். அரசும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முனைப்போடு செயல்படுத்தவும்,சாதியக் குற்றங்களுக்கு இன்னும் தண்டனைகள் கடுமையாக்கப்படவும் வேண்டும். நீதி விசாரணைகள் விரைந்து நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதிமன்ற செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். குற்றமிழைத்தோரின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும். அரசுப்பணியில் இருப்போர் சாதிய ரீதியாக செயல்பட்டால் உடனடியாக அவரது பதவி பறிக்கப்படவேண்டும். சாதிய ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஓட்டரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இறுகிப்போன சாதிய உணர்வுகளை தீவிரமான அரசியல், ஊடக செயல்பாடுகளால் மெல்ல மெல்லவேனும் நீக்கமுடியும். மக்களை எளிதில் அணுக வாய்ப்புள்ள சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஆன்மீகச் செயல்பாட்டாளர்களும், சாதியத்தைத் துரத்த சாட்டை எடுக்க வேண்டும். 

நீக்கமற நிறைந்திருக்கும் சாதியச் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாரோ ஒருவரால் நிச்சயம் முடியாது. ஆனால் எல்லோரும் இணைந்தால் முடியும். முதலில் சமுதாயத்தில் சாதிய நாற்றம் அடிக்கிறது என்று பேச முன்வருவோம்! 

திங்கள், 24 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 3 (Let's speak out)

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் ஓளவையார். தாய், தந்தைக்கு மரியாதை தருவதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நாம் நன்கு அறிவோம். அது போலவே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கல்வியிலும், ஒழுக்கத்திலும் வளர்ப்பதற்கு செய்கின்ற தியாகங்களுக்கும் எந்த எல்லையும் இல்லை. சொல்லப்போனால் நம் பெற்றோர்கள் தங்களுக்கென்று வாழ்வதே இல்லை. 

எல்லாம் பிள்ளைகளுக்காகவே என்று உழைக்கும் பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறைய எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். தங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக வேண்டும்! பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்று எல்லாப் பெற்றோருக்குமே சில கனவுகள் இருக்கின்றன. பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புவதும், வாழ்த்துவதும் சரிதான். ஆனால் உன்னை வளர்க்க நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தாரைவார்த்தோம். நீ நாங்கள் விரும்பியபடிதான் உன் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்பது பிள்ளைகளின் தனித்தன்மைகளை முற்றிலும் அழித்துவிடுகிறது. 

தங்கள் வாழ்வில் எட்ட முடியாதக் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மேல் சுமத்தி அவர்களைப் பந்தயக்குதிரைகளாக ஓடவிடுவது மிகவும் தவறானது. பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், என்ன துறையில் வேலை செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த வீட்டில் திருமணம் செய்யவேண்டும் என்பது வரை முழுக்க முழுக்க பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள் அல்லது தங்கள் முடிவுகளை பிள்ளைகளே எடுக்கும் படி மூளைச்சலவை செய்கிறார்கள். ஒருகட்டத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் அடைய விரும்பிய இலக்கிலிருந்து முற்றிலும் வேறான ஒரு இடத்தில் நின்றுகொண்டு வாழ்வின் பார்வையாளர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது தாங்கள் விரும்பியபடி நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க தியாகம் செய்யத் தயாராகிவிடுகிறார்கள். இந்தத் தியாகச்சுழற்சியினால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள்  பட்டியலில் இந்தியா 133-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 156 நாடுகள் பங்கேற்ற இந்த ஐ.நா.வின் ஆய்வில் நம் நட்பு நாடான பாகிஸ்தான் 75 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.  

ஒன்றும் வேண்டாம்! நீங்கள் தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கம் உடையவர் என்றாலே நம் நாட்டில் நடக்கும் விநோதங்களுக்கும், முரண்களுக்கும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடிவிடுவிடலாமா என்று நினைப்பீர்கள். வேறு சாதியில் திருமணம் முடித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றப் பிள்ளைகளையே கொல்லும் நிகழ்வுகள் வெறும் விதிவிலக்குகள் தான் என்று சொல்ல முடியாதபடி தினசரி செய்திகளாகிவிட்டன. தர்மபுரி இளவரசன்-திவ்யா, உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா என்ற துயரப்பட்டியலின் கண்ணீர் காயும் முன்னே சமீபத்தில் தெலுங்கானாவின் பிரனாய் நாயக்-அமிர்தவர்சினி என்ற இளம் தம்பதியினரும் சேர்ந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆவணக்கொலைகள் என்று தேடினால் வரும் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கல்வியறிவில் முன்னணியில் உள்ள கேரளா, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆணவக்கொலைகள் அரங்கேறுகின்றன. ஆண்டிற்கு 500க்கும் அதிகமானக் கொலைக் குற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. வெளியுலகிற்கு தற்கொலைகளாக, விபத்துக்களாக, சந்தேக மரணங்களாக பதிவானக் குற்றங்கள் எத்தனையோ! 

இந்தியாவின் மனசாட்சியை நடுரோட்டில் சிந்தப்படும் இரத்தங்கள் உலுக்கவில்லையா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண உரிமையில் தலையிடுவதும், சொந்த சாதியில் திருமணம் செய்ய வற்புறுத்துவதும் சிந்தப்படும் சூடான இளம் இரத்தத்தைக் கண்டும் காணாமல் செல்வதைப் போன்றதுதானே?