புதன், 3 ஜூலை, 2024

கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கை அறிக்கையை சிறார்களுக்கு எவ்வாறு விளக்குவது? Profession of faith explained!

ஒரே கடவுளை நம்புகிறேன். 

கிறிஸ்தவர்களுக்கு கடவுள் ஒருவரே. நானோ, பிறரோ, பிரபலமான ஒருவரோ, பணமோ, பதவியோ, அதிகாரமோ எனக்கு கடவுள் அல்ல. கடவுளைத் தவிர யாரையும், எதையும், எதன் பொருட்டும் ஆராதிக்க மாட்டேன்.

விண்ணகமும் மண்ணகமும், காண்பவை, காணாதவை, யாவும் படைத்த 

நம்மைச் சூழ்ந்திருக்கும் அழகு அனைத்தையும் அவை உருவாகும் முன்பே நினைத்தவரும், உருவாக்கியவரும் அவரே. மிகச்சிறிய அணுவும், அகண்ட பிரபஞ்சமும் கடவுளின் மாட்சியைத் தாங்கி நிற்கின்றன. இயற்கையின் அழகில் மெய்மறந்து நின்றிருக்கிறீர்களா? அழகையும் நன்மையையும் தேடும் மனிதர்கள் கண்டடைகிறார்கள். கோள்களும், நட்சத்திரங்களும் கொண்டிருக்கும் துல்லியமான ஒழுங்கும், இயக்கமும் நம்மை வியக்க வைக்கின்றன. எவ்வளவு அதிகமாக மனிதன் கண்டறிகிறானோ, அவ்வளவு அதிகமாக தான் கண்டறியாதது எல்லையற்றதாக இருக்கிறது என்பதை உணர்கிறான்.  

எல்லம் வல்ல தந்தை அவரே.

கடவுள் தந்தை. நாம் அவரது பிள்ளைகள் என்பதால் அவர் நம்மை அன்பு செய்கிறார். நம் மீது கொண்ட அன்பின் நிமித்தம் எதையும் செய்ய வல்லவராக இருக்கிறார். அன்பினால் யாரையும் கட்டாயப்படுத்துபராக இல்லாமல் நமது சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறார். ஆனால் எல்லா நன்மைகளும் கொண்ட அவரை ஏற்றுக்கொள்ளாத போது, எல்லா தீமைகளும், சுயநலங்களும் நம்மைச் சூழ வாய்ப்பிருக்கின்றது என்பதை உணர்ந்து நமது செயல்களை கடவுளின் அன்பிற்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். 

கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.

இயேசு என்றால் கடவுள் மீட்கிறார் என்று பொருள். கிறிஸ்துவை நாம் நம்பி ஏற்றுக்கொள்ளும் போது நம்மில் அன்பு வளர்கின்றது. கடவுள் மேகங்களுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்பவரல்ல. இயேசுவின் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகின்றவர். 

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். 

படைப்பு அனைத்தும் உருவாகும் முன்பே கடவுளோடு இணைந்திருக்கிறார். 

கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். 

இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு படைப்பு அல்ல. கடவுளின் அதே பண்புகளையும், குணங்களையும் கொண்ட ஒரு ஆள். 

இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. 

இப்பூலகில் நாம் காண்பவை அனைத்துமே படைக்கப்பட்டவை. நம் உள்ளும், புறமும் விரிந்திருக்கும் அனைத்திலும் இயேசுவின் சாயல் இருப்பதை உணர்ந்திருக்கிறாயா?

மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். 

கடவுள் நிலையிலிருந்த இயேசு, நம்மைப் போல மனிதரானது அன்பின் நிமித்தமே. உன்னையே நீ அன்பு செய்வதைக் காட்டிலும் அதிகமான அன்பை, இயேசு உன் மீது கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறாயா? நீ மகிழ்ச்சியாக இருப்பதையும், அவரைப் போலவே முழு உள்ளத்தோடு பிறரை அன்பு செய்யவும் இயேசு விரும்புகிறார்.  

தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். 

கடவுள் அவதாரங்களைப் போலவோ, திரையில் காணும் சூப்பர் மேன்களைப் போலவோ தோன்றி, சாகசங்களைச் செய்து மறைந்து விடுபவரல்ல. மாறாக நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களில் ஒருவராக, ஒரு தாயின் மகனாகப் பிறந்து, இன்பம், துன்பம், பசி, களைப்பு, கண்ணீர், நோய், இழப்பு, துயரம், துரோகம் அனைத்தையும் நம்மோடு பகிரந்துகொண்டார். நம்மைக் காட்டிலும் அதிகமாக நம்மை அறிபவர் இயேசு. 

மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். 

நமக்காக என்ற வார்த்தையை நமக்குப் பதிலாக என்றும் புரிந்துகொள்ளலாம். பாவம் தவிர அனைத்திலும் நம்மைப் போலிருந்த அவர், பாவிகள் நமக்குப் பதிலாகப் பலியாக முன்வந்தார். சிலுவை என்னும் பலி மேடையில் அவர் சிந்திய இரத்தத்தால் மானுடம் பாவக் கறையிலிருந்துக் கழுவப்பட்டது. 

மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்லதந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். 

பாஸ்கா நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார். அழியும் தன்மை கொண்ட உடல், அழிவிலாத் தன்மைக்கு மாறியது. இத்தனைப் பெரிய அன்பினை அடைத்து வைக்க மரணத்தால் முடியவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? 

வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்குமுடிவு இராது. 

இயேசு ஒருநாள் திரும்பி வருவார். நம்மிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்பார். உன் முழு உள்ளத்தோடு உன்னை அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை அன்பு செய்தாயா? அன்பு செய்தல் என்றால், அது மன்னித்தல், தியாகம் செய்தல், எல்லா நிகழ்வுகளிலும் இறைத்திட்டத்தைத் தேடுதல் என்று பலவற்றை உள்ளடக்கியதாகும் என்பதை உணர்கிறாயா?

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர்அளிப்பவருமான தூயஆவியாரை நம்புகிறேன். 

தந்தையைப் போலஇ மகனைப் போல, தூய ஆவியானவரும் ஒரே கடவுள் தன்மையைக் கொண்டுள்ளார். ஆள் தன்மையில் மூவராக இருந்தாலும், கடவுள் தன்மையில் ஒரே கடவுளாக இருப்பதால் தான் நாம் மூவொரு கடவுள் என்கிறோம். 

இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. 

ஒரே கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதால் ஒரே ஆராதனையும், ஒரே மாட்சியையும் பெறுகின்றார். இறைவாக்கினர்களை மட்டுமல்லாது, நம்மையும் கடவுளின் திட்டங்களைத் தேர்ந்து தெளிய நம் இதயத்தோடு பேசுகின்றார். கடவுளை அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும், ஆராதிக்கவும் நம் உள்ளத்தைத் தூண்டுபவர் தூய ஆவியே. படைப்பிற்கெல்லாம் உயிரளிப்பவராகவும், அகன்று விரிந்த உலகனைத்தையும் இயக்கும் ஆற்றலாகவும் திகழ்பவர் இவரே!  

ஒரே புனித கத்தோலிக்க திருத்தூதர் வழிவரும் திருஅவையை நம்புகிறேன். 

கடவுளை அறிந்து கொள்ள விரும்புகிறாயா? அதை நீ உன் அருகாமையிலிருக்கும் உன் சகோதர, சகோதரியை அன்பு செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். திருச்சபை ஒரு நிறுவனம் அல்ல. இறைமக்கள் சமூகம். கிறிஸ்து அன்பு செய்யும் மணவாட்டி. அவரது மறைஉடல். தூய ஆவி வாழும் இல்லம். நம் அன்னை. நம்மை தனியாக அல்லளூ மாறாக சமூகமாக மீட்கவே கடவுள் விருப்பம் கொண்டார். பல்வேறுபட்ட மக்களினங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே திருமுழுக்கின் மூலமாக ஒரே திருச்சபையாக இணைக்கப்பட்டுள்றோம். பாவிகளை உள்ளடக்கியதாக இருந்தாலும், அருளடையாளங்களின் மூலம் கடவுளின் நீங்காத உடனிருப்பைக் கொண்டிருப்பதால் புனிதத் திருச்சபையாகின்றோம். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டிருப்பதோடு, திருத்தூதுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் கடமைப் பட்டுள்ளோம். 

பாவமன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன். 

திருமுழுக்கின் மூலமாக நாம் கடவுளின் பிள்ளைகளாகிறோம். மீட்பின் பங்காளிகளாகிறோம். இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடவுளின் மன்னிப்பையும், இரக்கத்தையும் பெறுகின்றோம்.

இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறுஉலகவாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.

அழியும் தன்மைக் கொண்ட நம் உடல்இ கடவுளின் இரக்கத்தால் அழியாத் தன்மையைப் பெறுவதையே உயிர்ப்பு என்கிறோம். இறப்பிற்கு பிந்தைய உயிர்ப்பே, அதற்கு முந்தைய நம் வாழ்வை பொருள் உள்ளதாக்குகின்றது. உயிர்ப்பு என்ற ஒன்று இல்லையென்றால், நாம் வாழ்வதன் நோக்கம் தான் என்ன? மறுஉலக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வைப் போன்றதல்ல. அங்கு இன்பம்-துன்பம், ஒளி-இருள் போன்ற இருமைகள் இல்லை. முற்றிலும் இன்பம். முடிவற்ற ஒளி. அத்தகைய பேரின்ப வாழ்வை எதிர்பார்த்து நம் இன்றைய வாழ்வை இனிமையாக்குவோம். ஆமென். 

தயாரிப்பு

பணி. ஆன்றனி பிரான்சிஸ்

இறையன்னை சபை (OMD)

 

வியாழன், 9 நவம்பர், 2023

பொதுக்காலத்தின் 32 -ஆம் ஞாயிறு திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலத்தின் 32 -ஆம் ஞாயிறு திருப்பலியை ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாட வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் ............. சார்பாக அன்புடன் வரவேற்று மகிழ்கின்றேன். 

திருவழிபாட்டு ஆண்டின் நிறைவை நோக்கி பயணிக்கும் நமக்கு, இன்றைய நாளில் தரப்பட்டுள்ள இறைவார்த்தைகள் நிறைவுகாலத்தையும், இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையையும் முன்னறிவிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை இழிவானதாகும் என்னும் பொருளில், 

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

என்கிறார் திருவள்ளுவர். 

துயரங்களைச் சந்தித்த மனிதர்கள் ஞானத்தைக் கண்டுகொள்வார்கள் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் இரண்டு உலகப்போர்களைக் கடந்து வந்த பின்பும், பிரச்சனைகளுக்கு போர் தான் தீர்வு என்று நம்புவது நாடுகளின் ஞானமின்மையைக் காட்டுகின்றது.

செயற்கை நுண்ணறிவு யுகத்திலும், மனிதர்களுக்கு கொரோனா என்னும் ஒரு நுண்ணியிர் பேரச்சத்தைக் காட்டிவிட்டது. ஆயினும் மனிதர்கள் சுயநலத்திலும், வெறுப்பிலும், தற்பெருமையிலும் மூழ்கிக் கிடப்பது தனிமனிதர்களின் ஞானமின்மையைக் காட்டுகின்றது.  

இந்தச் சூழ்நிலையில்தான் விளக்கு ஒளி தர எண்ணெய் எந்த அளவிற்கு அவசியமோ, அது போல மனிதர்கள் ஞானத்தின் ஒளியில் தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. 

சிலுவையில் தன்னைக் கையளித்ததினால், நம்மை முடிவில்லாத மரணத்திலிருந்து மீட்ட, இறைமகன் இயேசுவின் ஞானத்தை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் இணைவோம். இறையாசீர் பெறுவோம்.


புதன், 1 நவம்பர், 2023

அனைத்து புனிதர்களின் திருவிழா

இன்று அனைத்து புனிதர்களின் திருவிழா. புனிதர்களின் வணக்கம் திரு அவையின் வரலாற்றில் பெரும் பங்கு வகித்திருப்பதை காண முடிகிறது. ஊரெங்கும் கோவில்கள். கோவில்கள் எங்கும் புனிதர்கள் என்று தான் பெரும்பாலும் கத்தோலிக்க பக்தி மார்க்கம் வளர்ந்திருக்கிறது. புனிதர் நிலைக்கு ஒருவர் உயர்த்தப்படுவது என்பது எல்லோருக்கும் எட்டாக்கனியாகவும், ஒரு சிலருக்கான தனி உடமையாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் திரு அவையின் வேர்களுக்குச் சென்று பார்க்கும் பொழுது கிறிஸ்துவ நம்பிக்கையாளர்கள் அனைவரும் புனிதர்கள் என்றே அழைக்கப்பட்டனர். யூதர்களும்,  புறவினத்தவர்களும் நம்மை கலிலேயர்கள், நசரேனியர்கள், சிலுவையில் அறையப்பட்டவரைப் பின்தொடர்பவர்கள் என்று ஏளனத் தொனியில் அழைத்த போது, புனித பவுல் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை புனிதர்கள் என்று அழைத்தார். அவரது கடிதங்களில் எபேசு, கொரிந்து, ரோமை நகரில் வாழும் புனிதர்களே என்று குறிப்பிடுவது எங்கோ விண்ணில் வாழும் சிறப்புமிக்க இறந்தவர்களை அல்ல! மாறாக கிறிஸ்துவை தன் வாழ்வின் மீட்பராக ஏற்றுக் கொண்டு, அவரது அன்பின் கொள்கைகளை தங்களது அன்றாட வாழ்வின்  இலக்காக ஏற்றுக்கொண்டு, தன்னலம் நாடும் உலகப் போக்கிற்கு எதிராக வாழத்துணிந்த சாதாரண மக்கள். 

ஆகவே இன்றைய நாளில் எங்கோ கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் நமக்காக கடவுளின் முன் பரிந்து பேசும் புனிதர்களை மட்டும் நினைவு கூறுவதோடு நிறுத்தி விடாமல், திருமுழுக்கினால் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் புனித நிலைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, அந்த அழைப்பிற்கு ஏற்ற வாழ்க்கை வாழ முயல்வதே சிறந்தது. 

இன்றைய முதல் வாசகமான திருவெளிப்பாடு நூலில், "வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது... எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரை இடும் வரை நிலத்தையோ கடலோ மரத்தையோ அழிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறினார்" என்று வாசிக்கின்றோம். 

ஆம்! முத்திரை இடுவது என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு ஆளையோ உடைமை ஆக்கிக் கொள்வதாகும். பழைய ஏற்பாட்டில் இனிமை மிகு பாடல்கள் புத்தகத்தில் காதல் வயப்பட்ட பெண் "உன் நெஞ்சத்தில் இலட்சினைப்போல் என்னைப் பொறுத்திடுக இலச்சினை போல் உன் கையில் பதித்திடுக" என்று, தான் அன்பு செய்பவரிடம் முறையிடுகிறார். உன் சிந்தனைகள் முகிழ்க்கும் நெஞ்சத்தில் என் முத்திரை இருக்கும் பொழுது அங்கு வேறு யாருக்கும் இடமில்லை. என்னோடு உடன்படாத எந்த முடிவுகளையும் நீ எடுக்க இயலாது. என்னை மகிழ்விக்காத எச்செயலையும் உன் கையால் நீ செய்ய இயலாது என்பதுதான் காதலியின் வேண்டுதல். 

இயேசுவின் திருமுழுக்கின் பொழுது இவரே என் அன்பார்ந்த மகன் என்று தந்தையாம் கடவுள் இயேசுவைத் தூய ஆவியால் முத்திரையிட்டு அறிவிக்கிறார். இனி மகனின் சிந்தனையும், செயலும் தந்தையின் அன்பினின்று விலகி நிற்க இயலாது. அதிகாரத்திற்கு அஞ்சாது உண்மையை எடுத்துரைப்பதும், சுயநலம் கருதாது ஏழை எளியவர்களின் சார்பாக நிற்பதும், தந்தையின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, நன்மைத்தனத்தை விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் எடுத்துரைத்து, அனைவரையும் நிறைவாக வாழ அழைப்பு விடுப்பதே தந்தையை மகிழ்விக்கும் என்று மகனும் செயல்பட்டார். சிலுவையில் தன்னையே பலியாகத் தரவும் முன் வந்தார்.

 திருமுழுக்கு பெற்ற எல்லோரும் அதே தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்கள் தான் என்று பவுலடியார் எபேசியர் எழுதிய திருமுகத்தில் கூறுகிறார். ஆகவே தான் திருமுழுக்கு பெற்ற நம்பிக்கையாளர்களின் சமூகத்தை புனித திரு அவை என்று சொல்கின்றோம். 
நாடு, இனம், மொழி கடந்த, தூய ஆவியால் முத்திரையிடப்பட்ட கடவுளின் மக்கள் நாம். நமது இந்த புனித அடையாளத்தை தான் இன்று நாம் விழாவாக கொண்டாடுகிறோம். 



வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தேசபற்று என்பது என்ன?

1. முதலில் தேசப்பற்று என்பது எவையெல்லாம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
   1.1. தேசப்பற்று என்பது தேசப்பற்று தேசப்பற்று என்று பொது வழியில் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல. 
   1.2. நான் அல்லது நான் சார்ந்திருக்கும் மதமோ, இனமோ, குழுவோ மட்டும்தான் தேசப்பற்று உள்ளவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதும் அல்ல.
   1.3. தேசத்தில் இருக்கும் இருக்கும் எல்லோரும் நான் விரும்புவது போலவே தங்கள் தேசப்பற்றை எப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவது அல்லது வற்புறுத்துவது அல்ல.

2. தேசபக்தி என்பது நான் என்னை அன்பு செய்து, ஆரோக்கியமாக என் உடலையும், மனதையும், அறிவையும் பேணுவதில் இருந்து தொடங்குகிறது.
3. என் அன்றாட கடமைகளை சிறப்பாக செய்வது. என் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது. 

4. இந்த தேசத்தில் இருக்கும் எல்லா சமூகங்களையும் ஒன்றுபோல கருதி அவர்களின் தனித்துவத்தை மதித்து தேசத்தின் பன்முக தன்மையை பாதுகாப்பதோடு, அதற்கு ஏதேனும் வழியில் அச்சுறுத்தல் ஏற்படின் தன் எதிர்ப்பு குரலைத் துணிச்சலாக வெளிப்படுத்துவது. ஒரு பூங்காவில் இருக்கும் எல்லா செடிகளும் ஒரே வண்ணத்தில் பூத்து, ஒரே நறுமணத்தை வீச வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவின்மை என்று உணர்ந்து பன்மை தன்மையை கொண்டாடுவது.

5. தன் வீட்டைப் போலவே பொது இடங்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது. 
   5.1. கழிப்பிடங்களைத் தவிர வேறு எங்கும் மலஜலம் கழிக்காமல் இருப்பது, ஆங்காங்கே எச்சில் துப்பாமல் இருப்பது, கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டாமல் இருப்பது, பொதுச் சுவர்களில் கிறுக்காமல் இருப்பது, சாலை விதிகளை மதிப்பது, பொது சொத்துக்களை பராமரிப்பது, உயிர் ஆபத்து என்ற காரணம் தவிர்த்து வேறு எதற்கும் வாகனங்களில் ஒலிப்பானை தவிர்ப்பது, சக மனிதர்களை, உயிர்களை, இயற்கையை மதித்து அன்பு செய்வது அனைத்தும் இதில் உள்ளடங்கும்.
7.

வியாழன், 18 மே, 2023

ஏட்டுக்கல்வி மட்டுமல்ல


முன்னுரை

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின் மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி பாரதியார். ஆம்! கல்வியிலும், இலக்கியத்திலும், பண்பாட்டுச் செழுமையிலும் உலகில் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல தமிழர்கள் என்பது கண்கூடான உண்மை. மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். மனிதனை விலங்கு நிலையிலிருந்து விடுவித்து சமூகத்திற்கு ஏற்ற முழு மனிதனாக மாற்றுவது கல்வியே ஆகும். ஆயினும் பள்ளிக்கூடங்களையேப் பார்த்திராத பல மாமனிதர்களையும், பட்டங்கள் பல பெற்றும் விலங்கினும் கீழாக நடந்து கொள்ளும் நபர்களையும் நாம் அன்றாட வாழ்வில் கடந்து வருகிறோம். கல்வி என்றால் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொண்டால் இந்த முரண்பாட்டையும் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

வள்ளுவரும் கல்வியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை போன்ற அதிகாரங்களில் கல்வியின் சிறப்புகளை விதந்தோதுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த பொருளும், அழகும் கொண்ட அக்குறள்கள், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கனிந்த நம் கல்வி மரபின் சாட்சிகளாக நிற்கின்றன.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு (திருக்குறள் 396)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்று இக்குளுக்கு விளக்கம் தருகிறார் கலைஞர்.

கல்வி என்ற சொல் கல் என்ற வேர்ச்சொல்லிலிருந்தே பிறக்கிறது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். ஆகவே அறிவு என்னும் ஆயுதம் கொண்டு நம் சிந்தனையின் ஊற்றுக்கண்களைத் திறப்பது கல்வி ஆகும். நம் ஆழ்மனதை மூடியிருக்கும் கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகள், பழமைவாத சிந்தனைகள் போன்றவற்றைப் பகுத்து, ஆராய்ந்து, நீக்கி உண்மையைக் காணச் செய்வதே கல்வியின் தலையாயப் பணியாகும்.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை (கலைஞர் விளக்கவுரை) என்னும் பொருளில்,

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் 400)

என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை.

கல்வி என்பது ஓர் அறிவுச்செயல்பாடு

நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் இருக்கிறேன் என்கிறார் மேற்கத்திய மெய்யியலின் தந்தை என்று அழைக்கப்படும் ரெனே டெக்கார்ட். ஒருவர் தன் முன்னிருக்கும் ஒரு எதார்த்தத்தைக் கவனித்து, அது ஏன், எதற்கு என்ற வினாவெழுப்பி, தரவுகளைச் சேகரித்து, ஆய்வுக்குட்படுத்தி, முடிவுகளைக் கோருவதே அறிவியல் செயல்பாடு ஆகும். அறிவியலின் முடிவுகளும் ஆய்வுக்குட்பட்டதே என்பதால் தனது பழைய கருத்துக்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அது தவறுவதில்லை. நமது வரலாற்று, சமூக, அரசியல், பொருளாதார. சுற்றுச்சூழல் எதார்த்தங்களை ஆய்வுக்குட்படுத்தி, கேள்விகளை எழுப்பி, மனிதர்கள் வாழ்வை ஒருபடியேனும் முன்னகர்த்த பயன்படுமாயின் அதுவே உண்மையான கல்வியாகும். ஏடுகள் நமக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைக்கலாம். அதனை நம் சிந்தனை மற்றும் செயல்களின் மூலமே பயனுள்ள ஆற்றலாக மாற்றிக் கொள்ள முடியும்.

இன்றைய சூழல் என்ன?

போட்டிகள் நிறைந்த நம் காலத்தில் கல்வி என்றால் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்று குறுகலாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. தேர்வு முடிவுகளை இலக்காகக் கொள்ளும் கல்வி என்பது மாணவர்களிடமிருந்து கற்றல் இன்பத்தை முற்றிலும் பறித்துவிடுவதோடு, அதிகமானப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்களது மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படுவதால் அப்பதற்றம் தவிர்க்க முடியாததாகிறது. பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது எனினும், பத்தாம் வகுப்பு முடிவிலேயே அவர்கள் தங்கள் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக பெரிய முடிகளை எடுக்க வேண்டிய சூழலே இருக்கின்றது.

நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேல்நிலை வகுப்பில் கணிதம் அறிவியல் தேர்வு செய்யும் மாணவர்கள் கடினமான பாடத்திட்டத்தால் பெறும் அழுத்தத்திற்கு உள்ளாவதையும், வரலாறு, வணிகவியல் எடுக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை நினைத்து வருந்துவதையும் பெருமளவு பார்க்க முடிகிறது. ஆகவே பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு, மேற்படிப்புக்கான வாய்ப்புகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட கல்விமுறைகள் காலத்தின் கட்டாயமாகிறது. அப்போதுதான் மாணவர்கள் கல்வியை ஏட்டுக்கல்வியாக அல்லாமல் வாழ்க்கைக் கல்வியாக அணுக முடியும். எனக்குத் தெரிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் கல்லூரி இளங்கலை முடியும் வரையிலும் ஒருவர் தன் துறையைத் தீர்மானிக்க அவகாசம் தரப்படுகின்றது. அத்தகைய நெகிழ்வுத் தன்மையுள்ள கல்வித்திட்ட மாதிரிகளை அரசு பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்துகிறேன்.

வாழ்க்கைக் கல்வி

இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கானத் தேர்வு முடிவுகள் வந்திருக்கும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவரோ எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கலாம். அல்லது மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்த படிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கலாம். உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று மட்டும் தான். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வின் ஒரு கட்டத்தில் உங்கள் கற்றல் செயல்பாட்டினை மதிப்பிடும் ஒரு அளவுகோல் தான் மதிப்பெண்கள். வாழ்வு இதைப் போன்ற பல கட்டங்களை உள்ளடக்கியது. பல செயல்பாடுகளை உள்ளடக்கியது. அவை எதற்கும் மதிப்பெண்கள் என்னும் அளவுகோல்கள் இருப்பதில்லை. விடா முயற்சி, தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, மகிழ்ச்சியாக இருத்தல், நன்றியுணர்வு கொண்டிருத்தல், நட்பு பேணுதல், உணர்ச்சியுள்ள மனிதராக இருத்தல் போன்ற மதிப்பெண்கள் தரப்படாத பல துறைகளில் நீங்கள் வெற்றியாளர்களாக இருக்கலாம். ஆகவே ஒரு தோல்வியோ, ஒரு ஏமாற்றமோ, ஒருவரின் கேலிச் சொல்லோ, ஒரு அவமானமோ உங்கள் வாழ்க்கையை வரையறுக்க விடாதீர்கள். எழுந்து நடங்கள்! பாதைகள் இல்லாவிடினும் எழுந்து நடங்கள்! உங்கள் பயணங்களில் உலகம் உங்களைப் பின் தொடரும்!