திங்கள், 2 பிப்ரவரி, 2026

அரசியல், அரசியல், அரசியல் - இது மட்டும்தான் மீடியாக்களின் வேலையா?

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல். நம்மைச் சுற்றி வளிமண்டலம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் அரசியல் பேச்சு, அலப்பறைகளுக்கு குறைவே இல்லாதபடி பார்த்துக்கொள்கின்றன நமது மீடியாக்கள். பத்திரிக்கை, டிவி, வானொலி என்ற காலம் போய் இப்போது யூடியூப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டகிராம் என்று எங்கு நோக்கினும் அரசியல், அரசியல், அரசியல். 

இன்று நேற்றல்ல, நம்மைப் பொறுத்த வரை என்றுமே இப்படித்தான் இருந்திருக்கிறது நமது அன்றாட வாழ்க்கை. ஒரு சாதாரணக் காலைப் பொழுதைக் காட்சிபட்படுத்த டீக்கடை பெஞ்சில், தினத்தந்தியை கையில் வைத்துக்கொண்டு பெரிசுகள் அரசியல் பேசுவதைக் காட்டினால் நீங்களும் டைரக்டர்தான். அரசியல் - அதற்கு அடுத்து சினிமா. மூன்றாவது வேண்டுமானால் கிரிக்கெட். சீசனுக்கேற்ப இம்மூன்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஆகாயத்திற்கு அடுத்து நீக்கமற நிறைந்திருப்பது அரசியல். 

படித்த மக்கள். அரசியல் விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால் நாம் சட்டென்று கேரளாவைக் கைகாட்டுவோம். அங்கே வீட்டுக்கு வீடு பத்திரிக்கைகள் வாங்குவார்கள். தெருவுக்கு தெரு கம்யூனிஸ்ட் சகாக்கள், காங்கிரஸார்கள் அல்லது தொழிற்சங்கவாதிகள் என்று யாராவது போராட்டம் நடத்திக்கொண்டிருப்பார்கள். அங்கும் நம்மைப் போலவே மக்கள் அரசியில் பேச்சுக்களில் பேரார்வம் கொண்டவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். 

ஒரு இறையியல் மாணவன் ஒரு கையில் விவிலியத்தையும், மறு கையில் அன்றாட பத்திரிக்கையையும் வைத்திருக்க வேண்டும் என்று எங்கள் இறையியல் கல்லூரியில் கற்றுத்தந்தார்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இறைவார்த்தையின் ஒளியில் காணவும், காலத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ற செயல்பாடுகளை முன்னெடுக்கவும் ஒருவர் பத்திரிக்கை வாசிப்பது அவசியம் என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் நாம் கொஞ்சம் அல்ல ரொம்ப கூடுதலாகவே பத்திரிக்கையிலும், அது கொண்டு வந்து கொட்டும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் மூழ்கிவிடுகிறோம் என்றே நினைக்கிறேன். 

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இத்தாலியில் வசித்தாலும் சமீபமாகத்தான் இத்தாலியப் பத்திரிக்கைச் செய்திகளை கொஞ்சம் வாசிக்கிறேன். இங்கும் வழக்கமான அரசியல்வாதிகள் உண்டு. கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று எதற்கும் பஞ்சமில்லாத ஒரு மனிதக் கூட்டமாகத்தான் கருத வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவோ, ஜெர்மனியோ எங்கும் இதுதான் கதை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாய் மனிதனைக் கடித்தால் அது நிகழ்வு. ஆனால் ஒரு மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி. செய்திகள் சுவாரசியத்தையும், வியாபார நோக்கத்தையும் தான் முதன்மையாகக்  கொண்டிருக்கின்றன. உண்மையான நிகழ்வுகளை அது அப்படியே பிரதிபலிப்பதில்லை. 

ஆயினும் நமக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு மிக முக்கியமான வித்தியாசத்தை உறுதியாகச் சொல்ல முடியும். இங்கு அரசியலை, நீதித்துறையை, காவல்துறையை, குற்றச்செயல்களை தனித்தனியாக அணுகுகிறார்கள். எல்லவற்றையும் அரசியலோடு கலப்பதில்லை. ஒரு அசாதாரண நிகழ்வு நடக்கிறதென்றால் இங்கே அது செய்தியாகிறது. அதற்கான காரண காரியங்கள் அலசி ஆராயப்படுகிறது. தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் அது தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அந்தக் கடைசி படிநிலையில் தான் அரசியல்வாதிகள் வருகிறார்கள். பெரும்பாலும் அந்த நிகழ்வை ஒரு ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனையாக அடையாளம் காண்பதும், அதைச் சரி செய்வதும் அனைத்து பாராளுமன்றவாதிகளின் கடைமையாக உணர்கிறார்கள். இதுதானே நல்ல முறையாக இருக்கமுடியும்? அந்நிகழ்வு தொடர்பான தனிமனிதர்களின் கருத்துக்கள் முதல் பக்கமாகவோ, தலைப்புச் செய்தியாகவோ ஆக்கிரமிப்புச் செய்வதில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் யாரும் கொடுக்க வேண்டியதில்லை என்பது இந்தச் சமூகத்தின் நிலைப்பாடு.

நமது ஊரில் அந்நிகழ்வு நடந்த அடுத்த நொடியே அரசியல்வாதிகள் முன்வரிசைக்கு வந்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவனோ, அல்லது குற்றவாளியோ அவனது அடையாளங்கள், கட்சி சார்புநிலைகள் அவசர அவசரமாக ஆரயாப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்தே அனைத்து பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. அடுத்ததாக ஆளுங்கட்சி அறிவிக்கும் நிவாரணங்கள், எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கள், சாதாரண மக்களும் தங்கள் சார்புநிலைகளுக்கேற்ப பேசிபேசி அடுத்த நிகழ்விற்கு தாவிவிடுவதுதான் நடக்கிறதே தவிர உறுப்படியாக ஏதாவது தீர்வுகள் எட்டப்பட்டிருக்கின்றனவா என்றால் பூஜ்யம் தான் பதில். 

விபத்துச் செய்திகள் ஆயிரம் வருகின்றன. ஆனால் சாலைக் கட்டமைப்புக் கோளாறுகள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன. மாண்புக் கொலைகளும் அதைச் சுற்றி சாதி அரசியலும் செய்திகளாகின்றன. தடுப்பதற்கான சமூக மனநிலை மாற்றமோ, சட்டதிட்டங்களோ, நிரந்தர தீர்வுகளோ எட்டப்படுவதில்லை. நமது சமூக மாற்றத்தில் பத்திரிக்கைகள் எந்த சுண்ணாம்பையும் எடுத்துவைப்பதில்லை என்பதே மிகவும் வருந்தத்தக்க கசப்பான உண்மை. அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவர்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டும் புதிய, பழைய, எல்லா தலைமுறையின் நேர்மை சிறிதுமற்ற ஊடகவியலாளர்கள் தான் நமது மக்களாட்சியையே கேளிக்கை நிகழ்ச்சியாக்குபவர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு குற்றம் நடக்கிறது என்றால் (குற்றங்கள் நடக்காத மனித சமூகங்கள் வேறு கிரகத்தில் எங்காவது இருந்தால் தான் உண்டு) அதற்கான எதிர்வினைகள் விவாதிக்கப்படவேண்டும். காவல் துறையின் துரிதம், திறன் விவாதிக்கப்படலாம். குற்றத்திற்கு காரணமான குற்றவாளியின் வயது, தூண்டுதலுக்கு காராணமான சூழ்நிலைகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்யலாம். மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கலாம். அதைவிடுத்து சம்பந்தமேயில்லாமல் சர்ச்சைக் கருத்துக்களை உமிழ்வதையே பிறவிப்பயனாகக் கருதும் ஒருசில தரைமட்ட அரசியல் வியாதிகளிடம் கருத்துக்களைப் பிடுங்கி பெரியச் செய்தியாக்கி சமூகத்திற்கு எந்தப்பயனும் தப்பித் தவறியும் நடந்துவிடாது பார்த்துக்கொள்பவர்கள் நமது பத்திரிக்கை வர்க்கத்தினர்.       

தமிழகத்தின் எந்த ஊரிலும் வார்டு உறுப்பினராகக் கூட தகுதியற்ற (மக்களாட்சியில் தகுதி என்பது மக்களின் ஓட்டு மட்டுமே) பொய்யில் ஊறிய பேச்சுச் சீமான்களெல்லாம் பிழைப்பு நடத்துவது மீடியாக்களால்தான். சீமான்களையும், விஜய்களையும், எச்.ராஜாக்களையும் வைத்து தொழில் நடத்தும் மீடீயாக்கள் இந்த சமூக விரோதிளால் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் பொறுப்பெடுக்கவேண்டும். ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பலூன் விஜயின் வருகையின் போது கரூரில் நடந்த நெரிசல் கொலைச் சம்பவத்திற்கு மீடியாக்கள் தார்மீகப் பொறுப்பேற்று, இரத்தக்கறை படிந்த அந்த நபரை சிபிஐ விசாரணை முடியும் வரையிலாவது மீண்டும் தங்கள் சானலில் காட்டுவதற்கு வெட்கப்படவேண்டும். 


வெள்ளி, 30 ஜனவரி, 2026

பூக்குழி - சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது

"பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன"-  ஆசிரியர் பெருமாள் முருகன்

கடந்த பதிவின் தொடர்ச்சியாகவும் இதனைக் கருதலாம். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் குடியரசில், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கருத வாய்ப்பிருக்கிறது. நமது 2026 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு அடுத்த நாள் தமிழ் இந்து பத்திரிக்கையில் வாசித்த செய்தி என்ன தெரியுமா?

'காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்'. 'புறக்கணித்தல்' என்பதற்கான விளக்கத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தருகிறார்: 'இளைஞரோ, இளம்பெண்ணோ தங்கள் விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது. அவர்களுடைய குடும்பத்தினரை சமூக ரீதியாக புறக் கணிக்க வேண்டும். குறிப்பாக, சமூக நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. பால் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கக் கூடாது. அக்குடும்பத்தினரை யாரும் வேலைக்கு அழைக்கக் கூடாது. அவர்களுடைய நிலத்தில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது.  இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கும் அக்குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.'

2013 ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள்  'பூக்குழி' நாவலைச் சமீபத்தில் தான் வாசித்தேன். அப்புத்தகம் தருமபுரி இளவரசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் வாசித்த உடனேயே மனதுக்குள் திக்கென்று இருந்தது. அப்புத்தகம் காதலித்தப் பெண்ணைக் கோவிலில் திருமணம் செய்து தன் சொந்த ஊருக்கு அழைத்து வரும் குமரேசன், அவனது காதல் மனைவி சரோஜா, அவனது அம்மா மாராயி மற்றும் இன்னும் மிகச் சில கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட சிறிய நாவல் ஆகும்.  

மாராயி இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தாலும், காடு, கழனியில் கடுமையாக உழைத்து தன் ஒரே மகன் குமரேசனை வளர்த்தவள். ஊருக்கு வரும் முட்டைக்கார பாய் அவனை நகரத்தில் ஒரு 'கலர்' கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். அங்கு கிடைக்கும் நண்பன் பெரியசாமி மூலம் விரைவில் தொழில் கற்றுவிடுவதோடு அவன் தங்கியிருக்கும் வரிசை வீட்டருகிலேயே சரோஜாவுடன் காதல் மலர்வதோடு, அவளைத் திருமணம் செய்து தன் வீட்டிற்கும் அழைத்துவருகிறான். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கும் சவால்களே கதையின் சாரம். இருவரின் அகவாழ்வின் கனிவும், புறவாழ்வின் கசப்பும் கலந்த ஒரு அற்புதமானக் கதை பூக்குழி.

பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை  Pyre என்ற தலைப்பில் புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. அப்புத்தகமானது 2023 ஆம் ஆண்டுக்கான புக்கர்  பரிசுக்கான பதிமூன்று புத்தகங்கள் அடங்கிய  நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்புத்தகத்தைக் குறித்து “It’s so tense, it leaves  you gasping for air” என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் 60 ஆவது அகவை கொண்டாடப்படும் இந்த ஆண்டில் சாதிக்கு எதிரான அவரது எழுத்துக்கள் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று விழைகிறேன். 

கிராமங்களை எப்போதும் மெய்யழகன் படம் போல பச்சைப் பசேல் என்ற நிலப்பரப்போடும், வெள்ளாந்தியான மனிதர்களோடும் அடையாளப்படுத்தும் அப்பாவி மனிதர்கள் நீங்களென்றால், இப்பூக்குழி இந்தியக் கிராமங்களின் உண்மையானக் கோர முகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அல்லது நியாபகப்படுத்தும். 

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் சாதியப் புற்று நோய் வேர்விட்டிருக்கிறது. கிறிஸ்தவம் இப்புற்று நோய்க்கு மருந்தாகும் வாய்ப்பினை ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. வரனை ஏன் இன்னொருவர் பார்க்க வேண்டும் என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், சொந்த சாதியில் வரன் பாரக்கும் படலம் இல்லாத ஒரு கிறிஸ்தவ பங்கினைக் காட்டுங்களேன். சாதிய அடிப்படையில் பங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மறைமாவட்டத்தையே பிரிக்கும் அளவிற்கு துணிந்துவிட்டார்கள். சாதிய அடிப்படையில் ஆயரை, சபை தலைவர்களை, சாதிய பிரிதிநிதித்துவங்களை மிகச் சாதாரணமாக ஒரு கிறிஸ்தவனால் கடந்து போக முடியுமளவிற்கு தோல் மரத்துவிட்டது. 

இதை எதையுமே வெளிப்படையானத் தரவுகளைக் கொண்டு நிரூபிக்க முடியாதுதான். ஆனால் எங்கள் (முன்னாள்) பங்கினையே எடுத்துக்கொள்ளுங்கள். இராமனாதிச்சன்புதூர் ஒரு மிகச்சிறிய ஊர். எந்த நிர்வாகச் சிக்கல்களும் இல்லாமல் ஒரே ஆலயம் கொண்ட, ஒரே பங்காக இருக்க எல்லாச் சாத்தியக் கூறுகளும் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அருமையான ஊர். ஆனால் முகவரியில் தான் அது ஒரே ஊர். கிறிஸ்தவர்களின் அகவரியில் அது இரண்டு ஊர். இஞ்ஞாசியாருக்கு ஒரு பங்கு. ஆரோக்கிய நாதருக்கு கிளைப்பங்கு. அங்கும் இங்கும் பெரும்பாலும் திருமண கொடுக்கல் வாங்கல் இன்றும் கிடையாது. சரி இதெல்லாம் என்றோ நடந்து விட்ட அவலத்தின் விளைவுதானே என்று கடந்து போக முடியாதபடிக்கு கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் இரண்டு பகுதிளுக்கும் இடையில் இருப்பதைத்தான் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் திருவள்ளுவர். இட்டார் பெரியார், இடாதோர் இழிகுலத்தார் என்று இரண்டு சாதிகளை மட்டும் அடையாளப்படுத்தினார் அவ்வையார். சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்றார் பாரதியார். மனிதர்களைப் பிரிப்பதற்கே சாதி உண்டானது. மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காகவே அதை நாம் அழிக்க வேண்டும் என்றார் பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அறிஞர் அண்ணா. இளைய தலைமுறை சாதிப்பெயரை பெருமையாக அல்ல. வெட்கமாக உணர்வது போல மாற்ற வேண்டும் என்றார் கலைஞர். 

ஆனால் சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது.


செவ்வாய், 27 ஜனவரி, 2026

குடியரசு தினம் (Republic Day of India)

குடியரசு தினம். நம் நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து நேற்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மக்களாட்சியில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. சட்டங்களும், திட்டங்களும் உருவாகி நடைமுறைக்கு வருவதற்குள் ஒரு ஒளி ஆண்டே முடிந்துவிடும். நத்தை வேக நிர்வாகம், நாடி நரம்பெல்லாம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகள், சுயநலமே கொள்கையாகக் கொண்ட அரசியல் வாதிகள் என்று ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும், மன்னராட்சி, இராணுவ ஆட்சி போன்ற எல்லா சமாச்சாரங்களையும் விட மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் மக்களாட்சியே அனைத்திலும் சிறந்தது என்று வரலாறு நமக்கு துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது. 

அரசியலமைப்பு புத்தகமே ஒரு குடியரசு நாட்டின் பைபிள், குரான், அல்லது பகவத் கீதை எல்லாம். மற்ற அனைத்து அதிகாரங்களும் அதற்குக் கட்டுப்பட்டவையே! மக்கள் நினைத்தால் (அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் மூலம்) அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மக்களாட்சி முறையையோ, மதசார்பின்மையையோ, கூட்டாட்சி அமைப்பையோ பாராளுமன்றமே நினைத்தாலும் மாற்ற முடியாது. பாராளுமன்றம் கொண்டுவரும் திருத்தங்களை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனைச் செய்யலாம். அந்த அதிகாரத்தை நீக்கும்படியாக பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரமுடியாது. அந்த வகையில் மிகவும் 'புனிதத்' தன்மையோடு அணுகி கடைபிடிக்கப் பட வேண்டியது அரசியலமைப்பு நூல். 

உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்பதில் நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அந்நியர்களிமிருந்து விடுதலை வாங்கித்தந்த தலைவர்கள், போராட்டங்களில் இன்னல்கள் அனுபவித்த தியாகிகள் அனைவரையும் கரம் கூப்பி வணங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் செந்நீர் சிந்தி நட்ட மரத்தின் நிழலில்தான் நாம் இன்று இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். அத்தியாகிகளுக்கு இணையாகப் போற்றுதலுக்குரியவர்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அறிஞர் பெருமக்கள். விடுதலைக்குப் பிறகு சூறாவளி சுருட்டிச் சென்ற பருத்திக் காட்டினைப் போலச் சிதறிக் கிடந்தது நம் நாடு. அனத்துத் துண்டுகளையும் பத்திரமாகக் கட்டிச் சேர்த்ததோடு, இன்றளவும் இந்தியர் என்னும் உணர்வை ஊட்டி வளர்ப்பதும் நம் அரசியலமைப்பு நூல்தான். 

காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ஜவஹர் லால் நேரு, ராஜேந்திர பிரசாத், படேல், கோகலே போன்ற தலைவர்களை நவீன இந்தியாவின் பெருமைமிகு சிற்பிகளாகக் கருதுகிறேன். எல்லா மாநிலங்களிலும் அவரகளது கனவுகளுக்கு வடிவம் தந்த தலைவர்கள் எண்ணிலடங்காதவர்கள் உண்டு. சூதும் வாதும் செய்தேனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் அழிவு சக்திகள் இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அவல நிலையிலும், இன்னும் வீழாது நம்மைத் தாங்கிக்கொண்டிருப்பது நமது அரசியலமைப்புச் சட்ட நூல்தான். நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர்களின் கனவுகளைச் சுமந்து நிற்கும் இப்புனித நூலை நாம் பாதுகாக்க வேண்டும். அத்தகைய தகுதியுடையவர்களிடம் மட்டுமே நம் நாட்டை ஆளும் உரிமையை நாம் தரவேண்டும்.