புதன், 7 செப்டம்பர், 2016

நீங்கள் வேறு நாட்டில் இருக்கும் போது- சில சிந்தனைகள் - 2

இந்தக் கட்டுரை நிச்சயமாக ஒரு ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றியப் பார்வையல்ல. அப்படி ஒரு பார்வையை வைத்துக் கொள்வதே தவறு. அதுவும் எதிர்மறையாக என்றால் மிகவும் தவறு. இருப்பினும் நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது சில தவிர்க்க இயலாத அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். அப்படி சில அனுபவங்களைப் பொதுமைப் படுத்தி எழுதுகிறேன். அவ்வளவுதான்.!

இத்தாலியில் இருக்கும் போது என்னை மிகவும் கோபப்படுத்தியது இந்தியாவைப் பற்றிய அவர்களின் பார்வை. கோபம் என்றால் சாதாரணக் கோபம் அல்ல. கடுங்கோபம். கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு கிணறுதான் உலகம் என்பது போல, அவர்களுக்கு இத்தாலி மட்டும் தான் உலகம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளெல்லாம் பக்கத்துக் கிணறுகள். அவ்வளவுதான். மற்றபடி உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துன்புறும் நாடுகள். உண்பதற்கும், உடுத்துவதற்கும் எதுவுமில்லாத ஏழை நாடுகள். எவ்வளவு பெரிய மூடத்தனம். கோபத்திற்கு காரணம் இந்த அறியாமை மட்டுமல்ல. அவர்களின் இந்த 'அறிவுசுரங்கத்திற்கு' மேல் கொஞ்சம் அதிகமாக அந்த நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள மூர்க்கத்தனமாக மறுக்கிறார்கள்.

முதலில் உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். இரயில் நிலையங்களிலோ, மற்ற பொது இடங்களிலோ ஒரு சிலர் நம்மைப் பார்த்ததும் தங்கள் உடமைகளை பத்திரப்படுத்துகிறார்கள். தங்கள் கைப்பையை கக்கத்திற்குள் இடுக்கிக் கொள்கிறார்கள். நம் கண்களைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாக மறுத்து பிற 'அழகானக்' காட்சிகளுக்கு கடந்து போகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதென்றால், பலமுறை நம் ஊர்க்காரர்கள்தான் தங்கள் உடமைகள் இரயிலிலோ, பேருந்திலே பறிகொடுத்து வெறும் கையாய் வீடுதிரும்புகிறார்கள். சிலர் தங்கள் மடிக்கணிணி, மூக்குக் கண்ணாடி, களவுச்சீட்டு முதலியவற்றைக் களவுகொடுத்து வீடு திரும்பவும் வழியற்றவர்களாகின்றார்கள். வெளிப்படையாகத் தங்கள் வெறுப்பைக் காட்டிக் கொள்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள்தான். அதுவும் உங்களுக்கு எந்தத் தொடர்பும், அறிமுகமும் இல்லாதவர்கள். இதனால் இவை உங்களை அதிகம் பாதிப்பதில்லை. 

தொழில் நிமித்தமாகவோ, அல்லது வேறு நிமித்தங்கள் காரணமாகவோ, உங்களிடம் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. ஆனால் உங்களைப் பார்த்து ஒரு செயற்கையாக வருவித்தச் சிரிப்பும், தங்களுக்குத் தெரிந்த ஒன்றோ இரண்டோ ஆங்கில வார்த்தைகளும் பேசி உங்களை மகிழ்விப்பதாய் நினைத்துக்கொள்வார்கள். உங்களோடு சமத்துவம் பேணிக்கொள்வதாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களின் கருணைக்கு அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. இது இன்னொரு பார்வை. ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே, ஆங்கிலேயர்களால் காலனியாதிக்கத்திற்குட்பட்ட எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் தான் முதன்மை மொழி என்று எண்ணிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் இன்னொரு மூன்றாம் நபர், 'ஓ! அவனுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று உயர்வு நவிற்சி செய்யும் போது, உலக அறிவில் பாண்டித்யம் பெற்ற முன்னவர் இவ்வாறு சொல்வார்: 'அவன் இந்தியா காரனாயிற்றே! அங்கே எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்' என்று. கோபம் வருமா? வராதா?. இது தவறு. நாங்கள் எங்கள் மாநிலத்தின் மொழியைத் தான் பேசுகிறோம். தமிழ் எங்கள் தாய்மொழி. தொன்மையான செம்மொழி என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால், அதற்குள் அவன் வேறு பேச்சுக்குப் போயிருப்பான். சரியான மடச்சாம்பிராணிகள். ஒரு மண்ணும் தெரியாது. அவனுக்கு தெரியவில்லை என்பதற்காக வருத்தப்பட மாட்டான். தெரிந்து கொள்ளும் அளவுக்கு எந்தச் சிறப்பும் நம்மிடம் இருக்க வாய்ப்பில்லை என்பது அவனது கணிப்பு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் 'மதர் தெரசாவும், கல்கத்தா சேரியும்' மட்டும் தான். அதே அன்னை பேசிய வங்க மொழி உலகின் 20 கோடி பேரின் தாய் மொழி என்பதும், தாகூர், தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள், இசை மேதைகள், எழுத்தாளர்கள் எண்ணற்றோரைப் பெற்றெடுத்த செழித்த மொழி என்பதைப் பற்றிய ஒரு துளி அறிவும் கிடையாது. வங்க மொழியும், மலையாள மொழியும் வெறும் ஆயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்டிருப்பினும், அம்மொழிகளில் வெளியாகும் சிறுகதைகளும், நாவல்களும் உலகத் தரம் வாய்ந்தவைகளாகும். இந்தியாவின் மொழிப் பன்மைக்கும், இலக்கிய வரலாற்றுப் பன்மைக்கும் முன் உலகத்தில் எந்த நாட்டை ஒப்பிட முடியும்? 

இன்னொரு வகையினர் இருக்கின்றனர். எளிய மக்கள். அவர்களுக்கும் 'படித்த மேதாவிகளுக்கும்' ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்குமே இந்தியா என்றால் ஏழை நாடு என்பது மட்டும் தான் தெரியும். எளிய மக்கள் கொஞ்சமேனும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். யாரேனும் உண்மையாகவே கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தொல்காப்பியம், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், கல்லணை போன்ற பண்டையச் சிறப்புகள் முதல் கூகுள், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல்  அதிகாரிகள் தமிழர்கள் என்பது வரையிலும் என்னால் முடிந்த அளவு நம் தவிலை நானே வாசித்துக் கொள்கிறேன். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

திங்கள், 5 செப்டம்பர், 2016

நீங்கள் வேறுநாட்டில் இருக்கும் போது - சில சிந்தனைகள் -1

எல்லோருக்கும் வணக்கம். எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எழுத்து என்பது ஒரு திறமை என்பதை விட ஒரு பழக்கவழக்கம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் எழுதினால் ஒரு சிறிய காரியத்தைக் கூட அழகாக, கோர்வையயாக மிக எளிதாக எழுதிவிட முடிகிறது. ஆனால் எப்போதாவது எழுதினால் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான காரியத்தைக் கூட மனம் விரும்புவது போல எழுத்தில் கொண்டு வர முடிவதில்லை. இந்த நாட்களில் நிறைய சிந்தனைகள் அவ்வப்போது 'எழுது! எழுது!' என்று தூண்டிய போதும் அமர்ந்து எழுத மனம் ஒன்றாமல் பழக்கப்பட்டக் காரியங்களையே செய்யும்படியாகிவிட்டது. எத்தனை கவித்துவமானத் தருணங்களை இப்படி வீணடித்தேனோ?

கடந்த ஆகஸ்டு மாதம் 26 ஆம் தியதியோடு இத்தாலிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் சபையின் தலைமை இல்லத்தில், எங்கள் சபையின் சக அருட்பணியாளர்களோடு தங்கியிருப்பதால் புதிய சூழ்நிலைக்கேற்றவாறு என்னைத் தகவமைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். சில பழைய நண்பர்கள் நட்பு வட்டத்திலிருந்து விடுபட்டார்கள். மரங்களில் இலைகள் உதிர்வதும், பின்னர் தளிர்ப்பதும் மிகவும் இயல்பாக இருக்கிறது. மனித மனங்களுக்கு மட்டும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் அதற்கு தேவைப்படவில்லை. அதில் வருத்தப்படவும் எதுவுமில்லை. அழகாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் இரு என்று. தண்ணீர் வந்து போனத் தடங்களைக்  கூட அனுமதிப்பதில்லை தாமரை இலைகள். அது தண்ணீரின் பிழையுமில்லை. இலையின் பிழையும் இல்லை. நம் வாழ்வில் எதிர்வரும் எல்லேருக்குமான நியதியும் அதுதான். மலர்வதை மட்டும் மறந்து விட வேண்டாம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் நிறத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டாலும் சில அடிப்படையான காரியங்களில் அச்சு அசலாக ஒரே மாதிரி எதிர்வினையாற்றுகிறார்கள். வேறுபடுத்துபவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பொதுவானப் புள்ளியைப் புரிந்து கொண்டு அந்தத் தளத்தில் உங்களை வைத்துக் கொண்டால் எந்த இடத்திலும், எந்த மனிதர்கள் மத்தியிலும் எளிதாக பழகிவிடலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. இன்பம், துன்பம் இந்த இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது. இவற்றைத் தருவிக்கும் காரணிகள்தான் ஒவ்வொரு சமூகத்தின் அரசியல், பொருளாதராம், பழக்கவழக்கம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. நம் ஊர் பொருளாதாரப் பின்னணியில் ஞாயிற்றுக்  கிழமை சாயங்காலம் வட்டிப்பணம் கட்டவேண்டுமே என்ற கவலை. வளர்ந்த நாடுகளில் சனிக்கிழமை சாயங்காலம் நண்பர்களோடு ஊர்சுற்ற காசு வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் ஒரு கவலையா என்று நாம் நினைப்போம். ஆம்! அவர்களைப் பொறுத்தமட்டில் அது கவலைதான்.

வளர்ந்த நாடுகளுக்கும் நமக்குமான மிக முக்கியமான வித்தியாசமாக நான் பார்ப்பது ஒன்றுதான். இங்கு நீங்கள் எங்கு சென்றாலும் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் தரமாகக் கிடைக்கின்றன. இதில் நகரம், மாநகரம், குக்கிராமம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்கள் யாரையும் நாடாமல் சுயமாக வாழ்வதற்குத் தேவையான ஓய்வூதியமும், நோய்வாய்ப்பட்டால் ஒரு காசு செலவில்லாமல் உயர்தரமான மருத்துவமும் கிடைக்கிறது. ஆயினும் நம்மைப் போலவே அவர்களும் கவலைப்படுகிறார்கள். பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே! பிள்ளைகளின் திருமணம் ஒரு ஆறுமாதம் கூட நிலைக்கவில்லையே! அதிகமாக வெயில் அடிக்கிறதே! அல்லது அதிகமாக குளிர் அடிக்கிறதே என்று கவலைப்படுவதற்கு இவர்களிடமும் நிறைய இருக்கின்றன.

நிறைய காரியங்களில் இந்த மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லாத ஓரளவு சமூக சமநிலையை நாடு முழுவதும் கொண்டு வந்துவிட்டார்கள். மக்களின் உயிர் பாதுகாப்புக்கு எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பார்கள். சாலைகளில் பாதசாரிகள்தான் எஜமானர்கள். மற்றவர்கள் நின்றுதான் செல்ல வேண்டும். ஹார்ன் அடிப்பதில்லை. எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டியிருப்பினும் பொறுமையாக ஒருவர் பின் ஒருவராக செல்வது என்று மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். சாலை விதிகளை மதிப்பதில் நாம் இன்னும் பூஜ்யத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம். சாலை விதிகளை மதிப்பது என்பது சக மனிதர்களை, அவர்களின் விலைமதிப்பற்ற உயிரை, அவர்களின் குடும்பங்களை, பிள்ளைகளை, ஏன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே மதிப்பது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொது இடத்தில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். நாம் நம் வீட்டின் வரவேற்பரையில் எச்சில் கழிப்பதோ, சாப்பாட்டு அறையில் சிறுநீர் கழிப்பதோ, பூஜை அறையில் குப்பை கொட்டுவதோ கிடையாது. ஆனால் பொது இடத்தில் எந்த உறுத்தலுமின்றி அவற்றைச் செய்கிறோம். இவர்கள் பொது இடங்களையும் தங்கள் வீடு போல போலவே பாவிக்கிறார்கள். எந்த கூச்சமுமின்றி ஒருவர் ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். முத்தமிட்டுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் நாம் மிக இயல்பான அன்பின் வெளிப்பாடுகளுக்கு தேவையற்றுக் கூச்சப்பட்டுக் கொள்கிறோம். திரை மறைவான பல அசிங்கங்களைக் கூச்சமின்றிக் கடந்து செல்கிறோம்.

குப்பை மேலாண்மை பற்றி பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் பொது இடங்களைப் பேண வேண்டிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டுக்காரனிடமிருந்து நம் மானத்தையும், டெங்கு, சிக்குன் குனியாக்களிடமிருந்து நம் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். குப்பைகளை முறையாக சேகரித்தல், எடுத்துச் செல்லுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றில் நமது உட்கட்டமைப்பு வசதிகள் எந்த நவீனத்தையும் எட்டவில்லை என்பதும் மிகவும் உண்மை. நாடு முழுவதும் ஐ.டி. துறைகள் வந்து பளபளப்பைக் கூட்டிவிட்டாலும், குப்பை சேகரிக்க இன்னும் துடைப்பமும், தூப்புக்காரியும் தான் என்றால் இதுதான் இந்தியாவின் முகம். 

இங்கே காவலர்கள் உங்களைப் பரிசோதிக்க வேண்டுமென்றாலும் 'தயவுசெய்து உங்கள் அடையாள அட்டையை நான் பார்க்க முடியுமா?' என்று மிகவும் அழகாக கேட்பார்கள். ஏதாவது சான்றிதழ்கள், இலவச சலுகைகள் என்று அரசு அலுவலகங்களுக்குச் சென்றாலும் உங்களுக்கு சிரமம் தந்து விடாமல் எளிதாக காரியத்தை முடித்துவிட மிகுந்த சிரத்தை எடுப்பார்கள். அரிதினும் அரிதாக, ஒருவேளை வாய்ப்பே இல்லாத பட்சத்தில் கூட 'மிகவும் வருந்துகிறோம். குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்து வாருங்கள். உடனே தந்துவிடுகிறோம்' என்று கூறுவார்கள். நம் ஊரில் பத்து ருபாய் விலை பெறாத இலவச வேட்டி, சேலை தருவார்கள். அதைத் தர வேண்டிய அலுவலர் தன் வீட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தருவதைப் போல நடந்து கொள்வதைப் பார்க்கும் போது நாம் யாரை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.

உலகமே பெருமைப்படத்தக்க ஏராளம் விசயங்கள் நம்மிடம் இருக்கின்றன. இப்போது நன்றாக தூக்கம் வருகின்றபடியினால் மீதியை நாளைத் தொடர்கிறேன்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

விளையும் பயிர்(கள்)

மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

நண்பனுக்காக கழிவறை…
வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.
அகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.
பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி சிகிச்சைக்கு உதவி…
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.
உப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.
மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.
சக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமிழ் இந்து நாளிதழ், செப்டம்பர் 1, 2016 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம்

மன்னர்  ஒருவர் ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் எப்படி இருந்தது என்று சுருக்கமாக எழுதித்தருமாறு தன் நாட்டிலுள்ள அறிஞர் பெருமக்களிடம் கேட்டுக்கொண்டார். எல்லோரும் புத்தகத்தைப் ஆஹா ஓஹோ என்று புகழந்து தள்ளினர். ஆனால் ஒரே ஒரு அறிஞரின் விமர்சனம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார். 'இந்தப் புத்தகம் மன்னரால் எழுதப்பட்டமையால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. இல்லையென்றால் விமர்சனத்திற்குத் தகுதியற்றது' என்று. நம் நாட்டில் மக்களாட்சியின் மன்னர்களும் இப்படிப்பட்டக் கேள்விகளை அவ்வப்போது எழுப்புகிறார்கள். ஆனால் பதிலையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். 

எல்லா எளிய கேள்விகளும்  ஓர் எளிய பதிலைக் கோரி நிற்கின்றன என்று கூற முடியாது. சில கேள்விகள் அறிந்து கொள்வதற்கான ஆவலில் எழுபவை. சில கேள்விகள் அறியாமையிலிருந்து எழுபவை. சில கேள்விகள் எதிராளியைக் கொல்வதற்காக எறியப்படும் ஏவுகணைகள். நாம் எத்தகையவர்கள் என்பதை நாம் எழுப்பும் கேள்விகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவர் தனது அதிகாரத்திற்கு கீழ் வருகிறார் என்பதை அவ்வப்போது அந்த நபருக்குத் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதனைத் தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும், கேள்வி கேட்டவர் பதட்டமடைகிறார். தான் எதிர்பார்க்கும் பதில், தான் எதிர்பார்க்கும் தொனியில் வரவேண்டுமென்று நினைக்கிறார். அந்தப் பதிலுக்காக உண்மை, நீதி, இரக்கம் போன்ற எந்த மதிப்பீடுகளையும் விற்கத் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும் என்ன பதில் வந்தாலும் சிலரது பதிலில் அவர்களுக்குத் திருப்தி வருவதேயில்லை. அப்படியென்றால் சொல்லுங்கள் உண்மையிலேயே அதிகாரம் யாரிடம் இருக்கிறது? கேள்வி கேட்டவரிடமா? இல்லை பதில் சொல்பவரிடமா?

இயேசு வித்தியாசமான மனிதர். பிறரது பதிலைக் கொண்டு தனது அதிகாரத்தை உறுதி செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. அவரைக் கொல்ல வந்தவர்களிடம், 'யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்?' அவர்கள் நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்' என்றார்கள். இயேசு அவர்களின் பதிலால் அச்சமடையவோ, பதற்றமடையவோ இல்லை. அவர் நினைத்திருந்தால் அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொல்லி கூட தப்பித்திருக்காலம்.  ஆனால் இயேசு, 'நான் தான் என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்' என்று எந்தத் தயக்கமும் இன்றி துணிச்சலாக பதிலளிக்கிறார். (யோவன் 18:7-8)

அதற்கடுத்த நிகழ்விலே 'பிலாத்து இயேசுவிடம் 'நீ எங்கிருந்து வந்தவன்?' என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, 'என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு உன்னை சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்றான். (யோவன் 19:9-10). இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவனது அக்கறை உண்மையோ, நீதியோ அல்லது இரக்கமோ அல்ல. அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம். தனது அதிகாரத்தை இயேசுவின் பதிலைக்  கொண்டு உறுதிபடுத்த விரும்பினான். இயேசு பிலாத்து விரும்பியப் பதிலைத் தரவில்லை. பிலாத்துக்கள் விரும்பும் பதிலை இயேசு ஒரு போதும் தரப்போவதில்லை.  

சனி, 11 ஜூன், 2016

உணவும் தெய்வமே

அருட்தந்தை சேசுராஜ். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் தத்துவவியல் துறையில் பேராசிரியர். அவரது காரின் கண்ணாடியில் 'உறவே தெய்வம்' என்று எழுதியிருப்பார். அதற்கான விளக்கத்தை வகுப்பில் ஒரு முறை சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு தெய்வத்தை பலரும் தங்கள் அனுபவங்களில் அடிப்படையில் உணர்ந்து கொள்வதுண்டு. தத்துவங்களை விட வாழ்க்கையின் அன்றாட அனுபவங்களில் இறைவனின் பராமரிப்பை உணர்ந்து கொள்ளப் பழகி விட்டால், நாளையைப் பற்றிய பயமின்றி இரவில் நன்றாக உறங்கி எழும்ப முடியும். அந்த வகையில் உணவும் தெய்வமாகும் ஒரு நிகழ்வினைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு ஒரு பெரியப்பா உண்டு. அவருக்கு மூன்று பிள்ளைகள். சிவா, ஆனந்த், ஆர்த்தி. இதில் ஆனந்துக்கும் எனக்கும் ஒரே வயது. அவர்களுடைய வீடு நாகர்கோவிலில் உள்ளது. நான் சிறுவயதில் விடுமுறை நாள்களில் செல்ல விரும்பும் ஒரே உறவினர் வீடு அவர்களுடையதுதான். நிறைய காரணங்கள் இருந்தாலும், ஆனந்துடன் சேர்ந்து கொண்டு அவனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவது மற்றும் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவது என்றுமே மறக்காத நினைவுகள். ஊரில் மிகவும் சுமாராக விளையாடும் என்னை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள அங்கு போட்டியே நடக்கும். இது எனக்கு மிகவும் பிடித்தது. ஊருக்கு திரும்பியதும் ஊர் பையன்களிடம் நான் நாகர்கோவிலிலேயே சைக்கிள் ஓட்டினேன் என்று சொன்னால் அது ஒரு தனி கெத்து தான். பெரியப்பா எனக்கு தெரிந்த காலத்திலேயே மிகவும் வசதியானவர்தான். இப்போது சொல்லவே வேண்டாம். நாகர்கோவிலில் மிகவும் அறியப்பட்ட பில்டிங் கான்டிராக்டர். 

அவரைப் பற்றிய எனது முதல் நினைவு. குறைந்தது ஒரு பதினெட்டு வருடங்களாவது முன்னதாக இருக்க வேண்டும். ஒரு முறை நாங்கள் அங்கு சென்றிருந்த போது பெரியப்பா வீட்டில் இல்லை. 'இரவு எட்டு மணிக்குத்தான் வருவார். அவர் வரும் வரைக் காத்திருக்க வேண்டாம். சாப்பிடுங்கள்' என்று சொல்லி பெரியம்மா வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே பெரியப்பா வந்து விட்டார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் சந்தோஷம். உடனே சிவாவிடம் நூறு ருபாயை எடுத்துக் கொடுத்து புரோட்டா வாங்கி வரச் சொன்னார். அவன் எவ்வளவு என்றான். நூறு ருபாய்க்கும் வங்கிட்டு வா என்றார் பெரியப்பா. அப்போதைய எங்கள் பொருளாதாரக் கணக்கில் புரோட்டாவே பெரிய காரியம். அதிலும் நூறு ருபாய்க்கும் புரோட்டாவா? அதன் பின்னர் அவர் பேசியக் காரியம் தான் இக்கட்டுரைக்கான அவசியத்தை ஏற்படுத்தியது.

பெரியப்பா சிறுவயதிலேயே தனது அப்பாவை இழந்தவர். இவர் வீட்டிற்கு ஒரே பையன். அவரது அம்மா லெட்சுமி பாட்டிதான் இவரை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தவர். உறவினர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட சூழ்நிலை. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்து சமுதாய பழக்கவழக்கங்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். லெட்சுமி பாட்டி ஒரு விதவை. அத்தோடு வறுமை. பல வேளைகளில் பசியோடுதான் உறங்கச் செல்வார்கள் தாயும், பிள்ளையும். வயிற்றுப் பசி ஒருபுறம், உறவினர்களின் புறக்கணிப்பு ஒருபுறம் என்று சபிக்கப்பட்ட வாழ்வின் கருகியப் பக்கத்திலிருந்து தான் அவர் துளிர்விட ஆரம்பித்திருக்கிறார். 

ஒரு நாள் தலையில் எண்ணைகூட தேய்க்காமல், மேல் சட்டையில்லாமல், ஒட்டிய வயிற்றோடு தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த போது தெருவில் கடை போட்டிருந்த நபர் ஒருவர் 'தம்பி! இங்க கொஞ்சம் வா!' என்று அழைத்து ஒரு பெரிய நேந்திரம் பழத்தைக் கொடுத்து சாப்பிடு தம்பி என்றாராம். அந்த சூழ்நிலைக்கு அது ஒரு பழம் அல்ல. அது ஒரு வாழ்க்கை. அது பல கோடிகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. இதை பெரியப்பா சொல்லிக் கொண்டிருந்த போது அந்தக் கடைக்காரர் ஏற்கனவே இறந்து போயிருந்தார். அவரது இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு பெரியப்பா நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்.

அவரது சிறுவயதில் அவரைப் புறக்கணித்த அவரது குடும்பத்தினர் பலரும் இன்று அவரிடம் தான் வேலை செய்கின்றனர். விதவை மகன் என்று புறக்கணித்த சமுதாயத்தில், இன்று நிறைந்த செல்வத்துடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வருகிறார் பெரியப்பா. அவரிடம் நான் வியந்த காரியத்தில் ஒன்று எத்தனை பணம் வந்தாலும் இறைவனையே சரணாகதியாய் கொள்ளும் அவரது இறைபத்தி. இறைவன் முன்னிலையில் தான் ஒரு தூசு; நாளையே அவர் என்னை ஊதித்தள்ளிவிட முடியும் என்ற தெய்வபயம். ஓய்வறியா உழைப்பு, செய்யும் தொழிலில் நேர்மையும், நேர்த்தியும். பட்டினி காலத்தில் ஒரு நேந்திரம் பழத்தின் மதிப்பை இன்றும் உணரும் செய்நன்றி மறவா உள்ளம்.

பசித்திருப்போருக்கு உணவு தருதல் என்பது தருவோனுக்கும், பெறுவோனுக்கும் ஒரு சிறந்த இறையனுபவம் என்று நினைக்கிறேன். இதற்கு எத்தனை எத்தனையோ உதாரணங்களைத் தரமுடியும்.